முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

பொருளாதார அறிக்கையும், 2047 இலக்கும்...

Updated On : 24 மார்ச், 2026 at 11:20 PM
பகிர்:

கோ. விசுவநாதன்

ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பு வருடாந்திர பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும். நிகழாண்டும் நாடாளுமன்றத்தில் 2025-26 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை கடந்த ஜனவரி 28-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பொருளாதார ஆய்வறிக்கை என்பது இந்தியாவின் நிதி நிலை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை உள்ளது உள்ளபடி வெளிப்படையாகக் காட்டும் ஒரு கண்ணாடி. அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபடி 2026 -27-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இது நிகழ் நிதியாண்டின் 7.4 சதவீதப் பொருளாதார வளர்ச்சி என்ற கணிப்பைவிட சற்று குறைவான மதிப்பீடாகவே உள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை என்பது பொருளாதாரத்தின் குறுகிய கால, நடுத்தரகால வாய்ப்புகள் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதற்றம், வர்த்தகப் போர் உள்ளிட்ட காரணங்களால் உலகளாவிய சூழல் தொடர்ந்து பலவீனமாகவே உள்ளது. ஆனாலும், இந்தியாவின் செயல்பாடு தனித்து நிற்கிறது.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது என்றும் அந்த ஆய்வறிக்கை சொல்கிறது.

இது தவிர, மத்திய அரசின் வருவாய், ஜிடிபியில் 9.2 சதவீதமாக வலுவடைந்துள்ளது. நேரடி வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2025-26 நிதி ஆண்டில் 9.2 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள்தொகையைக் கணக்கிட்டுப் பார்த்தால் நேரடி வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் கஜானாவில் சேரும் நிதியைப் பொருத்து அமைகிறது. நாம் அந்த நிதியைக் கொண்டு சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். அரசின் நிகர நேரடி வரி வசூல் என்பது முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இது நம் நாட்டின் பொருளாதார வலிமைக்குச் சான்றாகக்கூட சொல்லலாம்.

நிகழ் நிதியாண்டுக்கான (2025-26) முழுமையான நேரடி வரி வசூல் இலக்காக சுமார் ரூ. 25.20 லட்சம் கோடியை அரசு நிர்ணயித்துள்ளது. அரசு தெரிவித்துள்ள தகவலின்படி, பிப்ரவரி 10-ஆம் தேதி வரை நிகர வசூல் ரூ. 19.43 லட்சம் கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அரசு குறிப்பிட்டுள்ள அந்த ரூ.25 லட்சம் கோடி இலக்கை அடைவது சாத்தியம்தான் என்று தோன்றுகிறது.

இந்த இலக்கை அடைவதன்மூலம் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கவும், நாட்டின் உள் கட்டமைப்புப் பணிகளுக்கு தேவையான நிதி திரட்டவும் அரசுக்கு இது மிகப் பெரிய உதவியாக இருக்கும். நேரடி வரி வசூல் அதிகரிப்பு என்பது பொருளாதார வளர்ச்சியின் சாட்சி.

உலக நாடுகள் அனைத்தும் தொழில்நுட்ப வளர்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஐக்கிய நாடு சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு, உலக வங்கி இணைந்து ஓர் எச்சரிக்கையை தங்கள் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள். 2026-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.7 என்ற அளவில் ஓரளவு மீள்தன்மையுடன் இருந்தாலும் இந்த வளர்ச்சி "ஏமாற்றம் அளிக்கும் வகையில் சீரற்றதாக இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

எண்ணிக்கையில் வளர்ச்சி தெரிந்தாலும், அது எல்லா நாடுகளுக்கும் சமமாக இல்லை. பணக்கார நாடுகள் ஓரளவுத் தப்பித்துக் கொள்ள, வளரும் நாடுகள் திணறி வருகின்றன. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. "என் நாட்டுப் பொருளைத்தான் வாங்க வேண்டும்; வெளிநாட்டுப் பொருள்களுக்கு வரி அதிகம்' என்று நாடுகள் தனித்தனியாகக் கோட்டை கட்டுவது அதிகரித்து விட்டது. உலகமயமாக்கல் குறைந்து வர்த்தகக் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனால், சர்வதேச வர்த்தகம் மந்தமடைந்துள்ளது. இதுஏழை நாடுகளின் ஏற்றுமதியைப் பெரிதும் பாதித்துள்ளது.

இது போதாது என்று கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் பில்லியன் கணக்கில் முதலீடுகள் செய்யப்பட்டன. இப்போது, இந்த முதலீடுகள் உண்மையான லாபத்தைத் தருமா என்ற சந்தேகம் எழத் தொடங்கி இருக்கிறது.

