சிறப்புக் கட்டுரைகள்

திருமணத்திற்கு கிஃப்ட் வேண்டாம் ‘ரத்த தானம்’ போதும்! என்று கோரிக்கை வைத்த வித்யாசமான தந்தை!

கார்த்திகா வாசுதேவன்

ஒரு திருமணத்திற்கு செல்கிறோமென்றால், புது மணத் தம்பதிகளுக்கு என்ன கிஃப்ட் வழங்குவது என்று யோசித்தே மண்டை உடையும் பலருக்கு. கிஃப்டுகளைப் பரிந்துரைக்க இப்போது புதுப் புது ஆன்லைன் வெட்டிங் கிஃப்ட் ஐடியா வெப்சைட்டுகள் எல்லாம் கூட வந்து விட்டன. ஆனாலும் பரிசுகள் வழங்க நமக்கு மட்டும் குழப்பங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. எப்போதும் போல ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளச் செல்கையில் மணமக்களுக்கு என்ன கிஃப்ட் வழங்குவது என்பது குறித்தான குழப்பங்களுடன் தான் இன்றும் நம்மில் பலர் வாழ்ந்து வருகிறோம். இப்படியான சமூகத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் திருமண கிஃப்டுகளுக்குப் பதிலாக விருந்தினர்களிடம் வித்யாசமான கோரிக்கை ஒன்றை முன் வைத்து அதில் வெற்றியும் பெற்று நம்மை வியக்க வைக்கிறார் ஒரு தந்தை. அவர் அப்படியென்ன கோரிக்கை வைத்து அதில் வென்றார் என்கிறீர்களா?

ராஜஸ்தானைச் சேர்ந்த ராகேஷ் வைஷ்ணவ் சமீபத்தில் தனது இரு மகன்களான அருண் மற்றும் அல்பேஷ்க்கு திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தார். திருமணத்தில் கலந்து கொள்ள வரும் உறவுகளுக்கு ராகேஷ் வைத்த ஒரே கோரிக்கை ‘ நீங்கள் திருமண அன்பளிப்புகளைப் பொருட்களாக அளிக்க வேண்டாம், விருப்பம் இருந்தால் ரத்த தானம் செய்யுங்கள்’ அதுவே எங்கள் வீட்டுத் திருமணத்திற்கான மிகச் சிறந்த அன்பளிப்பு என வீடு வீடாகச் சென்று தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அறிவித்தார். புதுமையாக இருந்தாலும் ராகேஷின் இந்த முயற்சி நன்றாகவே வொர்க் அவுட் ஆனது. அவரது வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களில் பெரும்பாலானோர் கணிசமாக ரத்த தானம் செய்திருக்கிறார்கள் என்பது தான் அவரது முயற்சிக்கான வெற்றி.

ராகேஷ் தனது இளம் வயதில் விபத்தில் காயமடைந்த தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை சிகிச்சையின் போது போதிய ரத்த தானம் கிடைக்காத காரணத்தால் இழக்க நேர்ந்தது. அந்த வேதனை தான் ரத்த தானம் குறித்த ராகேஷின் விழிப்புணர்வுக்கு அடிப்படையாக அமைந்தது. அன்றிலிருந்து தொடர்ச்சியாக குறிப்பிட்ட இடைவெளிகளில் ரத்த தானம் செய்யக் கூடியவராக மாறிப் போனார் ராகேஷ். இது வரை தான் ஆரோக்கியமாக இருந்தா காலங்களில் எல்லாம் 3 மாதங்களுக்கொரு முறை ராகேஷ் ரத்த தானம் செய்ய மறந்ததில்லை. தானத்தில் சிறந்தது ரத்த தானம் என்ற கொள்கையை கெட்டியாகப் பற்றிக் கொண்டதோடு பிறரிடமும் அந்தக் கொள்கையை பரப்ப ராகேஷ் தவறவில்லை. அதற்கொரு சாம்பிள் தான் அவரது மகன்களின் திருமணம்.

