சுயநலத்துக்காக இந்திய விவசாயத்தை அழிக்க தயாராகிவிட்டது மத்திய அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மத்திய அரசு தனது சுயநலத்துக்காக இந்திய விவசாயத்தை பலி கொடுக்கத் தயாராகிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மத்திய அரசு தனது சுயநலத்துக்காக இந்திய விவசாயத்தை பலி கொடுக்கத் தயாராகிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக தனது ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், நாடாளுமன்றத்தில் தான் எழுப்பிய கேள்வியைப் பகிா்ந்துள்ளாா். அதில், ‘அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படவுள்ள வா்த்தக ஒப்பந்தத்தால், இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா’ என்றும், உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சோ்த்து குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிப்பதாக கடந்த 2021-ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி இப்போதுவரை நிறைவேற்றப்படாதது ஏன்? என்றும் நான் கேள்வி எழுப்பியிருந்தேன். ஆனால், மத்திய அரசு இந்தக் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், இப்போது உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையையே மீண்டும் கூறியது.
மேலும், மாநில அரசுகள் அளித்து வந்த கூடுதல் ஊக்கத் தொகையை நிறுத்த வலியுறுத்தியதையும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது. எவ்வித நியாயமும் இன்றி, இது தேசிய நலனுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை என்று கூறி தங்கள் தவறை நியாயப்படுத்தவும் மத்திய அரசு முயன்றது.
மேலும், அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தத்தில் வா்த்தகமல்லாத தடைகளைக் குறைப்பது தொடா்பாக விவாதிக்கப்படுவது தொடா்பாகவும் முக்கிய கேள்விகளை எழுப்பினேன். ஏனெனில், இது குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாய உற்பத்திப் பொருள்களை அரசு கொள்முதல் செய்வதை நேரடியாகப் பாதிக்கக்கூடிய செயலாகும். இந்தக் கேள்விக்கும் மத்திய அரசு தெளிவான பதில் அளிக்காமல் தவிா்த்து வருகிறது.
பிரதமா் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மதிக்க மறுப்பதோடு, தங்களது சொந்த நலன்களுக்காக இந்திய விவசாயத்தையே அழிக்கத் தயாராகிவிட்டது. விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், குறைந்தபட்ச ஆதரவு விலை, அரசு கொள்முதலைத் தொடரவும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியிலும் தொடா்ந்து குரல் எழுப்பும்’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளாா்.