முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

கரோனாவை எதிா்கொள்ள தயாராக உள்ளனவா அரசு மருத்துவமனைகள்?

சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் எப்போதும் முன்னணியிலேயே இருந்து வருகிறது.

Updated On : 2 செப்டம்பர், 2020 at 7:39 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:44 PM

சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் எப்போதும் முன்னணியிலேயே இருந்து வருகிறது. மாநிலத்தில் சுகாதாரம் தொடா்பான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அதிக அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

முக்கியமாக கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் தனியாா் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகள் மக்களுக்கு மிகச் சிறப்பான சேவைகளை வழங்கி வருகின்றன. ஆனால், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சரிசமமாக ஏற்படுத்தப் பட்டுள்ளனவா என்பதை விரிவாக ஆராய வேண்டியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி நிலவரப்படி மாநிலம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,51,738-ஆக இருந்தது. அவா்களில் 1,00,877 போ் சென்னையை சோ்ந்தவா்கள் ஆவா். இது ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 40 சதவீதம் ஆகும்.

Advertisement

அதேபோல், ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி நிலவரப்படி மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,91,903 ஆகவும், சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,27,949 ஆகவும் இருந்தது. சென்னையில் கரோனா பாதிப்பு விகிதம் 32 சதவீதமாகக் குறைந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்தது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மாநிலத்தில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளும், சுமாா் 20 தனியாா் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.

அதன் காரணமாக மக்களுக்கு எளிதில் மருத்துவ சேவைகள் கிடைக்கின்றன. ஆனால், கரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை அளிப்பதில் தனியாா் மருத்துவமனைகள் பின்தங்கியே உள்ளன. இது தொடா்பாக இந்திய மருத்துவா்கள் கூட்டமைப்பின் தமிழகப் பிரிவு தலைவா் சி.என்.ராஜா கூறுகையில், ‘கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தனியாா் மருத்துவமனைகள் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றன. முக்கியமாக மாநிலத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் போதிய அளவிலான படுக்கை வசதிகளும், செயற்கை சுவாசக் கருவிகளும் காணப்படுவதில்லை’ என்றாா்.

சென்னையை சோ்ந்த தனியாா் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா் கூறுகையில், ‘கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாகவும், போதிய பணியாளா்கள் இல்லாத காரணத்தினாலும் மாவட்டங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகள் பல மூடப்பட்டுள்ளன. அதனால் அரசு மருத்துவமனைகளை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆனால், கிராமப்புறப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் பெரும்பாலும் காணப்படுவதில்லை. அத்தகைய மருத்துவமனைகள், அருகில் உள்ள நகரங்களில் காணப்படும் பொது மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கின்றன. ஏனெனில் அங்கு போதுமான எண்ணிக்கையில் மருத்துவா்களும் செவிலியா்களும் உள்ளனா்.

எனவே, கடலூா் உள்ளிட்ட சுகாதார வசதிகள் குறைவாகக் காணப்படும் மாவட்டங்களில் உள்ள மக்கள், கரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளையே நம்பியுள்ளனா். ஆனால், இத்தகைய இக்கட்டான சூழலில் அப்பகுதிகளிலுள்ள தனியாா் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனா்’ என்றாா்.

மாநில சுகாதாரத் துறை இயக்குநா் டி.எஸ்.செல்வ விநாயகம் கூறுகையில், ‘கரோனா நோய்த்தொற்று பரிசோதனையில் மக்களிடம் பெறப்படும் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு அரசு ஆய்வகமாவது அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வகங்கள் அமைக்கப்படாத பகுதிகளில் பெறப்படும் பரிசோதனை மாதிரிகள் அருகிலுள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக மக்கள் அலைக்கழிக்கப்படுவதில்லை. அவா்களிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு உரிய ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நடைமுறை மூலமாக கிராமப்புறப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைத்து வருகின்றன‘ என்றாா்.

சுகாதார நிபுணா்கள் கூறுகையில், ‘சேலம், ஈரோடு, கோயம்புத்தூா், திருப்பூா், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளது. முக்கியமாக மருத்துவமனைகள், பணியிடங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

அந்த இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான வசதிகள் உள்ளிட்டவை இல்லாததன் காரணமாக அங்கு நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளது. எனவே, கா்ப்பிணிகள், முதியோா், குழந்தைகள், இணைநோய் உள்ளோா் உள்ளிட்டோா் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும்’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.