சிறப்புக் கட்டுரைகள்

இந்த குணங்கள் எல்லாம் உங்களுக்கு உள்ளதா? சர்வ நிச்சயமாக நீங்கள் ஒரு இன்ட்ரோவர்ட்தான்!

வி. உமா


நேஹா வெளியே போய் விளையாடு என்று அப்போது சிறுமியாக இருந்த மகளிடம் சொல்வேன். அவள் பெயர் சினேகா. நேஹா என்றும் அவளை அழைப்பேன். பழகுபவர்களுடன் சினேகமாக அவள் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருந்தேன். 'இல்லம்மா வீட்டிலேயே விளையாடறேன்' என்பாள். கணினியில் ஏதாவது கேம் விளையாடுவாள். அல்லது சுடோகு போட்டுக் கொண்டிருப்பாள். வெளியே குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கும் போது இவள் ஏன் கூட்டுக்குள் ஒடுங்கிக் கிடக்கிறாள் என்று நினைப்பேன். அவளை மாற்றமுடியவில்லை. நானும் பெரிதாக முயற்சிக்கவில்லை.

புத்தகங்கள், தனக்குரிய சிறிய நட்பு வட்டம், செய்தித் தாள், ட்ராயிங், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று அவள் வாழ்க்கை சந்தோஷமாகத் தான் போய்க் கொண்டிருந்தது. எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டாள் ஆனால் உணர்ச்சிப் பிடியில் சிக்கிவிட்டால் அதீதம் தான். கோபம், அழுகை வந்தால் என்னால் எளிதில் சமாதானப்படுத்த முடியாது. சிரிக்கத் தொடங்கினால் என்றாலும் அப்படித்தான் பேய்ச்சிரிப்பு.  டைரி எழுதுவாள், நிறைய புத்தகங்கள் படிப்பாள், பொதுவாக அமைதியானவள், அரட்டை ஊர் சுற்றல் கிடையாது இந்த உலகத்தை நாளை எப்படி எதிர்கொள்வாள், இப்படி வித்யாசமான குண இயல்புகளுடன் இருக்கிறாளே என்று கவுன்சிலிங் அழைத்துச் செல்லலாமா என்று நினைத்தேன். ஆனால் அவள் ஆரோக்கியமான மனநிலையிலும் தெளிவான சிந்தனையோட்டத்துடனே தான் இருந்தாள் என்பதும் எனக்குத் தெரியும். 

தற்போது அவள் விரும்பிய துறையைக் கல்லூரியில் தேர்ந்தெடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறாள். நீ சந்தோஷமாக இருக்கிறாயா மகளே என்று கேட்டால், ரொம்பவே என்பாள். கூடுதலாக என்னுடைய சந்தோஷத்துக்கு இன்னொருத்தர் எதற்கு என்றும் கூறுவாள். எது அவளுடைய சந்தோஷம் என்றால் தானாக இருப்பது. தன்னில் நிறைவை அடைவது. அவ்வளவு தான். அவளது சமீபத்திய பிறந்த நாளுக்கு Quiet என்ற புத்தகத்தைப் பரிசளித்தேன். அதில் அவள் இயல்புகளை ஒத்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்ற உண்மையை நானும் தெரிந்து கொண்டேன். 

தன்னைத்தானே ஒரு கூட்டுக்குள் சுருக்கிக் கொள்ளும் இயல்புடையவர்களை இன்ட்ரோவர்ட் (introvert) மனோபாவம் உடையவர்கள் எனலாம். அவர்களின் குணங்களின் தன்மையை புரிந்துணர்ந்து, குடும்பமும் அவரைச் சுற்றியுள்ள நட்பு வட்டமும் போஷித்தால் இத்தகைய மனோபாவம் உடையவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். அவர்களிடம் பேசுகையில், 'நீ இன்ட்ரோவர்ட்’ என்று சொல்லாதீர்கள். அவர்களது இயல்புகளை மட்டம் தட்டிப் பேச வேண்டாம். அவர்கள் hyper sensitive-வாகவும் இருப்பதால் எளிதில் மனக்காயம் அடைந்து விடுவார்கள். எனவே இவர்களை ஒரு சட்டகத்துக்குள் அடைப்புகுறியிட்டு அழைக்கும் சொற்கள் வேண்டாம். 

கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில குணங்கள் உள்ளவர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருந்தால் அவர்கள் இன்ட்ரோவர்ட். ஏன் நீங்கள் கூட ஒரு இன்ட்ரோவர்டாக இருக்கலாம். 

  • நீங்கள் தனிமை விரும்பியா? கூட்டமும் நெரிசலும் உங்களுக்கு ஒவ்வாமைத் தருகிறதா? 
  • பள்ளி கல்லூரி அல்லது எதாவது கூட்டத்தில் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் எழுந்து நின்று பேசுவதில் தயக்கம் காட்டுகிறீர்களா?
  • கூச்ச சுபாவம் உடையவர்கள் என்று மற்றவர்களால் முத்திரை குத்தப்பட்டிருக்கிறீர்களா?
  • இயற்கையை நேசிப்பவரா? அருவி, ரயில், ஆறு, மழை, மலைப்பாதை, மரங்கள், மென் காற்று, பூக்கள், புல், அமைதியான பிரதேசம், பனிப்பொழிவு இவையெல்லாம் உங்களுக்கு மிகவும் பிடிக்குமா?
  • தேவையற்ற சர்ச்சைகள், அர்த்தமற்ற அரட்டைகள் பிடிப்பதில்லையா? 
  • உங்களுடன் உரையாடுபவர் நீளமாக எதோ கதை அளந்து கொண்டிருக்கையில் நீங்கள் வேறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிடுகிறீர்களா? 
  • மைதானத்துக்குச் சென்று விளையாட்டுகளில் ஆர்வம் இருப்பதில்லையா? 
  • உடனடியாக ஒரு முடிவை எடுப்பதில் தயக்கம் காட்டுகிறீர்களா?
  • எப்போதோ செய்த தவறை இன்னும் மனதுக்குள் நினைத்து வருத்தம் அடைகிறீர்களா?
  • ஒரு பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், நல்லதோ தீயதோ எத்தனை நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்கள் சொல்லியும் கேட்காமல் அப்பழக்கத்தினை தொடர்கிறீர்களா? 
  • மற்றவர்களைப் போல இல்லையே என்று சில சமயம் தாழ்வுணர்வை அடைகிறீர்களா? அந்த தாழ்வுணர்விலிருந்து விடுபட கற்பனை உலகத்துக்குள் அடிக்கடி தொலைந்து போகிறீர்களா?
  • சட்டென்று கோபம் ஏற்பட்டு யார் என்ன பேசினாலும் அது உங்களுக்கு உரைக்காது. மேலும் கோபத்தை அதிகரிக்குமா? அதே சமயம் தானாகவே சிறிது நேரம் கழித்து அடங்கிவிடுமா?
  • உலகமே வேகமாக எதை நோக்கியோ ஓடிக் கொண்டிருக்க, நீங்கள் நிதானமாக, அழகாக ஒரு நாளினை எதிர் கொள்கிறீர்களா?
  • ரொட்டீன்கள் எனப்படும் அன்றாடம் ஒரே ரீதியான செயல்களைச் செய்வதில் விருப்பமற்றவரா?
  • ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதிலிருந்து உங்களை மாற்ற கடவுளால் கூட முடியாது யார் வற்புறுத்தினாலும் மாற மாட்டீர்களா?

இந்த விஷயங்கள் எல்லாம் உங்கள் மனத்துக்கு நெருக்கமானவையா? 

  • அறிவார்த்தமான உரையாடல்களை நேர்ப்பேச்சில் கண்களைப் பார்த்தபடி காபி குடித்தபடி அல்லது ரிலாக்ஸ்டாக ஓரிடத்தில் அமர்ந்து உங்கள் கருத்துக்களையும் பார்வைகளையும் உரையாடல்களில் நீங்கள் வெளிப்படுத்த விரும்புவீர்கள்.
  • இசை அல்லது ஓவியத்தில் தீவிர விருப்பம் உடையவர்களாக இருப்பீர்கள்.
  • ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அதை உங்கள் பாணியில், பிரத்யேகமாக, தனித்துவத்துடன் செய்து முடிப்பீர்கள். 
  • உங்களால் மற்றவர்களிடம் சுலபத்தில் வெளிப்படுத்த முடியாத விஷயங்களை டைரியில் அல்லது கணினியில் எழுதி வைப்பீர்கள். அல்லது மனத்துக்குள் பேசிக் கொள்வீர்கள். அதுவும் இல்லையெனில் அம்மா அல்லது மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்வீர்கள்.
  • மற்றவர்கள் தவறு செய்யும் போது அதை உடனடியாக எதிர்த்து நின்று தட்டிக் கேட்க விரும்பினாலும் அப்படிச் செய்ய மாட்டீர்கள். உங்கள் கோபம் ஆற்றாமையில் வெளிப்படும். இப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோமே என்று மனிதர்களின் சிறுமையை நினைத்து வருத்தப்படுவீர்கள்.
  • கிரியேட்டிவான விஷயங்களைச் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உடலுடன் மனம் ஒருங்கிணைந்து செய்யும் செயல்களைச் செய்து முடிப்பதில் விற்பன்னர்கள் நீங்கள். பெரும்பாலும் கதை, கவிதை, ஓவியம் போன்ற கலைத் துறைகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகமிருக்கும். உங்களின் வெளிப்படுத்தப்படாத உணர்வுகளுக்கு அதுவொரு வடிகாலாக இருக்கும்.
  • தீவிரமாக யோசித்தபின்னர் தான் உங்கள் முடிவுகள் இருக்கும். மேலும் ஒரு விஷயத்தில் உங்களது கோணத்தை எளிதில் மாற்றமுடியாது. 
  • ஒருவர் வேண்டாம் என்று முடிவு செய்து உங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்கி வைத்துவிட்டால் உயிரே போனாலும் அவர்களிடம் மறுபடியும் பேச மாட்டீர்கள்.
  • ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் நீங்கள் மற்றவர்களிடம் சரளமாக உரையாடுவீர்கள் ஆனால் உங்களை வாதத்துக்கு இழுப்பது கடினம். லைக்குகள் கமெண்டுகள் எல்லாம் உங்கள் இலக்கு கிடையாது. உங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு களமாக மட்டுமே சோஷியல் மீடியா இருக்கும்.
  • மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய செயல்களை செய்வதை அதிகம் விரும்புவீர்கள். சாகஸப் பிரியர்களாகவும் இருப்பீர்கள். 
  • செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். 
  • தீவிரமான சிந்தனையாளர்களான உங்களை மற்றவர்கள் பாராட்டினால் பிடிக்காது. அல்லது உங்களது செயல்களுக்குக் கிடைக்கும் பாராட்டுகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். அவற்றை புறந்தள்ளிவிட்டு உங்கள் வேலையில் மட்டும் கவனத்தை செலுத்துவீர்கள்.

இதுமட்டுமல்ல இன்னும் பல பிரத்யேக குணநலன்கள் அவர்களுக்கு உண்டு. Timid, Reserved, Loner, Introvert என்றெல்லாம் அழைக்கப்படும் அவர்களது இயல்பினை புரிந்து கொண்டு அதற்கேற்ப பழகினால் மட்டுமே அவர்களின் நட்பு வட்டத்தில் இருக்க முடியும். உலகப் புகழ்ப் பெற்றாலும் அவர்கள் தங்கள் கூட்டுக்குச் சென்று அங்கு நிம்மதியாக இருப்பதையே பெரிதும் விரும்புவார்கள்.

சமகாலத்தில் நம்முடன் செலிப்ரிடியாக இருக்கும் இவர்கள் எல்லாம் இன்ட்ரோவர்ட்டுகள் என்றால் நம்ப முடிகிறதா? ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, எம்மா வாட்சன், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, உலகையே உலுக்கியே மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக்கை கண்டுபிடித்த மார்க் ஜுகர்பர்க், ஹாரி பாட்டரை உருவாக்கிய ஜே.கே.ரவுலிங், பாலிவுட் நடிகர், அமீர் கான், நடிகை  தீபிகா படுகோன், கிரிக்கெட் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் 'தளபதி’ விஜய் ஆகியோர் ஒருசில உதாரணங்கள்.

‘எந்தத் திறனையும் இது உயர்வு அது தாழ்வு எனப் பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது. பன்முக அறிவுத் திறன்கள் அத்தனையும் தன்னளவில் சமமானவையே’ என்கிறார் உளவியல் அறிஞர் கார்டனர். மேலும் அவர் கூறுகையில், இண்ட்ரோவெர்டாக இருப்பவர்கள் சிலர் தன்னிலை அறியும் திறன் உள்ளவர்களாக (Intrapersonal Intelligence) கருதப்படுகிறார்கள். மாற்றத்துக்காக காத்திருக்காமல் மாற்றமாகி வாழ்பவர்களே தன்னிலை அறியும் திறனாளிகள். ஆனால் இந்த இரண்டு தன்மைகளும் வெவ்வேறு. இதனை கார்டனர் தமது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். 

தன்னை அறியும் திறன் கொண்டவர்கள் தன்னைப் பற்றிய ஆழமான புரிதல் உடையவர்கள். தன்னைப் போல பிற உயிர்களை நேசிப்பார்கள். Empathy அவர்களின் குணநலனில் முக்கியமான கூறாகும். அதன்படியே அவர்களின் வாழ்க்கை அன்பும், ஆன்மிகமும், அமைதியும் பேரானந்தமும் கூடி தன்னிறைவாய் இருக்கும். நிதானமும் அமைதியும் அவர்களுடைய இயல்புகள். ஆனால் மற்றவர்களுடன்பழகத் தெரியாதவர்கள் அல்ல. தன் பாதையைக் கண்டறிய முடியாதவர் எவர் ஒருவரும் பிறருக்கும் வழிகாட்ட முடியாது எனக் கூறுகிறார் கார்டனர்.  கூட்டுக்குள் ஒடுங்கி தன்னைப் பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவர் அதனினின்று உயர்ந்து தன்னிலை அறியும் திறனை அடைவதற்கு மற்றவர்களைவிட அதிக வாய்ப்புக்களைப் பெறுகிறார்கள் என்பதும் உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT