பல்லுயிர் வளம் மிக்கத் தமிழகத்தின் வனங்கள், இன்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உயிர்வாழும் போராட்டக் களமாக மாறியுள்ளன.
இயற்கையின் சமநிலை சிதைக்கப்படுவதால் ஏற்படும் தொடர் வறட்சி, உணவுத் தட்டுப்பாடு காரணமாக வனத்தைவிட்டு வெளியேறும் விலங்குகளால் நிகழும் மோதல்கள், தமிழகம் எதிர்கொள்ளும் மிகத் தீவிரமான சூழலியல், சமூக நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.
ஒசூர் வனக் கோட்டம், ராயக்கோட்டையில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிரைக் காப்பதற்காகச் சென்ற விவசாயி வெங்கடேஷ் அண்மையில் யானை தாக்கி உயிரிழந்தார். ஒசூர் தொடங்கி கன்னியாகுமரி வரை வன எல்லையோரத்தில் வசிக்கும் மக்களின் நிலையும் இதுவே. ஒருபுறம் மனிதனின் வாழ்வாதாரம், மறுபுறம் விலங்குகளின் வாழ்விடம் என விரியும் இந்தப் போராட்டத்தில் இயைந்து வாழும் இயற்கை சமநிலையைப் பேணுவது பெரும் சவாலாகிவிட்டது.
தமிழக அரசின் தலைமை வனவிலங்கு காப்பாளர், வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, 2024- 25 ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் வனவிலங்குகளின் தாக்குதல்களால் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதே காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் 4,235 பயிர்ச் சேதங்கள், 259 கால்நடை உயிரிழப்புகள், 176 உடைமைச் சேதங்கள் மற்றும் 138 மனிதக் காயங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத உச்சபட்ச எண்ணிக்கையாகும்.
தேசிய அளவிலான ஒப்பீட்டில், 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் யானைகளால் அதிக மனித உயிரிழப்புகள் நேர்ந்த மாநிலங்களின் பட்டியலில் ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் நான்காம் இடத்தை வகிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் மட்டும் தமிழகத்தில் யானை தாக்கி 256 பேர் உயிரிழந்துள்ளனர். இது கர்நாடகம், கேரளத்தைவிட மிக அதிகம்.
கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி (ஒசூர்), ஈரோடு (சத்தியமங்கலம்) மற்றும் திண்டுக்கல் (கொடைக்கானல்) மாவட்டங்கள் மனித} விலங்கு மோதல்கள் அதிகம் நிகழும் உயர் இடர் மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தமிழகத்தின் மொத்தப் பரப்பளவில் 24.5 % வனப் பகுதியாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறினாலும், அவை ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பாக இல்லாமல், ஆங்காங்கே துண்டிக்கப்பட்ட தீவுகளைப் போலக் காணப்படுகின்றன.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அளிக்கப்பட்ட அறிக்கைகள், இந்திய வன ஆய்வு அறிக்கையின்படி, 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் சுமார் 61 சதுர கி.மீ. வனப்பரப்பை இழந்துள்ளது. குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் செயற்கைக்கோள் தரவுகளின்படி, 2024} ஆம் ஆண்டில் மட்டும் தமிழகம் 2,700 ஹெக்டேர் இயற்கைக் காடுகளை இழந்துள்ளது. இதில், கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் போன்ற பல்லுயிர் பெருக்க மண்டலங்களில்தான் அதிக இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதேநேரத்தில், தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2024-25 கணக்கெடுப்பின்படி 3,170-ஆக உயர்ந்து, ஒரே ஆண்டில் 107 என்ற அளவில் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த உயிரியல் வளர்ச்சியைத் தாங்கும் சூழலியல் கொள்திறன் நம் காடுகளுக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை. மரங்கள் செறிந்திருப்பது மட்டுமே வனமாகாது. யானைகள் உள்ளிட்ட தாவர உண்ணிகளின் பசியாற்றும் சத்தான புல்வெளிகளைக் கொண்ட தரமான வனப்பரப்பு வேகமாகக் குறைந்து வருவதே இந்த முரண்பாட்டுக்குக் காரணம்.
உணவுக்கும், நீருக்குமான போட்டி உருவாவதால், விவசாய நிலங்களை நோக்கி காட்டு விலங்குகள் படையெடுக்கின்றன. விலங்குகள் காட்டைவிட்டு வெளியேறுவதற்குச் சூழலியல் உந்துதல், ஈர்ப்பு ஆகிய இரண்டு காரணிகள் மட்டுமே பிரதானமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சூழலியல் உந்துதலுக்கு மிக முக்கியக் காரணம், காடுகளுக்குள் பரவியுள்ளஅந்நிய ஆக்கிரமிப்புத் தாவரங்களாகும்.
இவை மண்ணின் வளத்தை உறிஞ்சுவதுடன், யானைகள் மற்றும் மான்கள் உண்ணக்கூடிய உள்ளூர் புல் வகைகளை வளரவிடாமல் தடுக்கின்றன. இதனால், காடுகளுக்குள் ஏற்படும் உணவுத் தட்டுப்பாடு விலங்குகளை சமவெளியை, மனித வாழ்விடங்களை நோக்கி துரத்துகிறது.
அதேநேரத்தில், வன எல்லையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்படும் கரும்பு, வாழை, சோளம், பாக்கு போன்ற பணப்பயிர்கள் விலங்குகளை ஈர்க்கின்றன.
மனித- வனவிலங்கு மோதலைக் கட்டுப்படுத்த, பாரம்பரியத் தடுப்பு முறைகளைத் தாண்டி செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்கள் மற்றும் நவீன கண்காணிப்பு மையங்களை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.
தொங்கு சூரிய மின்வேலிகள், எஃகு கம்பிவட வேலிகள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் போன்ற நவீன தொழில்நுட்பத் தடுப்பு முறைகளை செயல்படுத்திவருவது வரவேற்பை பெற்றுள்ளது.
என்றாலும், இந்தப் போராட்டத்துக்கான மையமாக உள்ள வனத்தினுள் மண்டிப்போயுள்ள அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரங்களை வேரோடு அகற்றி, யானைகள் மற்றும் தாவர உண்ணிகளுக்குத் தேவையான பூர்விகப் புல்வெளிகளை மீட்டெடுப்பதே, வனவிலங்குகள், மனித வாழ்விடங்களை நோக்கி நகர்வதை கட்டுப்படுத்துவதற்கான நிரந்தர தீர்வை ஏற்படுத்தும்.
வனவிலங்குகளைக் கவராத மாற்றுப் பயிர் சாகுபடிக்கு வன விளிம்புப் பகுதி விவசாயிகளை ஊக்கப்படுத்துவதும், அந்த விளைபொருள்களுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் பொருளாதார ரீதியாக அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும்.
துப்பாக்கிகளும், மின்வேலிகளும் தற்காலிகமான பாதுகாப்பைத் தரலாமே தவிர, இயற்கை சமநிலையைத் தராது. விலங்குகளை எதிரிகளாகப் பார்க்காமல், இப்புவியின் சக பங்குதாரர்களாகக் கருதும் மனமாற்றமும், அறிவியல்பூர்வமான அணுகுமுறையுமே அனைத்து உயிரினங்களும் இயைந்துவாழ்வதற்கான தீர்வைத் தரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.