சிறப்புக் கட்டுரைகள்

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியா? இல்லை, எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த வெற்றியே!

வாணிஸ்ரீ சிவகுமார்

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகளும், எதிராக 325 வாக்குகளும் பதிவாகின.

இது செய்தி.. 


நம்பிக்கையில்லா தீர்மானம் என்பதை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தால், அதன் மீது உறுப்பினர்கள் வாக்களித்து ஆட்சியை வெற்றி பெறச் செய்வார்கள் அல்லது தோல்வியடையச் செய்வார்கள். அவ்வளவே.

ஆனால் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது அதை மட்டும்தான் செய்கிறதா? இல்லை.. அதன் பின்னணியில் ஏராளமான அரசியல் மட்டுமல்லாமல் சித்து விளையாட்டுகளும் அரங்கேறும் என்பதை பொதுமக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

ஒரு வேளை நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றிருந்தால், ஆளும் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை. இன்னும் ஒரு ஆண்டு காலத்தில் சந்திக்க வேண்டிய தேர்தலை உடனடியாக சந்திக்கும். அவ்வளவே. ஆனால் அப்படி நடக்கவில்லை. மத்திய அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி கிடைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. 

மத்திய அரசும், மக்களவையில் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இருக்கிறது என்பதை நன்கு அறிந்தே இருந்தது. அதனால்தான் மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதாக சாபாநாயகர் அறிவித்து இரண்டு நாட்களில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் பாஜகவும், பாஜக தலைவர்களும் சொல்வது போல எதிர்க்கட்சிகளுக்கு எந்த தோல்வியும் இல்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து. ஏன் என்றால், நேற்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது குறிப்பிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பேச்சுக்கள் அவ்வாறாக அமைந்திருந்தன.

அதாவது, இந்தியாவின் எந்த மூலையில் வேண்டுமானாலும் பிரதமர் மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் ராகுல் காந்தியால் விமரிசனங்களை முன் வைக்க முடியும். ஆனால் அது ஒரு 3 பத்தி அல்லது 4 பத்தி செய்தி அவ்வளவே. ஆனால், இன்னும் ஒரு ஆண்டு காலத்துக்குள் மக்களவைத் தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் ஒரு விவாதத்தை நடத்தி அதில் எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான, வலிமையான குற்றச்சாட்டுகளை எடுத்து வைக்க ஒரு நல் வாய்ப்பாகவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அமைந்திருந்தது.

அதிலும், மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தின் போது ராகுல் பேசிய பேச்சு நிச்சயம் அவரது அரசியல் பேச்சுக்களிலேயே ஒரு உரைக்கல்லாக அமைந்திருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் அவர் பேசிய எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில் இந்த பேச்சு காரசாரமாகவும், ஒவ்வொரு குற்றச்சாட்டுகளையும் ஆணித்தரமாக எடுத்து வைத்த விதமும் நிச்சயம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திச் சென்றது.

குறிப்பாக, 

  • ரஃபேல் தொடர்பான ஒப்பந்தங்கள் அனைத்தும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு பதிலாக, ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கு வழங்கப்பட்டது ஏன்? 
  • பிரதமருக்கும், நமது நாட்டில் உள்ள சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். 
  • பிரதமர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவும், தனது கட்சியை வளர்த்துக் கொள்ளவும் யாரிடம் இருந்தெல்லாம் நிதி பெறுகிறார் என்பதும் நாட்டு மக்களுக்குத் தெரியும். 
  • ரஃபேல் ஒப்பந்தத்தால் பிரதமருக்கு வேண்டிய தொழிலதிபர் ஒருவர் ரூ.45,000 கோடி ஆதாயம் அடைந்துள்ளார். 
  • பிரதமர் மோடி எனது கண்களை நேரடியாக சந்திக்க முடியவில்லை. அவர் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறார். ஊழலைத் தடுக்கும் பாதுகாவலராக மோடி செயல்படவில்லை. அதனை ஒருங்கிணைப்பவராகவே உள்ளார்.
  • தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சத்தை செலுத்துவதாக பிரதமர் மோடி தேர்தலின்போது வாக்குறுதியளித்தார். இதுதான் அவர்களது போலி அரசியல் தந்திரத்தில் முதன்மையானது. 

போன்ற பேச்சுக்கள் நிச்சயம் அரசியல் வட்டாரத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதை பாஜகவினரும் தயக்கத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு மாநிலக் கட்சி மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அதனை ஏற்று விவாதம் நடந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருப்பதே எதிர்க்கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகவும் பார்க்க முடிகிறது. அதில்லாமல் மாநிலக் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.

இந்த வகையில், இதனை வெறும் நாடகம் என்றோ, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய அரசுக்கு வெற்றி என்றோ வெறும் கண்களால் மட்டும் பார்த்தால் அது சரியாக வராது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த நல் வாய்ப்பு என்றும், அதனை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும், இது மக்களுக்கு சீரான முறையில் கொண்டு சேர்க்கும் பணியை ஊடகங்கள் செய்திருக்கின்றன என்றும் பூதக் கண்ணாடியால் பார்த்தால்தான் தெரியும் வெற்றியும் தோல்வியும்..

கூட்டிக் கழித்தப் பாருங்கள் கணக்கு சரியாக வரும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நவீன சிகிச்சை

மூலைக்கரைப்பட்டியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நிறுவன தினம்...

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உரக் கடை உரிமையாளா் மரணம்

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

SCROLL FOR NEXT