சிறப்புக் கட்டுரைகள்

அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உணவு விற்பனை செய்தால்.. அபராதம்! 

சி.பி.சரவணன்

டீக்கடைகள், சிறு ஓட்டல்கள், வடை கடைகளில் அதிகளவில் செய்தித்தாள்கள் மற்றும் அச்சிடப்பட்ட காகிதங்கள் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் தடை விதித்துள்ளது. எனவே, உணவு பொருட்களை வழங்க அக்காகிதங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு ஆணையம் சார்பில், 'அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உணவுப்பொருள்களை விநியோகிக்கக் கூடாது' என்று கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிடப்பட்டது. அப்படி விநியோகிக்கும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு ஆணையம், இதுதொடர்பாகத் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளிடம் அறிக்கை கேட்டுள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வுப் பிரசாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதும், மக்களிடம் அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.

அச்சிடப்பட்ட காகிதங்களில் உணவுப்பொருள்களை வைத்துப் பயன்படுத்துவதால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?

"அச்சிடப்பட்ட காகிதங்களில் உணவை மடித்துத் தருவதால், அதில் மை மற்றும் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், செயற்கை நிறங்கள் போன்றவை உடலுக்குள் செல்லும். வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இதனால் உடனடி விளைவுகள் ஏற்படும்.

செய்தித்தாள்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மையில் காரியம், குரோமியம் மற்றும் கிராபைட் ஆகிய ரசாயனங்கள் இருக்கும். காரியம் உடலில் அதிகம் சேர்ந்தால் ஞாபகக்குறைபாடு சார்ந்த பல பிரச்னைகள் ஏற்படலாம். கிராபைட், உறுப்புகளில் தங்கிவிடும் தன்மை கொண்டது என்பதால், உள் உறுப்புகளில் பிரச்னை ஏற்படலாம். தவிர, செய்தித்தாள்களில் நோய்க்கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்கள் இருக்கும் என்பதால், அவை உணவுடன் கலந்து குடலுக்குள் சென்றுவிடும் வாய்ப்புகள் உண்டு. இதனால் தொற்றுப் பிரச்னைகள் ஏற்படலாம். குரோமியம், எலும்பு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.

டீக்கடைகள், சாலையோரக் கடைகளில் எண்ணெயில் செய்த உணவுகளைப் பேப்பரில் மடித்துக் கொடுப்பார்கள். எண்ணெயின் தீமைகளோடு, அச்சு ரசாயனங்களும் சேரும்போது கூடுதல் பாதிப்புகள் ஏற்படும். எனவே, முடிந்தவரை வெளியிடங்களில் இப்படியான உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பதுதான் நல்லது.

நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பவர்களுக்கு, ஃபுட் பாய்சன் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். அதனால் வாந்தி, மயக்கம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு போன்றவை ஏற்படலாம். சிலருக்கு, ஒவ்வாமை பிரச்னைகள், செரிமானப் பிரச்னைகளும் ஏற்படலாம். தொடர்ந்து, அச்சிடப்பட்ட காகிதங்களில் பேக் செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகம், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம்.

உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த 600 வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அளித்துள்ளது.

எண்ணெய்யில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, போண்டா. வடை. முறுக்கு போன்ற திண்பண்டங்கள் சாலையோர கடைகள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றில் அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் பொட்டலமிட்டு நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு, அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உணவுப் பொருட்களை வழங்குவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, உணவுப் பொருட்களை அச்சடிக்கப்பட்ட காகிதம், செய்தித் தாள்கள், பிளாஸ்டிக், பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் ஆகியவைகளில் கட்டிக் கொடுக்கவோ, பொட்டல மிட்டோ பொதுமக்களுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதா லட்சுமி கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் சென்னை முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒரு மாதத்தில் அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உணவு பொருட்களை விற்பனை செய்த 600 வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஒரு மாதத்தில் 4 ஆயிரம் கடைகளில் ஆய்வு செய்துள்ளோம். 600 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. நோட்டீஸில் அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உணவு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

SCROLL FOR NEXT