தஞ்சையில் முனைவர் பழ. கோமதிநாயகம் நூலை வெளியிட்டுப் பேசும் நம்மாழ்வார். அருகில் தமிழக பசுமை இயக்கத் தலைவர் டாக்டர் ஜீவானந்தம் (கோப்பிலிருந்து) 
சிறப்புக் கட்டுரைகள்

மானுடம் நிலைத்திருக்க வையத்து புதுமை செய்வோம்!

2003-ல் இயற்கை விவசாயிகள் மாநாட்டுக்காக வேளாண் அறிஞர் நம்மாழ்வார் எழுதிய கடிதம் அப்படியே மீண்டும் சுற்றுச்சூழல் நாளையொட்டி...

கோ. நம்மாழ்வார்
  • 2003-ல் திருச்சியில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டுக்காக அழைப்பு விடுக்கும் விதத்தில் இயற்கை வேளாண் அறிஞர் கோ. நம்மாழ்வார் அனைத்து விவசாயிகளுக்கும் கடிதமொன்றை எழுதினார். அவருடைய அந்தக் கடிதம் அப்படியே மீண்டும் சுற்றுச்சூழல் நாளையொட்டி இன்று... 20 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலைமையில் பெரிதாக மாற்றம் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.

*

எனது நெஞ்சிற்கினிய உள்ளங்களுக்கு, இது ஒரு திறந்த அஞ்சல். உங்களுக்குள்ள நேரப் பற்றாக்குறை நான் அறிந்ததே. உடம்பைச் சுற்றி மொல்லை இருக்குது ஒன்னுக்கு ஆயிரமா என்று எரியோட்டுத் தாத்தா பாடியது நினைவில் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் பல வேலைகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி நமது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டியுள்ளது.

நீண்டதொரு கடிதத்தின் வழியாக உங்கள் நெஞ்சத்தைத் தொட்டுப் பார்க்க விரும்புகிறேன். நேரம் ஒதுக்கிப் படியுங்கள். ஒதுக்கி வைத்து விடாதீர்கள். படித்துவிட்டு கீழே வையுங்கள். கீழே வைக்கும் முன்பு முடிவெடுங்கள். உங்களின் முடிவு பூமியின் இந்தப் பகுதியில் மாற்றம் நிகழத் துணை செய்யப் போகிறது. படியுங்கள்.

ஒரு கவிஞன் இப்படி எழுதினான்...

காலம் என்பது நீண்டதொரு மணல் பாதை. அதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது அடிச்சுவட்டை விட்டுச் செல்கிறார்கள். அப்படிச் சுவட்டை விட்டுச் சென்றவர்களில் பாரதியும் ஒருவன். அவனது நினைவு நாளான செப்டம்பர் பதினொன்று அன்று உங்களுடன் நெஞ்சூறும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவன் இப்படி எழுதினான்.

மானுடரே நீவிர்

பாடு படல் வேண்டா

ஊனுடலை வருத்தாதீர்

உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழிலிங்கே

அன்பு செய்தல் கண்டீர்!

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே விடுதலைப் பெற்று விட்டதாகக் கனவு கண்ட பாரதியின் கருத்தைப் புறந்தள்ளினோம்.

காக்கைக் குருவி எங்கள் சாதி - நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்

என்று பாரதி சொன்னான்.

இன்றைய நிலைமை என்ன? குடிக்கத் தண்ணீர் இன்றி மக்கள் மடிகிறார்கள் அல்லது தண்ணீர் குடித்ததால் மடிகிறார்கள் - குடிதண்ணீரும் நஞ்சு.

யார் சொல் கேட்டு இப்படிப் பச்சையாய் புரட்சி செய்தோம்? எதற்காக? யாருக்காக?

மக்களுக்கு உணவளிப்பதற்காகவே பச்சைப் புரட்சி என்று வாய் கிழியப் பேசினார்கள். இவர்களது போலித்தனமான தேசப்பற்று குறித்தும் பாரதி முன்கூட்டியே பாடி வைத்துள்ளான்.

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத்

தடுக்க முயற்சி செய்யார்!

வாயைப் பிளந்து சும்மா-கிளியே

வந்தே மாதரம் என்பார்!

மேற்கு நாட்டினர் காட்டியவழி நமக்கு புதியதல்ல. இருநூறு ஆண்டுகளாக நம் நாட்டினர்தம் உழைப்பைக் கொள்ளை கொண்டுபோன வெள்ளை நிறத்தவரால் நேர்ந்த கொடுமையையும் பாரதி எழுதியுள்ளான்.

