FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

பிள்ளைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

Updated On : 7 பிப்ரவரி 2026, 5:15 am IST
மாதிரிப் படம்
பகிர்:

பெற்றோர் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த நிலையில், சென்னை ஆவடியில் வீட்டில் தனியாக இருந்த 17 வயது பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த விசாரணையில் அந்த மாணவருக்கு தேர்வு இருந்ததால், அவரை வீட்டில் தனியாக விட்டு விட்டு பெற்றோர் மட்டும் வெளிநாடு சுற்றுலா சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்தது.

பிள்ளைகள் தேர்வுக்குத் தயாராகும் போது உடனிருந்து அவர்களுக்கு ஊக்கமளித்து வேண்டிய உதவி செய்வது பெற்றோரின் கடமை. இதற்கு மாறாக, மேற்படி மாணவரின் பெற்றோர் வெளிநாடு சுற்றுலா சென்றதும், அதன் காரணமாக அவர்கள் தங்கள் மகனையே இழந்ததும் மிகுந்த வேதனை அளிக்கும் நிகழ்வாகும்.

மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும் போது அவர்களின் பெற்றோர் அந்த மாணவர்களுக்குத் தேவையான சூழலை தங்கள் இல்லங்களில் உருவாக்கித் தருவது அவசியம். துரதிருஷ்டவசமாக, சில வீடுகளில் பெற்றோர் உள்ளிட்ட குடும்பப் பெரியவர்கள் இதில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. மாணவர்கள் வீடுகளில் படிக்கும் வேளையில் தங்களுக்குள் சண்டையிட்டு சச்சரவு செய்வது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிகுந்த சப்தமாக வைத்துப் பார்ப்பது, "பிறகு படித்துக் கொள்ளலாம்' என்று கூறி படித்துக் கொண்டிருக்கும் மாணவரை வீட்டு வேலைகளை செய்யச் சொல்வது என தேர்வுக்கு தயாராகும் வேளையில், மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் ஏராளம்.

Advertisement

Advertisement

பொதுவாக, பல பெற்றோர் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவராக வேண்டும் என்ற தங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்கின்றனர். பிள்ளைகள் தேர்வுக்குத் தயாராவதற்கான நல்ல சூழ்நிலையை இல்லங்களில் ஏற்படுத்தாமல், அந்தப் பிள்ளைகள் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், குறைவான மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் அவர்களைக் கடிந்து கொள்வது எவ்விதத்தில் நியாயம் என்பதைத் தொடர்புடைய பெற்றோர் உணர வேண்டும்.

பள்ளித் தேர்வாயினும், வேலைவாய்ப்பு பெறுவதற்கான போட்டித் தேர்வாயினும், வீடுகளில் சுமுகமான சூழ்நிலை அமையாததால் தேர்வுக்குத் தயாராகும் பல மாணவ, மாணவிகள் அருகில் உள்ள நூலகங்களுக்குச் சென்று தங்களைத் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்கின்றனர். அவ்வாறு நூலகங்களுக்கு வரும் மாணவர்கள் நூலகங்களில் உள்ள செய்தித்தாள்கள், அறிவுசார் பிற நூல்களையும் படிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் மாணவர்கள் நூலகங்களை நாடி வருவது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

கூட்டுக் குடும்ப முறை நம் சமூகத்தில் ஏறக்குறைய இல்லாது போய் விட்டது மட்டுமின்றி, பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். அவர்கள் தாமதமாக வீடு திரும்பும் வரை பள்ளி விட்டு வீடு திரும்பிய பிள்ளைகள் வீட்டில் கவனிப்பார் எவருமின்றி தனித்து இருக்கின்றனர். இது போன்ற தனிமைச் சூழல் அவர்களைக் கைப்பேசி, தொலைக்காட்சி போன்றவற்றில் தங்கள் பொன்னான நேரத்தை வீணே கழிக்க வாய்ப்பாவதுடன் அவர்களுக்கு கூடா நட்பும் ஏற்பட ஏதுவாகிறது. மேலும், வீட்டில் தனித்து விடப்படும் ஆண் பிள்ளைகள் மது, கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகும் அபாயம் உள்ளது.

கோவா சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் "போதைப்பொருள் பழக்கம் சப்தமின்றி நமது வீடுகள், வகுப்பறைகள் மற்றும் சமூகத்தில் நுழைந்து எதிர்காலத்தை சீரழிக்கிறது; அந்தப் பழக்கம் வெறும் குற்றவியல் பிரச்னை மட்டுமல்ல, அது சமூகம், மனநலன், மருத்துவம் சார்ந்த பிரச்னை'" எனக் கூறியுள்ளதை தங்கள் பிள்ளைகளுக்கு உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்காத பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டும்.

வேலைக்குச் செல்லும் பெற்றோர் வீட்டில் வேறு யாரும் இல்லாத போது, தங்கள் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு குறிப்பாக, பெண் பிள்ளைகள் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாட்டை உறுதி செய்தல் வேண்டும்.

மத்திய அரசுப் பணியில் உள்ள பெண் பணியாளர்கள் தங்கள் பிள்ளைகள் 18 வயதாகும் வரையில் தேவை ஏற்படும் போது இரண்டு ஆண்டுகள் வரையிலான கால அளவுக்கு "குழந்தை பராமரிப்பு விடுப்பு' எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆனால், நடைமுறையில் பணியாளர்கள் பற்றாக்குறை, அதிக அளவிலான பெண் பணியாளர்கள், நிர்வாக காரணங்கள் ஆகியவற்றால் "குழந்தை பராமரிப்பு விடுப்பு' பெண் பணியாளர்களுக்குத் தேவைப்படும் போது போதிய அளவு கிடைப்பதில்லை என்பதே உண்மை.

தமது பணியைக் காட்டிலும் பிள்ளைகள் நலனே பெரிதென எண்ணும் பெற்றோர்களும் உள்ளனர். பள்ளியில் இருந்து மன அழுத்தத்துடன் மாணவர்கள் வீடு திரும்பும் நிலையில், பெற்றோர் வீட்டிலிருந்து அவர்களை ஆறுதலாக அரவணைப்பார்களாயின், பிள்ளைகள் மன அழுத்தம் நீங்கி புத்துணர்வு பெறுவர்.

தேசியக் குற்ற ஆவணக் காப்பக தரவுகள் 2022-ன்படி, நம் நாட்டில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 1,416 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இதற்கு பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் போதிய நேரத்தைச் செலவிடாது, அவர்களைத் தனித்து இருக்கச் செய்ததும் ஒரு காரணமாகும்.

தங்களினும் மேலானவர்களாக பிள்ளைகளை உருவாக்க பெற்றோர் சில தியாகங்களைச் செய்ய முன்வர வேண்டும். அதில் முதன்மையானது பிள்ளைகளுடன் அதிகப்படியான நேரத்தைக் கழிப்பதாகும்!

சந்தர்ப்பச் சூழல் எதுவாயினும் வளர்ப்புக்கு முக்கியத்துவம் அளித்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் போதிய கவனம் செலுத்தினால், அன்பான குடும்பச் சூழல் மட்டுமின்றி அறிவார்ந்த சமூகச் சூழலும் உருவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments