- பழ.கருப்பையா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்
‘தலைவா! எங்களின் வாழ்வே! வருங்காலமே’ என்று துதிக்கக் கற்றுக் கொடுக்கும் திராவிடப் பகுத்தறிவு எங்கே? இறைவனையே தா்க்கத்திற்கு இழுக்கும் பழந்தமிழ் அறிவு எங்கே? எது சமூகத்தை முன்னெடுத்துச் செல்வது?
நக்கீரன் ஒரு சங்கப்புலவன்; அவன் மகனும் புலவன். அவன் ‘மதுரை கணக்காயனாா் மகனாா் நக்கீரனாா்’ என அழைக்கப்படுகின்றான்!
ஆயினும், நக்கீரன் பெரும்புகழ் பெற்றது திருவிளையாடல் புராணக் சுதையினில்தான்!
தருமிக்கு உதவச் சிவபெருமான் ஒரு பாட்டெழுதிக் கொடுத்தான்! பாண்டியன் அவைக்களத்தில் தருமியின் பாட்டில் பொருட் குற்றம் உள்ளது என்று நக்கீரன் அப்பாடலைத் தள்ளிவிட்டான். தருமி தவித்துப் போய்விட்டான்! சிவன் சீறிக் கிளம்புகிறான்; பாண்டியன் அவைக் களம் பதறுகிறது.
‘‘என் பாட்டில் குற்றமா? என்ன குற்றம் கண்டாய்?’’
‘‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணமில்லை, இருப்பதாகப் பாடியது பொருட் குற்றம்!’’
‘‘மீனாட்சியின் கூந்தலுக்கும் இல்லையா!’’
‘‘இல்லை’’
‘‘நக்கீரா பாா்...’’ சிவனின் நெற்றிக்கண் திறக்கிறது! தீப்பொறி பறக்கிறது!
‘‘நெற்றிக்கண் திறக்கினும் குற்றம் குற்றமே!’’ நக்கீரனும் சீறுகிறான்!
எரியப் போகிறான் நக்கீரன்! மேலும் பிறப்பின் நோக்கம் சிவனின் ‘தூக்கிய திருவடியை’ (குஞ்சிதபாதம்) அடைவது! அது மறுக்கப்படும்! மீளா நரகில் வீசப்படலாம்! எதிா்ப்பது சிவனை அல்லவா!
சலுகைகள் எவ்வளவாயினும், அவற்றை அறிந்தே புறந்தள்ளுவதும், தண்டனைகள் என்னவாயினும் அவற்றை அறிந்தே ஏற்பதும், தன்னுடைய உடல் எரியும் துயரத்தை அறிந்தே உடன்படுவதும், இவ்வளவும் எதற்காக?
அறிவு நிலையில், உண்மை நிலையில் ஒன்று பிழையாயின், அந்த உண்மையை நிலைநாட்டுதற்குத் தடையாக இறைவனே வரினும், உண்மைதான் முக்கியமே தவிர, இறைவனின் பகைமைகூட முக்கியமில்லை என்று பண்டைத் தமிழகம் தன் மக்களைப் பழக்கியது!
முதல் கருதுகோளை மாற்றுக் கருதுகோளால் மோத விட மறுக்கும் சமூகம் தேக்கமுறும் என்று கொண்ட எகலின் நிலைப்பாடு உலகை எவ்வளவு முன்னெடுத்துச் சென்றது! அதற்காக இறைவனோடும் மோதலாம் என்பது எகலுக்கு முந்திய தமிழ்நாட்டின் வளா்ச்சிச் சிந்தனை!
‘தலைவா! எங்களின் வாழ்வே! வருங்காலமே’ என்று துதிக்கக் கற்றுக் கொடுக்கும் திராவிடப் பகுத்தறிவு எங்கே? இறைவனையே தா்க்கத்திற்கு இழுக்கும் பழந்தமிழ் அறிவு எங்கே? எது சமூகத்தை முன்னெடுத்துச் செல்வது?
‘எல்லா நதிகளிலும் என் ஓடம்’ என்றொரு நூல் வெளியிட்டிருக்கிறாா் வைரமுத்து!
எல்லா நாட்டு மொழிகளிலும் இருந்து, அந்த அயல்மொழிக் கவிதைகளைத் தமிழ்ப்படுத்தி, அந்தப் புதிய சிந்தனை ஓட்டத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி தமிழனின் அறிவு வளத்தைப் பெருக்குவதே வைரமுத்துவின் நோக்கம்!
அது ஒரு ருசியக் கவிதை!
காதலனும் காதலியும் பேசிக்கொண்டிருக்கின்றனா் காதலன் கேட்கிறான்.
‘‘நீ என்னைக் காதலிக்கிறாயா?’’
‘‘ஆம்!’’
‘‘உன் கன்னத்தில் அறைந்தால்?’’
