உலகில் நீரின் மிகப் பெரிய இயற்கை மூலமாக கடல் விளங்குகிறது. நீர் சூழ்ந்த இப்பேருலகில் ஆர்த்தெழும் கடலே மாபெரும் பரப்பை (71 சதவீதம்) கொண்டுள்ளது. எஞ்சியுள்ள பகுதியில்தான் (29 சதவீதம்) நிலப்பரப்பு உள்ளது.
தொன்மைக்காலந்தொட்டே கப்பல் போக்குவரத்து, கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம் முதலியன கடல் வழியேதான் மேற்கொள்ளப்பட்டன. கடலைச் சுற்றித்தான் அக்காலத்தில் உலகம் இயங்கி வந்துள்ளது. மனித நாகரிகம் வளர்ச்சி பெறுவதற்கு கடல் கடந்த வணிகம் ஒரு பெரும் காரணியாக இருக்கிறது. நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு கடல் வளம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.
உட்புறம் நெருப்பு குழம்பாகக் கொதித்துக் கொண்டிருக்கிற இந்தப் புவியின் மேற்பரப்பை குளிர்விக்கின்ற ஒரு குளிர்விப்பானாகக் கடல் அமைந்து இருக்கிறது. எனவே, அதை 'புவியின் தோல்' என்று அழைக்கின்றனர்.
கடற்கரை என்பது கடல் ஓரம் அமைந்துள்ள நிலப் பகுதியாகும். கடற்கரைகள் பொதுவாக மணல் அல்லது பாறைகளால் ஆனவை. கடலையொட்டி அமைந்துள்ள கடற்கரைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுற்றுலாத் தலமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் அன்றிலிருந்து இன்றுவரை விளங்கி வருகின்றன; அத்துடன் கடல், வணிகத்தை மேற்கொள்ளவும், கடலோர பகுதிகளை அரிப்பிலிருந்து காக்கவும், துறைமுகங்கள் அமைக்கவும், வணிகங்களை மேற்கொள்ளவும் பயன்படுகிறது.
தேசிய நீர்வரைவியல் அமைப்பு (நேஷனல் ஹைட்ரோகிராஃபிக் ஆர்கனைசேஷன்) மற்றும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய கணக்கெடுப்பு, இந்தியாவின் கடற்கரை பகுதிகள் கடந்த 53 ஆண்டுகளில் 48 சதவீதம் விரிவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 1970-இல் இந்திய கடற்கரை பகுதியின் நீளம் 7,516 கி.மீ.-ஆக இருந்தது. தற்போது, இது 2023, 2024-இல் 11,098.81 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. அதாவது, 1970-இல் பதிவு செய்யப்பட்டதைவிட நீளம் 3,582.21 கி.மீ. அதிகரித்துள்ளது.
தற்போது, கடற்கரை, கடற்கரை தீவுகள் மற்றும் கழிமுகங்கள் (ஐலெட்ஸ்) பற்றிய துல்லியமான கணக்கீடுகளை மேற்கொண்டதாலும், பழைய கணக்கெடுப்பின்போது, கணக்கிட இயலாத கடற்கரை வளைவுகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத, சீரற்ற விளிம்புநிலை வெளிப்புறங்கள் ஆகியவற்றின் அளவீடுகளை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடற்கரையோரமாக இருக்கும் சில தீவுகள், குறைந்த அலைகளின் போது பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்படுவதால், கடற்கரையோர தீவுகளாக அவை மறு வகைப்படுத்தப்பட்டுள்ளன, ரயில் மற்றும் சாலை பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டவை தவிர புதிய கணக்கெடுப்பில் 1,298 கடல் தீவுகள் மற்றும் 91 கடற்கரை தீவுகள் மொத்தம் 1,389 பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தம், தொடர்புடைய மத்திய, மாநில அரசுகளின் துறைகளுடனும், இந்திய கடலோர காவல்படையுடனும், தேசிய தொலைநிலை உணர்திறன் மையம் (நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர்) போன்ற ஆராய்ச்சி நிறுவனத்துடனும் கலந்தாலோசித்து ஒருமனதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட நீளம் ஆகஸ்ட் 2023-இல் புதுதில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் இறுதிசெய்யப்பட்டது. எனவே, புதிய மேம்பட்ட அளவை மூலம் இந்திய கடற்கரையின் நீளம் இதுவரை கருதப்பட்டது போல சுமார் 7,516 கி.மீ. அல்ல. மாறாக, சுமார் 11,098.81 கி.மீ. என மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலமான குஜராத்தின் கடற்கரை பகுதி 1,214 கி.மீ.-லிருந்து 2,340.62 கி.மீ.-ஆக விரிவடைந்துள்ளது. அதே போல, தமிழ்நாட்டின் கடற்கரை பகுதி 960 கி.மீ.-லிருந்து 1,068.69 கி.மீ.-ஆக விரிவடைந்துள்ளது. புதுச்சேரியின் கடற்கரை பகுதி 1.2 கி.மீ.-லிருந்து 42.65 கி.மீ.- ஆக விரிவடைந்துள்ளது.
இந்தியாவின் கடற்கரை நீளத்தை சமீபத்தில் திருத்தியமைத்திருப்பது, நம் நாட்டுக்கான பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உந்து சக்தியாக அமையும் எனக் கருதினாலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடற்கரை அரித்தல் போன்ற சுற்றுச்சூழல் பிரச்னைகள் இந்திய கடற்கரைகள் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான சவாலாகும்.
திருத்தப்பட்ட நீளம் கடற்கரையோர சாலை கட்டுமானம் மற்றும் பிற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உதவுவதுடன், வேலைவாய்ப்பிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். இது, இந்திய கடற்கரைப் பகுதிகளைக் காண வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கும். மீன் பிடிப்புத் தொழிலையும், உப்புத் தயாரிப்பு தொழிலையும் அதிகரிக்கச் செய்து, நெய்தல் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதார சூழலையும் மேம்படுத்தும். அத்துடன், நாட்டின் அந்நிய செலாவணியையும் அதிகரிக்கச் செய்யும்.
மேலும், இந்த விரிவடைந்த கடற்கரை பகுதி, கடல் அரிப்பு மற்றும் கடலோர பாதுகாப்பை சிறப்பாகக் கண்காணிக்க உதவும். நம் நாட்டிற்குள் பயங்கரவாதிகள் கடல் வழியே ஊடுருவுவதால், கடலோர பாதுகாப்பை மத்திய மற்றும் மாநில அரசுகள் சரியான முறையில், மிகத் துல்லியமாக, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் கையாண்டு கண்காணிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், 26.11.2008 அன்று இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடல் வழியாக வந்துதான் நடத்தினர் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
இந்தச் சூழ்நிலையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடலில் தூர்வாரப்பட்ட மண்ணால் 28 ஏக்கரில் நிலப்பரப்பு அமைத்து புதிய சாதனை படைத்துள்ளது. இத்துறைமுகத்தில் மூன்றாவது வடக்கு சரக்கு தளத்தில், 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய சரக்கு கப்பல்களைக் கையாள வசதியாக ஆழப்படுத்தும் பணி அண்மையில் முடிவடைந்தது. உள்துறைமுகப் பகுதியில் கப்பல் வரும் சுற்றுவட்டப் பாதை, 488 மீட்டரிலிருந்து 550 மீட்டராக ஆழப்படுத்தி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரிய வகை சரக்கு கப்பல் மற்றும் சரக்கு பெட்டக கப்பல்களைக் கையாளும் வசதியை இந்தத் துறைமுகம் பெற்றுள்ளது.
கடலில் ஆழப்படுத்தும் பணியின்போது எடுக்கப்பட்ட மண் வளங்களை வீணாக்காமல், துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கு அருகில் மற்றும் காற்றாலை இறகுகளை சேமித்து வைக்கும் கிடங்கு பகுதியில் 8 லட்சம் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட தூர்வாரப்பட்ட மண் வளங்களைப் பயன்படுத்தி, 28 ஏக்கர் புதிய நிலப்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் இது குறித்து தெரிவிக்கையில், 'பொதுவாக ஆழப்படுத்தும் பணியின்போது கிடைக்கும் மண் வளங்கள் கழிவுகளாகவே கருதப்படும். 'கழிவிலிருந்து செல்வம்' என்ற புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தி, தூர்வாரலின் போது கிடைத்த மண்ணைக் கொண்டு நிலப்பரப்புகளை உருவாக்கியுள்ளோம். கழிவாகக் கருதப்படும் தூர்வாரப்பட்ட மண் வளத்தை மறு சுழற்சி செய்து பயனுள்ளதாய் மாற்றியதில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு வெளியாகியுள்ளது.
ஆழப்படுத்தும்போது கிடைத்த மண் வளங்களைத் திட்டமிட்டு பயன்படுத்தியதால், சரக்குத் தளங்களையும், சேமிப்புக் கிடங்குகளையும் அமைப்பதற்கான பயனுள்ள நிலத்தை உருவாக்க முடிந்தது. இதனால், ஒரு கன மீட்டர் நிலத்தை உருவாக்குவதற்கு ரூ. 600 வரை சேமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் முக்கிய கடற்கரைகளுக்கு 'நீலக்கொடி' சான்றிதழ் பெறத் தேவையான உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு கடலோர ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த சான்றிதழ் டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் முக்கியமான அங்கீகாரம் ஆகும்.
இந்தச் சான்றிதழ் கடற்கரையின் தூய்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, மேலாண்மை மற்றும் கடற்கரையின் ஆரோக்கிய நிலை போன்ற சர்வதேச நிலைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில், அத்தகைய கடற்கரைகளுக்கு மட்டுமே இதுவரை வழங்கப்படுகிறது. இதுவரை இந்தியாவில் எட்டு கடற்கரைகள் மட்டுமே இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில், செங்கல்பட்டிலுள்ள கோவளம் கடற்கரை மட்டுமே இந்த சான்றிதழை இதுவரை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய நான்கு கடற்கரைகளான சென்னை மெரீனா கடற்கரை, கடலூர் மாவட்டம் சில்வர் கடற்கரை, நாகப்பட்டினம் மாவட்டம், காமேஸ்வரம் கடற்கரை, ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரை ஆகியவற்றுக்கு 'நீலக்கொடி சான்றிதழ்' பெறத் தேவையான உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால், இக்கடற்கரைகளில் நடைபாதை, மிதிவண்டிப் பாதை, விளையாட்டு மைதானம், படகுத் துறை, கண்காணிப்பு கோபுரம், பாரம்பரிய தாவர வகைகள் ஆய்வுக் கூடம் போன்றவை அமைககப்படும். மேலும், அங்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக தனி கடற்கரை கண்காணிப்புக் குழு ஒன்றும் அமைக்கப்படும். இது தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.