தன் வீட்டுத் திருமணத்தில் ரத்த தான முகாம் நடத்தியதோடு முடிந்து விடவில்லை ராகேஷின் சமூகப் பொறுப்புணர்வு. அவர் ரத்த தானம் செய்வதை மக்களிடையே பரப்புவதற்காக தனியாக சேவை அமைப்பு ஒன்றையும் தொடங்கி மிகுந்த ஈடுபாட்டுடன் அதை நடத்தி வருகிறார். அதன் பெயர் ‘Raktdata Jeevandata Samooh’ 2012 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட இந்த ரத்த தான சேவை அமைப்பின் மூலம் இதுவரை எண்ணற்றோர் பயன் பெற்றுள்ளனர். ராகேஷ் தமது வாழ்நாளில் இது வரை 24 முறை ரத்த தானம் செய்துள்ளார். அதோடு அவர் தனது வீட்டுத் திருமணத்தில் நடத்திய ரத்த தான முகாமிலும் கூட முதல்முறையாக ரத்த தானம் செய்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகமே! அவர்களில் 21 வயது ராகுல் வைஷ்ணவ் முதல் 39 வயது சரோஜ் ஷர்மா வரை பலர் உள்ளனர். திருமண விழாவில் காலையில் மட்டும் 26 யூனிட் ரத்தம் சேகரிப்பட்டிருக்கிறது. மாலையில் இன்னும் ரத்த யூனிட்டுகளின் அளவு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு திருமணத்துக்கு வந்தவர்களிடையே ராகேஷின் நல்லெண்ணத்திற்கு மிகுந்த மரியாதை இருந்திருக்கிறது.

இந்தியாவின் தரமான மருத்துவ சேவையின் மீது நம்பிக்கை வைத்து உலகின் பல பாகங்களில் இருந்தும் நமது இந்தியாவைத் தேடி வந்து குவியும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. அவர்களுக்காக மட்டுமல்ல நமது நாட்டு மக்களிலேயே உரிய நேரத்தில் உரிய வகை ரத்தம் கிடைக்காமல் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படிப்பட்டவர்களை காப்பதற்கு ஏதோ நம்மாலான சிறிய முயற்சியாக இந்த நற்செயலை செய்தால் நல்லது தானே என்கிறார் ராகேஷ்!

அவர் கூறியதிலிருந்து;

எந்த ஒரு ஆரோக்கியமான நபரும் ரத்த தானம் செய்ய பயமும் தயக்கமும் இன்றி முன்வரலாம்; ரத்த தானம் செய்வதால் அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்து விடாது. ரத்த தானம் செய்ய மிகச் சிறிய வரம்புகள் தான் விதிக்கப் பட்டுள்ளன. அவற்றுக்கு உட்பட்டு யார் வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம்.

  • ரத்த தானம் செய்ய விரும்புபவர்களுக்கு ரத்த சேகரிப்பு வங்கிகள் அறிவுறுத்தலின் படி தொற்று நோயோ எளிதில் பரவக் கூடிய நோய்களின் பாதிப்போ இருக்கக் கூடாது.
  • ரத்த தானம் செய்ய விரும்புபவர்களுக்கான வயது வரம்பு 18 லிருந்து 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • உடல் எடை குறைந்த பட்சம் 50 கிலோ இருக்க வேண்டும்.
  • தானமளிக்க விரும்புபவர்களின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் ரத்த அணுக்களின் எண்ணிக்கை ரத்த வங்கிகள் விதித்த குறைந்த பட்ச வரையறை அளவுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
  • ஒரு முறை ரத்த தானம் செய்தவர்கள் அடுத்த முறை தானம் செய்ய மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். மூன்று மாத இடைவெளிக்குள் மீண்டும் தானம் வழங்க அனுமதி இல்லை.

ராகேஷ் வீட்டுத் திருமணத்தில் அவருக்கு நேர்ந்ததும் இது தான். ஒரு மாதம் முன்பு தான் ராகேஷ் ரத்த தானம் செய்திருந்தார் என்பதால் தனது மகன்களின் திருமண வைபத்தில் ராகேஷால் ரத்த தானம் செய்ய முடியவில்லை. அதனால் என்ன? அவர் சார்பாகத் தானே திருமணத்திற்கு வந்த அத்தனை உறவுகளும், நட்பும் ரத்த தானம் செய்தார்கள் என்கிறீர்களா? அதுவும் சரிதான். இது ராஜஸ்தானில் நடந்த நற்காரியம். இதே போல தென்னிந்தியர்களான நமது வீட்டுத் திருமணங்களிலும் சொல்லிக் கொள்ள சிறப்பாக இதைப் போல எதையாவது செய்து வைத்தால் உலகம் விழிப்புணர்வு பெறும் தானே!

Image courtsy: Google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT