முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

ஜெயகாந்தன் – காந்த எழுத்துக்களின் ஈர்ப்பு!

1970 பிப்ரவரி மாதம். சென்னையில் லார்ட் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலுக்கு ஓர் இரங்கல் கூட்டம் நடந்தது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:08 AM
பகிர்:

1970 பிப்ரவரி மாதம். சென்னையில் லார்ட் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலுக்கு ஓர் இரங்கல் கூட்டம் நடந்தது. அதில், அவரைப் பற்றி திரு ஜெயகாந்தன் அவர்கள், ‘மனம் திறந்தும், மனதில் தைக்கிற விதமாகவும் இந்தப் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றைப் பற்றியும் நம்மோடு பேசிக்கொண்டிருந்த ஒரு மனிதர் இப்போது இல்லை’ என்றார். எவ்வளவு உண்மை! இன்று அவருக்கே அவருடைய வாசகம் முற்றாய்ப் பொருந்துகின்றது! ஜெயகாந்தன் ஒரு சகாப்தம் என்றால் அது எள் முனையளவும் மிகையல்ல!

‘உங்களுக்கு நிலையான கருத்தே இருக்க முடியாது என்பது என்னுடைய கருத்து. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ இது வாசகரின் கேள்வி. இதற்கு ஜெயகாந்தனின் பதில் - ‘என்னைப் பற்றிய உங்களின் இந்தக் கருத்துகூட நிலையாக இருக்காது என்றே நினைக்கிறேன். எனது கருத்துகள் சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் என் நிலையே தவிர, அது நிலையாக இருக்க வேண்டும் என்பதல்ல. எது நிலை மாறாதிருக்கிறதோ அது கெட்டித் தட்டிப் போய்விட்டது என்று அர்த்தம். கருத்துகள் என்பவை தீர்க்கமாக இருக்க வேண்டுமே ஒழிய, தீவிரமாக இருக்கலாகாது’.

உலகில் மாற்றம் மட்டுமே மாறாதது – கருத்துகளையும் சேர்த்து! என்ன ஒரு உறுதியான நிலைப்பாடு – அதுதான் ஜெயகாந்தனின் தனித்துவம்!

அப்போது நான் மருத்துவம் மூன்றாமாண்டு மாணவன். ராணிமுத்து மாத இதழில் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் வெளியாகியிருந்தது. இரவு சுமார் 8 மணிக்கு வாசிக்கத் தொடங்கினேன். நாவலின் ஜீவன் என்னை முழுமையாய்க் கரைத்தது. கங்காவுடன் கலங்கினேன், தெளிந்தேன், ஒரு முடிவுடன் வாழ்வை எதிர்கொண்டேன், சிறுமதி கண்டு சீறினேன்! நள்ளிரவு பன்னிரண்டைத் தாண்டிவிட்டது. மறுநாள் காலை வேலை இருக்கிறது, அரை மனதுடன் புத்தகத்தை மூடிவிட்டுப் படுத்தேன். தூக்கம் வரமறுத்தது. புரண்டு படுத்தேன், கங்கா, அவள் அம்மா, அண்ணன், ஊரிலிருந்து வரும் மாமா, பிரபு, அவன் மனைவி பத்மா, மகள் மஞ்சு என மூலைகொருவராய் என்னைப் பிய்த்து எறிகிறார்கள். முடியவில்லை; எழுந்து உட்கார்ந்து மீண்டும் வாசித்தேன். படித்து முடித்தபோது கிழக்கு வெளுத்திருந்தது. கனத்த மனத்துடன், கண் இமை மூட மறந்தது.

ஜெயகாந்தனின் நாவல், சிறுகதைகள், தலையங்கம், முன்னுரைகள், அரசியல், கேள்வி-பதில், கவிதைகள் (அவர் தன்னை ஒரு கவிஞர் என்று ஒப்புக்கொண்டதே இல்லை). எதைப் படித்தாலும் வாசகனுக்கு இந்த அனுபவம்தான். புரட்டிப் போட்டு, துவைத்து, கொடியில் தொங்க விட்டுவிடும்!

மூன்றாவது மட்டும் படித்து, ஊரை விட்டு ஓடிவந்து, விழுப்புரத்தில் கம்யூனிஸக் கருத்துகளையும், பாரதியாரையும் தன் மாமாவின் மூலம் அறிந்துகொண்டார். பின்னர் சென்னையில் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் வேலை. ஜீவா, பாலதண்டாயுதம் போன்ற ஆளுமைகளுடன் பழக்கம். காமராஜ் அவர்களுடன் காங்கிரஸில் சில காலம். திராவிட கழகங்களின் எதிர்ப்பு என அரசியலில் இருந்தவரையில் தன் தனித்துவத்தினை இழக்காமல் பணியாற்ற முடிந்தது இவரது இலக்கிய ஈடுபாட்டினால்தான் என்பது என் எண்ணம்.

இளமையில் அச்சகத்தில் டீ விற்றது, தஞ்சையில் செருப்புக் கடையில் வேலை பார்த்தது, வறுமை என இவரது இளமைக்கால இன்னல்கள், சமூகத்தில் கீழ்மட்டத்தில் வாடுவோரின் துயரங்களை உணரவைத்தன. பின்னர் அவர் கதைகளில் இவர்களே கதை மாந்தர்களானதைக் காணமுடியும்! குடிசைவாசி, ரிக்‌ஷாக்காரன், குடிகாரன், பிச்சைக்காரன், விலைமகள் என அடித்தட்டு மக்களின் அவலங்களை மிகுந்த மனித நேயத்துடன் அணுகியிருப்பார் தன் புதினங்களில்!

பிராமண பாஷையில் எழுத வேண்டும் என்பதற்காக, கரிச்சான் குஞ்சு (திரு. நாராயணசாமி) அவர்கள் வீட்டில் தங்கி, கற்றுக்கொண்டாராம். எதிலும் ஒரு முழுமை, தெளிவான சிந்தனை. இவையே ஜேகே-யின் எழுத்துக்கு உயிர்மூச்சு!

சமீபத்தில் அவரது வாசகர் ஒருவர், ஆனந்த விகடனில் வெளிவந்த ஜெயகாந்தன் சிறுகதைகளை, அப்படியே அதே பக்கங்களுடன் சேகரித்து, ஒரு புத்தகமாகப் பதிப்பித்து வெளியிட்டார்! (வாரம்தோறும் தொடர்கதைப் பக்கங்களைப் பிரித்தெடுத்து, பின்னர் ஒரு புத்தகமாக பைண்ட் செய்து வைப்பது அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்தது. இடையில் கிடைக்கும் ஜோக்குகள், துணுக்குகள் நம்மை அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்லும்!). அவருடைய வாசகர்கள் எப்படி அவர் மீது உணர்வுபூர்வமான மதிப்பைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

தன்னை ஒருபோதும் ஒரு கவிஞராக ஜேகே முன்னிருத்திக்கொண்டதே இல்லை. இருந்தாலும், அவருடைய சில கவிதை வரிகள் நம் சிந்தனையைத் தட்டிவிடும். உதாரணத்துக்கு சில வரிகள்…

‘வாழ்வதன் முன்னம்நான் செத்திருந்தேன்
செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்…’

‘ஒற்றைச் செருப்பு
ஒன்று கிடக்கிறது
இடமோ வலமோ
எதுவும் தெரியவில்லை
குப்புறக் கிடந்து
குமுறி அழுகிறது…’

அவர் எழுதிய திரைப் பாடல் ஒன்று இப்படிப் போகிறது –


கண்டதைச் சொல்லுகிறேன் – உங்கள்
கதையைச் சொல்லுகிறேன்.
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்குக் காரணம் உண்டென்றால்…
அவமானம் எனக்குண்டோ...?

(எம்.எஸ்.வி. இசையில், அவர் குரலிலேயே இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள் – ஜேகே-யின் சமூகப் பார்வை எவ்வளவு கூர்மையானது என்பது தெரியும்!)

ஒரு தலையங்கத்தில் எழுதுகிறார் –
எனது இந்த அபிப்பிராயங்கள் – எனது எல்லா அபிப்பிராயங்களைப் போலவே – முழுமையானதோ, முற்றானதோ, முடிவானதோ அல்ல.

மற்றோர் இடத்தில் இப்படிச் சொல்கிறார் –
இவர்களுக்குத் தமிழ் மீது பக்தி இருக்கிறது. பற்று இருக்கிறது. அபிமானம் இருக்கிறது. இது தமிழர்களாகப் பிறந்துவிட்டவர்களுக்கு ரொம்ப அவசியம். இந்தப் பற்றுக்கும், பக்திக்கும், அபிமானத்துக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். ஆனால், தமிழன் வாழ்வு என்பது இந்த வணக்கத்தோடு முடிந்து விடுவதில்லை.

1953-ல் தொடங்கி, சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ‘ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர’ வரையில், ஜெயகாந்தன் என்னும் ஆளுமை, தமிழினத்தை, அதன் தன்மானத்தை, சிந்தனைகளை, சித்தாந்தங்களை அசைத்துப் பார்த்தது. நம்மை நாமே உள்னோக்கிப் பார்க்க வைத்தது. சிந்தித்தது, சிரித்தது, சீறிப்பாய்ந்தது!

இன்று அமைதி அடைந்துவிட்டது.

ஜேகே சொல்வதுபோல் ‘இலக்கியத் துறையிலும், எழுத்துத் துறைகளிலும் நான் மேலும் தீவிரமாகச் செயல்பட இந்த ஓய்வு உதவும் என்று நான் நம்புகிறேன்’

மீண்டும் ஜேகே பிறக்கட்டும். காத்திருக்கிறோம்!

‘எல்லா ஞானிகளுமே இறுதியில் தூங்கித்தான் விடுகிறார்கள்’ – ஜேகே!

முழு கட்டுரையைப் படிக்க →