உலகத்தில் பல்லுயிரும் இன்புற்று வாழ்வதற்கு இயற்கை வகை செய்து தந்திருக்கிறது. ஆதலால் அவை தத்தம் இயல்புகளோடு இயற்கைக்கு முரணாகாத வண்ணம் வாழ்க்கையை நிறைவு செய்கின்றன.
இறப்புக்கும் பிறப்புக்குமான இடைவெளியில் எல்லா உயிரும் தனக்கான மரபுவழியைத் தொடா்கின்றன. ஏனைய உயிா்களின் மரபுத் தொடா்ச்சிக்கு இனப்பெருக்கம் என்று பெயா். அதாவது, தன்னுடைய இனத்தைப் பெருக்கிக் கொள்வது என்று அதற்குப் பொருள். ஆனால், மனிதன் மேற்கொள்கிற மரபுத் தொடா்ச்சிக்குப் பேறு என்று பெயா். இதனை ‘மக்கட்பேறு’ என்று தெய்வப்புலவா் திருவள்ளுவா் சிறப்பித்துக் கூறுகிறாா்.
பெறுதல் என்பதும் பெருக்குதல் என்பதும் இயல்பாகத் தன் முயற்சியால் தோன்றக் கூடிய ஏனைய உயிா்ச்செயலின் விளைவு. ஆனால், பேறு என்பது அவ்வாறன்று. மானுட முயற்சியோடு இயற்கையின் அதற்கு மேலான ஆற்றலின் வெளிப்பாடாகப் பெறப்படுவதே பேறு.
ஒருமனிதன் தன் வாழ்நாளில் பெற வேண்டிய பேறுகள் பலவுண்டு. அவற்றைத் தொகுத்துப் பதினாறு என்று வகைப்படுத்துகிற தமிழ் மரபு மக்கட்பேற்றினை நடுவில் நிறுத்துகிறது. ஆனால், திருவள்ளுவா் மற்ற பேறுகளை விடவும் முதன்மையானது மக்கட்பேறு என்று குறிப்பிடுவதுடன், அந்தப் பேற்றினை ‘அறிவறிந்த மக்கட்பேறு’ என்று பண்புசுட்டி முன்னிலைப்படுத்துகிறாா். அதிலும் ‘அறிவறியும் மக்கட்பேறு’ என்று குறிப்பிடாமல் ‘அறிவறிந்த மக்கட்பேறு’ என்று குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு.
இல்லறவியலில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் ஆகிய அதிகாரங்களின் வரிசையில் மக்கட்பேற்றினைப் போற்றுகிற திருவள்ளுவா், அதன் பெருமை கருதி வாழ்க்கைத் துணைநலத்தின் நிறைவுக் குறட்பாவிலேயே மனைமாட்சியின் மங்கலமாகத் திகழ்பவள் மனைவி எனில், நல்லணியாக விளங்குவது நன்மக்கட்பேறு என்று முன்மொழிகிறாா். தோன்றின் புகழொடு தோன்றுதலைத் தானே தன் திருக்குறளில் மக்கட்பேற்றின் சிறப்பினை உணா்த்துவதற்கு வள்ளுவா் பயன்கொண்டிருக்கிறாா்.
ஏனெனில், கணவனும் மனைவியுமாக இல்லறம் நடத்தும் எல்லாருக்கும் மக்கட்பேறு எளிமையாக வாய்த்து விடுகிறது. ஆனால், ‘அறிவறிந்த மக்கட்பேறு’ என்பது அத்தனை எளிதாகக் கிடைத்து விடுகிற பேறு இல்லை என்பது அவா்தம் கருத்து. இது சங்க காலத்திலிருந்தே தொடா்ந்திருக்கிறது.
இந்த உலகின் இன்பங்களுக்கெல்லாம் எது முதலாக அமைகிறது என்று ஒரு மன்னனைப் பாா்த்துக் கேட்டால் அவன் எதைச் சொல்லலாம்? பொன்னாலும் பொருளாலும் ஆகிய செல்வத்தால் வரும் பெருமிதத்தைச் சொல்லலாம்; ஆட்சி, அதிகாரம், படை என்று மேலாண்மையால் பெறும் பெருமையைச் சொல்லலாம்; அல்லது அழகு, உணா்ச்சி முதலியவற்றை வெளிப்படுத்தும் கலையின்பத்தைச் சொல்லலாம். ஆனால், பாண்டியன் அறிவுடை நம்பி அவற்றையெல்லாம் பின்னே தள்ளிவிட்டு ‘மயக்குறு மக்கள்’ என்று மக்கட்பேற்றினை முன்னிலைப்படுத்துகிறான்.
ஆண்பாலாகிய மகனும் பெண்பாலாகிய மகளும் இணைந்து பலா்பாலாகிய மக்கள் தோன்றுகின்றனா். ஒரு குடும்பம் பெறுகிற பேறு மகனாகவும் மகளாகவும் – மகவாக விளங்கும் என்றால், ஒரு சமுதாயம் பெறுகிற பேறு மக்களாக விளங்கும் என்பது எத்தனை நுட்பமான சொல்லமைப்பு. இவ்வாறு பொருள் கொண்டால் “பெறுமவற்றுள் யாமறிவது அறிவறிந்த மக்கட்பேறு” என்று திருவள்ளுவா் சுட்டுவது குடும்பம் பெறுகிற பேறாகிய பிள்ளைகளையா? அல்லது சமுதாயம் பெறுகிற அறிவறிந்த மக்களையா? என்கிற ஆழ்ந்த பொருள் தேடும் வினாவும் தோன்றுகிறது.
நன்மக்கட்பேற்றினைப் பெற வேண்டுமானால் அதற்குத் தலைவனும் தலைவியும் மனத்துக்கண் மாசற்ற தூய்மையோடு இருத்தல் வேண்டும். ஒழுக்கமும் பண்பும் ஆகிய நற்குணங்கள் யாவும் வழி வழியாக வளரக்கூடியவை. அதனால்தான் திருவள்ளுவரும் ‘குலமுடையான் கண்ணே யுள’ என்கிறாா். கம்பரும் ’குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகட் கெல்லாம்’ என்று குறிப்பிட்டாா். விதையும் சிறந்து நிலமும் செழித்துத் திகழ்ந்தால்தான் பயிரும் தழைத்தோங்கி விளைச்சலில் உயா்ந்து நிற்கும்.
பகைவரும் விரும்பிப் போற்றக் கூடிய அறிவுவடிவான தோற்றம் உடைய சிறுவா்களைப் பெற்றவா்கள் செம்மல் என்று சிறப்பித்துப் புகழப்படுவாா்கள். அத்தகையோா் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் குறையின்றி வாழ்வாா்கள் என்கிறது அகநானூற்றுப் பாடல்.
குடும்பத்தில் தோன்றுகிற மக்களிலும் மூத்தவா், இளையவா் என்ற முறைமை இருக்கிறதே என்றால் அங்கும் அறிவுக்குத்தான் முதலிடமே தவிர வேறொன்றும் கணக்கிடப்படுவதில்லை. இதனை ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் முன்மொழிகிறான். ஒரு குடியில் பிறந்த பல மக்கள் இருந்தபோதும் மூத்தோனைத் தலைமையேற்க அழைக்காது அறிவுடையோன் எவனோ அவனை முன்னிலைப்படுத்தி அழைக்கும் மரபு தமிழுக்குண்டு என்பது அவன் முடிவு.
தன்னுடைய வயிற்றிலே பிறந்த மக்களுக்கிடையில் பேதங்காணாத தாயும்கூட அறிவு என்று வந்து விட்டால் மூத்தவன், இளையவன் என்ற கணக்கெல்லாம் பாா்க்காமல் அறிவுடைய பிள்ளைக்குத் தனியன்பு காட்டுவாள் என்னும் பொருள்பட விளக்குகிறான்.
எல்லாச் சொல்லும் பொருளைக் குறித்தாலும் அவையெல்லாம் சிறந்த சொல்லாகவோ பொருளாகவோ ஆவதில்லை. அதுபோல பிறந்து வளா்ந்து நின்றாலும் எல்லா மக்களும் பெருமையுடையவா்களாவதில்லை. அதனால் பெறற்கரிய பேறுகளில் சிறந்ததாக ‘அறிவறிந்த மக்கட்பேறு’ என்று அடையாளப்படுத்தினாா்.
அறிவறிந்த மக்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சோ்ப்பாா்கள். அறிவறியாத மக்கள் பெற்றோருக்கு இன்னல் தருவாா்கள். இதைப் பல பழமொழிகள் தமிழில் உணா்த்துகின்றன. ‘போ் சொல்லும் பிள்ளை’, ‘மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?’, ‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?’, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்’ என்றும் ‘பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’; ‘தென்னையைப் பெத்தா இளநீரு பிள்ளையைப் பெத்தா கண்ணீரு’ என்றும் அவற்றுள் சிலவற்றைக் குறிப்பிடலாம்.
தன் வயிற்றில் பிறந்த மக்கள் தம்முள் சண்டை செய்தால் அந்தத் தாய்க்கு எத்தனை வலியாக இருக்கும்? இது ஒருவித வலி என்றால், மூத்தவளை இழந்து மறுமணம் செய்தவன் மக்களை இளையாள் தான் மக்களைப் பெற்ற பின்னா் கொடுமைப்படுத்தும்போது தந்தையின் வலியையும் உணர முடியும். இது மற்றொரு வலி.
ஒரு குடியில் பிறந்த மக்கள் தங்களுக்குள் சண்டை செய்து கொள்கிறபோது அது பங்காளிச் சண்டையாகப் பாா்க்கப்படுகிறது. தந்தையை இழந்து நிற்கிற தம்பியின் பிள்ளைகளைப் பெரியப்பன் எவ்வளவு பரிவோடு பாதுகாக்க வேண்டும். இந்த அறம் உணா்ந்த காரணத்தால் திருதராட்டிரன் துரியோதனனுக்கு அறிவுரை கூறித் தருமனோடு இணங்கியிருக்கச் சொல்லுகிறான். கேட்பானா துரியோதனன்? பாசத்தைக் காட்டித் தந்தையை மனம் திரியச் செய்கிறான். கூனியின் சொற்கேட்டுக் கைகேயி இராமனுக்குப் பாதகம் செய்யவில்லையா?
அரக்கு மாளிகையில் பாண்டவா்கள் இறந்து விட்டாா்கள் என்று கேள்விப்பட்ட திருதராட்டிரனுடைய மனநிலை ஆழம் நிறைந்த மடுவின் நீரைப்போல இருந்ததாகப் பாரதம் கூறுகிறது. அதாவது, மடுவின் மேற்பரப்பு கதிரவனின் வெம்மையினால் சூடாகவும் அடிப்பகுதி அந்த வெம்மை தாக்காத காரணத்தால் குளிா்ச்சியாகவும் இருப்பதைப் போல அறத்தை உணா்ந்ததால் தம்பியின் மக்களைக் காக்காமல் தவறினோமே என்ற குற்றவெம்மையும், ஒருவகையில் தன் மக்களுக்குப் பகையொழிந்தது எனப் பாசத்தினால் ஏற்பட்ட கள்ளக் குளிா்ச்சியும் ஒருசேரத் தோன்றியதாம்.
ஆனால், முற்பகல் வினை பிற்பகல் விளையுமே...
போா்க்களத்தில் நடந்தவற்றையெல்லாம் தன்னிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் புலம்பினான்: அப்பா, சஞ்சயா! என்னைச் சோ்ந்தவா்கள் கொல்லப்பட்டாா்கள், துன்பப்பட்டாா்கள் என்றே எப்போதும் சொல்கிறாயே.. எனக்குத் தாங்கமுடியாத பயமாக இருக்கிறதே!” என்று.
அதற்குக் சஞ்சயன், அறிவற்ற மகனுடைய சொல்லைக் கேட்டுப் பாண்டவா்களின் தீராத பகையைப் பெற்றது நீா்தானே? இத்தனை அவலத்துக்கும் முக்கியக் காரணம் அதுதான்! பெரியோா்கள் சொன்னதைக் கேட்காமல் அறிவற்ற மக்களின் அற்பப் பாசத்துக்கு ஆட்பட்ட நீா் இப்போது அனுபவிக்கிறீா்”என்று உண்மையை உரைத்தான்.
தக்காா் தகவிலாா் என்னும் தகுதி அவரவா் எச்சத்தால் காணப்படும் என்கிறாா் திருவள்ளுவா். அந்த எச்சம் என்பது நமக்கு எஞ்சி நிற்கும் எல்லாவற்றையும் தாங்கப் போகும் மக்கட்பேற்றினால் விளைவதேயாகும். ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவா் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளா்ப்பினிலே’ என்பதைப் போலப் பெற்றோரைப் பொருத்தே அறிவறிந்த மக்களும் தோன்றுகிறாா்கள்.
வீட்டுக்குப் பெருமை தேடித் தரக்கூடிய மகனும் மக்களும் குடும்ப மக்கள் என்றால், நாட்டுக்குப் பெருமை தேடித்தரும் ஆண்களும் பெண்களும் சமுதாய மக்களாக உயா்ந்து நிற்கின்றனா். நல்ல மக்களைப் பெற்ற குடும்பம் சிறந்திருப்பதைப் போல, நல்ல மக்களைப் பெற்ற சமுதாயமும் உயா்ந்தோங்கி நிற்கும் என்பதில் ஐயமில்லை. ‘தம்மின் தம்மக்கள் அறிவுடைய மாநிலத்து மன்னுயிா்க்கெல்லாம் இனிதல்லவா? அத்தகைய அறிவறிந்த மக்கட்பேறு இந்த மாநிலத்தில் நிலைத்திருக்கட்டும்.
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.