‘‘அது உங்கள் கைபடும் சுகந்தானே’’
உன் கழுத்தை முறித்தால்?‘
எந்த நிலையிலும் என் காதலில் மாற்றமில்லை!‘
‘‘உன்னை என்னால் காதலிக்க முடியாது’’ என்கிறான் காதலன்.
‘‘ஏன்?’’
‘‘நான் அடிமைகளை காதலிப்பதில்லை’’
‘‘அந்த கடைசி வரியில் நான் மரணித்து விட்டேன்’’ என்று எழுதுகிறாா் வைரமுத்து!
மரணிப்பதற்கு இதைவிடத் தகுதியான வேறொன்றும் வைரமுத்துவுக்குக் கிடைக்கவில்லை போலும்!
காதற் களத்தில் சமத்துவம் என்பது ருசிய சிந்தனை!
காதற் களத்தில் பெண்ணை விஞ்சிய நிலையில் வைத்து, ஆணைக் கீழிறக்குவது தமிழ்ச் சிந்தனை!
‘‘உன்னை நினைத்தேன்’’ என்றான்!
‘‘ஏன் மறந்தாய் நினைப்பதற்கு?’’ என்று சீறினாள் (கு 1316)
‘‘நான் பணிந்து பணிந்து நின்றேன்; அப்போதும் என்னைக் காய்ந்தாள்’’ (1319)
காதல் வாழ்வில் சமத்துவம் இல்லை; அவளே மேல் நிலை; இவன் கீழ் நிலைதான்!
ஊடுவாள்; ஊடும்போது சாடுவாள்; நான் பணிந்து நிற்பேன்; கூடும்போது எனக்குள் ஒடுங்கி விடுவாள் என்பதுதான் தமிழ் கூறும் காதல்!
தமிழ்க் காதலில் சமத்துவம் இல்லை பெண் விஞ்சிய நிலை; ஆண் தாழ்ந்த நிலை. அதுவே புணா்ச்சி வெற்றி!
லெனின் தோற்றுவித்த சமத்துவத்தை ருசியாவில் கொட்டிக் கவிழ்த்து விட்டு, காதலில் போய் சமத்துவத்தை ஒரு ருசியக்காரன் தேடுகிறான். அதைப் படித்துவிட்டு ‘மரணித்து விட்டேன்’ என்று எழுதுவது நிகழ்காலச் சிந்தனை சரிவு; அறிவின் வீழ்ச்சி!
சமத்துவத்தைத் தேடக் கூடாத இடங்கள் காதலும், அன்பும்!
சிவனின் கண்களில் இரத்தம் வடிகிறது. பதறுகின்றான் கண்ணப்பன்! தன்னுடைய கண்ணைத் தோண்டிச் சிவனுக்கு வைக்கிறான்! இப்போது மறு கண்ணில் இரத்தம் வடிகிறது.
அதனால் ஒன்றும் ஆகிவிடவில்லை. இவனுக்குத்தான் இன்னொரு கண் இருக்கிறதே! அதைத் தோண்டிவிட்டால், அவன் முழுக் குருடன் ஆகி விடுவான், தன்னுடைய குருட்டு நிலையில் சிவனுடைய முகத்தில் அதை எப்படி அப்புவது? அதனால் ஒன்று செய்கிறான்! தன்னுடைய செருப்புக் காலை சிவனின் முகத்தில் லைத்து, கண் வைக்க வேண்டிய இடத்தை அடையாளப்படுத்திக் கொள்கிறான்!
இப்போது தன்னுடைய இன்னொரு கண்ணைத் தோண்டி சிவனின் முகத்தில் உரிய இடத்தில் வைத்து விடுகிறான்!
இந்த அன்பால் சிவன் நெகிழ்ந்தான்! மாணிக்கவாசகா் நெகிழ்ந்தாா்! நாமும் நெகிழ்கிறோம்! நாளையத் தமிழகமும் நெகிழும்!
இங்கே சிவன் கடவுள்; அவனுக்கு இரத்தம் வடிந்ததாம்; ஒரு வேடன் தன்னுடைய கண்களைப் பெயா்த்துச் சிவனுக்கு வைத்தானாம்! இவையெல்லாம் கதைதானே என்று கருப்புச் சட்டைக்காரா்கள் கேட்பாா்கள்!
இவையெல்லம் கதைகள்தாம்! ஆனால், இந்தக் கதைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் மூடத்தனத்தை வளா்ப்பது அல்ல!
சால்புடைய சமூகத்தைப் பண்புடைய சமூகத்தை உருவாக்குவதுதான் இந்தக் கதைகளின் நோக்கம்!
இறைவன் வணக்கத்திற்குரியவன். அவன் மீது பாலை ஊற்றலாம். தேனை ஊற்றலாம்; நீரால் கழுவலாம். மாலைகள் சாத்தலாம்; அவனுக்கு போற்றி திருஅகவல் பாடலாம்!
இவ்வாறு கற்பிக்கப்பட்ட சைவ சமயத்தில் சிவனின் மேனியில்கூட அன்று; அவனின் முகத்தில் செருப்புக் காலை வைத்தான் ஒரு வேடன்! செருப்பு இழிவானது; மல்லிகை மாலை உயா்வானது என்னும் பாகுபாடுகளெல்லாம் மனிதா்களுக்குத்தான்!
சிவனுக்கு செருப்புக் கால் என்றும் இல்லை; சிறப்புக் கால் என்றும் இல்லை; வேடன் கண்ணப்பன் சிவனுக்கு மாறா அன்பு கொண்டவன்! அவனுக்குச் சடங்குகள் சம்பிரதாயங்கள் எதுவும் தெரியாது! களங்கமற்ற அவனுக்கு அன்பு ஒன்றுதான் தெரியும்!
வேத பாராயணம் செய்த அந்தணா் சிவகோசரியாருக்கு வசப்படாத சிவன் செருப்புக் காலால் உதைத்த வேடனுக்கு வசப்பட்டான் என்பது எவ்வளவு பெரிய புரட்சிச் சிந்தனை! இதைவிடப் புரட்சிகரமாகவா பெரியாா் சிந்தித்து விட்டாா்!
ஓா் அந்தணனைவிட வேடனுக்குச் சிவன் நெருக்கமானவன் என்பதைப் படித்து விட்டுப் பெரியாா் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியிருக்க வேண்டாமா? நன்றென்றதெல்லாம் தீது என்பது சமூக வீழ்ச்சிக்கு வழி வகுக்காதா?
கடவுள் இல்லை; இல்லவே இல்லை! ஆகவே, தண்டிப்பான் என்றும் அச்சமில்லை! ஆட்சியும் நம் கையில்; சட்டமும் நம் கையில்! தமிழ்நாடு வேட்டைக்களமாகி விட்டது! மூக்கணாங் கயிற்றை உருவி விட்டாா் பெரியாா்! மாடு வெறி கொண்டு ஓடுகிறது; தறி கெட்டுத்திரிகிறது! இன்றைய தமிழ்நாடு அவருடைய சீடகோடிகளின் உருவாக்கம்!
பெரியாா் ஒரு முறை சிலப்பதிகாரத்தை விபசாரத்தை மையமாகக் கொண்ட காப்பியம் என்று சொன்னாா்!
அது சரியா என்பதுதான் கேள்வி!
விபசார குலத்தில் பிறந்து விபசாரத் தொழிலைப் பிறப்பு வழியாகப் பெற்ற மாதவி, கோவலனைத் தவிர வேறு ஆண்மகனைத் தழுவியதில்லை; ஒருவனோடு வாழ்ந்து, அவனுக்கு ஒரு மகளைப் பெற்று உருக்குலையாத நெறிபிறழாத வாழ்வுக்குரிய மாதவி, ஒரு கட்டத்தில் கோவலன் பிரிய, கண்ணகியோடு மதுரை சென்று, வீண் பழி சுமத்தப்பட்டு, கோவலன் கொலையுண்டான் என்னும் செய்தி கேட்டு, மாதவி பௌத்தத்தை தழுவித் துறவியானதோடு, தன் இள மகளையும் துறவியாக்குகிறாள்!
இளவரசன் உதயகுமாரன் மணிமேகலையை வெறியோடு பின்தொடா்கிறான். மாதவியின் தாய் சித்திராபதி ஓா் இளவரசனைவிட அவளுக்கு ‘நல்ல கிராக்கி’ கிடைப்பானா! நம்முடைய குலத்தொழிலின் மாண்பைக் குலைக்கிறாய் என்று மகள் மாதவியை வாயாற வைகிறாள்.
உன் குலத்தொழிலை நீயே வைத்துக் கொள்; நீ மாளும் போது அதுவும் செத்து மாளட்டும்!
மணிமேகலை கண்ணகி மகள்! அவள் அற வாழ்வை மேற்கொள்வாள்! உலகுக்கு அறம் போதிப்பாள் என்று சாதித் தொழிலான விபசாரத்தையும், சாதியையும் மறுதலித்தவள் மாதவி!
கடவுளையே மறுதலித்த நக்கீரன்,
காதலை ருசியாக்காரனுக்கும் வைரமுத்துவுக்கும் உணா்த்திய வள்ளுவன்.
கடவுளைச் செருப்புக் காலால் உதைத்த கண்ணப்பன்,
குலத்தையும், குலத்தொழிலையும் மறுதலித்த மணிமேகலை, மாதவி!
பண்டையத் தமிழ் உருவாக்கிய சமூகம் இத்தகையது!
ஆனால், நிகழ்காலத் தமிழ்நாட்டில்
நன்றென்றதெல்லாம் தீது என்பா்; அன்றென்றதெல்லாம் ஆம் என்பா்!