சிறப்புக் கட்டுரைகள்

விரலும், கருவிழியும் பாதித்த தொழுநோயாளிகள் ஆதார் அட்டை பெறுவது எப்படி? பதில் சொல்லுமா மத்திய அரசு

ENS


பெங்களூர்: சஜிதா பேகம் (65) தொழுநோய் பாதித்ததால் குடும்பம் கைவிட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மகடி சாலையில் உள்ள தொழுநோய் மருத்துவமனையில் வாழ்ந்து வருகிறார்.

அவரது குடும்பத்தினர், இந்த மருத்துவமனையில் அவரை விட்டுவிட்டுச் சென்ற பிறகு திரும்பி வந்து சஜிதாவை பார்க்கவே இல்லை.

இவருக்கு மாதந்தோறும் கிடைத்து வந்த ஓய்வூதியத் தொகை ரூ.1000ஐக் கொண்டு தான் இவர் தனது ஜீவனத்தை நடத்தி வந்தார். ஆனால், அதுவும் 3 மாதங்களுக்கு முன்பு நின்றுபோனது. ஆதார் அட்டை இல்லை என்ற காரணத்தால்.

தொழு நோய் தாக்கியதால் தனது கை மற்றும் கால் விரல்களை இழந்த சஜிதாவின் கண்களும் பார்வையை இழந்தன. இந்த நிலையில்தான் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தில், உடனடியாக ஆதார் சமர்ப்பிக்காவிட்டால் பென்ஷன் நிறுத்தப்படும் என்று கடிதம் வந்தது.

ஆதார் அட்டை பெற விரல் ரேகையும் கண் கரு விழியும் முக்கியம் என்பதால் சஜிதாவுக்கு ஆதார் அட்டை கிடைக்கவில்லை.

இது குறித்து மருத்துவமனையின் மருத்துவர் கூறுகையில், அவருக்குத் தேவையான உடை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இந்த பணத்தைக் கொண்டு தான் வாங்கி வந்தார். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவருக்கு பென்ஷன் தொகை வரவில்லை. முழுமையாக பார்வையை இழந்துவிட்டார், இரண்டு கைகளிலும் விரல்களும் இல்லை, ஆதார் அட்டைக்கான ரேகைப் பதிவை எப்படி செய்வது என்பது தெரியவில்லை என்கிறார்.

ஆதார் அட்டை வழங்கும் உதைய் அலுவலக அதிகாரிக்கு மருத்துவர் கடிதம் அனுப்பியுள்ளார், அதில் பையோ மெட்ரிக் பதிவு இல்லாமல் ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். இதுவரை அதற்கு பதில் இல்லை.

தனக்கு நேர்ந்திருக்கும் துயரம் குறித்து பேசிய சஜிதா, தனது "மகளும், மருமகனும் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. யாருமே வந்து என்னைப் பார்ப்பது இல்லை. தயவு செய்து எனக்கு பணம் கொடுங்கள்" என்று கண்ணீர்விட்டபடி கூறினார்.

100 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 57 பேர் தங்கியுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு இதே பிரச்னை இருக்கிறது. ஆதார் கிடைக்கவில்லை.

இதுபோன்ற நோயாளிகளுக்கு ஆதார் அட்டை எடுக்கச் சென்றால், இவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க இயலாது என்று திருப்பி அனுப்பி விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பிறகு சஜிதா போன்றவர்கள் எப்படித்தான் ஆதார் அட்டைப் பெறுவது அல்லது ஆதார் அட்டை இல்லாமல் அரசின் உதவிகளைப் பெறுவது என்பது குறித்து ஆதார் அட்டை வழங்கும் அதிகாரிகள் கூறுகையில், தொழு நோய் பாதித்த நோயாளி, தங்களது புகைப்படம் ஒட்டிய மருத்துவச் சான்றிதழைக் கொண்டு வந்தால் நாங்கள் ஏதாவது செய்வோம் என்கிறார்கள்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், கண் பார்வை இல்லை என்றாலும், முதலில் அவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பையோமெட்ரிக் இயந்திரத்தால் அவர்களது கருவிழியை அடையாளம் காண முடியும். ஒரு வேளை, அந்த இயந்திரமே அடையாளம் காண முடியவில்லை என்று நிராகரித்துவிட்டால், அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலாம். அதாவது, தொழுநோய் பாதித்தவர்களுக்கு ஏதாவது ஒரு பையோ மெட்ரிக் அடையாளம் கிடைத்தாலே போதும் அதை வைத்து ஆதார் அட்டை வழங்கிய சம்பவங்களும் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

கடும் துயரம் நேரும் போது, கடவுளுக்குக் கண் இல்லையா என்று புலம்புவார்கள். அந்த வகையில் கடவுளே கைவிட்டவர்களை, மனிதமும் கைவிட்டுவிடக் கூடாது. இதுபோன்றவர்களுக்கு ஆதார் அட்டையில் இருந்து விலக்கு அளிக்கும் சான்றிதழ் அளிக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT