சிறப்புக் கட்டுரைகள்

அடிமைத்தனத்தின் விலங்குகள்

ரோனி ஜேக்கப்

தங்களது முதலாளியின் கொடூரப் பிடிகளின் கீழ் தனது குடும்பத்தினர் அனுபவித்த மிக மோசமான, அடக்குமுறை அனுபவங்களை 10 வயதே நிரம்பிய அந்த 'சல்லாங்’ சிறுமி வர்ணிக்கும்போதே, அடக்க முடியாமல் வெளிப்பட்ட மெல்லிய அழுகையும், புலம்பலும் அந்த குளிர் நிரம்பிய அறையில் பரவியபோது, ஒருவித மயான அமைதி அங்கே நிலவத் தொடங்கியது. சுதந்திரமடைந்து, 75 ஆண்டுகள் என்ற மைல்கல்லை நோக்கி நாம் நெருங்கிக் கொண்டிருக்கிற தருணத்தில், இந்தியாவில் இன்னும் ஒடுக்குமுறை மற்றும் அடிமைத்தனத்தின் சங்கிலிகளின் கீழ் பிணைக்கப்பட்டு குடும்பங்களும், சமூகங்களும் இருந்து வரும் அவலம் நகைமுரணானதுதான்.

இந்த நவீன யுகத்தில் அடிமைத்தனம் என்பது, பெரும்பாலான நேரங்களில் கண்ணுக்குப் புலப்படுகிற நிலையிலேயே மறைக்கப்பட்டுள்ளது; கட்டாயத் தொழிலாளர்களாக, விலைமாதர்களாக பயன்படுத்தப்படுவதற்கு அல்லது அவர்களது உடல் உறுப்புகளை அகற்றி விற்பதற்காகவும் கூட மனிதர்கள் பல்வேறு வழிமுறைகளில் ஏமாற்றப்பட்டு, நயவஞ்சகமாக கடத்தப்படுகின்றனர் அல்லது மனித வணிகத்திற்காக விற்கப்படுகின்றனர். அடிமைத்தனத்தின் அம்சங்கள் இருக்கின்றனவா என்று நீங்கள் மிக கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாலொழிய ஒரு தொழிலகத்தில் அல்லது ஒரு சுரங்கத்தில் அல்லது  ஒரு விவசாயத் தோட்டத்தில் அல்லது ஒரு வீட்டில் ஒரு நபர் வழக்கமாக பணி செய்வதைப் போலவே தோன்றக் கூடும்; ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானதாக இருக்கக் கூடும்.

2018, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான அருணாச்சல் பிரதேசத்திற்கு திரு. ரெனி ஜேக்கப் மற்றும் திரு. ரோனி ஜேக்கப் ஆகிய இருவரும் ஒரு உண்மை கண்டறியும் விஜயத்தை மேற்கொண்டனர். இப்பிராந்தியத்தில் பழங்குடி சமூகங்களின் மத்தியில் இருந்து வருகிற பாரம்பரியமான அடிமைத்தன நடைமுறை மீது ஒரு தொடக்கநிலை ஆய்வை நடத்துவதற்காக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிராந்தியத்தில் அடிமைத்தனமானது, இரு வடிவங்களில் நிகழ்வதையும், நடைமுறையில் இருந்து வருவதை இக்குழு கூர்நோக்கத்துடன் கண்டறிந்தது. இந்த இரு வடிவங்களும் தனித்துவமானவை என்றாலும் கூட ஒன்றிலிருந்து மற்றொன்று முழுமையாக தொடர்பற்றதாக இல்லை. அடிமை நிலை என்ற தங்களது இந்த பாழும் விதியிலிருந்து தப்புவதற்கு இந்த வழிமுறையோ, ஆயுதமோ இல்லாத அடிமைச் சேவகம் செய்து வருகிற சமூகங்களை தவறாக பயன்படுத்தி சுரண்டுவதின் மூலம் சக்தி வாய்ந்த ஆதிக்க சமூகத்தினரான முதலாளிகள் லாபமடைகின்றனர்.

முதலாவது, அருணாச்சலப்பிரதேசத்தின் ‘புரோயிக்’சமூகத்திற்குள் இருந்து வருகிற பழமையான அடிமைத்தன நடைமுறை பழக்கத்தின் கசப்பான யதார்த்தங்கள். புரோயிக் சமூகமானது, சல்லாங் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. பெங்காலி மொழியில் இதற்கு ‘அடிமைகள்’என்று அர்த்தம். இந்த பிராந்தியத்தில் பங்க்னிஸ், மெஜிஸ் மற்றும் நைசிஸ் போன்ற வலுவான ஆதிக்க பழங்குடி சமூகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் பல நூற்றாண்டுகளாக அடிமை நிலையிலேயே இவர்கள் இருந்து வந்திருக்கின்றனர். புரோயிக் சமூகத்தின் அடிமைத்தனமானது, இரு வடிவங்களில் காணப்படுகிறது. (‘அடிமைத்தனம்’என்ற சொற்றொடரானது, அவர்களை அவதியுறச் செய்கிற அனைத்து வகைகளிலான சுரண்டலை குறிக்கிறது) முதல் வடிவமானது, கட்டாயப்படுத்தப்பட்ட / குழந்தைத்திருமணம், கடனின் காரணமாக கொத்தடிமைத்தனம் வன்முறை மற்றும் தவறான பயன்பாடு மற்றும் உரிமைகளும், சுதந்திரங்களும் இழப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.  கட்டாயத் தொழில்முறை, திருமணம் மற்றும் வீட்டில் அடிமை போல் பணியாற்றுவது ஆகிய நோக்கங்களுக்காக அஸ்ஸாம் மற்றும் பங்களாதேஷ்-லிருந்து அருணாச்சலப்பிரதேசத்திற்குள் குழந்தைகளை நயவஞ்சகமாக அழைத்து வருவதன் மூலம் மேற்கொள்ளப்படும் மனித வணிகம் இங்கு காணப்படும் அடிமைத்தனத்தின் இரண்டாவது வடிவமாகும். 

புரோயிக் சமூக மக்களின் வறுமையும், நிலையான வருவாய் ஈட்ட இயலாத தன்மையும், அவர்களது முதலாளிகளிடமிருந்து அடைமானம் / கடன் வாங்குமாறு அவர்களை நிர்ப்பந்திக்கிறது. இறுதியில் வாழ்நாள் முழுவதும் இந்த கடனை தீர்க்க முடியாமல் அடிமைகளாக வாழுமாறு இவர்களை அது செய்கிறது. ஒவ்வொரு புரோயிக் குடும்பமும் ஒரு அடிமைகளை வைத்திருக்கிற ஒரு முதலாளியை கொண்டிருக்கிறது. அந்த முதலாளியே இவர்களது குடும்ப உறுப்பினர்களின் விதியை தீர்மானிப்பவராக இருக்கிறார். புரோயிக் சமூக சிறார்களை குறிப்பாக இளம் சிறுமிகளை மணப்பெண்களாகவோ அல்லது வீட்டு வேலைக்காரர்களாகவோ, அவர்களது விருப்பம் போல விற்கவோ அல்லது வேறிடங்களுக்கு அனுப்பவோ முடியும். இந்த இளம் அடிமை மணப்பெண்கள், ஒரு சில மித்துன்களுக்காக (இந்தியாவின் வடகிழக்கு மலை பிராந்தியங்களில் காணப்படுகிற ஒருவகை மாடுகள்) பண்டமாற்று செய்யப்படுகின்றனர். இந்த குழந்தை மணப்பெண்கள், அவர்களது தாத்தாவாக இருக்கக் கூடிய வயதான நபர்களை திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் மற்றும் பாலியல் அடிமைத்தன வாழ்க்கையில் சிக்கி சீரழியுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அங்கிருந்த ஆதரவற்ற இல்லம் ஒன்றுக்கு நாங்கள் சென்றிருந்தபோது, கட்டாய குழந்தை திருமண முறையால் பாதிக்கப்பட்டிருந்த சில இளம் சிறுமிகளை சந்தித்தோம். விருப்பத்திற்குமாறான திருமணத்திற்கு பிறகு இருந்த மிக மோசமான சூழ்நிலைகளிலிருந்து தங்களது பச்சிளம் குழந்தைகளோடு, இவர்கள் அங்கிருந்து தப்பியோடி வந்திருக்கின்றனர்.

புரோயிக் பழங்குடி இனத்தவரின் சூழ்நிலையானது, பல தலைமுறைகளையும் கடந்து  நிலைத்திருக்கிற  கொத்தடிமைத் தொழில்முறை மற்றும் அடிமைத்தனத்திற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டாகும். புரோயிக் சமூகத்தினரின் ஆதாரவளங்கள், வாய்ப்புகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை அவர்களிடமிருந்து எடுத்து ஆதிக்க சமுதாயங்களின் முதலாளிகள் லாபமடையுமாறு, வழங்குகிற ஒரு பழமையான சமூக கட்டமைப்பை சார்ந்து இந்த அடிமைத்தனம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கடன், சமூக / பழங்குடியின கடமைப் பொறுப்பு மற்றும் தலைமுறைகளாக தொடரும் பழக்கம் ஆகியவற்றின் கூறுகளை உள்ளடக்கி, வேலை வாய்ப்புக்கான சுதந்திரத்தையும், குறைந்தபட்ச ஊதியத்தை பெறுவதற்கான உரிமையையும், இந்தியாவெங்கிலும் சுதந்திரமாக சென்று வரும் உரிமையையும், சந்தை மதிப்பீட்டு தனது பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்கிற உரிமையையும் இது இழக்குமாறு செய்கிறது. புரோயிக் சமூகத்தின் குழந்தைகள், கட்டாயத்தொழில்முறை, பாலியல் அடிமைகளாக / வீட்டுப் பணியாட்களாக இருப்பது, கட்டாயத் திருமணம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கடும் சுமையில் சிக்கித் தவிப்பது ஆகியவற்றின் வழியாக அற்புதமான குழந்தைப் பருவத்தை இழந்து தவிக்கின்றனர். சில பொருட்கள் / உயிரினங்களுக்காக இந்த குழந்தைகள் பண்டமாற்று செய்யப்படுகின்றனர். இது, வாழ்க்கையின் சாதாரணமான வழக்கம் என்று இங்கு கருதப்படுகிறது.

இரண்டாவதாக, வீட்டு வேலைக்காக மாநிலங்களுக்கிடையே குழந்தைகள் கடத்தப்படும் நிகழ்வில், பாதிப்புக்கு ஆளாகுபவர்கள், குறிப்பாக அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கிடையே வறுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களையும் மற்றும் விளிம்புநிலையிலுள்ள குழுக்களையும் சேர்ந்தவர்களாகவே பெரும்பாலும் இருக்கின்றனர். (அருணாச்சலப் பிரதேஷ் மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்த ஆதிவாசிகள், உத்தரபிரதேஷ் மற்றும் பீகாரிலிருந்து வருகிற புலம்பெயரும் தொழிலாளர்கள் பங்களாதேஷ்-ஐ சேர்ந்த சக்மா அகதிகள் மற்றும் புரோயிக்குகள்) இந்த சிறார்களுள் பெரும்பான்மையானவர்கள் உடல்ரீதியாகவும். மனநலரீதியாகவும் மற்றும் பாலியல் ரீதியாகவும் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் மற்றும்  தவறாக பயன்படுத்தப்படுகின்றனர். சில நேர்வுகளில் அவர்களது முதலாளிகளால் அவர்கள் மிக மோசமாக தாக்கப்படுகின்றனர் மற்றும் கொடுமைப் படுத்தப்படுகின்றனர். நம்சாய் மற்றும் வாஞ்சோ போன்ற மாவட்டங்களிலிருந்து அருணாச்சலப்பிரதேஷ் மாநிலத்திற்குள்ளாகவே இத்தகைய சிறார்கள் வாங்கப்படுகின்றனர் மற்றும் விற்கப்படுகின்றனர். பப்பும் பரே என்ற தலைநகர் மாவட்டத்திலுள்ள கொலோங்கி என்ற மற்றொரு கிராமம், அந்த சமூகத்திற்குள் குழந்தைகள் விற்பனைக்கு பேர் போனதாகும்.

-  ரோனி ஜேக்கப்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT