கௌரவ் கோகோயின் சொத்து மதிப்பு ரூ. 7.57 கோடியாக உயர்வு!
காங்கிரஸ் தலைவர் கோகோயின் சொத்து விவரங்கள் பற்றி..
அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கௌரவ் கோகோய் மற்றும் அவரது மனைவி எலிசபெத் கிளேர் கோகோய் ஆகியோரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
2024 இல் கௌரவ் கோகோயின் சொத்து மதிப்பு ரூ. 4.66 கோடியாக இருந்த நிலையில், 2026 இல் இதன் மதிப்பு ரூ. 7.57 கோடியாக உயர்ந்துள்ளது. இதில், அவரது மனைவியின் சொத்துக்களே பெரும்பங்கு வகிப்பதாக அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோகோயின் அசையும் சொத்துக்கள் ரூ. 38.30 லட்சத்திலிருந்து ரூ. 72.59 லட்சமாக உயர்ந்துள்ளன.அதேநேரத்தில், அசையாச் சொத்துக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இருந்த ரூ. 2.25 கோடியிலிருந்து, தற்போது ரூ. 2.49 கோடியாக உயர்ந்துள்ளன.
கோகோயின் மனைவிக்குச் சொந்தமாக எந்தவித அசையா சொத்துக்களும் இல்லை. ஆனால், அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 2.03 கோடியிலிருந்து, தற்போது ரூ. 4.36 கோடியாக உயர்ந்துள்ளது.
பிரமாணப் பத்திரத்தின்படி, கோகோயிடம் கையில் ரொக்கமாக ரூ. 54,700-ம், வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகையாக ரூ. 30.14 லட்சமும் உள்ளன. அதேவேளையில், அவரது மனைவியிடம் கையில் ரொக்கமாக ரூ. 27,180-ம், வங்கிக் கணக்குகளில் (இங்கிலாந்து வங்கியில் உள்ள வைப்புத்தொகையாக) சுமார் ரூ. 1.50 கோடியும் உள்ளன.
2024 ஜனவரி 23ல் குவாஹாத்தியில் நடைபெற்ற காங்கிரஸின் ஒற்றுமை நியாய யாத்திரையின்போது, அரசு ஊழியரின் உத்தரவை மீறியதாகவும், அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது அவரைத் தடுத்ததாகவும் கோகோய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குவாஹாட்டியில் உள்ள வசிஷ்டா காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
கோகோயின் துணைவியாருக்கு ரூ. 57,25,479 மதிப்பிலான இபிஎஃப் தொகையும், ரூ. 13,24,453 மதிப்பிலான இங்கிலாந்து ஓய்வூதியத் திட்டம் உள்ளன. மேலும், ரூ. 46,12,485 மதிப்பிலான 331 கிராம் தங்கத்தையும், ரூ. 11,36,720 மதிப்பிலான வெள்ளியையும், ரூ. 3,65,000 மதிப்பிலான வைரத்தையும் வைத்துள்ளார்.
தனது வருமான ஆதாரமாக, நாடாளுமன்ற உறுப்பினராகப் பெறும் ஊதியத்தை கோகோய் அறிவித்துள்ளார். அதேவேளையில், அவரது மனைவி ஆக்ஸ்போர்டு பாலிசி மேனஜ்மென்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் முதுநிலை ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார்.
கோகோய் ஒரு பொறியியல் பட்டதாரி. மேலும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.