இன்று ஏப்ரல் 1. முட்டாள்கள் தினமாம். காதலர் தினம், மகளிர் தினத்துக்குப் பிறகு புகழ் பெற்ற தினம் சர்வதேச முட்டாள்கள் தினம் தான்.
பள்ளிக் காலத்தில் ஒருவரை ஒருவர் விளையாட்டாக ஏமாற்றி ஏப்ரல் ஃபூல் என்று சொல்லி அவரை முட்டாளாக்கி மகிழ்வோம். இன்னும் சிலர் இங்க் தெளித்து ஏப்ரல் ப்ளூவாக மாறச் செய்வார்கள். என்ன பொய் சொல்லலாம் என்ற முன் தயாரிப்புடன் இருக்கும் அதே நேரத்தில் நம் மீது யாரும் குறி வைத்துவிடக் கூடாது என ஏக கவனமாக இருப்போம்.
ஆனால் வளர்ந்த பின்னர் இவை சாரமற்றுப் போய்விட்டன. ஒருவரை நாம் ஏமாற்றினால் நம்மை இன்னொருவர் ஏமாற்றுவார்கள் என்று வாழ்க்கை சில பல பாடங்களை அழுத்தமாகச் சொல்லிக் கொடுப்பதால் இதுபோன்ற சிறு பிள்ளைகளின் விளையாட்டுத் தனங்களில் பெரும்பாலனவர்கள் ஈடுபவடுவதில்லை. ஆனாலும் குழந்தை மனம் கொண்ட சிலர் ஏப்ரல் ஃபூல் செய்வதை இன்னும் கடைபிடித்து வருகிறார்கள்.
முன்னொரு காலத்தில் பண்டைய ரோமானியர்கள் ஏப்ரல் முதல் தேதியைத் தான் புத்தாண்டாகக் கொண்டாடினார்களாம். அதன் பின் அதனை மாற்றிவர் க்ரகோரி என்பவர்தான். இவர் போப் ஆண்டவராக இருந்த சமயத்தில் அறிமுகப்படுத்திய அந்தப் புதிய காலண்டரில் ஜனவரி 1-ம் தேதியே புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வரத் தொடங்கியது. உலகின் சில இடங்களில் இந்தப் புதிய காலண்டர் சென்றடையாமல் இருந்ததால், அங்கு ஏப்ரல் 1-தேதியே புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது. இதனைப் பார்த்த மற்ற நாடுகள் அவர்களை முட்டாள்கள் எனக் கேலி செய்யவே அந்த நாள் முட்டாள் தினமாக அனுசரிக்கப் படத் தொடங்கியது.
முட்டாள் தினம் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான கதையையும் படிக்க நேரந்தது. முந்தைய கதையை விட தற்போதைய நிலைக்கு இந்தக் கதையே சாலப் பொருத்தம். கதை இது தான். பண்டைய ரோமானிய அரசரான கான்ஸ்டன்டைன் என்பவரது ஆட்சி கடும் பிரச்னைகளுக்கும், பலத்த சர்ச்சைகளுக்கும் இடையே நடந்து வந்தது. அவசர காலத்தை சமாளிக்க தனது அரசவைக் கோமாளி கூகல் என்பவரை ஒரு நாள் மன்னராக (முதல்வன் படத்தின் கரு இதுதான்) இருக்கும்படி அறிவுறுத்தினாராம்.
கோமாளி என்று சொல்லப்படும் விதூஷகர்கள் மிகவும் புத்தி சாதுர்யம் வாய்ந்தவர்கள். ஆனால் முட்டாள்கள் என்றே மக்களால் அழைக்கப்படுவார்கள். அத்தகைய கோமாளிகள் ஆட்சி செய்த அந்த ஒரு நாளைத்தான் முட்டாள்கள் தினம் என்று ரோமானியர்கள் கொண்டாடத் தொடங்கி அது உலகம் முழுவதும் பரவியது என்கின்றனர் கதை சொல்லிகள்.
இன்னும் சில புனைவுக் கதைகள் இருந்தாலும், ஏப்ரல் ஒன்று மட்டுமல்ல வருடம் தோறும் வாழ்நாள் தோறும் நம்மை முட்டாளாக உணரச் செய்யும் ஆற்றல் ஆளும் வர்க்கத்தினருக்கு மட்டுமே உள்ளது என்பது வரலாறு தாண்டிய உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.