வளர்ந்த நாடுகள் தங்கள் நாணயக் கொள்கைகளைத் தளர்த்தி வளர்ச்சியைத் தக்கவைக்கின்றன. ஆனால், கடன் சுமையில் இருக்கும் ஏழை நாடுகளுக்கு இது போதாது. முதலீடுகள் குறைந்து வருவது எதிர்கால வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. இதை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருபுறம் ரோபோக்கள் வேலை செய்யும் காலம், மறுபுறம் வேலையின்மை, ஒரு பக்கம் பங்குச்சந்தை உச்சம்; செயற்கை நுண்ணறிவைக் காரணம் காட்டி ஆட்குறைப்பும் நடந்து கொண்டிருக்கிறது.

பொருளாதார அறிக்கையில், "வேகமாகச் செயல்படுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தாலும், தான் நிதானமாகவே இருக்க விரும்புவதாக நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்திருக்கிறார். நாட்டின் நிதிப் பற்றாக்குறையை 4.3 சதவீதமாகக் குறைக்க அவர் இலக்கு வைத்திருக்கிறார். அதாவது, அரசு வாங்கும் கடனைக் குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த விரும்புகிறார்.

நம் நாட்டின் தற்போதைய மொத்த கடன் ரூ. 197 லட்சம் கோடி. 2031-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் கடன் சுமையை 50 சதவீதமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளார். அரசின் மொத்த செலவு 7.7 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம், ஜிஎஸ்டி வரி விகிதங்களில் செய்யப்பட்ட சில மாற்றங்களால் வரியின்மூலம் கிடைக்கும் வருவாய் சற்றுக் குறைய வாய்ப்பு உள்ளது.

வேலைவாய்ப்புத் துறையில் பெரிய மாற்றங்களை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. உலக அளவில் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும்போது, அதன் பாதிப்பு இந்தியாவிலும் இருக்கிறது.

வேலையில்லாத் திண்டாட்டம் என்பது, இந்த அரசுக்கு மிகப் பெரிய சவால். சிறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பது, அதற்கான சலுகைகளை அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம்தான் இதற்குத் தீர்வு கிடைக்கும்.

மாநிலங்களோடு பகிரப்படாத வருவாயை மத்திய அரசு அதிகரித்துக் கொண்டே செல்வது, தற்சமயம் பேசுபொருளாகி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக விதிக்கப்படும் சிறப்பு வரி அதிகரித்துக் கொண்டே இருப்பதையும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

2014-இல் 10 சதவீதமாக இருந்த செஸ், இப்போது 18 சதவீதம் ஆகிவிட்டது. இந்தச் சிறப்பு வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாய், மாநிலங்களோடு பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. இதற்கென தேசிய அளவில் திட்டங்களை வகுத்து நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். ஆனால், மத்திய அரசு போதிய அளவு நிதியை ஒதுக்காமல் அலட்சியம் செய்கிறது என்ற குற்றச்சாட்டை தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதேசமயம் பொருளாதார அறிக்கையில், மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்துகிறது என்று பாராட்டவும் செய்கிறார்கள்.

மத்திய அரசு திட்டங்களுக்கே நிதியைச் சரிவர செலவு செய்யவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் விமர்சனம் செய்கிறார்கள். உதாரணத்துக்கு, கடந்த நிதி ஆண்டில் தேசிய ஆயுஷ் மிஷனுக்கு ரூ.1,275 கோடி அறிவிக்கப்பட்டு, ரூ. 781 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டு இருக்கிறது. தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்துக்கு ரூ.67,000 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.17,000 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. ஆனால், நிகழாண்டில் இந்தத் திட்டங்கள் அனைத்துக்கும் நிதிநிலை அறிக்கையில், கடந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட அளவு அல்லது அதைவிட அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சராசரி பணவீக்கத்தை மிகக் குறைவாகக் கணக்கிட்டு வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது. இந்தியாவின் ஜிடிபி மதிப்பீடுகள் தற்போதைய பொருளாதாரத்தின் நிலையை பிரதிபலிக்கவில்லை என்பதால், இந்தப் புள்ளிவிவரங்களுக்கு சர்வதேச நிதியம் "சி' கிரேடு அளித்துள்ளது.

மத்திய அரசு கூறுவதைப்போல் வளர்ச்சி இருந்தால் ரூபாயின் மதிப்பு ஏன் சரிந்து கொண்டே வருகிறது என்ற பொருளாதார நிபுணர்களின் கேள்விக்கு மத்திய அரசு சரியான விளக்கம் இதுவரை கூறவில்லை.

மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுவது மக்களுக்கு நன்மை பயக்கும். மத்திய, மாநில அரசு மோதல் என்பது வளர்ச்சிக்கு நிச்சயம் இடையூறுதான். இதுவேகூட பெரிய பொருளாதாரம் என்ற இலக்குக்குத் தடையாக இருக்கும்.

கட்டுரையாளர்:

வேந்தர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.