சிறப்புக் கட்டுரைகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தை எப்படிக் கொண்டாடலாம்?!

தினமணி

ஜூன் 5-ல் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், சுற்றுச்சூழலைக் காப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து ஒரு நினைவூட்டல் இங்கே.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகையாலும் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஒரு புறம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் கத்தரி வெயிலின் தாக்கமும், திடீரென்று பெய்யும் பேய் மழையும் அதனால் விளையும் பெருவெள்ளமும் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை சூசகமாக உணர்த்துகின்றன.

உலக வெப்பமயமாதல் எனும் பிரச்சனையால் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயரும் என்று சொல்லப்படுகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பஞ்சமும் இந்தியாவின் பல இடங்களில் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து, இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்தித்து செயலாற்றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

சுற்றுச்சூழலைக் காக்க இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் முன்வந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இந்த உலகில் மனிதன் மட்டும்தான் உள்ளானா?! ஏன்… விலங்குகளும் பறவைகளும்தான் உள்ளன. அவைகள் ஏதும் செய்யக்கூடாதா என மனிதர்கள் கேட்பதற்கு நியாயமில்லை! ஏனெனில், மனித இனத்தை தவிர வேறெந்த உயிரினத்தாலும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை!

செய்ய வேண்டியது; செய்யக் கூடாதது!

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்னென்ன எனப் பார்த்தால், அதில் முக்கியமானது குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம்நடுவது. அடுத்தபடியாக, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது. இயற்கை விவசாய முறைகளைக் கையாளுதல்; வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தல் போன்றவற்றை சொல்லலாம்.

தவிர்க்க வேண்டியதென்று பார்த்தால், அத்தியாவசிய தேவைக்குத் தவிர மற்ற நேரங்களில் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது. அதற்குப் பதிலாக மிதிவண்டிகளைப் பயன்படுத்தப் பழகினால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு உடல்நலமும் மேம்படும் வாய்ப்புள்ளது. மேலும், ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் அவசியமானதாகிறது. வீட்டிலிருந்து புறப்படும் முன், மின்சாதன பொருட்களை அணைக்காமல் செல்லுதல் போன்ற சின்னச் சின்ன செயல்களையும் நாம் கவனித்து தவிர்க்கத் தேவையுள்ளது!

மரம் நடுவதன் அவசியம்!

மரங்களின் வெளிமூச்சே மனிதனின் உள்மூச்சாகிறது. நமது பாதி நுரையீரலே மரங்களில்தான் தொங்கிக் கொண்டுள்ளன என சத்குரு அவர்கள் சொல்வதுண்டு.

இறந்தவர்களைப் புதைப்பது நல்லதா அல்லது எரிப்பது நல்லதா என்று ஒருமுறை சத்குரு அவர்களிடம் கேட்டபோது, 'வாழும்போது எப்படி வாழ்கிறோம் என்பதை பொறுத்துதான், நம் நினைவிடங்களுக்கு மரியாதை என்பதை மறக்காதீர்கள். இறந்தவரைப் புதைத்து கான்க்ரீட் கல்லறை எழுப்பி, அந்த இடத்தைச் சொந்தம் கொண்டாடுவதால் என்ன லாபம்?

அதற்குப் பதிலாக அவரைப் புதைத்த இடத்தில் ஒரு மரம் நடுவது என்று முடிவு செய்யுங்கள். ஏக்கர் ஏக்கராக கான்க்ரீட் கல்லறைகள் எழுப்பி பூமியை மொட்டையடிப்பதைவிட, அங்கு ஏக்கர் கணக்கில் மரங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். மாண்டவர் எருவாகி, பச்சை இலைகளாகவும், வண்ணப் பூக்களாகவும் மீண்டும் உயிர் கொள்ளட்டுமே! பின்னால், வரும் சந்ததிகளுக்கு நிழலும், மழையும் கொடுக்கட்டுமே! மாண்டவரே மரமாக நிமிர்ந்து உயிருடன் ஓங்கி வளர்கிறார் என்று உணர்வுப்பூர்வமாக ஒரு திருப்தியும் கிடைக்கும் அல்லவா!' என்று சொல்லி சுற்றுச்சூழலுக்கு மரம் நடுதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார்.

தமிழகத்தின் இந்த வறட்சி நிலையை மாற்றுவதற்காக ஈஷா துவங்கியுள்ள பசுமைக் கரங்கள் திட்டத்தின் பணி மகத்தானது. மரங்களின் தேவையை மக்கள் மனதில் பதிய வைத்தல், மக்களை மரம் நடவும் வளர்க்கவும் ஊக்கப்படுத்துதல், மரங்களைப் பாதுகாத்தல், தமிழ்நாட்டின் பசுமைக் குடையை 10% அதிகரித்தல் என பல்வேறு செயல்பாடுகளில் இறங்கி அதில் வெற்றியும் கண்டுவருகிறது ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம். தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க 12.5 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நட்டு வளர்ப்பது என ஒரு மகத்தான நோக்கத்திற்காக தம்மை அர்ப்பணித்திருக்கிறது.

ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம்! இயற்கையின் பாதைக்கு இந்திய விவசாயிகளைத் திருப்பும் முயற்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு. சுபாஷ் பாலேக்கர் அவர்களின் 8 நாட்கள் பயிற்சி வகுப்பு, ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் தன்னார்வத் தொண்டர்களின் ஏற்பாட்டில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெகு சிறப்பாக நிகழ்ந்தது. பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தொடர்ந்து ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப் பண்ணைகளில் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062

நன்றி - ஈஷா மையம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT