இந்தியாவின் முதல் இடைக்கால பட்ஜெட்டை தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார். 1950-இல் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே அது தொடர்பான விவரங்கள் வெளியாகி சர்ச்சையானது. அதன் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு விவரங்கள் வெளிவராமல் பாதுகாப்பதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நிதியமைச்சர்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்ற சம்பிரதாயத்தை உடைத்து 1958-59-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமர் நேரு தாக்கல் செய்தார். 1954-ஆம் ஆண்டு வரை பட்ஜெட் ஆங்கிலத்தில் மட்டும் அச்சிடப்பட்டது. 1955-56-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆங்கிலம், ஹிந்தியில் அச்சடிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
அப்போதைய நிதியமைச்சர் சி.டி. தேஷ்முக் இதை அறிமுகப்படுத்தினார். நான் (கட்டுரையாளர்) நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நிதியமைச்சராக மொரார்ஜி தேசாய் இருந்தார். அவரது பட்ஜெட் உரையில் பொருளாதார ஸ்திரத்தன்மை, வளர்ச்சி செலவினங்களை அதிகரித்தல், உற்பத்தி அதிகரிப்பு, வரிவிதிப்பில் சமநிலை, குறிப்பாக பருத்தி நூல், புகையிலை மீதான கலால் வரி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தார். நிதிக் கொள்கைகளை வடிவமைப்பதில் அவருடைய நிதிநிலை அறிக்கை முக்கியப் பங்கு வகித்தது.
மாநிலங்கள் எல்லாவற்றுக்கும் மத்திய அரசை எதிர்பார்க்கக் கூடாது; மாநில வளர்ச்சிக்காக அவர்கள் தங்கள் நிதியாதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது அறிவுரையாக இருக்கும். ஒருமுறை தமிழ்நாட்டில் கடும் வறட்சி ஏற்பட்ட போது வறட்சி நிவாரணம் கேட்டு நான் கோரிக்கை வைத்தபோது எனக்கும் இதே பதிலைத்தான்
நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் தந்தார்.அவர் காங்கிரஸ் ஆளும் மாநிலம், காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலம் என்ற பாரபட்சமெல்லாம் பார்க்க மாட்டார். எல்லோருக்கும் அவர் பதில் இதுவாகத்தான் இருக்கும்.
ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட மாநிலங்கள் வளமாக இருப்பதும், சில மாநிலங்கள் பின்தங்கியிருப்பதும் என்பது சரியான அளவுகோலாக இருக்காது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் இதை மனதில் கொள்வது நல்லது.
பட்ஜெட்டுக்கு முன்பு "அல்வா' செய்து, பட்ஜெட் தயாரிக்கும் ஊழியர்களுக்கு தருவது என்ற பழக்கம் 1980-இல் அறிமுகமானது. பட்ஜெட் தயாரிக்கும் ஊழியர்களை வெளித்தொடர்பு இல்லாமல் உள்ளே பாதுகாப்பாக வைப்பார்கள். பட்ஜெட் ரகசியம் வெளியாகக் கூடாது என்பதால் இந்த ஏற்பாடு. பட்ஜெட் வெளியாகும் அன்றுதான் அவர்களும் வெளி உலகத்தைப் பார்ப்பார்கள். இந்தக்
கடுமையான கட்டுப்பாடு இப்போதும் தொடர்கிறது. 2021-இல் காகிதம் இல்லாத பட்ஜெட் உரை அறிமுகமானது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதம் இல்லாத பட்ஜெட்டை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பு மூட்டை மூட்டையாக அச்சடித்த பட்ஜெட் உரை விவரங்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். அதை எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்துப் படித்திருப்பார்கள் என்ற சந்தேகம்கூட எனக்கு வரும்.
பட்ஜெட் குறித்து நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி "இது வெறும் நிதிநிலை அறிக்கை அல்ல; இது ஓர் அரசியல் ஆவணம்' என்று குறிப்பிட்டார். பட்ஜெட் என்பது வறுமை ஒழிப்பு, நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச் சலுகை, விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்க வேண்டும். பட்ஜெட் என்பது தொலைநோக்குப் பார்வையை உணர்த்தும் ஒரு திட்டமிடல் என்பதுதான் என் கருத்து.
1991-இல் இந்தியாவின் நிதியமைச்சரான மன்மோகன் சிங் சமர்ப்பித்த பட்ஜெட், நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் போன்றவற்றை அவர்தான் அறிமுகப்படுத்தினார். இது கடினமான முடிவுதான். ஆனால், அவசியமானவை என்று தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார் மன்மோகன் சிங். இன்றுவரை அவரது இந்தப் பார்வையின் அடிப்படையில்தான் எல்லா நிதிஅமைச்சர்களும் பட்ஜெட் தயாரிக்கிறார்கள்.
பற்றாக்குறை பட்ஜெட் - நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார். ஒரு நிதி ஆண்டில் அரசின் மொத்த வருவாய், அதாவது வரி- வரி அல்லாத வருவாயைவிட அதன் மொத்த செலவினம் அதிகமாக இருக்கும் நிதி நிலையைக் குறிக்கும் வார்த்தைதான் "பற்றாக்குறை பட்ஜெட்' என்பது. சுதந்திர இந்தியாவில் இதுவரை நாம் பற்றாக்குறை பட்ஜெட்தான் தாக்கல் செய்திருக்கிறோம். இதை ஈடுகட்டத்தான் அரசு கடன் வாங்குகிறது. நாட்டின் கடன் சுமை அதிகரிப்பதற்கு பற்றாக்குறை பட்ஜெட் ஒரு முக்கியக் காரணம். சுருக்கமாகச் சொன்னால் வரவுக்கு மீறிய செலவுதான் பற்றாக்குறை பட்ஜெட்.
மாநில அரசுகள் கடன் வாங்குவது குறித்து வெளிப்படையாக தங்களது நிதிநிலை அறிக்கையில் தகவல் தெரிவிக்கின்றன. மத்திய அரசு வாங்கும் கடன்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பெரிய அளவு விவாதிக்கப்படுவதில்லை.
2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி அதாவது விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். விடுமுறை தினத்தில் பட்ஜெட் தாக்கல் புதிய நடைமுறைதான். அதிக அளவு பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் தமிழர்கள்தான்.
2025-26 பட்ஜெட் அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரிச்சலுகை வழங்கினார். புதிய வரி விதிப்பு முறையில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்படும் என அறிவித்தார். வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை மக்கள்தொகையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதன் சதவீதம் ஒற்றை இலக்கத்தில்தான் வருகிறது. வரிவிதிப்பு முறைகள் எளிதாக இருந்தால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிக மாவதற்கான வாய்ப்பு அதிகம். அரசு, தனியார் நிறுவனங்களில் அவர்களின் ஊழியர்களுக்கான வருமான வரி முறையாகப் பிடித்தம் செய்யப்பட்டு அரசு கஜானாவுக்குப் போகிறது.
தொழில் முனைவோர், வணிகர்கள் போன்ற பெரும் முதலாளிகள் முறையான கணக்கு வைத்துக் கொள்வதில்லை; முறையாக அரசுக்குச் செலுத்த வேண்டிய நியாயமான வரியைச் செலுத்துவதில்லை; மத்தியதர அரசு ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்களிடம் காட்டும் அதே கண்டிப்பை பெரும் முதலாளிகளிடமும் அரசு காட்ட வேண்டும்.
இணைய வழியில் வருமான வரி படிவங்கள் மதிப்பீட்டுத் திட்டத்தை வலுப்படுத்தினால், மேல்முறையீடு நடைமுறை எளிமையாகும். அதேபோல், ஜி.எஸ்.டி. வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறையையும் எளிமையாக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி நிலுவைக்கான அறிவிப்புகள் அனுப்பாமல், வணிகர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் வழியாக தகவல் அல்லது நினைவூட்டல் அனுப்பாமல் சொற்ப அளவிலான வரி நிலுவைக்காக வங்கிக் கணக்கை முடக்குகிறார்கள் என்று வணிகர்கள் வருத்தப்படுகின்றனர். ஜி.எஸ்.டி. வரி வருவாயை எளிதாக்கி வணிகர்களுக்கு சலுகை அளித்த நிதியமைச்சர் இதையும் கவனிக்க வேண்டும்.
இதேபோல், கடன் தொல்லையால் தவிக்கும் லட்சக்கணக்கான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி, மருத்துவச் செலவுகளை ஏழை, நடுத்தர மக்களுக்கு குறைப்பதற்காக கல்விக்கூடங்கள், மருத்துவமனைக்கு விதிக்கப்படுகிற ஜி.எஸ்.டி. உள்பட எல்லா வரிகளையும் நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
அதிகமான வருவாயை அரசுக்குப் பெற்றுத் தரும் ஜி.எஸ்.டி.-ஐ மக்கள்தொகையில் கீழே உள்ள பாதி பேர்தான் மூன்றிலே இரண்டு பங்கு வரி செலுத்துகிறார்கள். அதே நேரத்தில் பெரும்பான்மையான சொத்துகளைக் கட்டுப்படுத்துகிற மேல்தளத்தில் உள்ள 10 % மக்கள் மிகக் குறைவாகவே ஜி.எஸ்.டி. வரி செலுத்துகிறார்கள் என்று பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதைப் பரிசீலித்து மத்திய அரசு பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் எந்த அரசியலும் கூடாது. மாநிலத்துக்கான நிதி கேட்டு உச்சநீதிமன்றம் வரை மாநிலங்கள் போவது என்பது சரியான அணுகுமுறை அல்ல. 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் அரசின் தொலைநோக்குத் திட்டத்துக்கு இந்தப் பாரபட்சம் நிச்சயம் ஒரு தடைக்கல்லாகத்தான் இருக்கும்.
இதை நிதி அமைச்சரும், பிரதமரும் உணர்ந்து சரி செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த இலக்கை அடைய முடியும்.
கட்டுரையாளர்:
வேந்தர், விஐடி பல்கலைக்கழகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.