நாடு முழுவதும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசு அவ்வாறு வழங்காவிட்டாலும், சத்தீஸ்கர், ஒடிஸா மாநில அரசுகள் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் ஊக்கத் தொகையாக சுமார் ரூ.800 சேர்த்து ரூ.3,100 வழங்கி வருவது போன்றாவது வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் விருப்பம்.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் 75-ஆவது வாக்குறுதியாக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2,500-ஆக உயர்த்தப்படும் எனக் கூறியது. அப்போது,
மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக பொது ரகத்துக்கு ரூ.1,940, சன்ன ரகத்துக்கு ரூ.1,960 என வழங்கியது. வெளிச் சந்தையில் விலை சுமார் ரூ.1,650 என்ற அளவில் மட்டுமே இருந்தது. எனவே, ரூ.2,500 என்பது விவசாயிகளுக்கு லாபகரமான விலையாக தெரிந்ததால் மகிழ்ந்தனர்.
தேர்தலில் வெற்றி பெற்று நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், இப்போது அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் குவிண்டாலுக்கு ரூ.2,500 என அரசு அறிவித்துள்ளது. இது மிகவும் காலதாமதமான அறிவிப்பு என்பது மட்டுமல்லாது காலத்துக்கேற்ற விலையாகவும் இல்லை என்பதால் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் விதை, உரம், பூச்சிக் கொல்லி ஆகிய இடுபொருள்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தொழிலாளர்களுக்கான கூலி, இயந்திரங்கள் மற்றும் டீசல் விலை உயர்வு போன்றவற்றால் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளன. எனவே, இப்போது அறிவித்துள்ள கொள்முதல் விலையானது விவசாயிகளுக்கு லாபகரமானதாக இருக்காதுதான்.
கடந்த மே மாதம் பிரதமர் தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது 14 வேளாண் விளைபொருள்களுக்கு நிகழாண்டு காரீப் பருவத்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி, நெல்லுக்கு குவிண்டாலுக்கு பொது ரகத்துக்கு ரூ.2,369, சன்ன ரகத்துக்கு ரூ.2,389 வழங்குகிறது.
தமிழக அரசானது அதனுடன் பொது ரகத்துக்கு ஊக்கத் தொகையாக ரூ.131 சேர்த்து ரூ.2,500, சன்ன ரகத்துக்கு ஊக்கத் தொகையாக ரூ.156 சேர்த்து ரூ.2,545 வழங்கும்.
விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட இடர்ப்பாடுகளைக் களைவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக கடந்த 2004 நவம்பரில் அமைக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையமானது 2006-க்குள்ளாக 5 அறிக்கைகளை அளித்தது. அதில் முக்கியமாக, வேளாண் விளைபொருள்களுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையானது, உற்பத்திச் செலவுடன் கூடுதலாக 50% சேர்த்து நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கூறியது.
நிகழாண்டு காரீப் பருவத்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது, உற்பத்திச் செலவுடன் கூடுதலாக 50% சேர்த்துத்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அதாவது, உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ.1,579 என கணக்கிட்டு அதனுடன் 50% சேர்த்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கரில் நெல் பயிரிட ரூ.38,000 முதல் ரூ.40,000 வரையில் செலவாகும். இது மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறுபடலாம். ஏக்கருக்கு 24 குவிண்டால் மகசூல் என்ற அடிப்படையில் சராசரி கணக்கீட்டின்படி இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், எல்லாக் காரணிகளும் சரியாக அமைந்தால் மட்டுமே இந்த மகசூலைப் பெற முடியும்.
மாறாக, நோய்த் தாக்குதல், உரத் தட்டுப்பாடு, தண்ணீர்ப் பற்றாக்குறை, காலநிலை மாற்றத்தால் நிகழும் இயற்கைப் பேரிடர் போன்றவற்றால் மகசூல் குறையும்போது விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர். எனவே, விவசாயம் என்பது பல்வேறு இடர்களுக்கு மத்தியில் செய்யப்படும் தொழிலாக மாறிவிட்டதால் நிர்ணயிக்கப்பட்ட மகசூலுக்கு உத்தரவாதம் இல்லை.
மானிய விலையில் விதை, உரம், பூச்சிக் கொல்லி, வேளாண் இயந்திரங்கள் என அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. வேளாண் தொழிலில் நவீன தொழில்நுட்பத்தையும் அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. எனினும், இந்தியாவில் வேளாண் தொழிலில் நவீன தொழில்நுட்பப் பயன்பாடு என்பது சராசரியாக 47% மட்டுமே. அதற்கான விழிப்புணர்வு விவசாயிகளை முழுமையாகச் சென்றடையவில்லை.
பிரேசிலில் 75 சதவீதமும், சீனாவில் 60 சதவீதமும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் மட்டும் அதிக அளவில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதற்கான அதிகாரபூர்வ புள்ளிவிவரம் எதுவும் இல்லை.
அடிக்கும் வெயிலிலும், பெய்யும் மழையிலும் வயலில் பாடுபடும் விவசாயிகளின் கைகளுக்கு கிடைக்கக்கூடிய வேளாண் உற்பத்திக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லையோ அதேபோல், விளைவித்த பொருள்களுக்கு சந்தையில் விலை உத்தரவாதமும் இல்லை. எனவே, அரசுகள் அளிக்கும் ஆதரவு விலையாவது ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தால் மட்டுமே வேளாண்மை தொடரும் தொழிலாக இருக்கும்.
நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 2,500-ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.