தமிழ்நாடு காவல் துறை 
நடுப்பக்கக் கட்டுரைகள்

காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

தமிழ்நாடு காவல் துறையின் அடுத்த தலைமை இயக்குநர் யார்? என்பது தொடர்பான விவாதங்கள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

பெ.கண்ணப்பன்

தமிழ்நாடு காவல் துறையின் அடுத்த தலைமை இயக்குநர் யார்? என்பது தொடர்பான விவாதங்கள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்தச் சூழலில், காவல் துறைக்கு தலைமை இயக்குநர் நியமனம் செய்வதற்குப் பதிலாக, பொறுப்பு தலைமை இயக்குநரை தமிழ்நாடு அரசு சில தினங்களுக்கு முன்பு நியமனம் செய்துள்ளது.

இந்திய மாநிலங்கள் பலவற்றிலுள்ள காவல் துறைக்கு தலைமை இயக்குநர் நியமனம் செய்வதில் கடந்த காலத்தில் நிலவிவந்த குளறுபடிகளைக் களைந்து, தலைமை இயக்குநர் நியமனம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் 2006-ஆம் ஆண்டு வழங்கியுள்ளது.

காவல் துறையின் தலைமை இயக்குநர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளிவிட்டு, பொறுப்பு தலைமை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டதற்கான காரணத்தை அரசு வெளியிடவில்லை. இருப்பினும், இதன் பின்னணியில் உள்ள அரசியலை காவல் துறையினர் மட்டுமன்றி பொதுமக்களும் உணர்கின்றனர்.

காவல் துறைக்கு தலைமை இயக்குநர் நியமனம் செய்வது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை சில வட மாநிலங்கள் பின்பற்றாமல், தமிழ்நாடு காவல் துறைக்கு பொறுப்பு தலைமை இயக்குநர் நியமனம் செய்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அதை நியாயப்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர்.

காவல் துறை நிர்வாகம் என்பது இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், காவல் துறையின் தலைமை இயக்குநர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறதா? என்ற ஐயம் பொதுவெளியில் எழுகிறது.

தற்போதுள்ள விதிமுறைகளின்படி மாநில காவல் துறையின் தலைமை இயக்குநர் நியமனமானது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டுதான் செய்யப்பட வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு பின்பற்றாமல், பொறுப்பு தலைமை இயக்குநரை நியமனம் செய்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்ற காரணத்தால், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினசரி வாழ்வில் எதிர்கொள்கிற பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண பொதுமக்கள் உடனடியாக அணுகக்கூடிய காவல் துறையானது அரசின் முகமாக வெளிப்படுகிறது. அத்தகைய காவல் நிர்வாகத்தை மாநில அளவில் வழிநடத்தும் பொறுப்பை வகிக்கும் தலைமை இயக்குநர் நியமனம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். போதிய முகாந்திரம் இல்லாமல், பொறுப்பு தலைமை இயக்குநர் ஒருவரை காவல் துறைக்கு நியமனம் செய்திருப்பது மாநில காவல் துறையின் தரம் மேலும் குறைய வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் பெரும்பாலும் காவல் துறையை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றன. குறிப்பாக, பொதுத் தேர்தலைச் சந்திக்கும்போது காவல் துறை தங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். அதிகார அத்துமீறலுடன், ஒரு தலைப்பட்சமாக செயல்படும் காவல் துறை மீது பொதுமக்களிடம் நிலவும் அதிருப்தியானது தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை. பொதுத் தேர்தல்களின் முடிவைத் தீர்மானிக்கும் சக்தியாக காவல் துறை விளங்கும் என்ற நம்புபவர்கள் ஜனநாயகத்தின் சக்தியை உணராதவர்கள்.

பொதுத் தேர்தல்களை மையப்படுத்தி காவல் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம் செய்யப்படுவது நம் நாட்டில் தொடர்ந்து நிகழ்கின்றன. தேர்தலை முறையாக நடத்துவதற்காக சில சமயங்களில் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது உண்டு. அதேபோன்று, தேர்தலைச் சந்திக்கும் ஆளும் கட்சியின் ரகசிய களப்பணிக்கு சில காவல் அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதும் உண்டு.

சமூக ஊடகங்களின் செயல்பாடுகள் மிகுந்துள்ள இன்றைய காலகட்டத்தில் தேர்தலில் வெற்றி வாய்ப்பை தங்களுக்குச் சாதகமாக காவல் அதிகாரிகள் மாற்றிவிடுவார்கள் என்று ஓர் அரசியல் கட்சி கருதுமானால், அதுவே அந்தக் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிடும்.

கடந்த காலத்தில் தமிழ்நாடு காவல் துறையின் திறமையை பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்டு காவல் துறையோடு ஒப்பிட்டுப் பேசுகிற வழக்கம் உண்டு. சி.பி.ஐ., ஐ.பி., என்.எஸ்.ஜி. போன்ற மத்திய காவல் நிறுவனங்களில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த சில காவல் அதிகாரிகளின் பணி உலக அளவில் சிறப்பாகப் பேசப்படுகிறது. இந்தச் சூழலில், தமிழ்நாடு காவல் துறையின் நிகழ்காலச் செயல்பாடுகள் தொடர்பான இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்.

2012-ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட காவல் துறையினர் பதிவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் 2023- ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக உயர்நீதிமன்றம் மேற்கொண்ட விசாரணையில், மதுரை மாவட்ட காவல் துறையினர் அந்த வழக்கில் புலன் விசாரணை அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இதுநாள் வரை தாக்கல் செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தான் கொடுத்த புகார் மீது காவல் துறையினர் விசாரணை செய்யாமல் காலம் கடத்தி வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, மேற்படி புகார் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், வழக்குப் பதிவு செய்யாமல் காலம் கடத்திய காவல் அதிகாரி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மாவட்ட காவல் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவல் துறையில் தலைமை மாற்றம் தற்போது நிகழ்ந்துள்ள சூழலில், காவல் துறை மீதான நம்பிக்கை பொதுமக்களிடம் குறைந்து வருவதற்கான காரணங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

தினசரி வாழ்க்கையில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்கள் குறித்து காவல் நிலையங்களில் அளிக்கப்படும் பெரும்பாலான புகார்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. அதிகமான குற்ற வழக்குகளைப் பதிவு செய்தால், அது தேவையற்ற விமர்சனங்களுக்கு இடமளிக்கும் என்ற கருத்து காவல் துறையில் நிலவுகிறது.

பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளிலும் முறையான புலன் விசாரணை செய்து, உரிய காலத்தில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதில்லை. குற்றப் பத்திரிகைகளில் உள்ள தவறுகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டி, திருப்பி அனுப்பப்படும் குற்றப் பத்திரிகைகள் மீது உரிய மேல் நடவடிக்கைகளை காவல் துறையினர் விரைந்து மேற்கொள்வதில்லை.

மாவட்டந்தோறும் ஆண்டுக்கு ஒருமுறை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், நீதித் துறை நடுவர்கள் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. அழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, நிலுவையிலுள்ள அழைப்பாணைகள், பிடிஆணைகள், நீதிமன்றங்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட குற்றப்பத்திரிகைகள் போன்றவை குறித்து விவாதித்து, நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்த வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. இதன் விளைவாக நீதிமன்ற விசாரணையில் பல வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.

காவல் நிர்வாகத்தின் கண்களாகவும், காதுகளாகவும் விளங்குகிற மாநில உளவுப் பிரிவும், மாவட்ட தனிப் பிரிவும் அவற்றின் தனித்தன்மையை இழந்து செயல்படும் தற்போதைய நிலை, காவல் நிர்வாகத்தின் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய பலவீனம் காவல் துறை அதிகாரிகள் சிலருக்கு சமூக விரோதிகளுடன் கைகோத்துக் கொண்டு, குற்றச் செயல்களில் ஈடுபட ஏதுவாக அமைந்துள்ளது.

வயலில் தென்படும் களையை உடனுக்குடன் எடுக்கத் தவறினால், காலப்போக்கில் வயல் முழுவதும் களை ஆக்கிரமித்துக்கொண்டு, பயிரை அழித்துவிடும். அதுபோன்று, குற்றச் செயல்களில் ஈடுபடும் காவல் துறையினரைப் பாதுகாக்கும் முயற்சியை காவல் நிர்வாகம் தொடருமானால், அதுவே காவல் துறை சமுதாயத்தில் பெற்றிருக்கும் நன்மதிப்பை இழக்கக் காரணமாகிவிடும்.

சட்டம்-ஒழுங்கு பிரச்னையை எதிர்கொள்ளச் செல்லும் காவலர்கள் பொதுமக்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதற்கான காரணங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல், மேலோட்டமாக அணுகும் நடைமுறை பொதுமக்கள் - காவல் துறை இடையேயான நல்லுறவு மேலும் சீர்கெடக் காரணமாக அமைந்துவிடுகிறது.

காவல்துறையில் அனுபவம் வாய்ந்த நேர்மையான, திறமையான இன்னாள், முன்னாள் காவல் அதிகாரிகள் சிலரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, காவல் நிலையங்களின் நிகழ்காலச் செயல்பாடுகள் மற்றும் காவலர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து, காவல் துறையின் பணியை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறியலாம் என்று 10.07.2025-ஆம் தேதிய தினமணி ஆசிரியர் உரை வெளிப்படுத்தியுள்ள கருத்து காவல் துறை எதிர்கொண்டுவரும் சவால்களுக்குத் தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர்:

காவல் துறை உயர் அதிகாரி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகா் சிலை ஊா்வலத்தில் 9 போ் பலி: பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்

விஜய் வாகனம் நெரிசலில் சிக்கியது! திருச்சியில் போக்குவரத்து பாதிப்பு!

முதல் பிரசாரம்: திருச்சியில் தவெக தலைவர் விஜய்! குவிந்த தொண்டர்கள்!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

யுபிஐ பணப்பரிவர்த்தனை செயல்படுவது எப்படி?

SCROLL FOR NEXT