முகப்பு
தினமணி கதிர்

கோலிவுட் ஸ்டூடியோ!

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் பொங்கல் வெளியீடாக திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தது.

Updated On : 15 மார்ச், 2026 at 10:01 AM
பகிர்:

தள்ளிப் போகும் ஜனநாயகன் ரிலீஸ்?

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் பொங்கல் வெளியீடாக திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தது. அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். படத்துக்கு சென்சார் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

'ஜனநாயகன்' படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தணிக்கை வாரியம் தாமதிக்கிறது எனக் கூறி நீதிமன்றத்தை நாடியிருந்தது படக்குழு. பிறகு படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்புவதாக முடிவு செய்து, வழக்கையும் வாபஸ் வாங்கியிருந்தார்கள். இதனை தொடர்ந்து படத்தின் வெளியீடு 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது எனத் தகவல்கள் பேசப்பட்டன. ஆனால், ரிலீஸ் தொடர்பாக படக்குழுவினர் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

படத்தை ரிவைசிங் கமிட்டி பார்வையிட, கடந்த மாதம் படத்தை படக்குழு சமர்ப்பித்திருக்கிறார்கள். அண்மையில் இத்திரைப்படத்தை ரிவைசிங் கமிட்டி பார்க்கவிருக்கிறது என்ற தகவலும் வந்திருந்தது. ஆனால், ரிவைசிங் கமிட்டியில் இருக்கும் உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் வேறு தேதியில் படத்தைப் பார்ப்பதற்குத் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால் 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகும் எனவும் கூறப்படுகிறது.

அங்கீகாரம் குறித்து சமுத்திரக்கனி!

ஜீ 5 ஓ.டி.டி. தளத்தில் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான சீரிஸ் 'தடயம்'. நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள 'தடயம்' சீரிஸில், சமுத்திரக்கனி எஸ்.ஐ. அதியமான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஷிவதா இன்ஸ்பெக்டர் லக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த சீரிஸ் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

இதனைக்கொண்டாடும் வகையில், படக்குழு ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தது.அதில் கலந்துகொண்டு பேசிய சமுத்திரக்கனி , 'எல்லா மனசும் ஒரு வெற்றிக்காகத் தான் ஏங்கிக்கொண்டே இருக்கும். 'தடயம்' மூலம் கிடைத்த இந்த வெற்றி ஆழமாக மனசுக்குள் சென்று பல விஷயங்களை சரி செய்த மாதிரி ஓர் உணர்வைத் தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி.

நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். அத்தனை எபிசோடிலும் வாலில் வெடி கட்டிய மாதிரி ஓடிக் கொண்டே இருப்போம். ஆனால், ஜெயித்துவிட்டீர்கள் என்று சொல்லவே மாட்டார்கள். அந்தப் பயணத்தில் இவ்வளவு நேர்மையான பாராட்டுகளைக் கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்தப் படைப்பு முழுவதும் கெளஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது. அவரும், அஜய், நவீன், கே.கே. சார் உள்ளிட்ட பலரும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள்.அனைவரின் உழைப்பும் சேர்ந்து தான் இந்த வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

அப்பாவிடம் இருந்து பிள்ளைக்குக் கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரிய விஷயம். அந்த அங்கீகாரம் அஜய்க்கு இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருப்பது எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 'அப்பா' படம் இயக்கும் சமயத்தில் பல ஆளுமைகளிடம் அவர்களின் அப்பா பற்றிப் பேசச் சொல்லி வீடியோ எடுத்தோம். அப்படி இயக்குநர் ப்ரியதர்ஷன் சார் சொன்ன போது, 'எனக்கு சி.பி.ஐ. பணிக்காக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள கடிதம் வந்தது. அதே நாளில் பாசில் சாரிடம் உதவி இயக்குநராக சேர அழைப்பும் வந்தது. லெட்டரை மடித்து தலையணை அடியில் வைத்துவிட்டு பாசில் சாரிடம் சேர்ந்தேன்.

ஒரு வாரம் கழித்து நேர்முகத்தேர்வு கடிதம் பற்றி தெரிந்த என் அப்பா, 'இனி என்னிடம் பேசாதே' என்று சொல்லிவிட்டார். பல படங்கள் இயக்கியும், தேசிய விருதுகள் பெற்றும் என் அப்பா என்னிடம் பேசவில்லை. கடைசியாக பத்ம ஸ்ரீ விருது வாங்கிவிட்டு வீட்டுக்குச் சென்ற போது, 'சாரிடா, நீ சரியான பாதையைத் தான் தேர்வு செய்திருக்கிறாய்' எனச் சொல்லி தோளில் தட்டிக் கொடுத்தார். இது நடக்க 30 வருடம் ஆனது' எனக் கூறினார் ப்ரியதர்ஷன். அது போல தகப்பன் ஒரு கனவில் இருக்கும் போது, அவரின் கனவை ஈடு செய்யும் வாய்ப்பு அமைவது பெரிய விஷயம்' என்று பேசியிருக்கிறார்.

தீபிகாவுக்கு அனன்யா பாண்டே ஆதரவு!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சினிமாவில் 8 மணி நேர பணி இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இக்கோரிக்கையால் சில படங்களில் இருந்து நீக்கப்பட்டார். அப்படி இருந்தும் கோரிக்கையில் உறுதியாக இருக்கிறார்.

தீபிகா படுகோனோ தாயான பிறகு இக்கோரிக்கையை விடாது வலியுறுத்துகிறார். இவ்விவகாரத்தில் தீபிகா படுகோனேவுக்கு பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே ஆதரவு தெரிவித்துள்ளார்.

அனன்யா பாண்டே, கரீனா கபூர் கான் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் இணைந்து நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது திரைத்துறையில் நிலவும் வேலை நேர விவாதங்கள் குறித்து அனன்யா கூறுகையில், 'தீபிகா தாயாவதுக்கு முன்பு நான் அவருடன் பணியாற்றியுள்ளேன்.

அப்போது அவரிடம் இது போன்று 8 மணி நேர வேலை வேண்டும் என்று கோரும் பழக்கம் எதுவும் இருந்ததில்லை. அவர் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். எதற்கும் புகார் அளிக்கவில்லை, எதையும் பிரத்யேகமாகக் கேட்கவும் இல்லை. இப்போது அவர் ஒரு தாய் என்பதால் முதல் இரண்டு ஆண்டுகள் குழந்தையுடன் இருக்க வேண்டியது அவரது தற்போதைய தேவை' என்றார்.

மேலும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான கரீனா கபூரைப் புகழ்ந்து பேசிய அனன்யா, 'அவருக்குப் பின் வரும் நடிகைகளுக்காக அவர் விதிகளை மாற்றியமைத்ததார். கரீனா அதைச் செய்ததன் மூலம் அவருக்குப் பின் வரும் அனைத்துப் பெண்களுக்கும் அவர் ஒரு புதிய பாதையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். எனவே, உங்கள் தயாரிப்பாளருடன் பணி நேரம் குறித்துப் பேசுவது தவறில்லை என்று நான் நினைக்கிறேன்.

இது தயாரிப்பாளரிடம் தனிப்பட்ட முறையில் பேசி சரிசெய்யப்பட வேண்டிய விஷயம். இவ்வளவுதான் செய்வோம், இவ்வளவுதான் செய்ய வேண்டும் என்று எந்தக் கடுமையான விதியும் இல்லை. இதைப் பற்றிப் பேச அனைவருக்கும் உரிமை உண்டு' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →