சிறப்புக் கட்டுரைகள்

Mr. ரஜினி, Mr. மு.க. அழகிரி எங்கே இருக்கீங்க.. களத்துல இறங்கி குரல் கொடுங்க!

சாது ஸ்ரீராம்

இந்திய பொதுத் தேர்தல் தமிழகத்தில் களைகட்டத் துவங்கிவிட்டது. யார் யாருடன் கூட்டணி சேர்வது, யாருக்கு போட்டியிட சீட் கொடுப்பது என்று அரசியல் கட்சிகளும் ரொம்ப பிஸியாக நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றன. சில பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்காத நிலையிலும் தங்களது பிரசாரங்களை தொடங்கிவிட்டனர். கொள்கை, கூட்டணி தர்மம் ஆகியவற்றைப் பற்றி கட்சிகள் கவலைப்படாமல், எதையாவது சொல்லி மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையோடு வலம்வருகின்றன.

கிட்டத்தட்ட போர்க்களத்தைப் போன்றதொரு தோற்றத்தை தேர்தல் களம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அணியிலிருந்து அந்த அணிக்கு ஒருவர் தாவிச் செல்வது, அந்த அணியிலிருந்து ஒருவரை இந்த அணிக்கு இழுப்பது, தான் நினைத்தது நடக்காத வெறுப்பில் எதிர் தரப்பில் சேர்வது, தான் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே தன்னைச் சார்ந்தவர்களுக்கு குழிபறிப்பது போன்ற எல்லா போர்த் தந்திரங்களும் களமிறக்கப்பட்டிருக்கின்றன. எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் நடைபெறும் போரை “சங்குல யுத்தம்” என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சங்குல யுத்தத்தை நோக்கி தமிழகம் நகர்ந்துகொண்டிருப்பதை உணரமுடிகிறது.

நமக்கு மகாபாரதத்தின் குருக்ஷேத்திர போரைப் பற்றி தெரியும். அன்றைய காலத்தின் பெரும்பாலானவர்கள் பங்கேற்ற போர்த் திருவிழா. போரில் கலந்துகொள்வது, வெற்றிபெறுவது, உயிரிழப்பதெல்லாம் பெருமைக்குரிய விஷயம். அப்படிப்பட்ட பெருமைக்குரிய போரில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்தவர்கள் மூன்று பேர். அவர்கள், கிருஷ்ணரின் அண்ணன் ‘பலாராமன்’, திருதிராஷ்டிரனின் சகோதரர் ‘விதுரர்’, ருக்மணியின் அண்ணன் ‘ருக்மன்’. இவர்கள் ஏன் போரில் கலந்துகொள்ளவில்லை என்பதைப் பார்ப்போம்.

பலராமன், கிருஷ்ணரின் அண்ணன். ஆதிசேஷனின் அவதாரம். பீமனுக்கும் துரியோதனனுக்கும் கதாயுத பிரயோகத்தின் குரு. இவருக்கு கெளரவர்களிடம் அன்பு அதிகம். மனத்தளவில் கெளரவர்களுக்கு ஆதரவாக இருந்தாலும், நேரடியாக கெளரவர் தரப்பில் களமிறங்கவில்லை. பாண்டவர்களுக்கு கிருஷ்ணரின் ஆதரவு இருக்கும்போது அவரை எதிர்த்து எப்படி போரிட முடியும்? அதனால், போரின்போது தீர்த்த யாத்திரைக்கு சென்றுவிடுகிறார் பலராமன். போரின் முடிவில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் நேரடி யுத்தம் நடக்கும்போது, ஒரு பார்வையாளனாக தனது சீடர்களின் வீரத்தை கண்டுகளித்தார்.

விதுரர், இவர் திருதிராஷ்டிரனின் சகோதரர். தர்ம தேவனின் அம்சம். இவரிடம் இருக்கும் வில்லின் பெயர் “கோதண்டம்”. இது மகாவிஷ்ணுவிடமிருந்து பெறப்பட்டது. இந்த வில் இவரிடம் இருக்கும்வரை வெற்றி இவர் பக்கமே! அதுமட்டுமில்லாமல் மனத்தில் தோன்றியதை ஒளிவுமறைவின்றி தெரிவிக்கும் நேர்மையாளர். குருக்ஷேத்திர போருக்கும் முன் சமாதானத் தூதுவனாக கிருஷ்ணர் வரும்போது அவரை அவமானப்படுத்தினான் துரியோதனன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், நியாயத்தையும் தர்மத்தையும் உபதேசித்த விதுரரும் அவமானப்படுத்தப்பட்டார். இதனால் கோபமடைந்த விதுரர், தன்னிடம் இருக்கும் ‘கோதண்டம்’, கெளரவர் தரப்புக்குப் பயன்படக் கூடாது என்று முடிவெடுத்து அதை உடைத்துவிடுகிறார். இதன்பிறகு அவர் போரில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கினார்.

ருக்மன், இவர் கிருஷ்ணரின் மனைவியாகிய ருக்மணியின் சகோதரர். ருக்மணி திருமணத்தின்போது ஏற்பட்ட பிரச்னையில் கிருஷ்ணருடன் போரிடுகிறான் ருக்மன். தோற்றுப்போகிறான். அதன்பிறகு தன்னுடைய நாட்டுக்குத் திரும்பினான். குருக்ஷேத்திரத்தில் போர் நடைபெறப்போகிறது, இரு அணிகளும் படை திரட்டிக்கொண்டிருக்கின்றனர் என்ற செய்தியை கேள்விப்பட்ட ருக்மன், நேராக சென்று பாண்டவர்களை சந்தித்து, பாண்டவர்கள் தரப்பில் போரிட விரும்புவதாக கூறினான். கிருஷ்ணர் தங்கள் பக்கம் இருப்பதால் அவரின் வெறுப்பை பெற்ற ருக்மன் தங்களுக்கு வேண்டாமென்று நிராகரித்தனர் பாண்டவர்கள். அங்கிருந்து புறப்பட்ட ருக்மன், நேராக கெளரவர்களை சந்தித்து, கெளரவர்கள் தரப்பில் போரிட்டு பாண்டவர்களை வீழ்த்த விரும்புவதாக தெரிவித்தான். ‘பாண்டவர்கள் வேண்டாம் என்று சொன்ன ஒருவனை தாங்கள் ஏற்றுக்கொள்வதில் பெருமையில்லை’ என்று சொல்லி ருக்மனை நிராகரித்தார்கள் கெளரவர்கள். இரண்டு தரப்பும் நிராகரித்ததால் போர் திருவிழாவில் பங்கேற்காமல் ஒதுங்கினான் ருக்மன்.

நாம் பார்த்த இந்த மூன்று பேர்களையும் இன்றைய தேர்தல் திருவிழா நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.

ருக்மனைப் பற்றி படிக்கும்போது தேமுதிக நம் நினைவுக்கு வருகிறது. அதற்குக் காரணம், தேமுதிக இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமாக கூட்டணிக்கு முயற்சி செய்தார்கள் என்பதுதான். ருக்மன் விஷயத்துக்கும் தேமுதிகவின் முயற்சிக்கும் ஒரே வித்தியாசம், தேமுதிக தேர்தல் திருவிழாவில் ஒரு தரப்பின் சார்பாக பங்கேற்றுள்ளது. ருக்மனை போல முழுவதுமாக நிராகரிக்கப்படவில்லை. அரசியல் கட்சிகளுக்கு கொள்கைகள் ஏட்டளவில் மட்டுமே இருப்பது நமக்கெல்லாம் தெரியும். அதை வெளிச்சம்போட்டு காட்டியது இந்த நிகழ்வு. ஏதோ தேமுதிக மட்டும் கொள்கையில் குறைவாக இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். கடந்த தேர்தலில் யாரையெல்லாம் கேவலமாக விமரிசனம் செய்தார்களோ, அவர்களெல்லாம் தற்போது ஒரே அணியில் குவிந்திருக்கிறார்கள். வெட்கமில்லை, சூடு இல்லை, சொரணையில்லை என்று ஒரு தரப்பிலிருந்து விமரிசிக்கப்படும்போது, அதே வேகத்தில் அதே வார்த்தைகள் எதிர் தரப்பிலிருந்தும் எதிரொலிப்பதைக் கேட்க முடிகிறது.

விதுரரையும், அவரது கோதண்டத்தையும் பற்றி படிக்கும்போது நம் நினைவுக்கு வருவது, திரு. மு.க. அழகிரி. மு.க அழகிரியின் துணிச்சல், மனத்தில் பட்டதை தைரியமாகச் சொல்லும் குணம், விதுரரின் கோதண்டத்தைப் போன்ற அவரின் தொண்டர் படை ஆகியவற்றை மனத்தில் வைத்து மட்டுமே இந்த ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. தர்மதேவனின் அம்சம் விதுரர் என்ற உயர்ந்த கதாபாத்திரத்துடன் மட்டுமே இந்த ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. வேறு அனுமானங்களுக்கு இங்கே இடமில்லை.

பலராமனைப் பற்றி நாம் படிக்கும்போது நம் நினைவுக்கு வருவது, சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த். காரணம், பலராமனைப் போலவே அமைதியானவர். தன் பலத்தை முழுமையாக அறிந்திருந்தபோதும் அதை அநீதியின் பக்கம் சாய்வதற்கு அனுமதித்ததில்லை. போரின்போது யுத்த தர்மத்தை மீறி துரியோதனனை பீமன் தாக்கியபோது, அதைத் தவறு என்று சுட்டிக்காட்டி பீமனை கொல்வதற்கும் துணிந்தார். இதைப்போலவே திரு. ரஜினிகாந்த், நியாயம் என்று கருதிய விஷயங்களை ஒளிவுமறைவின்றி சொல்லத் தவறியதில்லை. இதற்குப் பல தருணங்களை உதாரணமாகச் சொல்லலாம். பலராமன், விவசாயிகளின் கடவுள். விவசாயிகளின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். பூமியைக் குடைந்து யமுனை ஆற்று நீரை பிருந்தாவனத்துக்குக் கொண்டுவந்தவர். விவசாயத்தை நம்பி வாழ வேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தியவர். ஆறுகள் பற்றிய திரு. ரஜினிகாந்த் சிந்தனையும் கிட்டத்தட்ட பலராமனின் அணுகுமுறையோடு ஒத்துப்போகிறது. தன்னுடைய பலத்தை மறைத்து சாதாரண மனிதனாக இருக்கும் திரு. ரஜினிகாந்தை பலராமனோடு செய்யும் ஒப்பீடு மிகச்சரியானது என்றே கருதுகிறேன். அமைதி, மனத்தில் பட்டதை பளிச்சென்று சொல்லும் குணம், நேர்மை ஆகியவை திரு. ரஜினிகாந்தின் பலம்.

மகாபாரதத்தில், விதுரரின் பேச்சுக்கு மதிப்பு இருந்தவரை விதிகள் மீறப்படவில்லை. தவறான விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. எப்போது விதுரரின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டதோ, அன்றே கெளரவர்களின் அழிவுக்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. மூத்தோர் சொல்லும், முழு நெல்லிக்கனியும், முன்பு கசக்கும், பின்பு இனிக்கும். மகாவிஷ்ணு தனக்களித்த ‘கோதண்டம்’ என்ற வில்லானது கெளரவர்களுக்கு உபயோகப்படக் கூடாது என்று உடைத்தெறிந்தார். அதர்மத்துக்கு இவரது பலமும், வரமும் பயன்படாமல் போனது. ஒருவேளை, விதுரர் கோதண்டத்தை உடைக்காமல், பாண்டவர் தரப்பில் போரிட முடிவு செய்திருந்தால், வில்லின் பலமறிந்த கெளவர்கள் யுத்தத்தை தேர்ந்தெடுக்காமல் போயிருக்கலாம். அல்லது, கெளரவர் தரப்பு பதினெட்டு நாட்கள்வரை தாக்குப்பிடிக்காமல் சீக்கிரமே போர் முடிவுக்கு வந்திருக்கும். விதுரரின் வில்லுக்குப் பயந்து, கெளரவர்கள் தர்மத்தின் பாதையில் பயணித்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம் பேரழிவை தவிர்த்திருக்கலாம். தர்மம் நிலைநாட்டப்பட்டிருக்கும். தர்மத்தை நன்கறிந்த, தர்மதேவதையின் அம்சமாகிய விதுரர், போரில் கலந்துகொள்ளாமல் இருந்ததால், தர்மம் தன்னை காத்துக்கொள்ள பேரழிவை ஏற்படுத்திவிட்டது என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

எல்லாத் தகுதிகளும் உள்ள ஒருவன், தன்னுடைய பராக்கிரமத்தை அடக்கிக்கொள்வது என்பது மிகச் சிறந்த முடிவாக இருக்க முடியாது. போரில் காட்டாத வீரம் பயனற்றது. ஒருவேளை இன்று ஒரு போர் ஏற்பட்டால், பலராமனும் விதுரரும் நம்மிடையே இருந்தால் போரில் நிச்சயமாகக் கலந்துகொண்டிருப்பார்கள்.

விதுரருக்கும், பலராமனுக்கும் கிடைக்காத வாய்ப்பு இன்று நம்மிடையே வாழும் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கும், திரு. மு.க. அழகிரிக்கும் கிடைத்திருக்கிறது. அவர்கள் இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது.

தங்களுக்கென்று கொள்கைகளோ, ஒத்த கருத்துடைய கூட்டணிகளோ, நேர்மையாளர்களை தேர்ந்தெடுத்து தேர்தலில் நிறுத்தும் சிந்தனையோ, இன்றைய கட்சிகளிடம் இல்லை. கடந்த தேர்தலில் எதனால் அவரை திட்டினோம், இப்போது எதனால் அவரை தன்னுடன் இணைத்திருக்கிறோம் என்பதற்கு சரியான காரணத்தை யாருமே சொல்லவில்லை. கடந்த தேர்தலில் அவரை ஊழல்வாதிகள் என்று சொன்னோமே, இப்போது அவர் எப்படி பரிசுத்தராக ஆனார் என்று கேள்விகள் அவர்களின் மனத்தில் வருவதில்லை. ஆகையால், இந்தக் கேள்விகளை அளவுகோலாக்கி ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாது. தங்களின் எல்லா கொள்கைகளையும் மாற்றிக்கொண்டவர்கள் இந்து எதிர்ப்பை மட்டும் கைவிடவில்லை. மற்ற மதங்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் இவர்கள், ஏன் இந்து மதத்தை மட்டும் எதிர்க்க வேண்டும். நாத்திகர்கள் மீது கொண்ட நம்பிக்கை ஏன் இந்துக்களின் மீது ஏற்படவில்லை? ஆகையால், இந்து எதிர்ப்பாளர்கள் சார்ந்த கட்சிகள் புறக்கணிக்கப்பட வேண்டும். தேர்தல் முடிவுகள் இந்து எதிர்ப்பாளர்களுக்கு ஒரு படிப்பினையை ஏற்படுத்த வேண்டும்.

ஒருவேளை இன்று பலரமனும், விதுரரும் நம்மிடையே இருந்திருந்தால், அவர்கள் இந்து மதத்தை கேவலப்படுத்துபவர்களுக்கு எதிராக களமிறங்கியிருப்பார்கள். இதே கருத்தை மனத்தில் கொண்டு திரு. ரஜினிகாந்த் அவர்களையும், திரு. மு.க. அழகிரியையும் தேர்தல் களத்தில் குரலெழுப்ப அழைக்கிறோம். இந்து உணர்வுகளுக்கு இவர்கள் அளிக்கும் ஆதரவு எதிர்ப்பாளர்களுக்கு ஒரு பாடத்தை புகட்டும். திரு. ரஜினிகாந்த் அவர்களின் சிறிய அசைவுகளையும் இந்த உலகம் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்த அசைவுகளுக்கு ஏற்றபடி நகர்வதற்கும் உலகம் தன்னை தயார்படுத்திக்கொண்டுள்ளது. இது திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கும் தெரியும். தற்போதைய காலகட்டத்தில் திரு. ரஜினிகாந்த் அவர்களின் குரல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

- சாது ஸ்ரீராம் (saadhusriram@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT