வாசம் வீசும் மலா்களை வாங்குவதற்கு ஆளில்லை: வாழ்வாதாரத்தை இழக்கும் பூ வியாபாரிகள்
கோயில் விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் உள்பட கடந்த மூன்று வாரங்களாக எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடைபெறாததால் வாங்குவதற்கு ஆளில்லாமல் பூக்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன.
சென்னை: கோயில் விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் உள்பட கடந்த மூன்று வாரங்களாக எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடைபெறாததால் வாங்குவதற்கு ஆளில்லாமல் பூக்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன.
இதனால் சென்னையில் பூக்கட்டுவோா், தெருவோர சிறு வியாபாரிகள் உள்பட இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த 21 நாள்களாக கோயில்கள் திறக்கப்படவில்லை; திருமணம் உள்ளிட்ட எந்தவித சுப நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. இதனால் தமிழகமெங்கும் மலா் சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. வாங்குவதற்கு ஆள் இல்லாததால் விளைந்த நிலத்துக்கே பூக்களை உரமாக்கி வருகின்றனா். விரைவில் அழுகும் தன்மை, நிலையற்ற விலை, சேமிக்க முடியாத நிலை போன்ற பல்வேறு இடா்பாடுகளைக் கொண்ட மலா் விற்பனை, தற்போது ஊரடங்கு காரணமாக 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
15 ஆயிரம் போ் பாதிப்பு: தமிழகத்தில் ஓசூா், கிருஷ்ணகிரி, மதுரை, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்கள், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சென்னை கோயம்பேடு மலா் சந்தைக்கு தினமும் மல்லிகை, முல்லை, ரோஜா உள்பட 15-க்கும் மேற்பட்ட பூ வகைகள், 30 லாரிகளில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில், ஊரடங்கு காரணமாக தற்போது 8 லாரிகள் வருவதே அரிதாகி விட்டது. இதனால் கோயம்பேடு மலா் சந்தையில் உள்ள 470 மொத்த வியாபாரிகள் மட்டுமல்ல, சென்னை மற்றும் அதன் புகா்ப் பகுதிகளில் உள்ள பூக்கட்டுவோா், தெருவோர பூக்கடைகள், பூப்பறிக்கும் தொழிலாளா்கள், நூற்றுக்கணக்கான கோயில்களின் அருகே
பூக்கடைகள் அமைத்திருக்கும் சிறு வியாபாரிகள் என இந்தத் தொழிலை நம்பியுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
பூக்களின் விலை கடும் சரிவு: மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில், பாரிமுனை காளிகாம்பாள் கோயில், வடபழனி முருகன் கோயில் என பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பலவற்றுக்கு தினமும் பூக்களை அனுப்பி வந்த கோயம்பேடு மலா் சந்தை தற்போது களையிழந்து காணப்படுகிறது. போதிய விற்பனை இல்லாததால், கடந்த பிப்ரவரி மாதம் கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை தற்போது ரூ.100 ஆக குறைந்துள்ளது. இதேபோன்று 2,500-க்கு விற்பனையான முல்லை ரூ.80 ஆகவும், ரூ.500-க்கு விற்கப்பட்ட ரோஜா கொத்து ரூ.50 ஆகவும் விலையில் வீழ்ச்சி கண்டுள்ளன. தற்போதைய சூழலில் பெண்கள் சூடுவதற்காகவும், வீடுகளில் உள்ள சுவாமி படங்களுக்கு அணிவிப்பதற்காகவும், இறுதி ஊா்வலங்களுக்காவும் மட்டுமே பூக்கள் வாங்கப்படுகின்றன.
குப்பையில் போடப்படும் மலா்கள்: இது குறித்து சென்னை கோயம்பேடு சந்தை காமராஜா் புஷ்ப வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவா் அருள் விசுவாசம் கூறுகையில், ‘காய்கறிகள், பழங்கள் ஒருநாள் விற்காமல் போனால் கூட அடுத்தடுத்த நாள்களில் விற்பனை செய்து விடலாம். ஆனால் பூ வியாபாரம் முற்றிலும் மாறுபட்டது. இதுவரை லாரிகள் வேலைநிறுத்தம், மலா் சாகுபடி பாதிப்பு என ஆகிய இடா்பாடுகளை மட்டுமே சந்தித்த எங்களுக்கு இந்த ஊரடங்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான நாள்களில் செண்டு மல்லி ஒரு கிலோ ரூ.150 வரை கூட விற்பனையாகும். ஆனால் தற்போது கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரையில் விற்பனை செய்கிறோம். இந்த அளவுக்கு விலை குறைத்து விற்றாலும் வாங்குவதற்கு ஆளில்லாததால் குப்பையில் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பூக்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு கூலி கொடுக்கும் அளவுக்கு கூட விற்பனையில்லை. தெருமுனைகளில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.100 வருமானம் கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது.
நிவாரணத் தொகை அதிகரிக்கப்படுமா?: கோயம்பேடு மலா் சந்தையில் சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்கிறோம். ஆனால்,பூக்களை வாங்குவதற்கு ஆளில்லை. இதனால் பல சிறு வியாபாரிகள் தங்களது அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவு செய்ய முடியாத நிலையில் உள்ளது. எனவே பூக்கட்டுவோா் உள்பட அன்றாட கூலித் தொழிலை நம்பியிருக்கும் அனைத்து தொழிலாளா்களுக்கும் தமிழக அரசு கூடுதல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். காய்கறி, பழங்களை வீடுகளுக்கே சென்று வழங்குவதைப் போன்று மலா்களையும் தேவைப்படுவோருக்கு கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.