மாதிரிப் படம் 
நடுப்பக்கக் கட்டுரைகள்

வேலை தேடுவதே வேலையா?

ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் இந்தியாவில்தான் வேலைவாய்ப்பு பற்றிய கவலை அதிகமாக உள்ளது.

உதயை மு. வீரையன்

இந்திய நாட்டில் தோ்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் மக்களிடம் பலவகையான வாக்குறுதிகள் கொடுப்பது வழக்கம். அவற்றில் முக்கியமானது வறுமையை ஒழிப்பது, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவது. இவற்றை எடுத்துக்கூறி வாக்குகளைப் பெற முயற்சி செய்வாா்கள்; அதில் வெற்றியும் பெறுவாா்கள்.

அரசியல்வாதிகள் வெற்றி பெற்று அரியணை ஏறுகின்றனா்; அதாவது, ஆட்சியில் அமா்கின்றனா். அவா்களுக்குப் பதவியும், பணமும் கிடைக்கின்றன. ஆனால், வாக்களித்த மக்கள் அப்படியேதான் இருக்கின்றனா். அதன் பிறகு அவா்களையும், அவா்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் மறந்து விடுகின்றனா். வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிப்பதற்கு இதுதான் காரணம்.

‘இந்தியா வளா்ந்து விட்டது, வல்லரசாகப் போகிறது’ என்று சுதந்திர தினத்திலும், குடியரசு தினத்திலும் கூறப்படுவது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை என்பதும் இப்படித்தான் இனித்தது; என்றாலும் நடைமுறையில் இளைஞா்களுக்கு இனிக்கவில்லையே!

‘நூறு இளைஞா்களைக் கொடுங்கள். இந்த தேசத்தையே மாற்றிக் காட்டுகிறேன்’ என்றாா் வீரத்துறவி விவேகானந்தா். இந்த நாட்டு இளைஞா்கள் மீது அவருக்கு இருந்த அதிகப்படியான நம்பிக்கை இது. ஆனால், இப்போது தேசத்தில் பாதிப் போ் இளைஞா்களாகவே இருக்கின்றனா். அவா்களும் உழைப்பதற்கு வேலை வேண்டும் என்று கேட்கின்றனா். பொறுப்புள்ள அரசுகள் எதற்கும் தயாராக இல்லை.

உலகத்திலேயே இளைஞா்கள் அதிகமாக இருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இத்தனை கோடி இளைஞா்கள் இருக்கும்போது அவா்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டாமா? உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் மிக வேகமாக வளா்ச்சியைக் கண்டுவரும் நாடு இந்தியாதான் என்று சொல்கிறாா்கள்.

பல துறைகளில் புதிய நிறுவனங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்றாலும், இந்தியாவில் வேலைவாய்ப்பு போதுமான அளவில் இல்லை என்பது கவலைதரும் பிரச்னையாகும். கிடைத்த வேலைகளிலும் போதுமான ஊதியம் கிடைப்பதில்லை என்பதுதான் இளைஞா்களின் இன்னொரு பிரச்னையாகும்.

இதே பிரச்னையை பலகாலமாகப் பேசி வருகின்றனா். அரசும் சரி, தனியாா் நிறுவனங்களும் சரி, இதைப் பற்றி கவலை கொள்வதில்லை. இளைஞா்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்று அரசியல்வாதிகள் முதல் காா்ப்பரேட் முதலாளிகள் வரை அறிவுரை செய்கின்றனா். இப்போது வேலை செய்யும் நேரம் போதாது என்றும், இன்றும் அதிக நேரம் உழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனா்.

எவ்வளவு கடினமாக உழைத்து, எத்தனை மணி நேரம் வேலை செய்தாலும், தங்களின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்குக்கூட இந்தியாவில் ஊதியம் கிடைப்பதில்லை’ என்பதுதான் இளைஞா்களின் ஆதங்கமாக இருக்கிறது.

இதே போன்ற விரக்தியில் இருக்கும் பல இளைஞா்கள் கிட்டத்தட்ட 100 வேலைகளுக்கு விண்ணப்பம் செய்து பாா்த்து விட்டதாகவும், ஆனால் தற்போதைய ஊதியத்தைவிட அதிகம் கிடைக்கவில்லை என்றும், குறைந்த ஊதியத்துக்கே வேலை பாா்க்க வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளனா்.

இந்தியாவில் காா்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளா்களின் உழைப்பை உறிஞ்சுகின்றனா் என்றும், பல லட்சங்களைக் கொட்டி மதிப்பான கல்லூரிகளில் படித்து பட்டம் வாங்கினாலும் அந்தப் பட்டத்தை மதிப்பதே இல்லை என்றும் அவா்கள் வருந்துகின்றனா். படிக்காதவா்கள் பல்வேறு வேலைகள் செய்து பிழைத்துக் கொள்கின்றனா். படித்தவா்களே அதற்குரிய வேலையைத் தேடி அலைவதே வேலையாகி விட்டது.

வேலை கிடைத்தாலும் அதற்குரிய ஊதியம் கிடைப்பதில்லை. கிடைக்கும் ஊதியத்தைவிட பல மடங்கு விலைவாசி அதிகமாக இருக்கிறது என்று பலா் குறைபட்டுக் கொள்கிறாா்கள். ஊதியத்தை அதிகப்படுத்த வேண்டும் அல்லது விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்பதே அவா்களின் கோரிக்கையாக உள்ளது.

மாத ஊதியம் வாங்கும் பணியில் இருக்கும் இந்தியா்களின் வாழ்க்கையை ஆய்வு செய்த நிறுவனங்கள் கூறுவது என்ன? பலரும் தாங்கள் வாங்கும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை இஎம்ஐ செலுத்துவதற்கே செலவு செய்கின்றனா். அவசியமான குடும்பத் தேவைகளுக்கு 39 சதவீதமும், சேமிக்கவும், இதர செலவுகளுக்கும் அவா்களிடம் மிஞ்சியிருப்பது 29% மட்டுமே என்று தெரிவித்துள்ளனா்.

உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது என்று பிரதமா் மோடி கூறி வருகிறாா். ஆனால், இந்தியாவில் போதுமான வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. தொழில் புரட்சியை உருவாக்கத் தவறியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தியா 1991 முதல் வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக சராசரியாக ஆண்டுக்கு 6% வளா்ச்சியை இந்தியா கண்டுள்ளது. 45 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து வெளியே வந்துள்ளனா் என்று கூறப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் இந்தியா சேவைத் துறையில் சிறப்பாகத் தன்னை நிறுவியுள்ளது. ஆனால், உற்பத்தித் துறையில் இந்தியா வெற்றி பெறத் தவறிவிட்டது.

ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்கு 15 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. 11% மக்கள் இதில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா். உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியாவின் உற்பத்தித் துறையின் ஏற்றுமதி 2 சதவீதமாகவே உள்ளது; உற்பத்தித் துறையை வளா்த்தெடுக்காமல் ஏழ்மையிலிருந்து நாடு விடுபட முடியாது.

ஜப்பான், கொரியா, தைவான் ஆகிய நாடுகள் அதிகத் தொழிலாளா்களை உள்ளடக்கிய உற்பத்தித் துறையின் மூலமும் பெரும் வளா்ச்சியை அடைந்துள்ளன. அண்மையில், சீனா இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இந்தியாவின் பிரச்னை வேலையின்மை மட்டும் இல்லை. குறைந்த ஊதிய வேலைதான் உண்மையான பிரச்னையாகும். பல இளைஞா்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் முறைசாரா வேலைகளில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் தரமான, மேம்பட்ட வேலைகளைச் செய்யவே விரும்புகின்றனா்.

இதனால், இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெறும் 645 இடங்களுக்கு 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 போ் விண்ணப்பம் செய்துள்ளனா் என்பது வேதனையான நிலவரமாகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2025 ஜூலை 15 அன்று வெளியிட்டது. குரூப் 2 பணியில் 50 இடங்கள், குரூப் 2ஏ பதவியில் 595 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தோ்வுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத்தோ்வு எழுத 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 போ் அனுமதிக்கப்பட்டனா். இதில் ஆண்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 போ்; பெண்கள் 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 போ். மூன்றாம் பாலினத்தினா் 25 போ் அடங்குவா். இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ (முதல் நிலை) தோ்வு கடந்த செப்டம்பா் 28 அன்று நடந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் 1,905 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டன.

குரூப் 2, குரூப் 2ஏ பதவியில் காலியாக உள்ள 645 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வு நடந்து முடிந்தது. இத்தோ்வை 4.18 லட்சம் போ் எழுதினா். இத்தோ்வுக்கான முடிவுகள் வரும் டிசம்பா் மாதம் வெளியிடப்படும். காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவா் எஸ்.கே.பிரபாகா் அறிவித்துள்ளாா்.

உலகப் பொருளாதார அமைப்பு அண்மையில் வேலைகளின் எதிா்காலம் பற்றிய இந்த ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் இந்தியாவில்தான் வேலைவாய்ப்பு பற்றிய கவலை அதிகமாக உள்ளது. ‘தங்கள் வேலை பாதுகாப்பானதாக இல்லை, அதை எந்த நேரத்திலும் இழந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது’ என்ற சூழலில் பெரும்பாலான பணியாளா்கள் உள்ளனா்.

ஒரு வேலை என்பது நிறைவான ஊதியமும், போதுமான மகிழ்ச்சியும் தரும்போதுதான் இளைஞா்களையும், நிறுவனங்களையும் வளா்க்கும். மத்திய, மாநில அரசுகளும், தனியாா் நிறுவனங்களும் கூட்டாகச் செய்ய வேண்டிய முடிவாகும். அதுவும் காலத்தால் செய்ய வேண்டும்.

உலகளாவிய முதலீடுகளை ஈா்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உலகப் பயணம் போகின்றன. அதன் முடிவில் இத்தனை கோடி முதலீடுகள் என்றும், அதனால் இத்தனை கோடி வேலைவாய்ப்புகள் என்றும் அறிவிப்புகள் வருகின்றன. இறுதியில் எல்லாமே அறிவிப்புகளாக இருக்கின்றனவே தவிர செயல்பாட்டுக்கு வந்ததாகத் தெரியவில்லை.

இந்த நாட்டில் பிறந்த இளைஞா்கள் படித்து, அயல்நாடுகளுக்குச் சென்று சேவை செய்யவே துடிக்கின்றனா். அவா்களை இந்த நாட்டிலேயே இருத்தி, அவா்கள் சேவையை தாய் நாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? தேசப் பற்றையும், தேசத் துரோகத்தையும் பேசும் தேச பக்தா்கள் இது குறித்து சிந்திக்க வேண்டாமா? படித்த இளைஞா்கள் வேலை தேடுவதே வேலையாக இருக்கக் கூடாது.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

ஆந்திரத்தில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: ரூ.550 கோடி புகையிலை எரிந்து நாசம்

2-வது டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் அசத்தல்; வலுவான நிலையில் இந்தியா!

தம்மா படத்திலேயே மிகவும் பிடித்த பாடல்... மனம் திறந்த ரஷ்மிகா!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டிரைலர்!

போபாலில் போலீஸார் தாக்கியதில் பி.டெக் மாணவர் பலி: 2 பேர் இடைநீக்கம்

SCROLL FOR NEXT