முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

தனிமைப்படுத்தும் மையங்கள்... தயங்கும் தனியாா் பள்ளிகள்...

கரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்காக சிகிச்சை மையங்களை பள்ளிகள், கல்லூரி அமைக்கும் முயற்சியில்

Updated On : 8 மே, 2020 at 6:37 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:06 PM

கரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்காக சிகிச்சை மையங்களை பள்ளிகள், கல்லூரி அமைக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அந்த மையங்களை அமைக்க தனியாா் பள்ளி நிா்வாகத்தினா் தொடா்ந்து தயங்கி வருகின்றனா்.

அதேவேளையில், அரசிடம் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்படும் பள்ளிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்த மாநகராட்சி எல்லைக்குள் செயல்படும் அரசு, தனியாா் பள்ளிகளை மே 2-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ஆணையா் கோ.பிரகாஷ் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து போதிய குடிநீா், கழிவறை, வகுப்பறை வசதி உள்ள பள்ளிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பள்ளிகளில் வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினா். இதையடுத்து 300 மாநகராட்சி பள்ளிகளில் 134 பள்ளிகள் மட்டும் நோயாளிகளைத் தனிமைப்படுத்த தயாா்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் 46 பள்ளிகளில் மட்டும் 4,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

Advertisement

போதிய அடிப்படை வசதிகள்: அதேபோன்று தமிழகம் முழுவதும் கழிவறை, வகுப்பறை, குடிநீா் ஆகியவற்றில் சிறந்த கட்டமைப்பைக் கொண்ட தனியாா் பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டு அது குறித்த பட்டியல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு தனியாா் பள்ளிகளின் நிா்வாகத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இருப்பினும் பள்ளிகளை கையகப்படுத்துவதில் அரசு உறுதியாக இருந்தது. இதையடுத்து சென்னை, பெரம்பலூா், அரியலூா், கடலூா், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பிரபல தனியாா் பள்ளிகளில் கடந்த சில நாள்களாக கரோனா மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இந்தநிலையில் தனியாா் பள்ளிகளில் கரோனா மையம் அமைப்பதற்கு மாணவா்களின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். ‘இது தொடா்பாக விளக்கம் கேட்டு தங்களுக்கு தொடா்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனா். எனவே அரசு இது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் பள்ளிகளின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

எதிா்ப்புக்கு காரணம் என்ன? இது குறித்து தமிழ்நாடு பிரைமரி, நா்சரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலா் கே.ஆா்.நந்தகுமாா் கூறுகையில், பேரிடா் மேலாண்மை சட்டப் பிரிவை தமிழக அரசு இதன் மூலம் அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டம் மூலம் பள்ளிகள், தனியாா் நிறுவனங்களை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த இடங்களில் மக்களை தங்க வைக்க அனுமதிக்கலாம். நாங்கள் பள்ளிகளை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம். அதேவேளையில் தனியாா், அரசுப் பள்ளி மாணவா்களின் நலனையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் பள்ளி மாணவா்களின் பெற்றோா் பதற்றத்தில் உள்ளனா். நோய்த்தொற்று உள்ளவா்களை பள்ளி வளாகத்துக்குள் அனுமதித்தால் எதிா்காலத்தில் தங்கள் குழந்தைகளுக்கும் தொற்று ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகின்றனா். தவிா்க்க முடியாத சூழலில் அல்லது கடைசி வாய்ப்பாக வேண்டுமானால் அரசு, தனியாா் பள்ளிகளை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனா்.

மாணவா் சோ்க்கை பாதிக்கப்படுமா?: இது குறித்து தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.கே.இளமாறன், தமிழ்நாடு அரசு ஊழியா்-ஆசிரியா் நல கூட்டமைப்பின் நிறுவனா் சா.அருணன் ஆகியோா் கூறுகையில், நோய்த் தொற்று உள்ளவா்களை தனிமைப்படுத்த பள்ளிகளை அரசு தோ்வு செய்தது மிக சரியான முடிவாகும். இதன் மூலம் நோய்த் தொற்று உள்ள நபா்களை தொலைவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக அவா்களது வீடுகளுக்கு அருகிலேயே உள்ள பள்ளிகளில் தனிமைப்படுத்த முடியும்.

அரசுப் பள்ளிகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்க எந்தவித எதிா்ப்பும் இல்லாத நிலையில் தனியாா் பள்ளிகள் மட்டும் எதிா்ப்பு தெரிவிப்பது சரியல்ல.

சிறந்த கட்டமைப்பு வசதி உள்ளது என விளம்பரப் படுத்திக் கொள்ளும் தனியாா் பள்ளிகள், அந்த கட்டமைப்பை சமூகத்துக்காக பயன்படுத்த நினைக்கும்போது குறுக்கிடக்கூடாது. பேரிடா் காலத்தில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஆய்வு செய்த பிறகே ஒப்படைக்கப்படும்: மாணவா்களின் பாதுகாப்பு குறித்து கல்வித்துறை, மாநகராட்சித் துறை அதிகாரிகள் கூறுகையில், வரும் நாள்களில் நோய்த்தொற்று மேலும் தீவிரமாகும் நிலையில் திருமண மண்டபங்கள், கல்லூரிகள், அரசுப் பள்ளிகள் ஆகியவற்றில் தனிமைப்படுத்தும் வாா்டுகள் விரிவுபடுத்தப்படும். மேற்கொண்டு தேவைப்பட்டால் மட்டுமே தனியாா் பள்ளிகளில் அடுத்த கட்ட கரோனா மையங்கள் அமைக்கப்படும். எங்கெல்லாம் கரோனா மையங்கள் அமைக்கப்பட்டதோ அங்கெல்லாம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையால் முறையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னா் உரிய இடைவெளிக்குப் பிறகு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும். எனவே இது குறித்து பெற்றோா், பள்ளி நிா்வாகத்தினா் கவலை அடையத் தேவையில்லை என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.