சிறப்புக் கட்டுரைகள்

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? விடை தெரிந்திருக்குமே இந்நேரம்... 

பாக்ஸ் ஆபீஸில் பாகுபலி-2 ஏற்படுத்தப் போகும் மாபெரும் புரட்சி உலக சினிமா அரங்கில் தென்னிந்தியப் படங்களுக்கான திறவு கோலாக இருக்கும் என்கிறார் மும்பையைச் சேர்ந்த பட விநியோகஸ்தர் ஒருவர்.

கார்த்திகா வாசுதேவன்

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா முழுதும் சினிமா ரசிகர்களிடையே கேட்கப்பட்டு வந்த இந்தக் கேள்விக்கான பதில் இன்று தெரியும். ஒருவழியாக பாகுபலி- தி கன்குளூஸன் இன்று வெளியானது. காலை முதலே ரசிகர்களின் ஆரவாரமான கருத்துகளை தொலைக்காட்சிகள் பதிவு செய்து வருகின்றன.

அதற்குள் நேற்றிரவே திருட்டுத் தனமாக இணையத்தில் பாகுபலி வெளியாகி விட்டது என்றும், அரைமணி நேரத்துக்குள் அதை 6000 பேர் தரவிறக்கம் செய்து கண்டுகளித்தனர் என்றும் இன்று காலையில் செய்திகள் வெளியானது. இந்தத் தடங்கல் எல்லாம் பாகுபலிக்கு ஒரு பொருட்டே இல்லை என்று தான் தோன்றுகிறது.

ஏனெனில் இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க அதி நுட்பமான கிராபிக்ஸ் காட்சிகளை அடிப்படையாக உருவாக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான படம். இதை வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு மடியில் லேப் டாப்பை வைத்துக் கொண்டோ அல்லது ஸ்மார்ட் டி.வி யில் இணைத்தோ பார்ப்பதெல்லாம் நம்முள் உறையும் சினிமா ரசிக உள்ளத்துக்கு நிஜமாகவே போதவே போதாது. இந்தப் படத்தை தியேட்டரின் 90 MM ஸ்க்ரீனில் கண்டால் மட்டுமே ரசிகர்களுக்குப் படம் பார்த்த முழு திருப்தி கிடைக்கும் எனும் போது இம்மாதிரியான இணைய வெளியீடுகள் எதுவும் பாகுபலியின் வசூல் ரெகார்டை அசைக்க முடியாது என்றே தோன்றுகிறது.

உலகம் முழுக்க கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்று தெரிந்து கொள்வதற்காக ஆர்வமுடன் காத்திருக்கும் ரசிகர்களின் துணையுடன் நிச்சயம் பாகுபலி- 2 இந்திய சினிமா உலகில் மாபெரும் ரெகார்ட் பிரேக்கை ஏற்படுத்தவிருக்கிறது என அத்திரைப்படத்தின் விநியோக உரிமை பெற்ற அனைத்து மாநில விநியோகஸ்தர்களும் காலை முதலே ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த ரெகார்ட் பிரேக் என்ற விசயம் வசூல் ரீதியாக மட்டுமல்ல படம் இயக்கப்பட்ட முறை, தயாரிப்பு, அதில் பயன்படுத்தப் பட்ட அதி நவீன தொழில்நுட்பங்கள், படத்தை உலகம் முழுக்க பிரபலப்படுத்த  பின்பற்றப்பட்ட மார்கெட்டிங் வியாபார உத்திகள் என பாகுபலியைப் பொறுத்த வரை படம் தொடர்பான ஒவ்வொரு சின்னச் சின்ன விசயமும் கூட ரெகார்ட் பிரேக் தான். ஏனெனில் இதைப் போன்ற ஒரு திரைப்படம் இந்தியாவில் இதுவே முதல் முறை.

பாகுபலி தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் சுமார் 6,500 திரைகளில் இன்று வெளியாகிறது. 2015 ஆம் ஆண்டு ஜுலை மாதம் பாகுபலி முதல் பாகம் வெளியானது. அன்றிலிருந்து அடுத்த பாகத்தைக் காணும் ஆர்வத்தை ரசிகர்களிடையே தக்க வைத்துக் கொண்ட பாகுபலியைப் பற்றி அதன் இயக்குனர் என்ன சொல்கிறார் தெரிந்து கொள்வோமா?

முதல் பாகத்தின் வரலாறு காணாத வெற்றி என்பது நாங்களே எதிர்பாராத ஒரு விசயம். படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்திருந்தோமே தவிர இப்படி இந்திய சினிமா உலகில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் பாகுபலிக்கு இடமுண்டு எனும் வகையிலான வரலாறு காணாத வெற்றி கிடைத்தது எங்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. முதல் பாகத்தில் பாகுபலியின் சிறந்த கதாபாத்திரங்களை மட்டுமே நாங்கள் அறிமுகம் செய்திருந்தோம். கதையின் அடர்த்தி இரண்டாம் பாகத்தில் தான் அதிகம். முதல் பாகத்தில் ரசிகர்களை ஈர்த்த அத்தனை கேள்விகளுக்கான விடையும் இரண்டாம் பாகத்தில் தான் முடிவடைகிறது. எனவே இரண்டாம் பாகம் மிக அதிக உழைப்பைக் கோரியது. படத்திற்கான வெற்றி முன்னமே தெரிந்த நிலையில் இரண்டாம் பாகத்தை இயக்கியதால் மிக அதிக உழைப்பைக் கொட்டி படம் உருவாக்க்கப் பட்டுள்ளது. இதுவும் உலக சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என நம்புகிறோம்” என்று தெரிவித்திருந்தார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி.

திரைப்படங்களுக்கான வணிக வெற்றிகளைக் கணிப்பதில் வல்லவரான மும்பையைச் சேர்ந்த டிரேட் எக்ஸ்பர்ட் தரண் ஆதர்ஷ் என்ன சொல்கிறார் தெரியுமா? பாகுபலி- 2 வசூல் ரீதியாக ஒரு சூறாவளி போல இந்திய சினிமாவைப் புரட்டி எடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு முன்பு வெளியான திரைப்படங்களில் சிலவும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்திருந்தாலும் பாக்ஸ் ஆபீஸில் பாகுபலி-2 ஏற்படுத்தப் போகும் மாபெரும் புரட்சி உலக சினிமா அரங்கில் தென்னிந்தியப் படங்களுக்கான திறவு கோலாக இருக்கும் என்கிறார் மும்பையைச் சேர்ந்த பட விநியோகஸ்தர் ஒருவர்.

அது மட்டுமல்ல பாகுபலி-2 தெலுங்கு படத்தின் பிரீ ரிலீஸ் விழா அன்று படத்தின் நாயகனான பிரபாஸின் பெரியப்பாவும், பிரபல தெலுங்கு நடிகரும், ஆந்திராவின் பிரபல அரசியல்வாதியுமான கிருஷ்ணம் ராஜூ பேசுகையில்; பாகுபலிக்கான வரவேற்பு என்பது தென்னிந்தியப் பகுதிகளில் மட்டும் என்றால் நாம் ஆச்சரியப்பட அவசியமிருந்திருக்காது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் தான் கலந்து கொள்ளச் சென்ற போது; பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்த பொது மக்களிடையே பேசும் போது உதாரணமாகச் சொன்னது யாரைத் தெரியுமா?  பாகுபலி திரைப்படத்தால் இன்று உலகம் முழுக்கவே பிரபலமாகி விட்ட கட்டப்பாவைத் தான்.  மோடி உ.பி மக்களிடம் தான் கட்டாப்பாவைப் போல மக்களுக்கு விசுவாசமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அவரிடம் நான் சொன்னேன். நீங்கள் கட்டப்பா அல்ல; உங்களுக்காக விசுவாசமாக உழைக்க கட்டப்பாக்களாக எங்களைப் போன்றவர்கள் இருக்கிறோம். நீங்கள் பாகுபலியாக இருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்’ என்று தான் சொன்னதாகக் கூறினார். இதை எதற்காக அந்த மேடையில் அவர் தெரிவித்தார் எனில்; அடிப்படையில் ஒரு தெலுங்குப் படமான பாகுபலி தமிழ், தெலுங்கு,மலையாளம் என் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது இந்தியிலும் வெளியிடப்பட்டு அங்கும் மிகப் பிரமாண்டமான வெற்றி அடைந்ததால் இன்று இந்தியா முழுதும் பாகுபலி என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டர்கள் எனும் நிலையாகி விட்டது. இந்திய சினிமா உலகில் இது தென்னிந்தியப் படத்துக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம். அதை நிகழ்த்த உதவியது பாகுபலி! அப்படியானால் அந்தப் படத்துக்கு கிடைத்திருக்கும் வெற்றியை எதைக் கொண்டும் அளக்க முடியாது என்பதே பொருள்.

புக் மை ஷோ இணையதளத்தின் சி.இ.ஓ ஆஷிஷ் சக்ஸேனா கூறுகையில்; பாகுபலி-2 க்கான டிக்கெட் முன் பதிவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக விரைவானதாக இருக்கிறது. இதுவரை 1 மில்லியன் டிக்கெட்டுகள் வரை விற்பனை ஆகியிருக்கின்றன. புக்கிங் தற்போது லைவ் ஆக இருப்பதால் ஒவ்வொரு ஷோவுக்கும் அட்வான்ஸ் புக்கிங் எண்ணிக்கைகள் கோடிக் கொண்டே செல்கின்றன. தென்னிந்தியாவில் மட்டுமல்ல, வட இந்தியா தியேட்டர்களிலும் பாகுபலிக்கான டிக்கெட் புக்கிங் மிக மிக ஆரோக்கியமானதாகவே இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் எந்திரன் கபாலி திரைப்படங்கள் கூட தமிழ்நாட்டில் 500 அரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டன. ஆனால் பாகுபலி- 2 திரைப்படம் 650 திரை அரங்குகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஜினி படத்தை விட மிக அதிக அரங்குகளில் வெளியான திரைப்படம் எனும் பெயரை இப்போது பாகுபலி-2 தட்டிச் சென்றுள்ளது. என்று கூறுகிறார் சினிமா டிரேட் அனலிஸ்ட் ஆன ஸ்ரீதர் பிள்ளை. அதுமட்டுமல்ல பாகுபலிக்கு கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு, வரவேற்பு, அட்வான்ஸ் புக்கிங் ரெகார்ட் பிரேக்குகள் எல்லாமே இதற்கு முன்பு தமிழில் மாபெரும் வெற்றி பெற்றிருந்த திரைப்படங்களைக் காட்டிலும் மிக அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

படத்தின் மாபெரும் வெற்றிக்கு அது வெளியிடப்பட்டுள்ள நேரமும் மிகச் சிறந்த துணையாக அமைந்து விட்டது. ஒரு படத்துக்கு முதல் 4 நாட்கள் வசூல் என்பது மிகப்பெரிய பக்கபலம். பாகுபலியைப் பொறுத்தவரை இன்று ஏப்ரல் 28 அன்று வெளியாகி இருக்கிறது. சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் தவிர மே 1 தொழிலாளர் தினத்துக்கும் அரசு விடுமுறை என்பதால் ரிலீஸ் தேதியை அறிவித்த வகையிலும் இந்தப் படத்தின் நிர்வாகக் குழுவினர் மிக அருமையாகத் திட்டமிட்டுள்ளார்கள் எனப் பாராட்டலாம். 8 மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்துக்கான ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டுள்ள விதம் படத்தின் பிரமாண்ட வெற்றியை உறுதி செய்வதாக அமைந்துள்ளது எனவும் ஸ்ரீதர் பிள்ளை கூறுகிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளாவிலும் கூட 300 அரங்குகளில் பாகுபலி- 2 இன்று திரையிடப்படுகிறது. கேரளாவில் மலையாளம் அல்லாத பிறமொழிப் படங்களுக்கான வெளியீட்டில் இது முற்றிலும் புதிது. இம்மாதிரியான கதைகளுடன் கூடிய திரைப்படங்கள் வழக்கமான திரைப்படங்களைப் போன்று அடிக்கடி வெளியாவதில்லை. எப்போதாவது தான் இம்மாதிரியான வழக்கத்துக்கு மாறான கதைகள் திரைப்படங்கள் ஆக்கப்படுகின்றன. பாகுபலி-1 திரையிடப்பட்ட போதே அது பாகுபலி- 2 க்கான அதிக திரையிடல்களை முடிவு செய்து விட்டது. கேரளாவிலும் இப்படத்துக்கான ரசிகர் வரவேற்பு பிரமாண்டமானதாகவே இருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில் பெஞ்ச் மார்க் ஆகப் பதிவு பெறப்போகும் படம் இது. எனக் கூறியுள்ளார் குளோபல் யுனைட்டெட் மீடியாவின் மேலாளர் ஆன பிரேம் மேனன்.

தமிழ்நாடு, கேரளா, வட இந்திய மாநிலங்கள் தவிர தெலங்கானாவில் இப்படத்துக்கான வரவேற்ப்பை பற்றிச் சொல்ல எந்த அளவுகோலும் இல்லை. படத்துக்கான வசூல் வேறெந்தப் பகுதியைக் காட்டிலும் சொந்த மாநிலமான தெலங்கானாவில் பாகுபலி சரித்திரம் படைக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பார்க்கலாம்... நான்கு நாட்களில் ஓரளவுக்குத் தெரிந்து விடும் இந்திய சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிலும் கூட பாகுபலியின் ஒட்டுமொத்த சாதனைகளுக்கான சாம்பிள்!

Image courtsy: google

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT