குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன்
இந்தியா அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது 1947-இல்தான் என்றாலும், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, அக்டோபர் 21, 1943 அன்று சிங்கப்பூரில் இடைக்கால சுதந்திர இந்திய அரசை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நிறுவிவிட்டார் என்பது அதிகம் பேசப்படாத வரலாறு. நேதாஜி போஸின் தலைமையில் அமைந்த அந்த அரசு, ஒரு சில நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றது மட்டுமல்லாமல், தனக்கென இந்திய தேசிய ராணுவம் என்று ஒரு படையினை உருவாக்கி இருந்தது.
பாயும் புலியுடனான மூவர்ணக் கொடி, "ஜெய் ஹிந்த்' என்கிற கோஷம் இவை இரண்டும் நேதாஜி சுபாஷ் போஸின் இடைக்கால அரசின் அடையாளங்களாக மாறின.சுதந்திர இந்தியாவை அவர் தரிசிக்கவில்லை என்றாலும், சுதந்திர இந்தியாவின் சுவாசத்துடன் கலந்துவிட்ட தியாகம் நேதாஜியுடையது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அகற்றி நிறுத்திக் கொண்டு இந்திய வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது. காந்திஜியை "மகாத்மா' என்றும், ஜவாஹர்லால் நேருவை "பண்டிட்ஜி' என்றும் இந்திய மக்கள் அழைத்தார்கள் என்றால், அவர்கள் "நேதாஜி' (தலைவர்) என்று சுபாஷ் சந்திரபோஸைத்தான் அழைத்தார்கள்; அங்கீகரித்தார்கள்.
1897 ஜனவரி 23-ஆம் தேதி, அன்றைய வங்காள ராஜதானியின் பகுதியாக இருந்த இன்றைய ஒடிஸா மாநிலம் கட்டக்கில் மிகவும் பிரபலமான ஒரு குடும்பத்தில் பிறந்தவர் நேதாஜி போஸ். நேரு குடும்பத்துக்கு இணையான செல்வமும் செல்வாக்கும் போஸின் குடும்பத்துக்கும் உண்டு. "ஐசிஎஸ்' என்று அழைக்கப்பட்ட இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்ச்சி பெற பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டவர் எனும்போது அவரது திறமையும், தகுதியும் எத்தகையது என்பதை நாம் சொல்லவா வேண்டும்?
சுபாஷ் போஸின் வழிகாட்டி யார்? சந்தேகமே இல்லாமல் ராமகிருஷ்ண பரமஹம்சரும், சுவாமி விவேகானந்தரும்தான். சுவாமி விவேகானந்தர் மறைந்தபோது, சுபாஷ் போஸின் வயது வெறும் நான்குதான். ""சுவாமிஜி இருந்திருந்தால் அவர்தான் எனது குருவாக இருந்து வழிகாட்டியிருப்பார்'' என்று சொன்ன நேதாஜி, அவரை நவீன இந்திய தேசியத்தின் ஆன்மிக குரு என்று குறிப்பிடுகிறார்.
துறவியின் மனநிலையுடன் இயங்கிய செயல்வீரர் சுபாஷ் சந்திரபோஸ். 24 வயதில் இந்திய குடிமைப் பணியைத் துறந்தார்; 35 வயதில் கட்டக்கில் இருந்த தனது மூதாதையர் வாழ்ந்த இல்லத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்; 42 வயதாக இருக்கும்போது, மகாத்மா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து சற்றும் தயங்காமல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்திய விடுதலைக்காகத் தனது உயிரையேகூடத் துறக்கத் தயாரான வீர வரலாறு சுபாஷ் போஸுடையது.
காந்தியடிகளுக்கும் நேதாஜி போஸுக்குமான உறவு புரிந்துகொள்ள முடியாதது. சுபாஷ் போஸின் போராட்டப் பாதையை காந்திஜி ஏற்றுக் கொள்ளவில்லை. சுபாஷ் போஸும் அண்ணலின் மிதவாதப் போக்கை ஏற்கவில்லை. அதேநேரத்தில் அவர்களுக்குள் ஒருவித பரஸ்பர அன்பும் மரியாதையும் இல்லாமலும் இல்லை.
1944 ஜூலை 6-ஆம் தேதி ஆஸாத் ஹிந்த் அரசு அமைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் தனது போரைத் தொடங்குவதற்கு முன்னால், சுபாஷ் போஸ், சிங்கப்பூரிலிருந்து வானொலியில் உரையாற்றினார். அதில்தான் முதல் முறையாக மகாத்மா காந்தி "தேசப் பிதா' என்று நேதாஜியால் முன்மொழியப்பட்டார் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.
தனது இந்திய தேசிய ராணுவத்தில் ஒரு படைப் பிரிவுக்கு "காந்தி பிரிகேட்' என்று பெயர் சூட்டினார் "சுபாஷ் போஸ்'. காந்திஜியும் சரி, "தேசப்பற்றாளர்களின் இளவரசன்' என்றும், "தேசப்பற்றாளர்களில் முதன்மையானவர்' என்றும் அவரைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
நேருவா, நேதாஜியா எனும்போது காந்தியின் தராசு, நேருவின் பக்கம் சாய்ந்தது ஏன் என்கிற கேள்விக்கு இந்தியா இன்னும் விடை தேடிக் கொண்டிருக்கிறது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்குமான உறவை அகற்றி நிறுத்தி இருவருடைய வரலாறும் எழுதப்பட முடியாது. 1927-இல் சென்னையில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அன்றைய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரபல வழக்குரைஞர் ஸ்ரீநிவாச ஐயங்காரின் வீட்டில் தங்கியிருந்தார். தனது குடும்ப வழக்கு காரணமாக ஸ்ரீநிவாச ஐயங்காரைச் சந்திக்க வந்த பசும்பொன் தேவரை, சுபாஷ் சந்திர போஸுக்குத் துணையாக உதவி செய்யப் பணித்தார் ஐயங்கார்.
அந்த முதல் சந்திப்பு, இருவருக்குமே ஜன்மாந்திரப் பிணைப்பானது. பார்த்த மாத்திரத்தில் நேதாஜியின் ஆளுமைக்குள் ஈர்க்கப்பட்டார் இளைஞராக இருந்த முத்துராமலிங்கம் என்கிற ஆளுமை. அவர்களது உறவு குரு-சிஷ்யன் உறவா, தலைவர்-தொண்டர் உறவா என்று இனம் பிரிக்க முடியாத அளவிலான பிணைப்பாக மாறியது.
நேதாஜிக்கு மிக நெருக்கமானவராக முத்துராமலிங்க தேவர் இருந்தார். இந்திய தேசிய ராணுவத்துக்கு தமிழ்நாட்டில் ஆதரவு திரட்டுவதில் முக்கியப் பங்காற்றிய முத்துராமலிங்க தேவர், நேதாஜி என்ற பெயரில் வார இதழும் நடத்தினார். தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களை இந்திய தேசிய ராணுவத்தில் இணையுமாறு அவர் வலியுறுத்தினார்.
தென்கிழக்கு ஆசியாவில் தமிழ் பேசிய இந்தியர்கள் மூலமாக இந்திய தேசிய ராணுவம் அளப்பரிய ஆற்றலைப் பெற்றது.
1943-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் படாங் மைதானத்தில் உரையாற்றியபோது, விடுதலைப் போராட்டத்தில் இணையுமாறு இந்தியப் பெண்களுக்கு நேதாஜி அழைப்பு விடுத்தார். தேச விடுதலையுடன் தங்களின் சொந்த விடுதலையையும் அவர்கள் பெறவேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார்.
அவரின் அழைப்பு மலாயாவில் இருந்த இந்திய தமிழ்ப் பெண்களை தட்டியெழுப்பியது. இந்தியாவையே பார்த்திராத அந்தப் பெண்களான சுமார் 1,000 பேர், இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி படையில் சேர்ந்தனர். அந்தப் படையில் இடம்பெற்றவர்கள்தான் ஜானகி தேவர், அஞ்சலை பொன்னுசாமி, ராசம்மா பூபாலன் ஆகியோர். அவர்கள் ஜான்சி ராணிப் படையில் சேவையாற்றிய பின்னர், மலேசிய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
நேதாஜி உரையாற்றிய பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபோது ஜானகி தேவரின் வயது 14. இந்திய தேசிய ராணுவத்தின் நிதி திரட்டும் நடவடிக்கையின்போது அவர் தனது வைரத்தோடை நன்கொடையாக அளித்தார். இதேபோல வெறும் 16 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்த சரஸ்வதி ராஜாமணி, அந்த ராணுவத்தின் உளவுப் பிரிவில் தனித்தன்மையுடன் பணியாற்றினார்.
சமத்துவப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு, இந்திய தேசிய ராணுவத்தில் ஆண்களுக்கு அளிக்கப்பட்ட போர்ப் பயிற்சிகள் பெண் சுதந்திரப் போராளிகளுக்கும் அளிக்கப்பட்டன. அவற்றில் ஆயுதப் பயிற்சிகள், அடர்ந்த காடுகளில் சண்டையிடுவதற்கான பயிற்சிகளும் அடங்கும். ஜாதி அடிப்படையிலான பிரிவுகளை நிராகரித்த நேதாஜி, அனைத்து வீரர், வீராங்கனைகள் ஒன்றாகச் சாப்பிட்டு வாழ உத்தரவிட்டார்.
பர்மா தமிழரான ஆர். மாதவன் பிள்ளை கடந்த ஆண்டு தனது 100-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரும் இந்திய தேசிய ராணுவத்தில் முக்கியப் பங்காற்றினார். பிரதமர் நரேந்திர மோடி 2024-ஆம் ஆண்டு பராக்ரம தினக் கொண்டாட்டத்தில் அவரைப் பாராட்டி கௌரவித்தார்.
இவர்களைத் தவிர, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, திருச்சி, கடலூரைச் சேர்ந்த பெயர் தெரியாத வீரர்களும், தொழிலாளர்களும் மலாயா, பர்மா மற்றும் சிங்கப்பூரில் நேதாஜியின் அழைப்புக்கு செவிசாய்த்தனர். தமிழர்களின் அபரிமிதமான ஆதரவால் உள்ளம் நெகிழ்ந்த நேதாஜி, "நான் மீண்டும் பிறந்தால் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்' என்று கூறினார்.
1938 ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் நேதாஜி சுபாஷ் போஸ் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திர இந்தியா பின்னாளில் முன்னெடுத்த பல வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரை எழுதியவர் சுபாஷ் சந்திரபோஸ்தான் என்பதை நாம் மறந்துவிட்டோம். சமுதாய சீரமைப்பின் மீதுதான் சுதந்திர இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும், முடியும் என்று முன்மொழிந்தது, காந்திஜியோ, பாபா சாஹேப் அம்பேத்கரோ, பண்டித நேருவோ அல்ல. நேதாஜியின் 1938 ஹரிபுரா காங்கிரஸ் தலைமை உரையைப் படித்துப் பார்த்தால் இந்த உண்மை தெரியும்.
1938-இல் ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் தலைவர் ஆனபோது, பண்டித நேருவின் தலைமையில் "திட்டக் குழு' என்று அமைத்து வருங்கால சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுக்க யோசித்தவர் சுபாஷ் போஸ். "சமூக நீதி இல்லாமல் சமநீதி இல்லை. சமநீதி இல்லாமல் சுதந்திரம் இல்லை' என்கிற அவரது கருத்தின் மீது கட்டமைக்கப்பட்டதுதான் பின்னாளில் உருவான இந்தியாவின் அரசியல் சாசனம்.
நேதாஜியின் வீரமும் புகழும் மக்கள் உணர்வில் நிலைபெற்றிருக்கின்றன என்றாலும் அவரது பெருமைக்கு முறையான அங்கீகாரம் வெகுகாலத்துக்குப் பிறகுதான் கிடைத்திருக்கிறது. 1992-இல்தான் நரசிம்ம ராவ் அரசால் அவருக்கு "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் விஜய் சௌக் அருகே தேசத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளில் வீரம், தியாகம், உறுதியான நாட்டுப் பற்று நிறைந்த தன்னிகரில்லாத் தலைவரின் வாழ்க்கையை நாம் நினைவுகூர்கிறோம். அவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த உயரிய தலைவராக மட்டுமில்லை; தியாகத்தின் சுடராகவும் இருந்தவர்.
இன்று நேதாஜியின் 130-ஆவது பிறந்த நாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.