கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க அறிவியல் ரீதியான தரவுகள் தேவை என்று மத்திய அரசின் கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். மேலும், "கீழடி அகழாய்வு குறித்து அளிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல; அவற்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பு மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். கூடுதல் தகவல்கள், சான்றுகள், கூடுதல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன' என்றும் அவர் கூறியுள்ளார்.
கீழடியில் 2014- 2015 மற்றும் 2015- 2016 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் துறை அதிகாரியான முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணன் தலைமையில் வைகையாற்றின் தோற்றுவாயிலிருந்து அது கடலில் கலக்கும் இடம்வரை இருகரைகள் நெடுகிலும் ஆய்வு நடத்தப்பட்டு 293 தொல்லியல் ஆய்வு சுவடுகள் கண்டறியப்பட்டன. இவற்றில் மதுரை அருகே கீழடி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து முதலில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இதன்மூலம் 5,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.
முதன்முதலாக செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் சுவடுகள் கண்டறியப்பட்டன. ஓடுகள், உறைக்கிணறுகள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் அடங்கிய ஏராளமான பானை ஓடுகளும் கண்டறியப்பட்டன. அதில் ஒரு பானை ஓட்டில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. பாண்டியரின் சின்னமான மீன் சின்னம் கிடைத்ததால் இது பண்டைய மதுரையாக இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது.
மேலும், அங்கு கண்டறியப்பட்ட பழம்பொருள்களின் மூலம் கீழடி நாகரிகம் ஒரு நகர்ப்புற நாகரிகமே என்பது நிறுவப்பட்டுள்ளது. இதன் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என்பதும் தமிழகத்தின் தொல்லியல் ஆய்வு வரலாற்றில் இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாகும் என்பதும் வரலாற்றுபூர்வமான உண்மைகளாகும்.
1926-ஆம் ஆண்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தின்போது சிந்து மாநிலத்தில் சர் ஜான் மார்ஷல் என்ற தொல்லியல் அதிகாரி நடத்திய அகழாய்வில் சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டது. இந்திய வரலாற்றில் ஆரியர் இந்தியாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே மிகத் தொன்மையான நாகரிகம் இது என்பதை உலகம் உணர்ந்தது. இயற்கை காரணங்களினால் சிந்துவெளி நாகரிகம் அழிந்து 1,000 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆரியர்கள் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தனர் என்பதையும் உலகம் உணர்ந்தது.
சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட 88 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டறியப்பட்ட மிகத் தொன்மையான நாகரிகம் கீழடி வைகைக்கரை நாகரிகமே என்பது நிலைநாட்டப்பட்டது. சிந்து சமவெளி அகழாய்வில் குதிரையின் எலும்பு கிடைக்கவில்லை. அதைப்போலவே கீழடியிலும் குதிரை எலும்பு கிடைக்கவில்லை. எனவே, இந்த இரு நாகரிகங்களும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட நாகரிகங்களாகும்.
இதற்கான தரவுகளைத் தொகுத்து ஆராய்ந்ததுடன், அங்கு கிடைத்த 4,000-த்துக்கும் மேற்பட்ட தொல்பொருள்களை மிகப் பாதுகாப்புடன் வைத்து, அவற்றில் விலங்குகளின் எலும்புகளை புணேவில் உள்ள டெக்கான் கல்லூரி அகழாய்வு பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பி அறிவியல்பூர்வமாக ஆராயப்பட்டு அறிக்கை அளித்துள்ளனர். பசு, காளை, பன்றி, மான் போன்ற பல்வேறு விலங்கினங்களின் எலும்புகள் இவை என அந்த பரிசோதனைக்கூடம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள "பிரெஞ்சு பேலினாலஜி மற்றும் பேலியோஈகாலஜி பரிசோதனைக்கூடத்தில் பணியாற்றிவரும் அறிவியல் அறிஞர்களால் நன்கு ஆராயப்பட்டு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்காவில் உள்ள "பீட்டா அனலிட்டிக்' மையத்துக்கு சில பொருள்கள் இந்திய அரசினால் அனுப்பிவைக்கப்பட்டு அந்த மையம் "ரிப்போர்ட் ஆஃப் ரேடியோகார்பன் டேட்டிங் அனலைஸிஸ்' என்ற ஆய்வறிக்கையை அளித்துள்ளது.
இந்தியாவில் புணே, புதுச்சேரி ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் தரம்வாய்ந்ததும், இந்திய அரசினால் ஒப்புக்கொள்ளப்பட்டதுமான ஆய்வு மையங்களும், அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையமும் கீழடியில் கிடைத்த பழம்பொருள்களை ஆராய்ந்து கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெளிவான அறிக்கையை அளித்துள்ளன.
மேலும், அங்கு கிடைத்த பானை ஓடுகளிலும், தங்கக் கட்டிகளிலும் பொறிக்கப்பட்டிருந்த பிராமி தமிழ் எழுத்துகளின் மூலம் அவை கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது கண்டறியப்பட்டது. தமிழ் பிராமி எழுத்து தமிழ்நாட்டில் தோன்றி இந்தியாவின் மற்ற பகுதிகளுக்குச் சென்றிருக்க வேண்டுமெனச் சிந்துவெளி அறிஞரான மறைந்த ஐராவதம் மகாதேவன் ஏற்கெனவே கூறியுள்ளார். ஏனெனில், தமிழகத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பானை ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகளைப் பார்க்க முடியுமே தவிர, இந்தியாவில் வேறெங்கும் இதுபோன்ற எழுத்து முறையைப் பார்க்க முடியாது.
அசோகர் காலத்தில் அவர் வெளியிட்ட பெரிய சாசனங்களை நாம் பார்க்கலாம். அரசரின் சாசனம் யார் வேண்டுமானாலும் எழுதிக் கொடுத்து யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். ஆனால், ஒரு பானையில் ஒரு பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது என்றால், எளிய மாந்தன் ஒருவன் தன்னுடைய பெயரைப் பொறித்துவைக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளான் என்பது தெரிவதுடன், அந்தக் காலத்தில் வாழ்ந்த சமுதாயம் கல்வி அறிவுமிக்க சமுதாயமாக இருந்தது என்பதை இந்த ஆதாரம் விளக்குகிறது.
எழுத்து என்பது உடனடியாக உருவாகிவிடாது. முதலில் குறியீடுகள் மக்களால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பிறகு அந்த குறியீடுகளே எழுத்தாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும். கீழடியின் நடுப்பகுதியில் குறியீடுகளும், மேற்பகுதிக்கு வரும்போது எழுத்துகளும் கிடைத்துள்ளன.
புதுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் கே. இராசன், கொடுமணல், பொருந்தல் ஆகிய இடங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் தமிழகத் தொல்லியல் ஆய்வில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தின. அசோகர் பிராமிக்குப் பின் தோன்றிய எழுத்தமைப்பே தமிழி என்னும் தமிழ் பிராமி எழுத்தாகும் என்ற கருதுகோளை அவருடைய ஆய்வு தகர்த்தது.
பொருந்தலில் பானை ஓட்டுக் குறியீடுகளையும் தொல்தமிழ் எழுத்துகளையும் அவர் கண்டறிந்தார். அத்துடன் நெல்மணிகள் இருந்த பானையில் எழுத்துப் பொறிப்பு இருந்ததையும் கண்டறிந்து அந்த நெல்மணிகளைக் கனிம பகுப்பாய்வுக்கு அனுப்பி தமிழ் எழுத்தின் தொன்மை மேலும் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிறுவினார். அதாவது கி.மு.3-ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்டதை கி.மு.5-ஆம் நூற்றாண்டு என அவர் நிறுவினார்.
தமிழ் பிராமி எழுத்துமுறை தொல்தமிழேயாகும். இது வடமொழி பிராமி அல்ல என்று முதன்முதலில் எழுத்தாய்வுக்கான விதையை கே.வி. சுப்பிரமணிய ஐயர் ஊன்றினார் என்பது நினைவுகூரத்தக்கது.
வட இந்தியாவில் நடைபெற்ற எந்த தொல்லியல் ஆய்விலும் இதுபோன்ற பானை ஓடுகளிலோ அல்லது மற்ற பொருள்களிலோ எழுத்துப் பொறிப்புகள் எதுவும் கிடைத்ததில்லை. அவை தமிழ்நாட்டில் மட்டும்தான் கிடைக்கின்றன. அதனால்தான் தொல்லியல் அறிஞர்கள் ஐராவதம் மகாதேவன், பேராசிரியர் இராசன் ஆகியோர் நம் பிராமி எழுத்துகளைப் பொறுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினர்.
பாண்டியர்களின் சின்னமான மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் இங்கே கிடைத்துள்ளதால் இதுதான் பண்டை மதுரையாக இருக்கும் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. கீழடியின் கால அளவைப் பார்த்தால் கி.மு.500 முதல் 10-ஆம் நூற்றாண்டு வரை இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.
கீழடியில் அகழாய்வு தொடக்கக் கட்டத்தில் கிடைத்த சான்றாதாரங்களை அடிப்படையாக வைத்து ஆய்வுக் குழுத் தலைவரான அமர்நாத் இராமகிருட்டிணன் இடைக்கால அறிக்கை ஒன்றைத் தயாரித்து இந்தியத் தொல்லியல் ஆய்வு துறைக்கு அனுப்பினார். அது கிடைத்தவுடனேயே சில நாள்களில் அவரை அஸôம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்தது இந்திய அரசு.
ஆய்வுக் குழுத் தலைவரை மேலும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்துவதற்கு அனுமதித்தால்தானே அமைச்சர் எதிர்பார்க்கும் முடிவுகள் கிடைக்கும். ஆக, கீழடி ஆய்வு குறித்த உண்மைகள் வெளிவரக் கூடாது என்ற நோக்கத்துடனேயே இந்திய அரசு செயல்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.
இதற்கு முன்பாக ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வு நடத்தப்பட்டபோது, அங்கு கிடைத்த முதுமக்கள் தாழியில் மனித எலும்புக்கூடு ஒன்று முழுமையாகக் கிடைத்தது. அதை ஆய்வுக்காக மைசூருக்கு எடுத்துச் சென்றனர். அதன் முடிவு இன்றுவரை வெளியிடப்படவில்லை.
கி.பி. 2004-2005-ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் பி. சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற அகழாய்வு குறித்து அவர் அரசுக்கு அனுப்பிய அறிக்கையையும் இன்றுவரை இந்திய அரசு வெளியிடாமல் மறைத்துள்ளது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலையீட்டின் பேரில் இரண்டு பொருள்கள் பீட்டா ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதன் அடிப்படையில் அந்தப் பொருள்களின் காலம் கி.மு. 905 என்பது நிறுவப்பட்டது. ஆனால், சத்தியமூர்த்தியின் அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை.
தமிழர்களின் தொன்மை வெளி உலகுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழாய்வு பற்றிய உண்மைகள் தொடர்ந்து மறைக்கப்படுகின்றன. நல்லவேளையாக கீழடியில் நடைபெற்ற அகழாய்வைத் தொடர்ந்து அங்கு கிடைத்த பொருள்களின் காலம் கி.மு.6-ஆம் நூற்றாண்டு என்பதை தமிழக அரசின் தொல்லியல் ஆய்வுத் துறை நிலைநாட்டியுள்ளது.
இந்த ஆய்வு இன்னமும் தொடர வேண்டும். தொடர்ந்தால் இந்தியாவின் ஆதிகுடிகள் தமிழர்களே என்ற உண்மை நிலைநிறுத்தப்படும்.
கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.