முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

பத்திரப் பதிவில் முறைகேடுகளைத் தடுக்க அதிகார ஆவண பயன்பாட்டு முறைகளில் மாற்றம்: புதிய உத்தரவு

பத்திரப் பதிவின் போது, முறைகேடுகளை தடுத்திட பொது அதிகார ஆவண பயன்பாட்டு (POWER) முறைகளில் மாற்றம் செய்து பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:21 AM
பகிர்:

பத்திரப் பதிவின் போது, முறைகேடுகளை தடுத்திட பொது அதிகார ஆவண பயன்பாட்டு (POWER) முறைகளில் மாற்றம் செய்து பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், பதிபவர், உயிருடன் இருப்பதற்கான சான்று அவசியம் என்றும்,  வெளிநாடுகளில் பெறப்பட்ட பவருக்கும் சான்று தேவை என்றும் கூறப்பட்டுள்ளது.

பொது அதிகார ஆவணங்களை பயன்படுத்தி நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகளை தடுத்திடும் வகையில், பொது அதிகார ஆவணப்பதிவு முறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பொது அதிகார ஆவண முறை,தற்பொழுது,ரியல் எஸ்டேட் தொழில் புரிந்து வருபவர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது.இதன் மூலம் உரிமையாளர்களிடம் பவர் பெற்று அதனைக் கொண்டு கிரையம் செய்தல் உள்ளிட்ட மற்ற வகையான செயல்பாடுகளை பவர் பெற்றவர் செய்ய முடியும் என்பதால், பொது அதிகார ஆவண முறை அனைத்து பகுதிகளிலும் வழக்கத்தில் இருந்து வருகிறது.ஆனால் இந்த பொது அதிகார ஆவண முறை மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில்,முறைகேட்டினை தடுக்கும் வகையிலும்,பொது அதிகார ஆவணத்தை எழுதிக் கொடுத்தவருக்கு, அதன் மூலம் நடைபெறும் அனைத்து விபரங்களும் தெரிய வேண்டும் என்பதற்காகவும் பொது அதிகார ஆவணப் பதிவில் பல்வேறு மாற்றங்களை செய்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த புதிய முறை 4-2-13 முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை, பதிவுத்துறை தலைவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் (189சி12013) கூறியிருப்பதாவது:

பொது அதிகார ஆவணத்தின் அடிப்படையில் முகவரால் எழுதிக் கொடுக்கப்படும் ஆவணம் பதிவிற்கு தாக்கல் செய்யப்படும் பொழுது,பொது அதிகாரம் அளித்தவர் (POWER) உயிருடன் உள்ளார் (Life Certificate) என்பதற்கான சான்று கண்டிப்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.இந்த சான்றில் பவர் கொடுத்தவரின் கையெழுத்துடன் கூடிய புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.மேலும் இந்த சான்று மத்திய,மாநில அரசுகளின் ஏ(A) பிரிவு அலுவலர் அல்லது பதிவு பெற்ற மருத்துவ அலுவலரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

1-2-13 பின்னர் பதிவு செய்யப்பட்ட பவர் ஆவணத்தின் அடிப்படையில், தாக்கல் செய்யப்படும் எல்லாவிதமான ஆவணங்கள் பதிவிற்கும் கண்டிப்பாக Life Certificate வழங்க வேண்டும். ஆவணப்பதிவிற்கு 30 நாட்களுக்கு முன்னதாக பெற்றப்பட்ட Life Certificate சான்றினை அனுமதிக்க கூடாது.அதே சமயம் 1-2-2013 அன்றோ அல்லது அதற்கு முன்போ பதிவு செய்யப்பட்ட பொது அதிகார ஆவணம் தொடர்பான பதிவுகளுக்கு Life Certificate தேவையில்லை.வெளிநாடுகளில் எழுதி தரப்பட்ட (Adjudication) பொது அதிகார ஆவணங்களுக்கும் Life Certificate இணைக்கப்பட வேண்டும்.

பதிவின் பொழுதே எழுத அறிவுரை

புதிய நடைமுறையின் படி 1-2-13 க்கு பின்னர் பதிவு செய்யப்படும் பொது அதிகார ஆவணங்களில், "இந்த ஆவணத்தின் அடிப்படையில் எழுதிக் கொடுக்கப்படும் பிற ஆவணங்கள் பதிவிற்கு தாக்கல் செய்யப்படும் பொழுது, பொது அதிகாரம் அளித்தவரின் Life Certificate உடன் தாக்கல் செய்யப்பட வேண்டும்" என்ற விபரமும் எழுதப்பட வேண்டும்.இந்த நடைமுறையை 4-2-13 முதல் அமல்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பவர் கொடுத்தவருக்கு பாதுகாப்பு

இந்த புதிய முறையினால் பவர் கொடுத்தவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது. பவரின் அடிப்படையில் நடைபெறும் ஒவ்வொரு ஆவணப் பதிவிற்கும் Life Certificate கொடுக்கப்பட வேண்டும் என்பதால்,பவர் கொடுத்தவர்களுக்கு தங்கள் சொத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.இதனால் தவறுகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.மேலும் ஒரே இடம் பலருக்கு விற்பனை செய்யப்படுவதையும் இம்முறை மூலம் தடுக்க முடியும்.மேலும் பவர் கொடுத்தவர் இறந்து போனால் கொடுத்த பவர் செல்லாது என்ற நிலையில்,கடந்த காலங்களில் பவர் கொடுத்தவர் இறந்ததை தெரிவிக்காமலேயே பல ஆவணப்பதிவுகள் நடைபெற்று வந்த நிலையில்,இனி அது போன்ற பதிவுகள் தடுக்கப்படும் என்கின்றனர் ஆவண எழுத்தர்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.