ஆப்பிரிக்கத்து காப்பிரி நாட்டிலும்

தென் முனை அடுத்த தீவுகள் பலவினும் பூமிப் பந்தின் கீழ்புறத்துள்ள

பற்பல தீவினும் பரவி இவ்வெளியே

தமிழ்ச் சாதி தடியுதை யுண்டும்

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்......

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடும் செய்தியும் கேட்கிறேன்.

- என்று பாரதி பாடுகிறான்.

ஏதோ இன்று நடப்பது போல் இருக்கிறது. இன்னும் பிழைப்புக்காக அன்னிய சீமைக்குச் செல்லுகிறார்கள்.

வாழி எந்தன் வளநாடு

மகளாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி

ஒழியாய் வாழி காவேரி

மாதவி இப்படிப் பாடியதாக சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளார் எழுதினார். காவிரித்தாய் சோழ வளநாட்டைத் தன் மகள் போல வளர்க்கிறாள் என்று பாடினார். இன்று காவிரியின் நிலை என்ன? காவிரித்தாய் சோழ நாட்டை மட்டும் வளர்க்கவில்லை. காவிரியும் அதன் துணை ஆறுகளும், கிளை ஆறுகளுமாக தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பாகமாக விரிந்து கிடக்கின்றன. தமிழ் நாட்டில் நீர் பாய்ச்சி உழவு நடைபெறும் பரப்பில் அறுபது விழுக்காடு இந்த ஆறுகளின் துணை கொண்டு நடைபெறுகின்றன. காவிரி, குடகு மலையில் தோன்றி 739 கிலோ மீட்டர் தொலைவு நடந்து வங்கக் கடலில் சங்கமம் ஆகிறாள். கர்நாடகத்தில் பயணம் 320 கிலோ மீட்டர், தமிழ்நாட்டில் 416 கிலோ மீட்டர்.

நாட்டின் ஐம்பதாண்டு காலத் திட்டமிட்ட செயல்பாடுகளால் காவிரித்தாயின் நடமாட்டம் கர்நாடகத்தோடு முடங்கிப் போனது. தமிழகத்து நீரோட்டங்கள் ஆலைக் கழிவுகளாலும் நகரத்துச் சாக்கடைகளாலும் இறுதி மூச்சுவிட்டுக் கொண்டிருக்கின்றன. பாலாறு, தென்பெண்ணை, பரணி தமிழ் வையை ஆறுகளின் நிலையும் இதுவேதான். 28 மாவட்டங்களிலும் வறட்சி. இந்த நிலையில் இந்த அரக்கர்களின் கைக்கு எட்டாத நிலத்தையும் நீரையும் காற்றையும் கம்பெனிகளுக்கு கைமாற்றிக் கொடுக்கிறார்கள் அல்லது இரசாயன உப்பு அல்லது ஆட்கொல்லி நஞ்சுகளால் நிரப்பி உயிரினத்திற்கே நஞ்சூட்டுகிறார்கள்.

இந்த நிலையில் தான் பாரதியை நினைத்துப் பார்க்கிறோம். அவன் எழுதுகிறான்

இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்

இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்

அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்

அவ்டத மூலிகை பூண்டுபுல் யாவையும்

எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?

என்று கூறி இயற்கையை நம் கண் முன்பு கொண்டு வந்து நிறுத்தும் பாரதி, பயிர் தொழில் எப்படி இருக்க வேண்டுமென்றும் சொல்கிறான்.

மானுடர் உழாவிடினும் வித்து நாடாவிடினும்

வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர் பாய்ச்சா விடினும்

நெற்கள் புற்கள் மலிந்திருக்கும்.

மனிதர் உழ வேண்டாம். விதைக்க வேண்டாம். வரப்பு கட்ட வேண்டாம். நீர் பாய்ச்ச வேண்டாம். அப்போதும் நெல்லும் புல்லும் வகை வகையாய் விளையும் என்று கூறும் பாரதி அது நிகழும் விதத்தையும் விளக்குகிறான்.

வானுலகு நீர் தருமேல் மண்மீது மரங்கள்

வகை வகையாக நெற்கள் புற்கள் மலிந்திருக்கு மன்றே?

இப்படிப் பாடியவன் நூற்றாண்டுக்கு முந்திய நிலைமையையும் விளக்குகிறான்.

இனிய பொழில்கள் நெடிய வயல்கள்

எண்ணரும் பெறும் நாடு!

கனியும் கிழங்கும் காய்கறிகளும்

கணக்கின்றித் தரும் நாடு!

