சிறப்புக் கட்டுரைகள்

இன்றைய தேதிக்கு அதிக சம்பாதனை தரக்கூடிய வேலைவாய்ப்பு எது?

KV வீ.சண்முகம

இன்றைய தேதிக்கு அதிகம் சம்பாதனை தரக்கூடிய அருமையான வேலைவாய்ப்பாக மாறி வருவது எது தெரியுமா? அது மேடைப்பேச்சு எனும் சுவாரஸியமான விசயமே!. 

உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். எனது மகளது பள்ளியில் கர்நாடக சங்கீதம் கற்றுத் தருகிறார்கள். வருடம் தோறும் சங்கீத மாணவர்கள் தாம் கற்றுக் கொண்டவற்றை வெளிப்படுத்த வருட இறுதியில் ‘கான கலாலயா சங்கீத சங்கமம்’ எனும் தலைப்பில் மெகா ஷோ அரங்கேற்றமும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் இசைத்துறையில் சாதித்த பிரபலங்களை அழைத்து விழாவைச் சிறப்பித்து அவர்களது கைகளால் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவார்கள். கடந்த இரண்டு வருடங்களும் பிரபல பின்னணிப் பாடகிகளான பி.சுசீலா, எல். ஆர் ஈஸ்வரி இருவரும் வந்திருந்து மாணவர்களைச் சிறப்பித்துச் சென்றனர். இருவருமே பாடகிகள் என்பதால் பரிசு வழங்கிய கையோடு தாங்கள் பாடிய பிரபலமான பாடல்கள் எதையாவது ஓரிரு வரிகள் பாடி விட்டுச் செல்வார்கள் என பார்வையாளர்கள் காத்திருக்க இருவருமே பாடவே இல்லை.

இந்த ஆண்டு சன் சிங்கர் புகழ் அனுராதா ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். கடந்த ஆண்டுகளைப் போலவே இவரும் பாடப் போவதில்லை என்று எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி பார்வையாளர்கள் அமர்ந்திருக்க மாணவர்களைப் பற்றியும், விழாவைப் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் பேச அழைத்ததுமே மைக் பிடித்து தனது ஜல்லிக்கட்டு புகழ் பாடலைப் பாடியதோடு மட்டுமல்லாமல் சிறப்பானதொரு உரையையும் அவர் மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார். இதைத் தான் மேடைப்பேச்சில் திறமை என்கிறார்களோ?!

அந்த வகையில் மற்ற இரு விருந்தினர்களை விட ஒரு பாடகியாக மட்டுமல்ல சிறந்த மேடைப்பேச்சாளராகவும் அனுராதா ஸ்ரீராம் பார்வையாளர்களை கவர்ந்து விட்டார்.

இவர் மட்டுமல்ல தமிழில் சிறந்த மேடைப் பேச்சாளர்களாக இன்று பலரை அடையாளம் காட்டலாம். பாரதி பாஸ்கர், பட்டிமன்றம் ராஜா, ஆன்மீகப் பேச்சாளர் சுகி. சிவம், இந்தியாவின் மிகப் பிரபலமான கண் மருத்துவராக இருந்த போதிலும் மேடைப் பேச்சிலும் சிறந்து விழங்கும் டாக்டர் விஜய சங்கர் (மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன்), பேராசிரியர். கு. ஞானசம்பந்தன், இன்னும் மிகப் பலர் இருக்கிறார்கள் மேடைப்பேச்சில் கேட்போர் செவி இனிக்க பேசுவதில் வல்லவர்கள் இவர்கள். மேடைப்பேச்சு என்பது இவர்களுக்கு வெறுமே பொழுது போக்கு அல்ல. அது வருமானம் தரக்கூடிய உபரி வேலைவாய்ப்பாகவும் அமைந்து விடும் போது அதற்கான கெளரவம் கூடிப் போகிறது. 

எனவே வருங்கால தலைமுறையினர் தமது கல்வித் திறமைகளோடு இது போன்ற சிறப்புத் திறன்களையும் வளர்த்து கொள்வது நன்று. 

இப்போது அந்தத் திறனை எப்படி எல்லாம் வளர்த்துக் கொள்ளலாம்? என்பது குறித்துப் பார்க்கலாம்.

ஒருவரது வாழ்க்கைத் தரம் என்பது, அவருடைய தகவல் தொடர்புத்திறன் எப்படி உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டே உள்ளது. பொது இடத்தில், அதாவது மேடைகளில் சிறப்பாகப் பேசும் திறமை இன்று அனைவருக்குமே தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது. 

அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் கூட அங்கு நடைபெறும் கூட்டங்களில் பேச வேண்டியிருக்கிறது. எனவே பலர் உள்ள பொது இடங்களில், மேடைகளில் சிறப்பாகப் பேச விரும்புபவர்கள் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

அறிவுத்திறன்: எதைப் பற்றிப் பேசினாலும் அதைப் பற்றி எதுவும் தெரியாமல் பேச முடியாது. எனவே எதுகுறித்து பேச விரும்புகிறீர்களோ, அதுகுறித்து தெரிந்து கொள்வதற்கு அதிகம் முயற்சிகள் எடுக்க வேண்டும். இதற்காக அந்த விஷயம் குறித்து அறிந்து கொள்ள அதிகம் படிக்க வேண்டும். இப்படிப் படிப்பது உங்களது அறிவுத்திறனையும், புத்திக்கூர்மையையும் மேம்படுத்த உதவும்.

யாரிடம் பேசுகிறோம் என்பதில் தெளிவு: மேடைப் பேச்சாளர் என்ற முறையில், உங்களுடைய பேச்சைக் கேட்க வருபவர்களின் பின்னணி, பணி, அவர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களுக்குத் தேவைப்படும் விஷயங்கள் குறித்து அறிந்து வைத்திருப்பது அவசியம். அப்போதுதான் அவர்கள் விரும்புவது போல, அவர்களுக்குப் புரியும்விதமாக, உங்களது பேச்சை நீங்கள் வடிவமைத்துக் கொள்ள முடியும்.

உணர்ச்சி: உங்களது பேச்சைக் கேட்க வருபவர்கள், நீங்கள் பேசியதைக் கூட மறந்து விடுவார்கள். ஆனால் மேடை பேச்சின்போது நீங்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை மறக்க மாட்டார்கள். எனவே, எந்த தலைப்பு குறித்து நீங்கள் பேசினாலும், அதற்கேற்றாற் போல உணர்ச்சிகரமாகப் பேசும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எளிமையான பேச்சு: நாம் பேசும் பேச்சுகளில் 60 சதவீதம், இலக்கணமில்லா எளிமையான பேச்சுதான். சிறந்த பேச்சாளர் ஒருவர், இலக்கணமில்லா எளிய நடையில் பேசுவதற்கே அதிக முன்னுரிமை கொடுப்பார்கள். மக்களைக் கவரும்விதமாக எளிமையாகப் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். 

நகைச்சுவை: உங்களது மேடை பேச்சானது நகைச்சுவையும், உணர்ச்சிகரமும் நிறைந்ததாக இருந்தால் அதைக் கேட்போர் நிச்சயம் மறக்க மாட்டார்கள் என்பது உறுதி. குறிப்பாக, சிறந்த பேச்சில், மேற்கண்ட 2 அம்சங்களுமே இடம் பெற்றிருக்கும். 

பயிற்சி: பயிற்சிதான் அனைத்து திறமைகளுக்கும் தாய் போன்றது. உங்களது செயல்களில் நீங்கள் எவ்வளவு பயிற்சி எடுத்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவு திறமை கொண்டவர்களாக திகழ்வீர்கள். மேடையில் பேச வேண்டும் என்பதால், கண்ணாடி முன்நின்று, தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் பேசிப் பழக வேண்டும். இதை உங்களது செல்லிடப் பேசியில் உள்ள கேமரா முன்பு இருந்து கூட செய்யலாம். மேடைப் பேச்சு கலை என்பது கற்றுக் கொள்ளக்கூடிய திறமைதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT