மாந்தன் இரண்டு உடல் தேவைகளோடு மட்டுமே பிறக்கிறான். மாந்தன் மட்டுமில்லை; உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் இந்த உடல் தேவைகள் பொதுவானவை! ஓரறிவு மரங்கள், செடி கொடிகள் நீரால் வாழ்கின்றன; மகரந்தச் சேர்க்கையால் இனப்பெருக்கம் செய்கின்றன!
ஒரு விலங்கு பிறிதொரு விலங்கைப் பார்க்கும்போது, அது தனக்கு இரையா என்று பார்க்கின்றது! அல்லது தன்னுடைய சேர்க்கைக்குரியதா என்று நோக்குகிறது! இது இரண்டுக்கும் பயன்படாத எந்த உயிரின் மீதும் அதற்கு எந்த அக்கறையும் இல்லை. மேலும், அவை தன்னினத்தோடு மோதி அதை அழிப்பதில்லை!
இறைவனின் படைப்புகளில் மாந்தன் மட்டுமே தன் இனத்தையே அழிக்கின்றவன்! மாந்த குல வரலாறே அழிவு சான்ற போர்களின் வரலாறுதான்! நாகசாகி, இரோசிமா இரண்டும் மாந்தன் மாந்த குலப் பேரழிவுக்குத் தோண்டிய பெரிய புதைகுழிகள்!
இவன் பிற உயிர்களைப் போல் இரை மற்றும் இணைவிழைச்சுத் தேவைகளுக்குள் அடங்காமல், பிறப்பைப் பொருளுடையதாக்குகிறேன் என்று 'புகழ்' என ஒன்றைக் கண்டுபிடித்தான்! எல்லா உயிரினங்களும் மந்தைகளில் வாழ்கின்றன; மனிதனும் மந்தைகளில்தான் வாழ்கிறான்! ஆனால், அதற்கு இவனாக வைத்துக் கொண்ட பெயர் சமூகம்! இவனை ஒழுங்குபடுத்துவதற்கு இருபது ஆண்டுகளுக்குப் பயிற்சி தேவைப்படுகிறது! பள்ளியில் சேர்க்கப்படுகின்றான்! பதினைந்து இருபது ஆண்டுகளுக்குப் படிப்பு!
நடுத்தரக் குடும்பங்களின் முக்கால்வாசி வருவாயைப் பள்ளிகள் உறிஞ்சிவிடுகின்றன! இருபத்தைந்தாயிரம் தொடங்கி ஒரு இலட்சம் ரூபாய் வரை ஒரு திங்களுக்குச் சம்பளம்!
அரசுப் பள்ளிகளுக்கு எந்தச் சம்பளமும் இல்லை! மேற்கொண்டு புத்தகங்கள், மிதிவண்டி, சீருடை, முற்றிய மாணவர்களுக்குக் கணினி என்று எல்லாமே காசின்றி அளிக்கப்படுகின்றன! ஆனால், வேறு வழியில்லாத குடும்பங்களின் பிள்ளைகளே அங்கு அனுப்பப்படுகின்றன.
அரசுப் பள்ளிக்கூடங்களிலும், ஒரு லட்சம் கட்டணம் கட்டும் தனியார் பள்ளிகளிலும், 'ஆவன்னா டூனாவை' ஆடு என்றுதான் கற்பிக்கிறார்கள்!
பணம், பதவி இவற்றால் இவர்கள் தங்களைத் தனித்துப் பிரித்துக் கொள்கிறார்கள்! இவர்களைப் பூர்சுவா வர்க்கத்தினர் என்று வகைமைப்படுத்துகிறான் மார்க்சு!
பாட்டாளி வர்க்கத்தினர் ஒரு கட்டத்தில் புரட்சி மூலம் ஆட்சிக்கு வருகிறார்கள்! பூர்சுவாக்களும் குலக்குகளும் ஒழித்துக் கட்டப்படுகிறார்கள்!
இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்னும் இரண்டு வர்க்கங்களும் ஒழிக்கப்பட்டுவிட்டதால், இப்போது வர்க்கமற்ற சமூகம் தோன்ற வேண்டும்! அதுதான் மார்க்சின் எதிர்பார்ப்பு! இணையற்ற தலைவன் லெனின் வரையிலும் அதுதான் நிலை!
ஆனால், ஆட்சி அதிகாரம் இன்னொரு புதிய வர்க்கத்தைத் தோற்றுவித்து விடுகிறது! இது புதிய பூர்சுவா வர்க்கம்; ஆளும் பொதுவுடைமைக் கட்சி அந்த இடத்திற்கு விரைகிறது! ஏற்ற-இறக்கமான சமூகத்தின் இரண்டு வர்க்கங்களையும் ஒழித்துவிட்ட பிறகு, தோன்றிய மூன்றாவது வர்க்கம் அது!
மார்க்சுக்கு நிகரான சிந்தனையாளன், மனிதகுலப் பற்றாளன் உலகில் தோன்றவில்லை. பொருளாதாரமே சட்டம், பண்பாடு அனைத்துக்கும் அடித்தளம் அமைக்கிறது என்று சொன்ன மாமேதை மார்க்சு, ஒருவரை ஒருவர் அழுத்தி வாழாத கட்டளைப் பொருளாதாரம் ஏன் சமநிலையை உருவாக்கவில்லை என்பது நம்முடைய எளிய அறிவுக்குப் புலப்படவில்லை!
நிலப்பிரபுத்துவ சமூகத்தில்கூட அதிகாரப் பற்றற்ற அசோகனும், மார்க்கசு அரேலியசும் ஆட்சிப் பீடத்தில் இருந்திருக்கிறார்களே! அவர்கள் ஏன் பெரியாக்களை ஏவுவதற்கும், எதிரிகளை ஒழித்துக் கட்டுவதற்கும் உருவாக்கிக் கொள்ளவில்லையே! ஆகவே, எத்தகைய பொருளாதாரக் கட்டமைப்பு என்பதில்லை; ஆட்சியாளர்கள் எத்தகையோர் என்பதே முக்கியம்! இந்தியாவிலும் நற்சமூக உருவாக்கத்திற்குப் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன!
பிறப்பை அடிப்படையாகக் கொண்ட நால் வருண முறைச் சோதனை இந்தியாவில் நடந்து, பேரெதிர்ப்புக்கு உள்ளாகி, அது குலைந்தது.
புலனழுக்கற்ற அந்தணாளன் என்று ஏனைய புலமைச் சான்றோர்கள் எல்லாராலும் பாராட்டப் பெற்ற கபிலன் அந்தப் பெருமையைப் பிறப்பால் அடையவில்லை; வாழ்ந்து காட்டிய முறையால் அடைந்தான்!
நந்தன் நாயன்மார் என்னும் நிலையை, வாழ்ந்து காட்டிய முறையால் அடைந்து கோயில்களில் வணக்கத்திற்குரியவன் ஆனான் என்பது தமிழ்ச் சமூகத்தின் மதிப்பிடும் முறை சிறந்திருந்ததையே காட்டுகிறது!
புளி நிறுக்கும் தராசில் பொன்னை நிறுக்கும் சமூகமும், அங்குள்ள ஆட்சி முறையும், தகைமை சான்றவர்களை உருவாக்காது; எதிர்மறையானவர்களையே உருவாக்கும்!ஆட்சியிலிருப்பவர்கள் தரமற்றவர்களாக இருந்தால், அதிகார மையத்திலும் சமூகத்திலும் இழிவானவர்களின் கை ஓங்கும்!
'வரிசையா நோக்கப்படும்' என்பான் வான்புகழ் வள்ளுவன்! தரமறிதல் என்பதே அதன் பொருள்! அது தரமில்லா ஆட்சியாளர்களின் நாட்டில் கடை போகாது!
எத்தனை எத்தனை பட்டங்கள்; எத்தனை எத்தனை விருதுகள்; எத்தனை எத்தனை இலட்சங்கள்; எத்தனை எத்தனை பவுன் காசுகள்! கள்ளச் சாராயம் குடித்துச் செத்தவன் குடும்பத்திற்கும் அந்த 'அருஞ்செயலைப்' போற்றிப் பத்து இலட்சம்!
தகைசால் தமிழனுக்கும் பத்து இலட்சம்! நல்ல வேளை அதற்குத் தகுதியான நூறாண்டைக் கடந்து இன்றும் வாழும் ஒரு பொதுவுடைமைத் தலைவன் அதற்குக் கிடைத்தான்! சரோசா தேவி, ஸ்ரீதேவி இவர்களுக்கெல்லாம் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்.
இவர்களெல்லாம் பிறந்ததால் நாடு பெற்ற பயனென்ன? பிறக்கத் தவறி இருந்தால் நாடு அடைந்திருக்கும் கேடென்ன?
கிரிக்கெட்காரர்கள் கபில் தேவ், தோனி இவர்கள் அடைந்த பணம் தக்கதே! அது அவர்களின் விளையாட்டுத் திறனுக்கு! பார்ப்போரின் எண்ணிக்கை கோடியில் என்றால், பணமும் கோடிகளில்தான்! இவர்களுக்கெல்லாம் பத்மஸ்ரீ பட்டங்கள்!
இந்த நிலை உலகெங்கும்! கால்பந்தாட்ட போர்ச்சுகல் ரொனால்டோவும், அர்சன்டைனா மெஸ்சியும் அடையாத பணமா? அடையாத விருதுகளா? வெள்ளைக்காரன்தான் ஆங்கிலச் செய்தித்தாள்களில் இதற்கொரு பக்கம் ஒதுக்கி இவற்றைப் பற்றியெல்லாம் எல்லாம் எழுதுவான். அவனைப் பார்த்து நம்முடைய ஆட்களும் எழுதுகிறார்கள்! விளையாட்டுப் பார்ப்பதற்குச் சுவையானது. அதை எழுதிப் படிப்பதில் என்ன சுவை இருக்கிறது?
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போட்டி என்றால் தேசியக் கொடியை வேறு தூக்கிக் கொண்டு போய்விடுகிறார்கள்! இரண்டு நாட்டுக்கும் போரா நடக்கிறது? ஆஸ்திரேலியா வெல்லலாம்; பாகிஸ்தான் வெல்லக் கூடாதா? எல்லாம் வெறும் ஆட்டம்தானே!
வெள்ளைக்காரன் போன பிறகும் அவன் விட்டுச் சென்ற ஆகாத பழக்கங்கள் போகவில்லை! முரணாக வாழும் குடியரசுத் தலைவரைவிட, முறையாக வாழும் தூய்மைப் பணியாளர் சிறந்தவன் என்ற 'கடையனுக்கும் கடைத் தேற்றம்' ( அன் டூ திஸ் லாஸ்ட்) என்னும் நூலில் சான் ரசுகின் சொல்லுவான்!
உன்னிடம் பத்து ரூபாய் இருப்பதில் மட்டும் உனக்கு மகிழ்ச்சி இல்லை; பக்கத்திலுள்ளவனிடம் அது இல்லை என்பதில்தான் உனக்கு மகிழ்ச்சி! அப்போதுதான் உன் அதிகாரம் அவனிடம் செல்லுபடியாகும் என்று சொன்னவன் சான் ரசுகின்!
காந்தியைத் தூங்க விடாமல் அடித்த மூன்று புத்தகங்களில் அஃது ஒன்று! அம்பபாலிகா என்னும் செதுக்கப்பட்டது போன்ற பேரழகி ஒருத்தி இருந்தாள்! அவள் மிகச் சிறந்த நாட்டியக்காரி!
அவள் ஆடும் போதும், அவளுடைய மார்பு ஏறி இறங்கும் போதும், பார்ப்போரின் மூச்சோட்டம் தடைபட்டு நின்றுவிடுமாம்! அவளுடைய ஆட்டம் முடிந்து, அவளாக இவர்களை விடுவித்தால் உண்டு! இல்லையென்றால் இல்லை. அவள் ஒரு நாள் சாதாரணமாகப் புத்தனைப் பார்க்க வந்தாள்!
''இன்னும் எவ்வளவு காலத்திற்கு இவர்களுக்கெல்லாம் களிப்பூட்டிக் கொண்டு இருக்கப் போகிறாய்?'' ஒரே ஒரு கேள்வி! கேட்டவன் புத்தன்! வீட்டுக்குப் போனாள்; தூங்க முடியவில்லை; மறுநாள் எழுந்தாள்!
தோட்டம் துறவுகளைத் தருமம் செய்தாள்! அரண்மனை போன்ற வீட்டைத் தருமம் செய்தாள்; அளப்பரிய நகைகளைத் தருமம் செய்தாள்! ஒரு துணியைச் சுற்றிக் கொண்டு வந்து புத்தனின் காலடியில் வீழ்ந்தாள்! ''என்ன செய்ய வேண்டும்?'' ''தருமத்தைச் சரணடை''.
இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளில் இலட்சக்கணக்கான நாட்டியக்காரிகள் இருந்திருப்பார்கள்! அவர்களின் சுவடுகள் எங்கே? அவர்களின் பெயர்களென்ன? அம்பபாலிகாவின் புகழ் நம்முடைய நாவில் இன்றும் நிலவுவதற்குக் காரணம் அவள் தருமத்தைச் சரணடைந்ததால்!
பகத் சிங்கும், வ.உ.சிதம்பரம் பிள்ளையும் தியாகத்தால் புகழ் பெற்றவர்கள்! பச்சையப்ப முதலியாரும், அழகப்ப செட்டியாரும் கொடையால் புகழ் பெற்றவர்கள்! இராசாசியும், சிட்டு கிருட்டிண மூர்த்தியும் வாழ்ந்த முறையாலும், அறிவாலும் புகழ் பெற்றவர்கள்! பட்டம், பதவிகள் ஒரு கொடுக்கல் வாங்கல்தானே! விருதெல்லாம் ஒரு புகழா என்ன?
கட்டுரையாளர்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.