இந்த வள நாட்டைத்தான் பாலையாக்கியுள்ளோம்.

மரங்கள் மிகுந்து, மழை மிகுந்து அதனால் நெல்லும் புல்லும் மலிந்திருந்தன. அவற்றைக் கொள்ளை கொண்டுபோன வெள்ளையர்கள் முதலில் காட்டை அழித்தார்கள். 1947ல் அவர்கள் விட்டுச் சென்ற போது இருந்த காடுகள் நம் நிலப்பரப்பில் 23 விழுக்காடு. அதனை 33 விழுக்காடு ஆக்குவதற்குத் திட்டம் தீட்டிப் பலருக்கு காக்கி உடுப்பு மாட்டிக் கையில் அதிகாரமும் துப்பாக்கியும் கொடுத்தோம். இமயமலை அடிவாரத்தில் பயிற்சி அளித்தோம். மக்கள் வரிப் பணத்தில் நிதி ஒதுக்கினோம். காடு வெறும் எட்டு விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளது. காற்றுவெளி வெப்பக் கூடாரமாக மாறியுள்ளது. சென்ற கோடைப் பருவத்தில் அனல் காற்று தாக்கி அழிவை ஏற்படுத்தியது.

விடுதலை வருவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை பற்றி நெட்டைக் கணவு கண்டான் பாரதி.

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்

எல்லாரும் சமம் என்பது உறுதியாச்சு!

விழலுக்கு நீர் பாய்ச்சி மாய மாட்டோம்.

வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்.

- இது அவன் கனவு.

உணவைப் பறிக்கும் உலகமயமாக்கம்

விழல் தண்ணீரில் தான் வளர்ந்து நிற்கிறது. அதற்கு ஏன் நீர்ப் பாய்ச்சி மாயவேண்டும்? வீணர்கள் நீலம், நீர் காற்று இரத்தத்தை நஞ்சாக்கிப் பணம் குவிக்கிறார்கள் அல்லது நஞ்சுகளை விற்றே பணம் குவிக்கிறார்கள். அவர்களுக்காக எதற்கு உழைத்து உடல் ஓயவேண்டும். இப்படிக் கேட்டான் பாரதி. ஆனால் 1947ல் தொடங்கி நடந்தது என்ன? உழுது விதைத்து அறுப்பவர்களுக்கு உணவு இல்லை. பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வமெல்லாம் உண்டு என்னும் நிலைமையையே உருவாக்கினோம்.

எங்கள் செல்வ மெல்லாம் கொள்ளை கொண்டு

போகவோ? நாங்கள் சாகவோ?

- என்று பாரதி பாடினான்.

வெள்ளையரைச் சாடினான். ஆனால் இன்று?...

நமது ஆற்று நீரையும் நிலத்தடி நீரையும் பாட்டிலில் அடைந்து நம்மிடமே விற்றுக் கோடி கோடியாய்க் குவித்து நாடெங்கும் ஊழல் பெருக்கும் வியாபாரிகளுக்கு வழி திறந்து வைக்கிறோம். இதற்கு பெயர் உலகமயமாக்கம்!!!

தமிழ் பண்பிதுவல்லவே!

வெண்கொற்றைக் குடைபிடிக்கும் வேந்தன் ஆனாலும் அன்றி

விலங்குகளை வேட்டையாடும் வேடன் ஆனாலும்

உண்பது நாழி உடுப்பது இரண்டே

இருப்பிடம், பிற தேவைகளும் இப்படித்தான்!

- என்று புறநானூற்றுப் புலவன் பாடினான்.

இதைப் புரிந்து கொண்டவன் தான் அறிவாளி. ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்? என்று வள்ளுவர் எழுதினார். இப்படிப்பட்ட உண்மைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கடமை நமக்கு உண்டு.

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு

வாழும் மனிதர்களுக்கு எல்லாம்.

பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்

பாரை உயர்த்திடல் வேண்டும்

- என்பது பாரதி பாடல்

மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்

சங்கமம் ஆகு - மானுட சமுத்திரம் நானென்று கூவு

- என்று பாரதிதாசன் பாடினானே.

அப்படியொரு விழிப்புணர்வுக் கல்வியை நாடெங்கும் பரப்ப வேண்டியுள்ளது. பாரதி சொன்னது போல நாமிருக்கும் நாடு நமது என்பது அறிந்தோமா? இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோமா? சந்தேகம் எழும்புகிறது.

* நமது நிலங்கள் மலடாகிப் போயுள்ளது

* நமது நிலத்தடி நீரும் மேற்பரப்பு நீரோட்டமும் குறைந்து போய் விட்டன. மேலும் குடித்தாலே நோயுண்டு பண்ணுகின்றன.

* தானியம், காய், கனி, பருப்பு, முட்டை, பால், தாய்ப்பால் என உண்ணும் பொருட்கள் அத்தனையும் நஞ்சாகிப் போயின.

* மக்களும் கால்நடைகளும் நோய்வாய்ப்பட்டுள்ளார்கள்

* உழவர் கூட்டம் 65 கோடி மட்டுமல்ல நாடும் கூட பட்ட கடனிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது.

* விதைகள் திருடு போய் விட்டன.

* கால் நடை இனங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

* மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு

* காட்டு மரங்களும் விலை மதிப்பற்ற பொருட்களும் களவாடப்பட்டு விட்டன.

* நீர் நிலைகள் மேடுபடுத்தப்பட்டுக் கட்டடங்களாகி விட்டன.

* ஆற்று நீரும் ஊற்று நீரும் தனியார் மயமாக்கப்படுகின்றன.

* உணவு உற்பத்தி செய்யப்பட்ட விளைநிலங்கள் வாணிகப்பயிருக்கு மாற்றப்படுகின்றன.

* பணக்கார நாட்டு நுகர்வுக்காக பூவும் புகையிலும் மீனும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

* நமது மூலிகைகளுக்கு அந்நியக் கம்பெனிகள் சொத்துரிமை கொண்டாடுகின்றன.

* விளை நிலங்களில் கல்நட்டு அவை முள் முளைக்கும் தரிசாக்கப்படுகின்றன.

* பிளாஸ்டிக் காகிதங்களால் நிலப்பரப்பும் நீர்ப்பரப்பும் நாசப்படுத்தப்படுகின்றன.

* நில உச்ச வரம்புச் சட்டம் மீறப்பட்டு நிலங்களைக் கம்பெனிகள் நீண்ட காலக் குத்தகைக்கு எடுத்து இலாபம் குவிக்க மைய அரசு கொள்கை அறிவித்துள்ளது.

* மாடுகளை நவீன முறையில் இறைச்சியாக்க பிரதமருக்கு ஆலோசனை போய் உள்ளது.

சுருங்கச் சொன்னால், பெரியதொரு பஞ்சத்துக்கும் பட்டினிச் சாவுக்கும் அடிப்படை போடப்பட்டுவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் தான்

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - இங்கு

வாழும் மனிதருக் கொல்லாம்

பல துறைகளிலும் பயிற்சி பெறுவோம்

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

ஞானம் வந்தால் பின் நமக்கு எது வேண்டும்?

என்ற முழக்கத்தோடு நாம் செயல்பட வேண்டியுள்ளது.

கல்வியை எங்கு தொடங்குவது?

உழவில் தான் தொடங்க வேண்டும். உழவுத் தொழில் துன்பம் மிகுந்தது. ஆனாலும் அதுதான் தலையானது. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. உழவை எளிதாக்குவதற்கு இயற்கை வழி உணவு உற்பத்தி கைகொடுக்கிறது.

* மண்புழு மண்ணைப் பொன்னாக்குகிறது.

* பயிர்ச் செடிகள் உரச்செடிகளாகும் போது கட்டி தட்டி போன நிலம் வளம் பெறுவதுடன் பொலபொலப்பும் ஆகிறது.

* மூடாக்கு உத்திகள் நீர்த் தேவையைக் குறைந்து, களையை ஒடுக்கி ஊட்டப்பற்றாக்குறையை போக்கிட உதவுகின்றன.

* அழுதக் கரைசல் பூச்சி நோய்களிடம் இருந்து பயிரைப் பாதுகாப்பதுடன் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.

* மூலிகை பூச்சி விரட்டி நிலம், நீர், உணவு நஞ்சாவதைத் தடுப்பதுடன் உழவர் கடனாளியாவதையும் தடுக்கிறது.

* ஆவூட்டம், ஆட்டூட்டம், மக்களையும் கால்நடைகளையும், பயிர்களையும் சாவிலிருந்து காக்கின்றன.

* மூலிகைச் சாகுபடியும் மருத்துவமும் உயிர்தொழுந்து வருகின்றன.

* இவை பெரும் பகுதி மக்கள் வாழும் ஊர்ப்புறங்களைத் தற்சார்பு நிலைக்கு உயர்த்தும். பிழைப்பு தேடிப் பட்டணம் போனவர்களை நலமுடன் வாழ நாட்டுப்புறத்துக்கு அழைக்கும்.

அறிவு அற்றம் காக்கும் கருவி

இதைக் கோடிக்கணக்கானவர்களுக்கு கைமாற்றிக் கொடுக்க வேண்டியுள்ளது. இந்தப் பணியில் இலட்சக்கணக்கானவர்களை களமிறக்க வேண்டியுள்ளது. இந்த இலட்சக்கணக்கானவர்களின் பணி கருமேகத்தின் பணியுடன் ஒப்பிட வேண்டியது. நீங்கள் என்ன கொடுக்கப் போகிறீர்கள். என்று எதிர்பார்த்தா மேகம் மழையைத் தருகின்றது? கைமாறு கருதாத மேகம் தன் கடமையைச் செய்கிறது. இத்தகைய கைமாறு கருதாது பாடுபடும் மாந்தர்க்கு நாம் கல்வியளிக்க வேண்டியுள்ளது.

அதன் முதற்கட்டமாக உழவினார் மாநாட்டைக் கூட்டுகிறோம். அத்துடன் தமிழின வாழ்வியல் இயக்கத்தின் ஆண்டு விழாவையும் இணைக்கிறோம். நூல் வெளியிட வேண்டியுள்ளது. பத்திரிக்கை வெளிகொண்டு வரவுள்ளோம்.

ஆன்றோர்களின் சிறப்புரைக்கு ஏற்பாடு செய்கிறோம். கலைநிகழ்ச்சிகளும் உண்டு. கண்காட்சியும் உண்டு. தமிழ்நாடு முழுவதும் உள்ளவர்களை ஒன்று கூட்டத் திட்டமிடுகிறோம். தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி நகரை ஒட்டி ஏற்பாடு செய்கிறோம். இதற்காக அக்டோபர் 17,18,19 தேதிகள் குறிக்கப்பட்டுள்ளன.

மாநாட்டில் நாட்டின் நிலைமையை அலசுவோம். பூம்புகார் முதல் கல்லணை வரையிலான நடைப்பயணம் பலரது நட்பை ஈட்டித்தந்துள்ளது. தயக்கத்தில் இருந்த மக்களுக்கு ஊக்கமூட்டியுள்ளது. கடந்ததையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது. எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டியுள்ளது. அனைத்திந்திய உழவியல் இயக்கம் கருக்கொண்டுள்ளது. அதை உருவாக்கி வளர்த்திட்டால் நன்மை இருக்கிறது.

இப்போது உங்கள் முன் கேள்வி? உங்கள் பங்கு என்னவாக இருக்கப்போகிறது.

பலர் பலவிதமான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பயிற்சி மையத்துக்கு நான் இடம் தருகிறேன் என்கிறார்கள். உணவு ஏற்பாடு என் பொறுப்பு என்கிறார்கள். கண்காட்சிக்கு எனக்கு இடம் என்கிறார்கள். விருந்தினர் கவனிப்பு என் பணி என்கிறார்கள். அழைப்பு அச்சடிப்பு என் பணி. நூல் வெளிக் கொண்டுவருவது எனது பொறுப்பு. ஓரளவு நிதி திரட்டுவது என் பொறுப்பு. ஒலி, ஒளி நாடா தயாரிப்பது எனது வேலை. ஏதாவது ஒரு செலவை எனக்கு ஒதுக்குங்கள். இப்படி பொறுப்புகளைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

நீங்கள் கூட ஒரு சுமையை ஏற்க வேண்டுமென்பது எனது வேண்டுகோள். சிந்தனை பண்ணுங்கள். உங்களைப் போன்றவர்கள் தான் சான்றாண்மை என்னும் தேருக்குச் சக்கரம் போன்றவர்கள் என்று வள்ளுவர் கூறுகிறார்.

ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார்.

சக்கரம் சுழலட்டும். சாதனை புரிவோம்.

மீண்டும் பாரதியின் பாடல் வரிகளை நினைவில் பதிப்போம்.

மானுடரே!

உங்களுக்கு தொழிலிங்கே

அன்பு செய்தல் கண்டீர்!

பதிலை எதிர்பார்த்திருப்பேன். புதியதோர் உலகம் செய்வோம்.

என்றும் அன்புடன்,

_ கோ. நம்மாழ்வார்

ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் நாள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக மாநாடு: 200 செவிலியர்கள் உள்பட 600 பேர் கொண்ட மருத்துவக் குழு!

பக்தா்கள் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன: இந்து முன்னணி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி!

திண்டுக்கல் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: கொடைக்கானலில் உணவக உரிமையாளா் கைது

SCROLL FOR NEXT