அறம் தவறிய அரசு வணிகம்!
மதுவின் பேரழிவில் தத்தளிக்கும் தமிழகமும், அரசின் வணிக நோக்கம் கேள்விக்குறியாகியிருப்பதையும் பற்றி...
தமிழ்நாட்டில் தற்போது எல்லாத் தளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற மட்டுமீறிய மது நுகர்வுக் கலாசாரம், நமது மாநிலத்தை மிகப் பெரிய பேரழிவுப் பள்ளத்தாக்குக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
பொதுச் சமூகமும், நாள்தோறும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற கோடிக்கணக்கான குடும்பங்களும் புரிந்து கொண்ட அளவுக்கு, மதுவின் விபரீதங்களை அரசு இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை அல்லது நன்றாகப் புரிந்துகொண்டிருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றும் சொல்லலாம்.
அரசின் பெருவணிகமாக வலுப்பெற்று, நிலைபெற்றுவிட்ட மதுவிற்பனைக்கு எதிராக, எதையுமே செய்ய முடியாத கையறு நிலையில், உண்மையிலேயே மதுவை எதிர்க்கிற பல அரசியல் கட்சிகளும், நீதி நிர்வாக அமைப்புகளும், ஆன்மிகப் பீடங்களும், சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பரிதாபகரமான முறையில் தோற்றுப் போயுள்ளன என்பதே இன்றைய எதார்த்தமான நிலை!
மது என்கிற ஒரு மாபெரும் சமூகக் கேடு, குடும்பக் கேடு, உடல்நலக்கேடு முற்றாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்கிற நமது லட்சக்கணக்கான குடும்பப் பெண்களின் கண்ணீர்க் கோரிக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டு, அலட்சியப்படுத்தப்பட்டு, மதுவின் மீதான எதிர்ப்புணர்வுகளை முனை மழுங்கச் செய்யும் வகையில், அதன் மீதான விமர்சனங்கள் இப்போது திசைமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன!
"டெட்ரா பேக்' என்று பெயருடன் காகிதக் குடுவைகளில் மதுவை (பள்ளிப் பிள்ளைகளும் தங்களது பாட புத்தகப் பையில் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் அவர்களால் வாங்க முடிந்த வகையிலும், ரூ.60, 70 என்கிற விலையில்) விற்பனை செய்வது, குடித்துக் காலி செய்யப்பட்ட மதுப் புட்டிகளை விலை கொடுத்து திரும்பப் பெறுவது, விளையாட்டு மற்றும் குடும்ப விழாக்களில் மதுவைப் பரிமாறுவது, மது அல்லாத பிற போதைப் பொருள்களின் மீது கடுமையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வது, மதுவை எந்த அளவுக்குக் குடிக்கலாம் என்பதை மதுப் புட்டியிலேயே அச்சிடுமாறு நீதிமன்றத்திடமே நியாயம் கேட்பது, காலியான மதுப் புட்டிகளால் ஏற்படுகிற தீங்குகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பது என்பன போன்ற பல்வேறு களங்களில் மது குறித்த விவாதங்கள் திசைமாறி இப்போது சூடுபிடித்துள்ளன.
அரசின் மது விற்பனையை நங்கூரம் பாய்ச்சி நிலைநிறுத்திவிட்டு, மிகவும் புத்திசாலித்தனமாகக் கிளப்பப்பட்டுள்ள மேற்காணும் அத்தனைச் சிக்கல்களும், நமது நிகழ்கால நீதிமன்றங்களின் கூடுதல் வழக்குச் சுமைகளாக மாறியுள்ளன என்பது, இதில் கூடுதல் துயரமாகும்! மது வணிகம் பெருமளவில் நடக்கும். ஆனால், அந்த வணிகத்தின் புற விளைவுகள் களையப்படும் என்பதே இப்போது அரசுத் தரப்பில் மக்களுக்குத் தெரிவிக்கப்படுகின்ற செய்தியாக இருக்கிறது.
அரசின் மது விற்பனையை முன்வைத்து எழுப்பப்பட்டுள்ள இத்தகைய விமர்சனங்களும் விவாதங்களும் மதுவை சமூகத்தின் ஓர் அவசியமான தேவையாக ஏற்றுக் கொண்டு, அவை இருந்த புட்டிகளின் மீதும், விற்பனை முறைகளின் மீதும் நியாயம் கேட்பவையாக மாறியுள்ள இந்தப் போக்கு, மிகவும் விபரீதமான ஒரு போக்காகும்.
தமிழ்நாடு முழுவதும், அரசு கடைவிரித்துள்ள 5,329 மதுக் கடைகளிலும் சுமார் 200 வகையான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தினமும் சராசரியாக 70 லட்சம் பேர் அரசிடமிருந்து மதுப் புட்டிகளை வாங்குகிறார்கள். மொத்த மது விற்பனையில், 60 % மதுப் புட்டிகள் 180 மில்லி (குவார்ட்டர்) மது புட்டிகளாகும். இது தனி மனிதர்கள் தங்களுக்காக மட்டுமே வாங்கிக் கொள்ளும் மதுவின் அளவாகும். 750 மில்லி கொண்ட முழுப் புட்டியை வாங்கி, குழுவாகச் சேர்ந்து குடிப்பவர்கள் தனிக் கணக்கினர் ஆவர்.
இவை தவிர அரசின் "டாஸ்மாக்' கிடங்குகளில் இருந்து தனியார் கேளிக்கை விடுதிகள் ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்கிற மது விற்பனைக் கணக்கு வேறொரு தனிக் கணக்காகும். அரசின் கடைகளில் மட்டும் இத்தகைய மது அருந்துபவர் ஒரு மாதத்துக்கு சராசரியாக 7,000 ரூபாயை தங்களுக்கான மதுவுக்காகச் செலவழிக்கின்றனர். இந்த விற்பனையின் வாயிலாக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.45,000 கோடிக்கும்மேல் வருவாய் கிடைக்கிறது. இந்தத் தொகையில் இருந்து ரூ.10 கோடியை எடுத்து, மதுவின் தீமை குறித்த மக்களின் விழிப்புணர்வுக்கு செலவு செய்யப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. அந்த வகையில், எந்தெந்த முறையில் மக்களுக்கு மதுவின் தீமை குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை. 2024-ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
2025-ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு மது விற்பனையை ரூ.600 கோடியாக உயர்த்த வேண்டும் என்று டாஸ்மார்க் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்தது. ஆனால், அந்த இலக்கையும் தாண்டி அந்த ஆண்டு ரூ.789 கோடிக்கும் அதிகமாக மது விற்பனையானது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் எந்தெந்த துறைகளில் அரசு இவ்வகையில் மெனக்கெட்டு கூடுதலாக இலக்கு நிர்ணயம் செய்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, அப்படி ஒருவேளை செயல்பட்டுக் கொண்டிருந்தால், அதில் எந்த அளவுக்கு தன் இலக்குகளை எட்டி இருக்கிறது என்பதெல்லாம் தெரியவில்லை. சிறுநீரக முறைகேடு விவகாரத்தில், ஏழை, எளிய மக்கள் சிக்கிக் கொள்ளாதபடி உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றும், ஏழை, எளிய மக்களை சிறுநீரக முறைகேடு விவகாரங்களில் இருந்து காப்பாற்றுவோம் என்றும், சிறுநீரக முறைகேடு விவகாரங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் தினமும் மது அருந்துபவர்கள் 70 லட்சம் பேர் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இரண்டு மூன்று நாள்கள் இடைவெளிவிட்டு மது அருந்துபவர்கள் இந்தக் கணக்கில் இல்லை. அவ்வகையில் குறைந்தது ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட நமது மதுப் பிரியர்களின் சிறுநீரகங்கள்மீது, மது என்கிற நச்சுத் திரவம் நாள்தோறும் நடத்திக் கொண்டிருக்கிற மோசடிகளும், வன்முறைகளும், நலக்கேடுகளும் கடுகளவும் கண்டுகொள்ளப்படவில்லை.
அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக நோயாளிகள் (மண்ணீரல் பாதிக்கப்படுவோர்) தினமும் பெருகி வருகின்றனர். அவர்களைக் கையாண்டு உரிய சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக சிறுநீரக சிகிச்சைப் பிரிவுகளும் தொடங்கப்படுகின்றன. இதற்கெல்லாம் பெருமளவிலான காரணமாக விளங்குவது மது என்கிற ஓர் ஒற்றைப் பெருங்கேடுதான்! கடந்த 10 ஆண்டுகளாக மதுவால் ஏற்படக்கூடிய கேடுகள் ஒவ்வொரு நாளும் வேகவேகமாகப் பெருகி, அதன் விளைவாக நமக்கு கிடைக்கக்கூடிய புள்ளிவிவரங்கள் நம்மை நிலைகுலைய வைக்கின்றன. மதுவால் லட்சக்கணக்கான நமது இளைய தலைமுறையினர் வேக வேகமாக தங்களது செயலாற்றலையும் உடல் நலனையும் இழந்து வருகின்றனர். மதுவால் ஏற்படக்கூடிய நோய்களையும், சிறுநீரகக் குறைபாடுகளையும் மருத்துவத் துறையிடமிருந்தும் மிகவும் எளிதாக ஓர் ஆய்வறிக்கையாகப் பெற முடியும். அந்தந்த ஆய்வறிக்கைகளின் வேதனையான தரவுகளே, அரசு தனது மதுக் கடைகளை முற்றாக மூடியாக வேண்டும் என்பதற்கான காரணங்களை, அழுத்தந் திருத்தமாக அரசுக்குத் தெரிவிக்கும்.
மது அல்லாத பல்வேறு வகையான பிற போதைப் பொருள்களின் விற்பனையைத் தடை செய்தும், அவற்றின் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. இது, அரசின் மிகச் சிறப்பான ஒரு நடவடிக்கைதான். காவல் துறையினரால் கைப்பற்றப்படும் போதைப் பொருள்களின் அளவும், அவற்றை இளையோர், மாணவர்களிடம் விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் கைது எண்ணிக்கையும் நமக்கு மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், மது அல்லாத பிற போதை வகையினங்கள் இந்த அளவுக்குத் தழைத்து வளர்வதற்கும், பெருமளவில் மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே பரவிப் பெருகுவதற்கும் மூல காரணமாகவும், அடிப்படையாகவும் அமைவது அரசின் மது விற்பனைதான் என்பது இங்கே நினைத்துப் பார்க்கப்படவில்லை.
மது என்கிற ஒரு வகையிலான போதையை அதிகாரபூர்வமான பெருவணிகத் தொழிலாகச் செய்து வருகிற ஓர் அரசு, அதே துறை சார்ந்த பிற போதைப் பொருள்களின் விற்பனையாளர்களை குற்றவாளிகளாகக் கருதி ஒடுக்கி ஒழிக்காமல் சக போட்டியாளர்களாகக் கருதி ஒழிக்க வேண்டிய நிலையில் இருக்கிறதோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.
அரசின் மது விலையைக் காட்டிலும், மிகக் குறைந்த விலையில் இத்தகைய உதிரியான போதைப் பொருள்கள் கிடைப்பதும் அவற்றின் பரவலுக்கான முதன்மையான காரணமாகும்.
இத்தகைய போட்டிகளைச் சமாளிக்கவும் பெரும் சமூகச் சிக்கலாகவும், நீதிமன்ற வழக்குகளாகவும் மாறி வருகிற உடைந்த காலி மதுப்புட்டிக் குவியல்களுக்குத் தீர்வு காணவும் அரசு "டெட்ரா பேக்' முறையில், குறைந்த விலையில் மதுவை விற்பனை செய்ய முன்வருகிறது என்றால், அக்கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை.
மக்களுக்கான ஓர் அரசு, அறம் தவறுகிற வகையில் ஒரு வணிகத்தைத் தானே செய்ய முற்படும்போது, அது தருகிற துணிச்சலே பிற போதைப் பொருள்களின் நுகர்வோரையும் அவற்றை விற்பனை செய்வோரையும் ஊக்கப்படுத்துவதாக அமைகிறது. எனவே, அரசு தனது குடிமக்களுக்கு தானே முன்வந்து விற்பனை செய்கிற மதுவின் அளவை, அதன் கடைகளை வேக வேகமாக மட்டுப்படுத்திக் குறைத்து, முற்றாக ஒழித்தாக வேண்டும். அரசு முனைப்போடு ஊக்கப்படுத்தாமல் இருந்தால், மக்களும் மது மீதான தங்களது வேட்கையைக் குறைத்துக் கொள்வார்கள் என்பதற்கு, கடந்த கரோனா காலகட்டமே ஒரு சிறந்த சான்றாகும். இதை இனிமேலாவது நமது அரசு உணர வேண்டும். அரசு மது விற்பனைக் கலாசாரம் என்கிற அபாயகரமானதொரு புற்றுநோயை உள்ளூர வளரவிட்டுக்கொண்டு, மேல் வண்ணப் பூச்சுகளால் நமது சமூகத்தின் நல வாழ்வைப் பாதுகாக்க முடியாது.
கட்டுரையாளர்: கவிஞர்.