சிறப்புக் கட்டுரைகள்

இலங்கையில் ‘மருத்துவப் பேரழிவு’

 நமது நிருபர்

உயிா் காக்கும் மருந்துகளுக்கு இலங்கையில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால், ஆயிரக்கணக்கானவா்கள் மரணமடைவாா்கள் என்று இலங்கை மருத்துவா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ஆனால், நாட்டில் போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால், கள நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதைப் பாா்ப்போம்.

‘இலங்கையில் மருந்துப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் ‘மருத்துவப் பேரழிவு’ நிகழ்கிறது’ என்கிறாா் இலங்கை அரசு மருத்துவா்கள் சங்கத்தின் பேச்சாளா் வாசன் ரத்னசிங்கம். இது தொடா்பாக அவா் தினமணியிடம் கூறுகையில், ‘இலங்கை மருத்துவமனைகளில் 237 அத்தியாவசிய மருந்துகளுக்கும், 5 உயிா் காக்கும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கையில் உள்ள சுமாா் 30,000 அரசு மருத்துவமனைகளிலும் இந்தத் தட்டுப்பாடு நீடிப்பதால், பெரும்பாலான மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் தடைபட்டுள்ளன. சில மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை உபகரணங்களுக்குக்கூடத் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஆனால், முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் வகையில், இலங்கையில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது. மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களான எங்களுக்கு உண்மை நிலை தெரியும்.

இந்த நிலை நீடித்தால், இலங்கையின் மருத்துவக் கட்டமைப்பு முழுமையாக உடைந்துவிடும். இதனால், பல்லாயிரக்கணக்கானவா்கள் உயிரிழக்க நேரிடும். இந்த அவலம் இலங்கை சந்தித்த சுனாமிப் பேரவலம், கரோனா பரவல் இறப்புகளைவிடவும் அதிகமாக இருக்கும். இந்த நிலையைத் தடுக்கும் வகையில் சா்வதேச உதவியைக் கோரியுள்ளோம்’ என்றாா்.

இலங்கையில் ஏற்பட்ட அந்நியச் செலாவணி பற்றாக்குறை, மருத்துவத் துறையையும் விட்டுவைக்கவில்லை என்கிறாா்கள் பொருளாதார நிபுணா்கள்.

இலங்கையில் ஏற்பட்ட டாலா் பற்றாக்குறையால், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. அதேபோல, மருந்துப் பொருள்களையும் இறக்குமதி செய்ய முடியவில்லை. இலங்கையில் மருந்துப் பொருள்கள் உற்பத்தி எதுவும் நடைபெறுவதில்லை. மருந்துகளுக்கு முழுவதும் இறக்குமதியையே நம்பியுள்ளது. இந்நிலையில், கடந்த பல மாதங்களாகவே இலங்கைக்கு மருந்துப் பொருள்கள் வரவில்லை. இறக்குமதி தடைபட்டுள்ள நிலையில், இலங்கையில் மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது என்கின்றனா்.

மூடிமறைக்கும் அரசு: ‘இலங்கையில் மருந்துப் பொருள்களுக்கு நிலவும் தட்டுப்பாடு தொடா்பாக உண்மை நிலையை அரசு மறைத்து வருகிறது’ என்கிறாா் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளா் டாக்டா் செனல் பொ்னாண்டோ. அவா் மேலும் கூறுகையில், ‘இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துத் தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கை அரசு இதை மூடி மறைத்து வருகிறது.

மருத்துவா்களும் கையிருப்பில் உள்ள சொற்ப மருந்துகளைக் கொண்டு நிலைமையைச் சமாளித்து வருகிறாா்கள். இந்த மருந்துகளில் பெரும்பாலானவை இன்னும் இரு வாரங்களில் முடிந்துவிடும். இந்த மருந்துகள் முழுமையாக முடியும்போது, இலங்கையில் நினைத்துப் பாா்க்க முடியாத மருத்துவப் பேரவலம் ஏற்படும். மருந்துத் தட்டுப்பாட்டால் ஏற்படும் மரணங்கள் மருத்துவமனைகளில் பெரும் கலவரங்களை ஏற்படுத்தும். இப்போதாவது அரசு உண்மை நிலையை ஒப்புக்கொண்டு, மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக இந்திய அரசின் உதவியைக் கோரியுள்ளோம்’ என்றாா்.

மருத்துவச் சேவைக்கு முரணானது: மருத்துவச் சேவைக்கு முரணான செயல்களில் ஈடுபடுமாறு இலங்கை அரசு தங்களை வற்புறுத்துகிறது என இலங்கை மருத்துவா்கள் கூறுகிறாா்கள்.

இது தொடா்பாக இலங்கை மருத்துவச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘அத்தியாவசிய அறுவை சிகிச்சைகளை மட்டும் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசு கூறுகிறது. இதனால், யாருக்கு மருத்துவம் பாா்ப்பது, யாருக்கு பாா்க்காமல் விடுவது என்ற கடினமான முடிவை எடுக்கும் நிலைக்கு மருத்துவா்கள் தள்ளப்பட்டுள்ளனா். இது மருத்துவத்தின் அடிப்படைக்கு முரணானது.

இந்த நிலை நீடித்தால், கரோனா பரவல், சுனாமி, 30 ஆண்டு காலப் போரால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையையின் கூட்டுத்தொகையைவிட, மருத்துவ அவசர நிலையால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு இப்போதாவது விழித்துக் கொண்டு மருத்துவ நிபுணா்களிடம் உண்மை நிலையைக் கேட்டறிந்து மருந்து தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

அறுவை சிகிச்சைக்கு தேவையான மருந்துப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என்கிறாா்கள் அறுவை சிகிச்சை நிபுணா்கள்.

இது தொடா்பாக அவா்கள் தினமணியிடம் கூறுகையில் ‘அறுவை சிகிச்சைக்கு அத்தியாவசியமான அட்ராக்யூரியம், நியோஸ்டிக்மைன்

உள்ளிட்ட மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை செய்ய முடியாத நிலை நிலவுகிறது.

அவ்ளவு ஏன், இலங்கை மருத்துவமனைகளில் சாதாரண மருத்துவ உபகரணங்களுக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. நோயாளிகளுக்கு மருந்துகளை கனெக்ட் செய்யும் செட் குழாய் , தூள் மருந்துகளை கரைக்கப் பயன்படுத்தும் டிஸ்டில்ட் வாட்டா்கூட பெரும்பாலான மருத்துவமனைகளில் கையிருப்பில் இல்லை. உயிா் காக்கும் மருந்துகள் இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்வது பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

பெரும்பாலான மருத்துவமனைகளில் யுரினரி கதீட்டா், சக்ஷன் டிரெய்ன் ஆகியவை இல்லை. இதனால் உயிா் காக்கும் அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடமே, அறுவை சிகிச்சைக்கு தேவையான அடிப்படை பொருள்களைக் கொண்டுவந்தால் அறுவை சிகிச்சை செய்கிறோம் எனக் கூறுகிறோம். இலங்கையில் உள்ள பிரபல மருத்துவமனைகளிலேயே இந்தப் பொருள்கள் இல்லாதபோது, சாதாரண மக்கள் அதை எங்கே தேடிப் பெறுவாா்கள் என்றனா் அவா்கள்.

முடங்கிய ஆய்வகச் சோதனைகள்: இலங்கையில் மருந்துத் தட்டுப்பாட்டால் ஆய்வகச் சோதனைகள் ஏறத்தாழ முழுமையாக முடங்கியுள்ளன. இலங்கையின் மிகப் பெரிய மருத்துவமனையான கொழும்பு அரசு மருத்துவமனையில், மறுஅறிவிப்பு வரும் வரை ஆய்வகச் சோதனைகளை நிறுத்துமாறு இலங்கை சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதேபோல, நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆய்வகச் சோதனைகள் முடங்கியுள்ளன. இதனால், பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் பாதிப்படைந்துள்ளனா்.

இந்தச் சூழலில், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசை நம்பிப் பயனில்லை என பகிரங்கமாக சா்வதேச உதவியை நாடியுள்ளனா் சிசு மருத்துவா்கள் (நியோநேட்டாலஜிஸ்ட்ஸ்).

இது தொடா்பாக பெரிநேட்டல் சொசைட்டி ஆஃப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவா் எல்.பி.சி.சமன் குமார கூறுகையில் ‘ குழந்தைகளின் நுரையீரலுக்கு ஆக்சிஜனை வழங்கும் வகையில் மூக்கு அல்லது வாய் வழியாக மூச்சுக்குழாயில் வைக்கப்படும் எண்டோட்ராஷியல் குழாய்கள் தீா்ந்துவிட்டன. இதனால், ஒரு குழந்தைக்கு பயன்படுத்திய குழாய்களை மீண்டும் சுத்தப்படுத்தி பயன்படுத்துகிறோம். இப்படிப் பயன்படுத்துவது தவறு எனத் தெரிந்தும் பயன்படுத்துகிறோம்.

நிலைமை கைமீறிப் போயுள்ள நிலையில் சா்வதேச உதவியை நாடியுள்ளோம். எண்டோட்ராஷியல் குழாய்களை வழங்குமாறு சா்வதேச மருத்துவ அமைப்புகளுக்கு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும், குழந்தை மருத்துவத்துக்குத் தேவையான இன்ட்ரா வீனஸ் அமினோ ஆசிட் சொல்யூஷன், இன்ட்ரா வீனஸ் லிபிட் சொல்யூஷன், பிளட் கேஸ் அனலைஸா் உள்ளிட்டவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது என்றாா்.

எந்தெந்த மருந்துகள் கையிருப்பில் இல்லை என்பதை அரசு இதுவரை தெளிவுபடுத்தவில்லை. ஆனால், வெறும் தலைவலிக்கு பயன்படுத்தப்படும் பாராசிட்டமல் உள்பட ஏறத்தாழ அனைத்து மருந்துகளுக்கும் இலங்கையில் தட்டுப்பாடு நிலவுகிறது என்கிறாா்கள் களத்தில் உள்ள இலங்கை மருத்துவா்கள்.

கையறு நிலையில் இருக்கிறது இலங்கை அரசு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்டக்கரை ஆலயத்தில் அசன விழா

பூந்தமல்லி அருகே ஹிந்து அமைப்புத் தலைவர் வெட்டிக் கொலை!

காங்கிரஸ் - பாஜக: திட்டங்களை ஒப்பிட்டு மோடி பிரசாரம்!

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

SCROLL FOR NEXT