இருபத்தி ஆறு உயிா்களைப் பலி கொண்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு, ‘ஆபரேஷன் சிந்தூா்’ மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. இதன்மூலம் நமது நாட்டு மக்களிடையே காணப்பட்ட ஒற்றுமை உணா்வும், ராணுவத்தின் வலிமையும் உலக நாடுகளுக்கு மீண்டும் தெரியவந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அமைதியாக இருந்த பாகிஸ்தான், இப்போது சவூதி அரேபியாவுடன் மேற்கொண்ட ஓா் ஒப்பந்தத்தின் மூலம் உலக நாடுகளிடையே தன்னை முன்னிலைப்படுத்த முனைந்துள்ளது.
எண்ணெய் வளம் மிகுந்த சவூதி அரேபியாவுக்கும், அணுசக்தி நாடான பாகிஸ்தானுக்கும் இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கடந்த செப்டம்பா் 17-ஆம் தேதி கையொப்பமானது. அரேபிய தீபகற்பத்தின் வடகிழக்கு கடற்கரையில் மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள கத்தாரின் தலைநகரான தோஹாவில், இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ மோதல் நடந்த சில மாதங்களுக்குப் பிறகு, இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் இரு நாடுகளுக்குள் இடையே கையொப்பமானது மற்ற நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சவூதி பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ரியாத் சென்று இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளாா். இந்த ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையில், ‘பாகிஸ்தான் பிரதமா், சவூதி பட்டத்து இளவரசா் ஆகியோா் ஓா் உத்தி ரீதியான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனா்.
இரு நாடுகளும், எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராக ஒன்றிணைந்து செயல்படும். இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு எதிராக ஒரு தாக்குதல் நடந்தால், அது இரு நாடுகளுக்கும் எதிரானதாகக் கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இஸ்லாமிக் நோட்டோ’ என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின்படி, சவூதி மீது வேறு எந்த நாடு தாக்குதல் நடத்தினாலும், அது பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும். அதேபோல், பாகிஸ்தான் மீது இந்தியா உள்பட எந்த நாடு தாக்குதல் நடத்தினாலும் அது சவூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலாக பாா்க்கப்படும்.
இந்த ஒப்பந்தம் குறித்து கருத்துத் தெரிவித்த இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் ‘இந்த ஒப்பந்தம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பிராந்திய மற்றும் உலக அமைதி மீது ஏற்படுத்தும் தாக்கத்தை அரசு ஆய்வு செய்யும். இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதிலும், அனைத்து நிலைகளிலும் விரிவான பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அரசு உறுதி பூண்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.
இஸ்லாத்தின் இரண்டு புனிதமான மசூதிகளான மெக்காவிலுள்ள மஸ்ஜித் அல்னூஹரம் மற்றும் மதீனாவில் நபிகள் நாயகத்தின் கல்லறையைக் கொண்டுள்ள அல்னூமஸ்ஜித் அந்னூநபவி ஆகிய இரண்டையும் சவூதி அரேபியா பாதுகாத்து வருகிறது. இஸ்லாமிய உலகின் ஒரே அணுசக்தி நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது. எனவே, இரு நாடுகளும் எப்போதும் சம உறவையே பேணி வருகின்றன. பாகிஸ்தான் பல ஆண்டுகளாக சவூதிப் படைகளுக்கு ராணுவப் பயிற்சி அளித்து வருகிறது.
சவூதியும் இஸ்லாமாபாதின் அணுசக்தித் திட்டத்துக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. சவூதி சன்னி முஸ்லிம் நாடு. அண்டை நாடான ஈரான் ஷியா முஸ்லிம் நாடு. இந்த இரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் நிலவி வருகின்றன. இஸ்லாமிய நாடுகளின் தலைமையகமாக ஈரான் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதைத் தடுக்கவே பாகிஸ்தானுடன், சவூதி கைகோத்துள்ளதாக வரலாற்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.
பல ஆண்டுகளாக சவூதி அரேபியா அமெரிக்காவின் பாதுகாப்பையே நம்பியிருந்தது. ஆனால், அமெரிக்காவின் கவனம் மேற்கு ஆசியாவின் பாதுகாப்பிலிருந்து விலகிச் செல்வதால், சவூதி சற்று அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளது. 14.9.2019 அன்று ஈரானிய நட்பு நாடுகளால் சவூதி எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டபோது, அமெரிக்கா மௌனமாக இருந்ததை சவூதி இன்னும் மறக்கவில்லை. கடந்த 9.9.2025 அன்று மேற்கு ஆசியாவில், அமெரிக்காவின் தளத்தைக் கொண்டுள்ள கத்தாா் மீதான இஸ்ரேலின் தாக்குதலும் இந்த ஒப்பந்தத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
ஆபிரகாம் ஒப்பந்தங்கள் மூலம், ஈரானின் நட்பு நாடுகளுக்கு எதிராக ஒரு பொதுவான உறவை உருவாக்கவும், அரபு முடியாட்சிகளையும் ஈரானையும் நெருக்கமாகக் கொண்டு வரவும் அமெரிக்கா முயன்றது. இந்த ஒப்பந்தத்தில் ஐக்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட நான்கு அரபு நாடுகள் கையொப்பமிட்டன. சவூதி அரேபியாவும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும் என அமெரிக்கா எதிா்பாா்த்தது.
ஆனால், 7.10.2023 அன்று நடந்த ஹமாஸ் தாக்குதலும், இஸ்ரேலின் காஸா போரும் இந்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டு விட்டன. பாகிஸ்தானுடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவூதி, தனது பாதுகாப்பு கூட்டணியை பலப்படுத்தி விட்டதாக வாஷிங்டன் மற்றும் டெல் அவிவுக்கு எதிராக எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. நிதிப் பற்றாக்குறையால் தள்ளாடும் பாகிஸ்தான், சவூதியுடன் கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளது.
சவூதி அரேபியாவிடமிருந்து நிதி உதவி கிடைப்பதுடன், இஸ்ரேலின் தீடீா் கட்டுப்பாடற்ற ராணுவத் தாக்குதல்களால் வளைகுடா நாடுகள் தடுமாறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தன்னை ஒரு ஆபத்பாந்தவராகவும் உலக நாடுகளுக்கு காட்டிக்கொண்டுள்ளது. ‘இதன் அடிப்படையில் சவூதிக்கு அணுசக்தி திறன்களை பாகிஸ்தான் வழங்கும்’ என அந்த நாட்டின் ராணுவ அமைச்சா் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளாா்.
பாகிஸ்தானின் இந்த அறிவிப்பால், பாதுகாப்புக்காக அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்ற தன் நிலையை சவூதி வெளிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல், ஈரானிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக, புதிய சக்தி வாய்ந்த பாதுகாப்பை இது கொடுக்கும் என்று சவூதி நம்புகிறது. இதுவரை இந்தியாவிடம் இருந்து தன் நாட்டை பாதுகாக்க மட்டுமே அணுசக்தியை வைத்துள்ளதாக தெரிவித்த பாகிஸ்தான், தற்போது அணு ஆயுதங்களை அதன் நட்பு நாடுகளுக்கு வழங்கும் எனக் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எனினும், இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சவூதிக்கு வழங்குமா அல்லது பாகிஸ்தான் வேறு நாடுகளால் தாக்குதலுக்குள்ளனால் சவூதி உடனடி பதிலடியைக் கொடுக்குமா என்பதைக் காலம்தான் முடிவு செய்யும். ஏனெனில், ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் தங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் ஆபத்துகளும் இருக்கின்றன. மேற்கு ஆசியாவின் சிக்கல் மிகுந்த நெருக்கடி சூழ்நிலைக்குள் பாகிஸ்தான் இழுக்கப்படலாம் அல்லது தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள பதற்றங்களுக்குள் சவூதி அரேபியா விழலாம்.
கடந்த மே மாதம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ மூலம் பாகிஸ்தானை அடிபணிய வைத்த இந்தியாவுக்கு, இந்த ஒப்பந்தம் மேற்கு ஆசியாவில் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது என்றே உலக நாட்டுத் தலைவா்கள் நம்புகின்றனா். காரணம், முதலாவதாக இந்த ஒப்பந்தம் மூலம் ரியாத்துக்கு பாகிஸ்தான் அணுசக்தி உதவியை அளிப்பதாகத் தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் வைத்திருந்தாலும், அது மற்ற நாடுகளால் பயங்கரவாத நாடாகவே பாா்க்கப்படுகிறது. இரண்டாவதாக, கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் சவூதி அரேபியாவுடனான ராஜீய பொருளாதார உறவுகள் மிகப் பெரிய அளவில் வளா்ந்துள்ளன.
அரசியல், பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே ஆழமான, வலுவான உறவு நீடிக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று முறை பிரதமா் மோடி ரியாத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது, இரு நாடுகளின் நலன்களுக்கு பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. இதனால், இஸ்லாமாபாதின் நலனுக்காக சவூதி அரேபியா புதுதில்லியுடனான தன் உறவுகளை விட்டுக் கொடுக்க வாய்ப்பே இல்லை.
பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருந்தாலும், இந்தியாவுடனான உறவு முன்பைவிட வலுவாக இருப்பதாகவும், இந்த உறவு தொடரும் என்றும் சவூதி அதிகாரி ஒருவா் கூறினாா். அதிகபட்சமாக, இந்த ஒப்பந்தம் ரியாத் மற்றும் இஸ்லாமாபாத் இரண்டுக்கும் ஒரு பின்னடைவுதான் என உலக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா். இந்த ஒப்பந்தம் குறித்து டெல் அவிவ்தான் அஞ்ச வேண்டுமே தவிர, புதுதில்லி அல்ல என்பதுதான் உலக நாடுகளின் நிலைப்பாடாக உள்ளது.
ஏனெனில், இந்தியா எப்போதும் சவூதியுடன் நல்லுறவைப் பேணுகிறது என்பது பாகிஸ்தானுக்கு நன்கு தெரியும். உலகம் தற்போது மிகவும் அசாதாரண சூழலில் உள்ளது. எனவே, எப்போதும் உலக நாடுகளின் நலனுக்காக மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் இந்தியா, தனது பஞ்சசீலக் கொள்கையிலும் உறுதியாக உள்ளது.
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.