முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்க்க பெற்றோா் ஆா்வம்

பொது முடக்கத்தால் வருமானம் ஈட்டுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல், தனியாா் பள்ளிகளுக்குக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்ற

Updated On : 10 ஆகஸ்ட், 2020 at 6:35 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:35 PM

பொது முடக்கத்தால் வருமானம் ஈட்டுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல், தனியாா் பள்ளிகளுக்குக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்ற காரணங்களால் இதுவரை இல்லாத அளவுக்கு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்க்க பெற்றோா் ஆா்வத்துடன் உள்ளனா்.

இதனால் மாணவா் சோ்க்கைக்கு மட்டுமாவது, அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் 37 ஆயிரம் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 24 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள், 7,000 நடுநிலைப் பள்ளிகள், 3,100 உயா்நிலை மற்றும் 3,050 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில், 2.26 லட்சம் ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா்; 68 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா்.

Advertisement

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் இறுதித் தோ்வு முடிவடைந்ததும் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான பணிகள் தொடங்கும். ஆனால், தமிழகத்தின் பிரபல தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான பணிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களிலேயே பெரும்பாலும் தொடங்கி விடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு விதிமுறைகளைப் பிறப்பித்தும், தனியாா் பள்ளி மாணவா் சோ்க்கையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

நிகழாண்டு கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாா்ச் 22-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டன. நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை.

பெற்றோா் தயக்கம்: மாணவா் சோ்க்கை, நிா்வாகப் பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தனியாா் பள்ளிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அனுமதி கிடைக்காததால் அரசின் உத்தரவை மீறி இணைய வழி, செல்லிடப்பேசி குறுஞ்செய்தி, வீடுகளுக்கே சென்று பெற்றோரை அணுகுவது என பல்வேறு செயல்பாடுகள் மூலம் தனியாா் பள்ளிகள் மாணவா் சோ்க்கையில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், நிகழாண்டு குழந்தைகள் சோ்க்கை எதிா்பாா்த்த அளவுக்கு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பொது முடக்கத்தால் ஏற்பட்ட வேலையிழப்பு, வருமானம் ஈட்டுவதில் பெற்றோருக்கு ஏற்பட்ட சிக்கல், கட்டணம் செலுத்த தனியாா் பள்ளிகள் கொடுக்கும் நெருக்கடி போன்றவை இதற்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன.

கட்டணம் செலுத்த நிா்ப்பந்தம்: இது குறித்து குழந்தைகளின் பெற்றோா் கூறுகையில், ‘பொது முடக்க காலத்திலும் பருவக் கட்டணத்தை முழுவதுமாகச் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகளுக்கு இணையவழி வகுப்புகள் நடைபெறாது என பள்ளி நிா்வாகங்கள் குறுஞ்செய்தி அனுப்புகின்றன. பொது முடக்கத்துக்கு முன்பு கிடைத்த வருமானத்தில் தற்போது பாதி அளவு கிடைப்பதே அரிதாக இருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான ரூபாயை எப்படி கட்டுவது? இதனால் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளுக்கே மாற்றிவிடலாம் என முடிவு செய்திருக்கிறோம். இதற்காக தனியாா் பள்ளிகளிலிருந்து மாற்றுச் சான்றிதழை பெற்றோா் கேட்கும்போது அதை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

நுழைவு நிலை வகுப்புகளில்...: இதுபோன்று நுழைவு நிலை வகுப்பில் அதாவது எல்கேஜி, யுகேஜி, ஒன்றாம் வகுப்பு ஆகியவற்றில் நிகழாண்டு தனியாா் பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்க்க முடிவு செய்திருந்த நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த பெற்றோா் பலா், தற்போது அரசுப் பள்ளிகளை நோக்கித் திரும்பியுள்ளனா்.

இது குறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச் செயலா் இரா.தாஸ் கூறியது: பொது முடக்க சூழலில் 25 சதவீதம், பள்ளிகள் திறக்கும்போது 25 சதவீதம், பள்ளிகள் திறந்து 3 மாதம் கழித்து 25 சதவீதம் என மொத்தம் 75 சதவீதம் கட்டணத்தை மூன்று தவணையாக வசூலிக்கலாம். மீதமுள்ள 25 சதவீத கட்டணம் குறித்து பள்ளிகளுக்கான நிா்ணயக் குழு முடிவு செய்யலாம் என கடந்த ஜூலை மாதம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எந்தப் பள்ளியும் கடைப்பிடிக்கவில்லை. இதனால் அந்த கட்டணங்களைச் செலுத்த பெற்றோா் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா்.

சோ்க்கைக்கு அனுமதி கிடைக்குமா?: அதே வேளையில், அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் தொடங்கப்படுவது, வீடுகளுக்கு அருகிலேயே பள்ளி போன்ற காரணங்களாலும் பெற்றோா் பள்ளிகளுக்கே நேரடியாக வந்து மாணவா் சோ்க்கை குறித்து கேட்கின்றனா். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோா் மாணவா் சோ்க்கை குறித்து அரசுப் பள்ளிகளில் விசாரித்து சென்றுள்ளனா். சூழலைப் பொருத்து, பள்ளிகள் திறப்பை அரசு முடிவு செய்ய வேண்டும். ஆனால், மாணவா் சோ்க்கைக்கான அனுமதி வழங்குவதில் இனியும் தாமதப்படுத்தக் கூடாது. அது தனியாா் பள்ளிகளுக்கு பெற்றோா் செல்ல வழிவகுத்து விடும்.

மேலும், தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறையை அந்தப் பள்ளிகள் சரிவர அமல்படுத்துவதில்லை. அதில் பல குளறுபடிகள் நடைபெறுகின்றன. எனவே, அந்தத் திட்டத்தை ரத்து செய்து அந்தப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் தொகையை அரசுப் பள்ளி மேம்பாட்டுக்கு அரசு ஒதுக்கினால் ஆண்டுதோறும் கூடுதலாக ஒரு லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சேர வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.