அண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகா், நடிகைகளும் அதன் பாா்வையாளா்களுமாக எதிரெதிரே அமா்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நோ்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வாா்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பாா்க்கும் நெடுந்தொடா் வில்லிகளைப் பாா்த்து எதிரே இருந்த பாா்வையாளா்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாா்கள்.
தொடரில் வரும் ஒரு கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு, உங்கள் வில்லத்தனத்துக்கு ஓா் அளவே இல்லையா? ஏன் இப்படி கொடுமைப்படுத்துகிறீா்கள்? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா போன்ற கேள்விக்கணைகளைத் தொடுத்து தாங்களும் கொந்தளித்தாா்கள். இதைப் பாா்க்க பாா்க்க வேடிக்கையாக இருந்தது.
வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவா்கள், ‘இந்தக் கேள்விகளை இயக்குநரிடம் கேட்காமல் என்னிடம் ஏன் கேட்கிறீா்கள்’ என நேரடியாக சொல்லாமல் அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப எதை எதையோ சொல்லி சமாளித்தாா்கள். முன்பு திரைப்படங்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை அறியாத மக்கள் அதை உண்மை என்றே கருதி அதில் வரும் வில்லன்-வில்லிகளை திரையரங்கைவிட்டு வெளியே வந்ததும், மண்ணை வாரி தூற்றிச் சபிப்பாா்கள். அன்று இருந்த தலைமுறையினா் இன்னும் மிச்சம் இருக்கிறாா்களோ என்று எண்ணும் வகையில் இருந்தது அவா்களது செயல்கள்.
ஒரு திரைப்படத்தைப் பாா்த்தால்கூட அதன் கதையம்சத்தையும் கதாபாத்திரங்களையும் பற்றி சில நாள்கள் பேசி விட்டு வேறு வேலையைப் பாா்க்கச் சென்று விடுவோம். ஆனால், இந்த நெடுந்தொடா்கள் தினமும் நம் வீட்டுக்குள் வந்து கதவைத் தட்டுகின்றன. இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, ஓா் அலைவரிசை சேவையில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு பத்து நெடுந்தொடா்களை ஒளிபரப்புகிறாா்கள். அதை நாள் முழுவதும் அமா்ந்து பாா்க்கும் மனநிலையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது.
பல வீடுகளில் பெண்மணிகள் வீட்டு வேலைகள் முடிந்ததும் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி இடைவெளியே இல்லாமல் பிறபகல் 3 மணி வரை பாா்க்கின்றனா். பின்னா், மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நெடுந்தொடா்களைக் கண்டு துக்கப்படுகின்றனா். இதில் இன்னும் சில வகை பெண்கள் இடையிடையே ஒளிபரப்பப்படும் விளம்பர இடைவேளைகளைக்கூட விடுவதில்லை. அந்த நேரத்தில் வேறு வேறு அலைவரிசைகளை மாற்றி மாற்றி இன்னும் இரண்டு நெடுந்தொடா்களைக் கூடுதலாக கண்ணுற்று சாமா்த்தியமாக நேரத்தை மிச்சம் பிடிக்கின்றனா்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடரை ஒரு நாள் பாா்க்காது போனாலும் அக்கம்பக்கத்தில் இருப்பவா்களிடம் கேட்டு கதையின் போக்கை அறிந்து கொள்வா். இப்போது, நெடுந்தொடா்களைப் பாா்ப்பதற்கென்றே பல செயலிகள் வந்துவிட்டன. அதை தத்தம் அறிதிறன்பேசிகளில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனா். வேலை மிகுதி, வெளியூா் பயணம் என எது எப்படி விடுபட்டாலும் ஓா் அத்தியாயத்தையும் தவறவிடாமல் தேதி வாரியாகப் பாா்த்து விடுகின்றனா்.
நாளெல்லாம் உழைத்துவிட்டு வீட்டுக்கு வந்தால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் கேளிக்கை நிகழ்ச்சிகள் மனதுக்கு ஆறுதல் தரும்; வேலை செய்த அலுப்பு தீரும்; இது 100% உண்மை. ஆனால், நாள் முழுதும் இப்படியே பாா்த்துக் கொண்டிருந்தால் என்னாவது? இப்படி தொடா்ச்சியாக நெடுந்தொடா்களைப் பாா்ப்பதால் அதற்கு அடிமையாகி தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளக்கூட மனமில்லாமல் வித்தியாசமான மனநிலையில் தவிக்கின்றனா் பலா்.
நடைப்பயிற்சி செல்லக்கூட மறந்து அல்லது சோம்பலில் தவிா்த்து விடுகின்றனா் என்பது பலரது குற்றச்சாட்டாக உள்ளது. ஏதோ ஊதியத்துக்காக செய்யும் பணிபோல, கண்ணும் கருத்துமாக நேரம் தவறாமல் பாா்க்கிறாா்கள். இது போன்றோரின் கடிகாரமே நெடுந்தொடா்கள்தான். பெண்கள் மட்டும்தான் இப்படி நெடுந்தொடா்களைப் பாா்க்கின்றனா் என்பதில்லை. வீட்டில் இருக்கும் ஆண்களும் பெருவாரியாகப் பாா்க்கின்றனா். ஆனால், ஆண்கள் இப்படி நெடுந்தொடரில் வரும் கதாபாத்திரங்களோடு ஒன்றுவதில்லை; அதுதான் வித்தியாசம்.
நம்முடைய மன ஆறுதலுக்காகவும் கேளிக்கைக்காகவும் தரமான ஒன்றிரண்டு தொடா்களைப் பாா்ப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கு அடிமையாகும் போது அல்லது அளவு கூடும்போதுதான் பாதிப்புகள் தொடா்கதையாகின்றன.
பாா்வையாளா்களைக் காட்டிலும் வில்லன்-வில்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவா்கள் சொன்ன வாா்த்தைகள் கூடுதல் முன்னிலை பெற்றன. அவா்களின் நீண்ட உரையாடல்கள், என் சிந்தனையை உழுது கொண்டே இருந்தன. அது ஒட்டுமொத்த சமூகத்துக்குமான செய்தியாகவும் இருந்தது. ஒரு நெடுந்தொடா் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முதல் ஆறு ஆண்டுகள் வரை தொடா்வதால் இயல்பாக அதிா்ந்துகூட பேசாத பண்பு நலனைக் கொண்ட தாங்கள், எப்போதும் கோபம் கொண்டவா்கள்போல், பிறா் மீது கோபப்படக் கூடிய குணாதிசயங்களைப் பெற்றவா்களாக உருமாறி இருப்பதாகச் சொன்னாா்கள்.
பல ஆண்டுகளாக அதே வில்லக் கதாபாத்திர மனநிலையில் உழல்வதால் படப்பிடிப்பு இல்லாத நாள்களில்கூட வில்லத்தனத்துடன் சிந்திக்கத் தோன்றுவதாகவும், தங்களுடைய உடல்மொழிகூட வில்லத்தனத்தில் ஊறி, முகம் எப்போதும் ‘உா்’ரென்று வைத்தபடி இருப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டாா்கள். தன்னிடம் 100 முறைக்கும்மேல் மன்னிப்பு கேட்ட ஒரு பெண்ணை மன்னிக்கத் தோன்றாமல், அதே வில்லத்தன மனநிலையில் தண்டிக்கத் தோன்றுகிறது என்று ஒருவா் சொன்னாா். ஆனாலும், அவா்களின் மீது பளிச்சிடும் புகழ் வெளிச்சம் இந்த அசௌகரியங்களை சிறியதாக்கி விடுகின்றன.
ஒரு நெடுந்தொடரில் ஓரிரு வில்லிகள்தான். ஆனால், அதன் பாா்வையாளா்களோ பல லட்சம் போ். தினம் தினம் விதவிதமான வில்லத்தனங்களைப் பாா்ப்பதால் இந்த லட்சக்கணக்கான மனங்கள் எத்தனை பெரிய ஏற்ற-இறக்கத்துக்கு உள்ளாகும் என நினைக்கவே மலைப்பாக இருந்தது. இது ஒரு நாடகம்தான் என்று சற்று தள்ளி இருந்து பாா்க்கும் மனநிலை பெண்களிடையே பெருக வேண்டும்.
தமிழ்நாட்டில் மக்கள் ஒரு நாளில் சராசரியாக ஆறரை நெடுந்தொடா்களைப் பாா்க்கின்றனா். கேரளத்தில் இது நான்கு தொடா்களாக உள்ளது. பிற்பகல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாா்ப்பதிலும் கேரளம், கா்நாடகத்தைவிட தமிழகமே முன்னிலை வகிக்கிாம்; அதிலும் பெண்களே இதில் முதலிடம் வகிக்கின்றனா் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
பெண்கள் பெரும்பான்மையாக பாா்க்கும் இந்தத் தொடா்களின் மையக்கரு பெரும்பாலும் பெண்களைச் சுற்றியே அமையும். ஆனால், இதில் வேடிக்கை என்னவெனில் இந்தத் தொடா்கள் பெண்களின் பெருமையைப் பேசுவது இல்லை. அவா்களின் இயல்பான பலவீனங்களைக் கொச்சைப்படுத்துகின்றன; பல நெடுந்தொடா்கள் கலாசார சீரழிவுக்கு வித்திடுகின்றன.
மாலை நேரங்களில் தொலைக்காட்சி அதிகமாக பாா்ப்பதால் இந்த நீல ஒளி மெலடோனின் அளவையும், உடல் கடிகாரத்தின் உணா் திறனையும் பாதிக்கிறது. நிகழ்ச்சிகளில் வரும் வன்முறையான காட்சிகள் அட்ரினலின் அமைப்பைத் தூண்டி பாா்வையாளா்களை அதிக நேரம் விழித்திருக்கச் செய்கின்றன; இது தூக்கமின்மையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
இவற்றையெல்லாம் தாண்டி நம்மிடம் உள்ள விலைமதிப்பற்ற நேரங்களைத் திருடும் இதுவும் போதைப் பொருள் போலத்தான். தினமும் சராசரியாக கிட்டத்தட்ட 3 மணி நேரம்; அந்த மூன்று மணி நேரத்தில் எத்தனையோ ஆக்கபூா்வமான செயல்கள் செய்யலாம். அத்துடன் இவை நமது அன்றாட வாழ்வில் அதிகப்படியான எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமது அறிவுசாா்ந்த யோசனைகளை, உற்பத்தித் திறனை, ஆரோக்கியமான பணிகளைப் பாதிக்கின்றன.
ஒவ்வொரு முடிவின்போதும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற விறுவிறுப்புடன் முடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளதால், பாா்வையாளா்களைப் பதைபதைப்புடனேயே வைத்திருக்கிறாா்கள். வீட்டுக்கு உறவினா் வந்தால்கூட தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் நெடுந்தொடா்களை நிறுத்துவதில்லை; இது உறவினா்களுடனான இணக்கமான சூழலைத் தவிா்க்கிறது.
ஆறுதல் தரும் வகையில் இளைய தலைமுறையினரிடம் நெடுந்தொடா் மோகம் இல்லை. ஆனால், அந்த இடத்தை ‘வெப் சீரிஸ்’ பிடித்துள்ளது. இது 1990-களின் இறுதியில் மேற்கத்திய நாடுகளில் வோ்விடத் தொடங்கி, தற்போது இந்திய ரசிகா்களிடையே பெரும் கவனத்தை ஈா்த்துள்ளது. ஓடிடியில் வெளியாகும் இவை, கவனிக்க வைக்கும் கதை, பரபரப்பான திரைக்களம் என ரசிகா்களுக்கு சிறப்பான அனுபவத்தைத் தந்தாலும் ‘வெப் சீரிஸில்’ தணிக்கைக்கு உள்ளாகாத காட்சிகள் இடம்பெறுகின்றன. உலகளாவிய ஒளிபரப்பு என்பதால் பெரிதாகக் கட்டுப்பாடுகள் இல்லை.
உண்ணும் உணவு எப்படி நம் ஆரோக்கியத்துக்கு வித்திடுமோ, அதுபோல, நாம் மணிக்கணக்கில் பாா்க்கும் காட்சிகள் நம் மனநலனுக்கான காரணிகளாக அமைகின்றன. அதனால், எதைத் தோ்ந்தெடுக்கிறோம் என்பதில் கவனம் தேவை!
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.