சென்னை: தமிழகத்தில் தொழில்நிறுவனங்கள் திருட்டு மென்பொருளை பயன்படுத்துவது அதிகரித்து வருவது, மென்பொருள் தயாரிப்பு துறையினரைக் கவலையடைய செய்துள்ளது.
புத்தகப் பதிப்புத்துறை, சி.டி. துறை ஆகியவற்றில் பெரும் இழப்பை ஏற்படுத்தி வரும் திருட்டு மென்பொருள் அண்மைக்காலமாக தகவல் தொழில்நுட்பத்துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கம்ப்யூட்டர் வாங்கும்போது அதற்குரிய சாப்ட்வேர்களை (மென்பொருள்) இந்திய காப்புரிமை சட்டப்படி ஒரிஜினலாக வாங்கி நிறுவிக் கொள்ள வேண்டும். மென்பொருள்களை பணம் செலுத்தி வாங்க வேண்டும் என்பதற்காக, பலர் திருட்டு மென்பொருள்களை கம்ப்யூட்டர்களில் நிறுவிக் கொள்கின்றனர். இதனால் நுகர்வோர் அப்போது தங்களது பணத்தை சிக்கனப்படுத்திக் கொண்டாலும், காலப்போக்கில் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு இதுபோன்ற திருட்டு மென்பொருள் முக்கிய காரணமாக இருக்கிறது. அதேவேளையில் ஒரிஜினல் மென்பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் லாபத்தின் பெரும் பகுதியை இழக்கின்றன. மேலும் முறையாக பணத்தை செலுத்தி மென்பொருள் வாங்காததால், அரசுக்கும் வரி இழப்பு ஏற்படுகிறது
தமிழகத்தில் 30 சதவீதக் கம்ப்யூட்டர்களில் மட்டுமே ஒரிஜினல் மென்பொருள்கள் நிறுவப்படுகின்றன. மீதி 70 சதவீதக் கம்ப்யூட்டர்களில் திருட்டு மென்பொருள்களே நிறுவப்படுகின்றன.
அனைத்து துறைகளும் கம்ப்யூட்டர்மயமாகி வருவதால், அதைச் சார்ந்த தொழில்களும் நல்ல வளர்ச்சியை எட்டி வருகின்றன. குறிப்பாக மென்பொருள் துறை அபரிமிதமான வளர்ச்சியில் உள்ளது. அதேபோன்று திருட்டு மென்பொருளின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு மென்பொருள் நிறுவனங்களும், சைபர் குற்றப்பிரிவு போலீஸாரும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதற்கு ஓரளவுக்கு பயனும் கிடைத்து வருகிறது.
பள்ளி, கல்லூரிகள், கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் முன்பு திருட்டு மென்பொருள் அதிகம் பயன்பாட்டில் இருந்தது. ஆனால் இந்த நிலைமை இப்போது முற்றிலுமாக மாறியுள்ளது. சில ஆண்டுகளாகப் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் ஒரிஜினல் மென்பொருள்களை தங்களது கம்ப்யூட்டர்களில் நிறுவுகின்றன. ஆனால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழில்நிறுவனங்கள் முற்றிலுமாகத் திருட்டு மென்பொருள்களை கம்ப்யூட்டர்களில் நிறுவுகின்றன.
முக்கியமாக சென்னை, கோயம்புத்தூர்,திருப்பூர், ஓசூர், சிவகாசி, தூத்துக்குடி ஆகிய தொழில் வளமிக்கப் பகுதிகளின் தொழில் நிறுவனங்களில்தான் கம்ப்யூட்டர்களில் அதிகமாக திருட்டு மென்பொருள்களை நிறுவுவதாக சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதைத் தடுப்பதற்காக தனியார் மென்பொருள் நிறுவனங்களும், சைபர் குற்றப்பிரிவு போலீஸாரும் அண்மைக்காலமாக தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதில் இந்திய காப்புரிமை சட்டத்தை மீறி, முறைகேடாக கம்ப்யூட்டர்களில் மென்பொருள் நிறுவப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்களைக் காட்டிலும் கல்வித்துறையிலேயே கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. ஆனால் தொழில் நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களிலேயே திருட்டு மென்பொருள் பயன்பாடு அதிகமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதற்கு உதாரணமாக இந்த ஆண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையில், 60 சதவீதம் தொழில் நிறுவனங்களிடமிருந்தே வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழகத்தில் மென்பொருள் துறையில் 85 சதவீதத்தை வைத்திருக்கும் ஒரு நிறுவனம் இந்த நிதியாண்டில் ரூ.82 கோடி அபராத தொகையாக வசூலித்து இருப்பதாகக் கூறுகிறது. இந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை, கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 16 சதவீதம் அதிகம் எனவும் அந்த நிறுவனம் கூறுகிறது.
திருட்டு மென்பொருளை கட்டுப்படுத்துவதற்கு சாப்ட்வேர் நிறுவனங்களும், சைபர் குற்றப்பிரிவு போலீஸாரும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தபோதிலும், எதிர்பார்த்த அளவுக்கு அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
கம்ப்யூட்டருக்குரிய ஹார்டுவேர்களை நுகர்வோர்கள் ஒரிஜினலாகவும், தரமானதாகவும் வாங்குவதற்கு காட்டும் ஆர்வத்தைப்போல, மென்பொருள்களையும் ஒரிஜினலாக வாங்குவதற்கு ஆர்வம் காட்டினால் மட்டுமே திருட்டு மென்பொருளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி தெரிவித்தார். திருட்டு மென்பொருளை நிறுவுவதால் ஏற்படும் பிரச்னை குறித்து மக்கள் உணர வேண்டும், திருட்டு மென்பொருளை நிறுவுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மென்பொருள் துறையினர் கோரிக்கை வைக்கின்றனர். இப் பிரச்னை முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை எனில், அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதோடு மட்டுமன்றி, எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கும் இது ஒரு தடைக்கல்லாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.