முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

காவிரி தண்ணீர் போதவில்லை: கடைமடை பகுதியில் காயும் நெற் பயிர்கள்

காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிகளில் நீரின்றி

Updated On : 12 அக்டோபர், 2012 at 6:10 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:42 AM

காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிகளில் நீரின்றி சம்பா நெற் பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடகம் திறக்க மறுத்து வரும் நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சொற்ப அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி 12,185 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூரிலிருந்து வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கல்லணையிலிருந்து காவிரியில் 2,000 கன அடியும், வெண்ணாற்றில் 9,017 கன அடியும், கல்லணைக் கால்வாயில் 2,513 கன அடியும், கொள்ளிடத்தில் 1,515 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Advertisement

குறுவை சாகுபடி பொய்த்த நிலையில், ஒரு போக சம்பா சாகுபடிக்கு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு சலுகைகளை அறிவித்தது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளன.

கல்லணையிலிருந்து வாரம் ஒருமுறை காவிரி மற்றும் வெண்ணாற்றில் முறை வைத்து தண்ணீர் திறக்கப்படுவதால், டெல்டாவின் கடைமடை வரை தண்ணீர் சென்று சேரவில்லை.

இதனால், கடைமடைப் பகுதிகளில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களும் மற்றும் திருந்திய நெல் சாகுபடிக்கு விடப்பட்ட நாற்றங்கால்களும் நீரின்றி காய்ந்து வருகின்றன.

இதனால், டெல்டா விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம் கூறியது: மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஏறத்தாழ ஒருமாதம் நெருங்கவுள்ள நிலையில், தண்ணீர் கடைமடைக்கு வந்து சேரவில்லை.

தற்போது மேட்டூர் அணையிலிருந்து விடுவிக்கப்படும் நீரின் அளவை குறைந்தபட்சம் 23,000 கன அடியாக உயர்த்த வேண்டும்.

அதிகபட்சம், குறைந்தபட்சம் (ஏண்ஞ்ட் ற்ன்ழ்ய், கர்ஜ் ற்ன்ழ்ய்) என்ற விகிதத்தில் காவிரியிலும், வெண்ணாற்றிலும் தண்ணீரை திறக்க வேண்டும்.

மேலும், முதல்வர் அறிவித்த 12 மணிநேர மும்முனை மின்சாரத்தையும் வழங்க வேண்டும்.

இன்னும் 3 தினங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாவிடில், கடைமடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சம்பா நெற்பயிர்கள் பாழாகும் அபாயம் உள்ளது.

புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழுக்  கூட்டத்தில் தமிழகத்துக்கு அக்டோபர் மாதம் 16 முதல் மாத இறுதிவரையில் 8.85 டி.எம்.சி. தண்ணீர் விட வேண்டுமென உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகம் வெளிநடப்பு செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில், இனியும் மத்திய அரசு வேடிக்கைப் பார்க்காமல் கர்நாடகத்தில் உள்ள அணைகள் அனைத்தையும் ராணுவத்தின் துணையோடு தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தமிழகத்துக்குரிய நீரை திறந்து, தமிழக விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.