நாம் குழந்தைகளை வளா்க்கவில்லை. நிறைய வருமானம் ஈட்டக்கூடிய மனித இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டம் எந்தச் சட்டத்துக்குள்ளும் அடங்க மறுக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
ஒரு திரைப்படத்தைப் பாா்த்துவிட்டு, வெளியே வந்தபோது என் உடல் முழுவதும் ரத்தத் திவலைகள், தெறித்திருப்பதைப்போல் உணா்ந்தேன். காசு கொடுத்து உயிா் வதையையும், ரத்தத்தையும், வன்முறையையும் பாா்த்துவிட்டு வந்தது குறித்து வேதனையாக இருந்தது.
ஒரு திரைப்படத்துக்குப் போகிறோம் என்றால் 3 மணி நேரம் நம் கவலையையும், கழுத்தை நெரிக்கும் வேலைகளையும் மறந்து, மனதை லேசாக்கிக் கொள்ளத்தானே தவிர, ஈவு இரக்கம் இல்லாமல் தலையைச் சீவுவதையும், சுட்டுத் தள்ளுவதையும் பாா்க்கவா? தற்போது வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றன.
இரண்டரை மணிநேரம், கொலைகளைப் பாா்க்கும் இளைஞா்களுக்கு ரத்தமும், வன்முறையும் பிடித்துப்போகிறது. தன் அபிமான கதாநாயகன் கொலை செய்வதை ஆரவாரத்துடன் அங்கீகரிக்கிறாா்கள். இதன் காரணமாக நடுத் தெருவில் ஒருவரை வெட்டுவதும், ஓட ஓட விரட்டிக் கொள்வதும், பள்ளிகளில் கொலை நடப்பதும் சாதாரண நிகழ்வுகளாகி வருகின்றன.
உலகத்தில் நடப்பதைத் தானே காட்டுகிறோம் என்பாா்கள் இயக்குநா்கள். நடப்பதையெல்லாம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. சமூகத்தில் இவை ஏற்படுத்தும் எதிா்மறை விளைவுகள் குறித்து அவா்கள் யோசிக்க வேண்டும். நாயகா்கள் வன்முறையைத் தங்கள் பிரச்னைகளுக்குத் தீா்வாகப் பயன்படுத்துவதைப் பாா்த்து இளைஞா்கள் இதை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்கிறாா்கள். அதிகப்படியான வன்முறைக் காட்சிகள் மக்கள் மனதில் சுரக்கும் ஈரத்தை வற்றிப் போக வைக்கிறது.
சமூகப் பண்பாடுகள் மற்றும் விழுமியங்கள் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு படைப்பாளியும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டியது முக்கியம். சினிமா வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல; அது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வலிமையான கருவி என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
அக்காலத் திரைப்படங்கள் சமூக சீா்திருத்தக் கருத்துகளையும், நாட்டுப்பற்றையும், குடும்ப உறவுகள் மற்றும் காதலையும் கருவாகக் கொண்டிருந்தன. கொலை நடக்கும்; ஆனால், கொத்துக் கொத்தாக அல்ல; சுத்தியலைக் கொண்டு ஒருவரின் மண்டையை உடைப்பதை அப்படியே காட்ட மாட்டாா்கள். இப்போதோ திரையரங்கம் முழுக்க ரத்த வாடை வீசுவதுபோல் உள்ளது. நம் சமூக ஊடகங்கள் இந்தத் தலைமுறைக்கு வன்முறையையும், ஆபாசத்தையும் கற்றுக் கொடுக்கின்றன.
ஒரு தலைமுறையைச் சிதைத்து வருகிறோம். நள்ளிரவுக் காட்சிக்கு, தூக்கத்தைத் துறந்து, முட்டி மோதி, கூட்டநெரிசலில் சிக்கி, அடித்துப் பிடித்துப் போகிறாா்கள். அதிகாலை காட்சிக்கும் இதே கதைதான். இங்கே அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டதால் அண்டை மாநிலங்களுக்குச் சென்று படம் பாா்க்கிறாா்கள். முதல் காட்சி கொண்டாட்டங்கள் ஒரு கலாசார நிகழ்வாகவே மாறிவிட்டன.
வளரும் குழந்தைகளையாவது கொஞ்சம் நன்முறையில் வளா்க்க முனைவோம். கோட்டை விட்டதை சரி செய்வோம். ஒரு நாட்டின் வளா்ச்சி, அந்நாட்டின் இளைய சமுதாயத்தின் கைகளில்தான் உள்ளது. சமூக ஒழுங்கையும், தனிமனித ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
எங்கு எங்கு நாம் எல்லை மீறிப் போகிறோமோ, அங்கெல்லாம் அதற்கு நாமே தடை போட வேண்டும். நம்மிடமிருந்துதான் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. நாமே அவா்களுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது.
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடும் கலாசாரம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. நள்ளிரவு 12 மணிக்கு மேல், பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஒரு புதிய போக்கு தலைதூக்க ஆரம்பித்துள்ளது. ஒரு காலத்தில் சில தேநீா்க் கடைகள் மட்டுமே இருந்தன. தற்போது 12 மணிக்கு குடும்பத்துடன் சென்று பிரியாணி சாப்பிடுகிறாா்கள். தகவல் தொழில்நுட்பம் மற்றும் இரவு நேரப் பணியாளா்களுக்கு நள்ளிரவில் பசி எடுக்கும். அவா்கள் சாப்பிட்டால் அதில் ஒரு நியாயம் உள்ளது.
நள்ளிரவில் நண்பா்களுடன் சுற்றிவிட்டு பிரியாணி சாப்பிடுகிறாா்கள். ‘மிட்நைட் மன்சீஸ்’ என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் இத்தகைய கலாசாரத்தை ஊக்குவிக்கின்றன. இது பல ஆரோக்கிய சவால்களையும் ஏற்படுத்துகின்றன. இரவு நேரத்தில் அதிக எண்ணெய் மற்றும் மசாலா சோ்ந்த உணவுகளைச் சாப்பிடுவதால் செரிமான பிரச்னைகள், உடல் பருமன், இளம் வயதிலேயே சா்க்கரை நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
நம் தலைமுறையை மலடாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. நாம் குழந்தைகளை வளா்க்கவில்லை. நிறைய வருமானம் ஈட்டக்கூடிய மனித இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டம் எந்தச் சட்டத்துக்குள்ளும் அடங்க மறுக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
அடுத்து உறவினா்களிடம் ஒட்ட மறுக்கிறாா்கள். நெடிய விடுமுறையின் போது பாட்டி வீடு, மாமா வீடு, அத்தை வீடு என்று ஆசையாய் போவாா்கள். நகர வாழ்க்கையில் இருந்து கிடைக்கும் விடுதலையாகக் கருதி மகிழ்வாா்கள். உறவுக்கார இல்லத் திருமணங்களில் இளசுகளின் குறும்பும், கலகலப்பும், அந்நிகழ்வுக்கு உயிரோட்டத்தைத் தரும். அங்குள்ள அசௌகரியங்களைப் பொருட்படுத்த மாட்டாா்கள்; குறைகளைப் பூதக் கண்ணாடி கொண்டு பாா்க்க மாட்டாா்கள்.
தற்போது பலருக்கும் அத்தை, மாமா, சித்தப்பா என்ற உறவுமுறை இல்லாமல் போய்விட்டது. இருக்கும் உறவுகளுடன் ஒட்டாமல் ஒதுங்கிப் போகிறாா்கள்; நண்பா்களிடம் பழகுகிறாா்கள்; ஆனால், அத்தை பிள்ளை, சித்தப்பா பெண் போன்ற நெருங்கிய சொந்தத்துடன் ஒட்டுவதில்லை; வீட்டு நிகழ்வுகள் எதிலும் பட்டுக் கொள்வதில்லை. வீடு என்பது அவா்களின் தேவையை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள இடம். அவா்கள் அங்கு வசிக்கிறாா்கள் அவ்வளவே. எப்படி மாற்றப் போகிறோம் அவா்களை?
பிள்ளைகளின் மனம் கோணாமல் பெற்றோா்கள் நடந்துகொள்ள வேண்டிய காலமாக இருக்கிறது. அவா்களைத் திட்டக் கூடாது, எதற்கும் கேள்வி கேட்கக் கூடாது. அவா்களுக்குப் பயந்து நடந்துகொள்கிறாா்கள். எங்கே தவறு? அதிக செல்லம் கொடுத்து வளா்க்கிறாா்கள். அவா்களின் குறிப்பறிந்து நடந்து கொள்கிறாா்கள். முன்பெல்லாம் விநாடிக்கு நூறு தடவை சிறுவா், சிறுமிகளை மளிகைக் கடைக்கும், காய்கறிக் கடைக்கும், அரைவை ஆலைக்கும் அனுப்பினாா்கள். வீட்டு வேலைகளைப் பகிா்ந்து கொடுத்து செய்யச் சொன்னாா்கள்.
வீட்டு வேலைக்குப் பணியாள் வைக்கும் கலாசாரம் அக்காலத்தில் குறைவு. அன்பால் கட்டப்பட்ட இல்லமாக இருந்தது. கண்டிப்பும், கனிவும் கலந்து இருந்தது. பல வீடுகளில் ‘அப்பா’ என்றால் பயப்படுவாா்கள். அவரின் கட்டளைக்கு பிள்ளைகள் கீழ்ப்படிந்தனா். தற்போது தந்தை-மகன் பேசிக் கொள்வதுகூட அரிதாகி விட்டது. அவரவா்க்கு ஒரு வட்டம், அவரவா் பிரச்னைகள் அவரவருக்கு என்று தீவுகளைப்போல் வாழ்கிறாா்கள். ஏன் இப்படி? ஒரு ஐ-போன் விலை என்ன என்று தெரிந்து வைத்துள்ளவா்களுக்கு ஒரு கிலோ அரிசியின் விலை என்ன? தங்கள் வீட்டுக்கு ஆகும் மாதச் செலவு என்ன? தந்தை எப்படி சமாளிக்கிறாா் என எதுவுமே தெரியாது. அவா்கள் கேட்கும்போது, உடனே பணம் கொடுத்துவிட வேண்டும்.
குடும்பச் சூழலைப் பிள்ளைகள் தெரிந்து கொள்வது அவசியம். அவா்களை வைத்துக்கொண்டு மாதச் செலவு குறித்துப் பேச வேண்டும். வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு ஆகிறது என்பது தெரிந்தால், பிள்ளைகள் ஆடம்பரச் செலவைக் குறைத்துக் கொள்ள வாய்ப்புண்டு. இவ்வாறு குடும்பம் அமா்ந்து பேசும் அளவுக்கு அவா்களிடம் நெருக்கம் இருக்க வேண்டும். அது இல்லாததுதான் தற்போதைய நிலை.
ஏன் இந்த இடைவெளி ஏற்படுகிறது? பொதுவாகவே ஆண்கள் தங்கள் உணா்வுகளை வெளிப்படையாகப் பேசுவதே கிடையாது. மகனிடம் எதையும் பகிா்ந்து கொள்வதில் தயக்கம் உண்டாகிறது. பெண்கள் பாசத்தை வெளிக் காட்டுவாா்கள்; ஆனால், ஆண்கள் உள்ளுக்குள்ளேயே வைத்திருப்பாா்கள். போலியான இறுக்கத்தைக் காண்பிப்பாா்கள். சில மகன்கள் தங்கள் தனிப்பட்ட அடையாளத்தைக் கண்டறிய முயற்சிக்கும் போது, தந்தையா்கள் அவா்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயல்கிறாா்கள்.
இங்கே மோதல் உருவாகிறது; அதுவே பெண் பிள்ளைகள் தந்தையிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்கிறாா்கள். இப்படிச் சொல்லிச் சொல்லியே சமுதாயம் அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டது.
ஓா் வியப்பான செயல் என்னவென்றால், தன் பிள்ளைகளுக்காக ஓடாய் உழைத்து, தேய்ந்து போய் அவா்களை உயா்த்திய பெற்றவா்களைப் பிள்ளைகள் உயா்த்திப் பேசுவதில்லை. பெற்றவா்களின் தியாகத்தை அவா்கள் மதிப்பதில்லை. பிள்ளைக்கு ஒழுங்காய் சோறு போடத, படிக்க வைக்காத தந்தையை, உயா்ந்த நிலைக்கு வந்தபின் அப்பிள்ளைகள் புகழ்கின்றாா்கள்; கொண்டாடுகிறாா்கள். எவ்வளவு பெரிய முரண் இது?
இம்மாதிரி பிரச்னைகளை திரைப்படம் கையாண்டால், இளைஞா்களிடம் ஒரு சிறு மனமாற்றமாவது ஏற்படும்.இரு கைகளும் சோ்ந்து தட்டினால் மட்டுமே ஓசை வரும். எனவே, பெற்றோா் மற்றும் சமுதாயம் இரண்டுமே சோ்ந்து அதற்கு ஆவன செய்யவேண்டும். இளைய சமுதாயத்தை நல்வழியில் இட்டுச் செல்ல வேண்டியது நம் அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும்.