சிறப்புக் கட்டுரைகள்

நேருவுக்குப் பின் பெரும்பான்மை இந்தியர்கள் ரசித்த இன்னொரு பிரதமர் வாஜ்பாய்!

RKV

1924 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். வாஜ்பாயின் தந்தை பள்ளி ஆசிரியர், கவிஞர். குவாலியர் பள்ளியில் பயின்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

விக்டோரியா கல்லூரியில் சமஸ்கிருதம், இந்தியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கான்பூர் டிஏவி கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். சட்டப் படிப்பில் சேர்ந்தவர், அதை பாதியில் விட்டுவிட்டு, 1939-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முழுநேர பிரச்சாரகராகச் சேர்ந்தார்.

பாஞ்சஜன்யா’ என்ற இந்தி வார இதழ், ‘ராஷ்டிரதர்மா’ என்ற இந்தி மாத இதழ், ‘அர்ஜுன்’, ‘ஸ்வதேஷ்’ நாளேடுகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஷியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கிய ‘பாரதிய ஜனசங்க’ கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகச் செயல்பட்டார்.

நாட்டின் விடுதலைக்குப் பிறகு நடந்த 2 வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பாரதிய ஜனசங்கத்தின் மக்களவைக் கட்சித் தலைவராக 1957 முதல் 1977 வரை இருந்தார். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, குஜராத் மாநிலங்களில் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வென்றவர்.

பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் 1977-ல் வெளியுறவுத்துறை அமைச்சராக அங்கம் வகித்தார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக 1980 முதல் 6 ஆண்டுகாலம் இருந்தார். இந்தியப் பிரதமராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சியில், பொக்ரானில் 5 அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டவர். இவரது ஆட்சிக்காலத்தில், டெல்லி - லாகூர் இடையே பஸ் போக்குவரத்துடன், பாகிஸ்தானுடனான அமைதிக்கான நம்பிக்கையும் துளிர்விட்டது. சுதந்திர இந்தியாவில், காங்கிரஸ் தவிர்த்து முதல்முறையாக 5 ஆண்டுகள் பதவியில் நீடித்தது இவரது அரசு மட்டுமே.

மக்களவை உறுப்பினராக 9 முறை, மாநிலங்களவை உறுப்பினராக 2 முறை பதவியேற்றவர். ஏறக்குறைய 50 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்ற விவாதங்களில் இவரது ஆழமான கருத்துகளும், அவற்றை இவர் வெளியிடும் பாங்கும் மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்பட்டன.

இவரது ஆட்சிக் காலத்தில் தனியார் துறை மற்றும் அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள், தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

பல நூல்கள், கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார். 1992-ல் பத்மவிபூஷன் விருது பெற்றார். கான்பூர் பல்கலைக்கழகம் இவருக்கு தத்துவத்துக்கான டாக்டர் பட்டம் வழங்கியது. சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது, லோகமான்ய திலகர் விருது, கோவிந்த வல்லப் பந்த் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். நாட்டின் மிக உயரிய ‘பாரத் ரத்னா’ விருது கடந்த ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.

இயற்கையை நேசிப்பவர், சிறந்த எழுத்தாளர், வசீகரமான பேச்சாளர், கவிஞர், கட்சி வேறுபாடின்றி அனைவராலும் விரும்பப்படும் ஆளுமையாகப் புகழ் பெற்றவர். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால். அரசியல், சமூக செயல்பாடுகளில் இருந்து விலகி ஓய்வில் இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று தமது 95 வது வயதில் உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்று காலமானார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் தீவிரமாய் வாள் சுழற்றிக் கொண்டிருந்த பரபரப்பான அரசியல் தலைவராக இருந்த காலத்திலும் இந்தியில் கவிதை எழுதுவதை எப்போதும் விட்டாரில்லை வாஜ்பாய். அவரது அரசியல் சாதனைகளுக்காக எந்த அளவுக்கு போற்றப்பட்டாரோ, மாற்றுக் கட்சித் தலைவரகளால் எந்த அளவுக்குப் பாராட்டப் பட்டாரோ அதே அளவுக்கு வாஜ்பாய் தனது இந்தி கவிதைகளுக்காகவும் பெரிதும் பாராட்டப்பட்டார். அதிலொன்று இங்கே; 

பனிப்புஷ்பங்கள்

பச்சைப் பசும்புல்லில் 
பனித்துளிகள்,
இதோ இருந்தன
இப்போது இல்லை,
எப்போதும் நம்முடன்வரும்
இனிமைச் சுகங்கள்
என்றும் இருந்ததில்லை
எங்கும் இல்லை 

பனிக்கால கர்ப்பத்தினின்று
கிளம்பி வரும் குழவிச்சூரியன்,
கிழக்கின் மடியில் 
தவழத்தொடங்கும் போது
என் தோட்டத்தில் 
ஒவ்வொரு இலையிலும்
பொன்னௌளி சுடர்விடுகிறது

முளைத்தோங்கும் சூரியனை
எதிர்கொண்டு கும்பிடுவேனா, 
கதிர்வீச்சில் கொலைந்துபோன
பனித்துளியை தேடுவேனா?
சூரியன் ஒரு நிதர்சனம்.
அவனை இல்லை என முடியாது
ஆனால் பனித்துளியும் 
ஒரு சத்தியம் தானே

கணநேர சத்தியம்
என்பது வேறு விஷயம்.
அந்த கணங்களை நுகரவே
நான் ஏன் வாழக்கூடாது
கனத்திற்குக் கணம்
ஒவ்வொரு  துளியிலும்
பரந்து கிடக்கும்
சௌந்தர்யங்களை
ஏன் பருகக்கூடாது?

சூரியன் மீண்டும் எழுவான்
வெய்யிலோ மீண்டும் தோன்றும்
ஆனால் என் தோட்டத்துப்
பச்சைப் பசும்புல்லில் 
பனித்துளிகள்,
எல்லாப்பருவங்களிலும் 
காண இயலாது

-அடல் பிகாரி வாஜ்பாய் (தமிழில் வாமனன்)

தீராத அரசியல் போராட்டங்களின் இடையேயும் இப்படி இயற்கையோடு ஒன்றிப் போய் கவிதை எழுத ஒரு கலாபூர்வமான ரசனை வேண்டும். அது வாஜ்பாயிடம் இருந்தது. இந்திய அரசியல் தலைமைகளில் இப்படிப் பட்டவர்களைக் காண்பது அரிதினும் அரிது.

வாஜ்பாயின் பதவிக் காலத்தில் இந்தியர் அனைவராலும் நினைவுகூரத்தக்க விஷயங்களாகச் சொல்லிக் கொள்ள எப்போதுமிருப்பவை சில;

கார்கில் வெற்றி
பொக்ரான் அணுகுண்டுச் சோதனை வெற்றி
இந்தியா முழுவதையும் தங்கநாற்கரச் சாலைகளால் இணைத்த தொலைநோக்கு மனப்பான்மை
பாகிஸ்தானுடன் தோழமை கொள்ள நினைத்த நம்பிக்கை யுக்தி.
லாகூர் டெல்லி இடையே பஸ் போக்குவரத்து இப்படிச் சில சந்தர்பங்களை இந்தியர் எவராலும் மறக்கவியலாது.

இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து பண்டித ஜவஹர்லால் நேரு முதல் இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, ஐ.கே.குஜ்ரால், சந்திர சேகர், வி பி சிங், ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங், நரேந்திர மோடி எனப் பல பிரதம மந்திரிகளை இந்தியா கண்டிருக்கிறது. ஆயினும் பண்டித ஜவஹர்லால் நேருவை அடுத்து அனைத்து மக்களின் ஆதரவும் பெற்று கட்சி பேதமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட ரசிக்கப்பட்ட பிரதமர் எனில் அது வாஜ்பாயாகத் தான் இருக்கக் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT