சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது. ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. "இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்பதுபோல, புத்தாண்டையொட்டி நமக்குள் பிறக்கும் நம்பிக்கைகள், மகிழ்ச்சிகள், எதிர்பார்ப்புகள் ஏராளம்... ஏராளம்! சிலருக்கு புத்தாண்டு பிறந்தால்தான் புதுப் புது யோசனைகள், லட்சியங்கள், இலக்குகள் மனத்துக்குள் முகிழ்ந்தெழும்.
"கண்டிப்பா இந்த ஆண்டு முடியறதுக்குள்ளே 10 கிலோ எடை குறைச்சிடுவேன்' என்று சபதம் எடுப்பவர்கள் பலர். "வெளிநாட்டு மொழி ஒன்றை கற்றே தீருவேன்' என்று வீராவேசமாகக் கிளம்புவோர் பலர். இன்னும் சிலர், இந்தப் புத்தாண்டில் செய்ய வேண்டிய 10 விஷயங்கள், 20 காரியங்கள் என்று அவரவர் செய்ய விரும்பும் செயல்களை நாட்குறிப்பில் பட்டியலே போட்டு வைத்து விடுவார்கள்.
இன்னும் சில முன்ஜாக்கிரதைப் பேர்வழிகள் இருப்பார்கள். புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே அதிநவீன உடற்பயிற்சிக் கூடங்களிலோ அல்லது சங்கீத பயிற்சி நிறுவனங்களிலோ அல்லது ஆங்கிலப் பயிற்சிக்கூடங்களிலோ புத்தாண்டுமுதல் சேர்வதற்காக தங்கள் பெயர்களைப் பதிவு செய்து, பணமும் கட்டி விடுவார்கள்.
புத்தாண்டு பிறந்த ஜனவரி தொடங்கி இரண்டு மூன்று மாதங்களுக்குள் உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்பவர்களின் எண்ணிக்கை சில பல மடங்குகள் அதிகரித்து, பின்னர் படிப்படியாகக் குறையும் என்பதை புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள், புத்தாண்டு வரை காத்திருப்பானேன். இப்போதே... இந்த விநாடியே அதற்கான முயற்சியை எடுத்துவிடலாம் அல்லவா? புத்தாண்டு தினத்தையொட்டி தங்கள் லட்சியங்களை அமைத்துக் கொள்வது ஏன்? எந்த ஒரு நல்ல செயலைத் தொடங்குவதற்கும் நல்ல நாள், கிழமை பார்ப்பது வழிவழியாகவே நம் மனத்துக்குள் ஊறிப்போய்விட்டது. "நல்லது செய்ய நாளும் கோளும் தேவையில்லை' என்பது மூத்தோர் வாக்கு. "நன்றே செய்; அதை இன்றே செய்' என்கிறார்கள் சான்றோர்.
புத்தாண்டையொட்டி எல்லோரும் ஏதோ ஒரு பயிற்சியில் சேர்கிறார்கள் என்பதற்காக ஆர்வக் கோளாறு காரணமாக தம் பெயரையும் கொடுத்து பதிவு செய்து கொள்வார் பலர். இணையதளங்களில் வரும் பல்வேறு அறிவிப்புகளே அதற்குச் சான்று.
"அலுவலக அரசியலைச் சமாளிக்க வேண்டுமா? நான் மிகச் சிறந்த டிப்ஸ்களைத் தரத் தயாராக இருக்கிறேன். என்னுடைய இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுங்கள். கட்டணம் ரூ.199 மட்டுமே' என்று வருகிறது ஒரு விளம்பரம்.
தொழில்முறையில் ஆங்கிலத்தை எப்படிப் பேச வேண்டும் என்று கற்றுக்கொடுக்க முன் வருகிறது ஒரு நிறுவனம்.
சில நிறுவனங்கள் புத்தாண்டையொட்டி குறைந்த கட்டணத்தில் மேற்கூறிய சேவைகளை வழங்குவதாக விளம்பரப்படுத்துகின்றன.
இப்படி புதிய புதிய பயிற்சி வகுப்புகள், ஆலோசனை மையங்கள், அறிவார்ந்த பயிற்சியாளர்கள் அணிவகுத்து வருகிறார்கள். இணையத்தில் உலவுபவர்களின் கண்களில் அடிக்கடி தென்படுகின்றன இந்த விளம்பரங்கள்.
இவற்றையெல்லாம் பார்ப்பவர்கள், தங்களின் முன்னேற்றத்துக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெறுகிறார்கள். அதுவும் சில நாள்கள், மாதங்களுக்கு மட்டும்தான். பிறகு அந்தப் பயிற்சிகளைக் கைவிட்டு விடுகிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம், நேரமின்மை என்பதுதான்.
புத்தாண்டு லட்சியங்களின் வாழ்நாள் இரண்டு மாதங்களுக்குள் நீர்க்குமிழிபோல் மறைந்து விடுகிறது. பெரும்பாலானவர்களின் புத்தாண்டுக் கனவுகள் கானல் நீராகிப் போவதற்கு என்ன காரணம்?
இலர் பலராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
என்கிறார் திருவள்ளுவர்.
திறமையற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர்கள் சிலராகவும், உறுதியற்றவர்கள் பலராக இருப்பதும்தான் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
கொண்ட கொள்கையில் உறுதியும், கற்றுக் கொள்வதில் தீவிர வேட்கையும் இல்லாதவர்களின் புத்தாண்டு லட்சியம், வந்த சுவடு தெரியாமலேயே மறைந்துவிடும் என்பதுதான் உண்மை.
எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் விடாமுயற்சி, பயிற்சி, மன உறுதி ஆகிய மூன்றும் அவசியம். மற்றவர்கள் செய்கிறார்களே என்பதற்காக நாமும் ஒரு செயலைச் செய்ய முற்படுவது தோல்வியில்தான்
முடியும். நமது லட்சியங்கள் "எடுத்தேன்}கவிழ்த்தேன்' என்பதாக இல்லாமல், தெளிவான, உயர்ந்த குறிக்கோள்களுடன் கூடியதாக இருக்க வேண்டும். அந்த லட்சியங்களை அடைய, தொடர் பயிற்சியும், விடாப்பிடியான முயற்சியும் இருக்க வேண்டும். நினைத்தால் பயிற்சி செய்வது, நேரம் கிடைக்காவிட்டால் விட்டுவிடுவது என்றில்லாமல், தொடர் பயிற்சியும், முயற்சியும் மட்டுமே வெற்றிக்கு வித்திடும் காரணிகள்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்}செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்
என்ற குமரகுருபரரின் இனிய பாடல் துன்பம், பசி, தூக்கம், பிறர் செய்யும் இடையூறுகள் போன்ற எதையும் பொருட்படுத்தாமல் தாம் செய்யும் பணியில் உறுதியாக இருக்க வேண்டும் என்கிறது.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
என்ற குறளில் சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சி செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச் செய்பவர்கள் ஆவர் என்கிறார் திருவள்ளுவர். சோம்பலும், முயற்சியின்மையுமே தோல்விக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
உயர்ந்த லட்சியங்களை அடையும் செயல்களைச் செய்ய புத்தாண்டுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றே, இப்போதே தொடங்குங்கள். படிப்படியாய் உங்கள் முன்னேற்றம் சாத்தியமாகும்போது, ஒவ்வொரு நாளும் புத்தாண்டே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.