வீணாக கடலில் கலந்த 20 டிஎம்சி நீர்: காவிரியில் கதவணைகள் கட்டப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
கடலில் வீணாக கலக்கும் நீரை சேமித்து வைக்க காவிரியில் கதவணைகள் கட்ட வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலில் வீணாக கலக்கும் நீரை சேமித்து வைக்க காவிரியில் கதவணைகள் கட்ட வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை சரியான நேரத்தில் தொடங்கி, காவிரியின் நீர் ஆதாரங்களான கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அபரீதமான மழை கொட்டித் தீர்த்தது. தென்மேற்கு பருவ மழையின் காலமான ஜூன் முதல் செப்டம்பர் காலத்திலான மழை மேற்படி மாநிலங்களில் ஜூலை முடிவிலேயே பெய்துவிட்டன. அதன் காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்து வழக்கம் போல் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.
தமிழக அரசு போதிய அளவு நீர் இருப்பு இருந்தால் ஜூன் 12-ம் தேதியும் அல்லது 90 அடி நிரம்பினால் மேட்டூர் அணையை பாசனத்திற்கு திறந்து விடுவது வழக்கம். 1996-ம் ஆண்டு மேட்டூர் அணையில் 52 அடி இருக்கும் போதும், 1999-ம் ஆண்டு 87 அடி இருக்கும் போதும், 2009-ம் ஆண்டு 94 அடி இருக்கும் போது நீர் திறந்துவிடப்பட்டது. இந்த ஆண்டு 25-7-13 அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 84 அடி இருந்தது. அன்றைக்கு நீர்வரத்து 24600 கனஅடி. ஆடிப்பெருக்கிற்காக, முதலில் ஏற்கனவே விடப்பட்ட 3 ஆயிரம் கனஅடியும், மேலும் 3 ஆயிரம் கனஅடி நீரை தமிழக அரசு திறந்துவிட உத்தரவிட்டது. ஆனால் நீர் வரத்து அதிகமாக இருந்தததால் 10800 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.
இது குறித்து காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்க துணைத் தலைவர் கே.வி.கண்ணன் தெரிவித்தது: ஜூலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருந்தது. கபினியிலிருந்து 20 நாட்களுக்கு முன்பிருந்தே உபரிநீர் முழுவதும் மேட்டூருக்கு திருப்பி விடப்பட்டது. ஜூலை 27-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89 அடியாக உயர்ந்தது. நீர்வரத்தும் 52ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. நீர் அதிகமாக வருவதை தெரிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அன்றைய தினமே 25 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்டிருந்தால் விவசாயிகள் அந்த நீரை இழந்திருக்க மாட்டார்கள். ஜூலை 29-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.8 அடியானது. அன்றைக்கு நீர்வரத்து 88 ஆயிரம் கன அடி. அன்றிலிருந்து வரக்கூடிய நீரில் பாதியை திறந்துவிட்டிருந்தால் தற்போது வீணாக கடலில் கலந்து இந்த நீர் இழப்பு ஏற்பட்டிருக்காது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக உயர்த்துவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர, கூடுதலாக நீர் வரும் என தெரிந்தும் முன்கூட்டியே நீரை திறந்துவிடாதததால் அந்த நீர் தற்போது எவ்வித பயனும் இன்றி கடலில் கலக்க வேண்டியதாயிற்று.
கடந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்கள் கடும் வறட்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தன. நிலத்தடி நீர்மட்டும் வெகுவாக குறைந்து போனது. கூடுதலாக நீர்வரத்து தெரிந்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்கூட்டியே உபரிநீரை மேலாண்மை செய்து திறந்து விட்டிருந்தால், இந்த மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கும். மேற்கண்ட மாவட்டங்களில் குடிநீருக்கு போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் 200 அடிக்கு கீழ் சென்றது. மேலும் கொள்ளிடம், காவிரி ஆறுகளில் மணல் கொள்ளையினால் நீரை உறிஞ்சுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆறுகள் கட்டாந்தரையாகிவிட்டதால் தாமதமாக திறக்கப்பட்ட உபரிநீர் வெகு, வேகமாக கடலை நோக்கி சென்றுவிட்டது.
கொள்ளிடம் கீழணை வழியாக கடந்த 7-8-2013 முதல் 12-8-2013 வரை சுமார் 16 முதல் 20 டிஎம்சி வரை நீர் வீணாக கடலுக்கு சென்றுள்ளது. இதில் கீழணையின் ஷட்டர் பழுதடைந்து சரியாக மூடாமல் போனது ஒரு காரணமாகும். காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நீருக்காக தவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இவ்வளவு பெரிய நீரிழப்பு ஏற்பட்டதற்கு பொதுப் பணித்துறையினர் சரியாக நீர் நிர்வாகம் செய்யப்படாததே காரணமாகும். எனவே இனிவரும் காலங்களில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளில் உள்ள நீர் இருப்பையும், நீர்வரத்தையும் சரியாக கண்காணித்து வறட்சி மாநிலமான தமிழகத்தில் நீரை வீணடிக்காமல் சேமிக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் தமிழக முதல்வர் கொள்ளிடத்திலும், காவிரியிலும் கதவணைகள் (Barrages) கட்ட உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.