சிறப்புக் கட்டுரைகள்

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் 'இந்த 5 விஷயங்களை' ஒருபோதும் செய்ய மாட்டார்கள்!

உமாகல்யாணி


உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற பல விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் சில விஷயங்களை ஒருபோதும் செய்யக் கூடாது. அது உங்களின் வெற்றிக்குத் தடையாக அமைந்துவிடக் கூடும். வெற்றிக்கு முதன்மைத் தேவை மன உறுதி. என்ன நடந்தாலும் சரி, அதை நான் கடந்து என்னுடைய இலக்கை அடைவேன் என்ற அசராத நம்பிக்கை வேண்டும். இத்தகையவராக நீங்கள் இருக்க வேண்டுமெனில், பின் வரும் 5 விஷயங்களில் கவனம் தேவை.

வேலையை தள்ளிப் போடுவது

தொழிலில் வெற்றிபெற்றவர்கள் எந்த வேலையைப் பார்த்தும் மலைத்துப் போக மாட்டார்கள். இதை நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட மாட்டார்கள். முடியாது என்பது அவர்களுக்கு மன்னிக்க முடியாத சொல்.

உறுதியானவர்களின் தாரக மந்திரம் இன்று, இப்போது, இந்த நொடி என்பதுதான். எந்த வேலை முக்கியமோ அதை முதலில் செய்வார்கள். அடுத்தடுத்து முக்கியப் பணிகளை தரம் பிரித்து நேரம் கருதி, அதற்கேற்ப செயல்படுவார்கள். 

பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் திறமை இருக்கிறது. அதை நன்கு புரிந்தவர்கள் வெற்றியாளர்கள். தங்களுடைய தனித் திறமை என்னவோ அதை வளர்த்துக் கொள்வார்கள்.

போட்டி பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில் அதில் சிக்கி உழலாமல் தங்கள் வேலை என்னவோ அதில் மட்டுமே கவனம் வைத்து முன்னேறிக் கொண்டிருப்பார்கள். அக்கப்போர்களில் கவனம் செலுத்தினால் வெற்றிக்கான பாதையிலிருந்து விலக நேரிடும் என்பதை அறிந்தவர்கள் இவர்கள். 

கண்மூடித்தனமாக பிறரை நம்புவது

இந்த உலகம் நல்லது கெட்டது நிறைந்தது. யார் நமக்கு உகந்தவர்கள், யார் எதிரிகள், நண்பர்களாக இருந்து கொண்டே யாரெல்லாம் குழி பறிப்பவர்கள் என்பதையெல்லாம் சுலபமாக  யாராலும் கணிக்க முடியாது. 

வெற்றியாளர்களாக இருப்பவர்கள் எளிதில் யாரையும் நம்ப மாட்டார்கள். உங்களை வெகு காலமாக தெர்ந்தால் மட்டுமே ஓரளவுக்கேனும் நம்புவார்கள். கண்மூடித்தனமாக ஒருவரையும் நம்ப மாட்டார்கள்.

ஓடி ஒளிவது

வெற்றிப் பெற்றவர்கள் பெரும்பாலும் தங்களுடைய தவறுகளை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். தங்களுடைய முடிவால் நிர்வாகத்துக்கு இழப்பு நேரிட்டால் அதை உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டு நிலைமையை சீராக்க முயற்சி செய்வார்கள். பிரச்னைகள் வந்தால் ஓடி ஒளிவதும், பின் வாங்குவதும் அவர்களின் அகராதியில் கிடையாது.

எதுவானாலும் நின்று ஜெயித்து, நிலைக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை உடையவர்களாக இருப்பார்கள். தப்பித்துச் செல்வது தீர்வாகாது என்பதை உறுதியாக நம்புகின்றவர்கள் அவர்கள்.

உடைந்து போவது

எவ்வளவு கடினமாக உழைத்தாலும், எத்தகைய திட்டங்களைப் போட்டாலும் நடக்கும் என்று நினைத்த விஷயங்கள் சில சமயம் நடக்காது. வெற்றி தோல்விகள், சரிவுகள் சீர் குலைவுகள் எல்லாம் வாழ்க்கையில் சகஜம் என்று நினைத்து அடுத்த வேலையைப் பார்ப்பவர்கள்தான் மன உறுதி மிக்கவர்கள்.

இனி அவ்வளவுதான் என்று உடைந்து நொறுங்கிப் போகாமல், தேவையற்ற மன அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு மனப்பக்குவத்துடன் இருப்பவர்கள் அவர்கள். தைரியமான முடிவுகளை எடுக்கும் அவர்கள் எல்லா சூழ்நிலைகளையும் புரிந்து அதற்கேற்றவாறு மனத்தை தயார் நிலையில் வைத்திருப்பார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT