கே.பி. கூத்தலிங்கம்
கவிதை குறித்த மிக நீண்ட பாரம்பரியம் நம்மிடம் உள்ளது. கவிதையியல் பற்றிய நெடிய கோட்பாடுகள் காலந்தோறும் உலகம் முழுவதும் எழுதப்பட்டு வருகின்றன என்றபோதிலும் இதுதான் கவிதை என எந்த ஒரு மொழியியல் வல்லுநராலும் வரையறுத்துச் சொல்ல இயலவில்லை. கவிதை கட்டற்றது என்பதே இதன் காரணம். ஒவ்வொரு கவிஞரும் அவருக்கான மெய்யான கவிதைத் தடத்தைத் தேடிக் கண்டடைய அவரவரும் தனித்த பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. யாப்பின் ஒத்திசைவில் கட்டமைக்கப்பட்ட கவிதை, கட்டற்ற நாட்டுப்புற பாடல் என்பது வெறும் மேலோட்டமான வகைமையல்ல. அவரவர் பண்பாடு மற்றும் வாழ்வியல் சார்ந்த மனவெளிப்பாடு. சந்தியா பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் ‘தவிப்பின் தடாகத்தில் மலர்ந்தவை’ என்னும் சுமித்ராவின் இரண்டாவது கவிதை நூல் தமிழில் முன்னெழுதப்பட்ட கவிதைகளின் சாயல்களற்று தன்னெழுச்சியாக, மரபும் நாட்டுப்புற இலக்கியக் கூறுகளும் இயைந்த கவிதைகளாக வெளிப்பட்டுள்ளன. இவ்வகையில் இவை தனித்தன்மை வாய்ந்தவைகளாக தெரிகின்றன.
ஒரு பெண்ணின் பெருவிழைவுடன் ஒப்பிட இயலாத விதத்தில் ஆண் அவனின் ஆற்றலைப் பொருத்தமட்டில் எல்லைக்குட்பட்டவனாக இருக்கிறான். பெண் என்பவள் பெருங்கடல் எனில் ஆண் அதில் மிதக்கும் ஒரு சிறு படகு. அவளை முற்றிலுமாக அறிந்துணர முழு வாழ்க்கையும் அவனுக்குப் போதாது. பெண் பெருவனம் எனில் ஆண் அந்த வனத்தினுள் அலையும் ஒரு சிற்றுயிரி. எப்பொழுதாவது பெண் தன் எல்லையற்ற தன்மையை விரிக்கும் பொழுது ஆண் அதனுள் அமிழ்ந்து கரையேறவியலாதவனாக தத்தளிப்பான். ஆண், ஆண்மை என்பதெல்லாம் அந்த எல்லையற்ற தன்மையை எதிரிட்டு வெல்ல முடியாமல் திணறுகிறது.
மலராகவே
மலர்ந்து நிற்கும்
மயில்கொன்றை
மரம் போல்
உடல் முழுதுமாய்
மலர்ந்து நிற்கிறேன்
நீயோ காடு முழுவதும்
துழாவி விட்டு
களைத்து வந்து
வேர்களில் விழுகிறாய்.
இதற்கு முன்னர் உடல் அரசியல் சார்ந்து எழுதிய பல பெண் கவிஞர்கள் போல இவர் வெளிப்படையான சொற்களைப் பயன்படுத்துவதில்லை. உறுத்தலற்ற சொற்கள், அழகான உருவகங்கள், வரிகளை வனைவதில் இசைத் தன்மை இவற்றின் வழியாக இவர் கட்டமைக்கும் கவிதைக்கான அழகியல் சங்க இலக்கியத் தன்மை வாய்ந்தவை. மரபுச் சிதைவிலிருந்து மரபு ஒழுங்கு நோக்கி வாசகனை அழைத்துச் செல்வது.
சுமித்ராவின் கவிதைகள் தன்னியல்பாக முகிழ்ப்பவை. வாசிப்பின் வழியாக கவிதை பயில்தலின் எந்தச் சாயலும் இவரது கவிதைகளில் உணரப்படுவதில்லை. அவரது இதயத்தின் மெய்யான படைப்பு மையத்திலிருந்து பிரவகிப்பவை இக்கவிதைகள். ஆன்மிகம் மற்றும் அறிவியல் ஆகிய இரண்டு முரண்களும் சங்கமித்து ஒத்துணர்வுடன் தழுவிக்கொள்கின்றன.
எவ்வொளியும் ஊடுருவவியலா
நிழல்களின் கருமையில்
நீ எப்படி மலர்ந்தாய்
என்பதுதான்
விடையில்லாப் பெருவினா
கருவறைக்குள் ஒளி பாய்ச்சும் இக்கவிதைக்குள் ஒரு சிசு இருக்கிறது, ஒரு இலக்கியப் படைப்பு இருக்கிறது, இந்தப் பிரபஞ்சமும் இருக்கிறது. சித்தர் பாடல்களின் ஆழ்ந்த தத்துவம் கூட இருக்கிறது. இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால் ஒரு மாபெரும் பேரிருள் மட்டுமே இருந்ததாக அறிவியலின் 'பெரு வெடிப்பு' கோட்பாடு சொல்கிறது. அந்த எல்லையற்ற காரிருளின் கருப்பையிலிருந்து இந்தப் பிரபஞ்சம் ஈன்றெடெடுக்கப்பட்டு, பிறகு அதிலிருந்து காற்று, கடல், மலை, காடு, நிலம் இவையெல்லாம் மெள்ள மெள்ள உருவாயின. இந்தப் புவிக்கோளமும் ஒரு கருவறைதான். இதில் பொழியப்படும் விதைகள் மண்ணின் இருளை துளைத்து முளைவிட்டு தளிர்க்கின்றன. பெண்ணின் சுரோனித குகை வழியாகப் பயணிக்கும் ஒரு துளி ஒளி கருவறையின் கதகதப்புக்குள் தாய்மையின் பரிவில் தங்கிக்கொள்கிறது.
திசைகளுக்குள் அடக்கப்பட முடியாத கருவறையின் அந்தக் காரிருளை காளி என்று அழைக்கிறது நம் இந்திய ஞான மரபு. அத்தகைய காரிருள் உள்ளிருந்துதான் மகாகவி காளிதாசனின் உன்னதக் கவிதைகள் பிறந்தன. தன் எல்லையற்ற தன்மையை ஏதோ ஒரு நல்வாய்ப்பான தருணத்தில் உணர்ந்துகொள்ளும் சாத்தியம் பெண்ணுக்கு எளிதில் நிகழ்ந்துவிடுகிறது. அவளது தாய்மை இயல்பும் கருக்கொண்டு படைக்கும் சக்தி கொண்ட உடலும் கருணையும் அன்பும் ததும்பும் மனமும் அவளுக்கு அத்தகைய தர்சனத்திற்கு இட்டுச்செல்கிறது. பள்ளி முடிந்து இல்லம் திரும்பும் மகளை எதிர்கொண்டழைக்க காத்திருக்கும் தாயின் விழி வாசல் வழியாக ஏராளமான மகள்கள் கடந்து போகிறார்கள். ஒரே சீருடையில் அதே இரட்டைச் சடையில். தாய்க்குள் உருவப் பேதங்கள் கரைந்து எல்லையற்ற ஒருமை நிகழ்கிறது.
மகள் வருகிறாள்
ஒரு மகள்
இரண்டு மூன்றென
எண்ணிக்கைக் கூடி
என்னைச் சுற்றி
இப்பொழுது
ஓராயிரம் மகள்கள்
அதில் ஒரு மகளை
அழைத்து வந்தேன்.
புதுமையின் வரவுக்கும் புதிய சூழலுக்கும் அடிமைப்படுத்தப்படும்பொழுது மானுடம் தனக்குள் இருக்கும் எல்லையற்ற பேராற்றலையும் மரபணுக்குள் பதிந்திருக்கும் நுட்பமான உணர்வையும் இழந்துவிட்டு ஆற்றலற்றவர்களாகவும் அறிவு நுட்பமற்றவர்களாகவும் ஆகிவிடுவதை யானையை உருவகமாகக் கொண்ட கவிதை உணர்த்துகிறது. மனிதர்களின் படைப்பாற்றலையும் அவர்களது தனித் திறனையும் அழித்து அவர்கள் எல்லாரையும் வேலைக்காரர்களாக மட்டும் ஆக்கும் தந்திரத்தை முதலாளித்துவம் தொடர்ந்து செயலாற்றி வருகிறது. மனிதர்களின் தனித்த சிந்தனைத் திறனை முற்றிலுமாக அழித்து ஒழித்து விட்ட நிலையில், முதலாளித்துவம் அவர்களை தன் விருப்பம்போல் கூலியாட்களாகப் பயன்படுத்திக் கொள்வதின் போக்கை, காடு என்ற பிரமாண்டத்திலிருந்து யானையைப் பிரித்தெடுத்து வந்து பிச்சையெடுக்க வைக்கும் அறமற்ற தன்மையைச் சொல்லும் கவிதை வழியாக உணர்த்தப்படுகிறது.
பிச்சை யெடுத்தே பழகிய
பெருங்கன நாட்களில்
கசைமொழி பழகிய எனக்கு
காட்டின் மொழி புரிந்திடவில்லை
பிரபஞ்சப் பெருவிரிவின் ஒவ்வொரு அம்சமும் ஒன்றுக்குள் ஒன்றாக ஒப்புரவு கொண்டிருப்பதின் அழகைக் குறித்து சுமித்ராவின் பல கவிதைகள் பேசுகின்றன. இப்பூவுலகில் முற்றும் முழுதாக எதுவும் அழிந்துவிடுவதில்லை. நம் கண்களுக்கு அழிவதாக தோன்றும் ஒவ்வொன்றையும் பூமி அன்னை புதுப்புது வடிவங்களில் ஈன்றெடுக்கிறாள். உதிரும் ஒரு சருகு இன்னொரு மரத்தின் வேர்களால் உண்ணப்பட்டு அதன் கிளையில் மலராகவோ கனியாகவோ பிறக்கிறது.
இரண்டு வேறுபட்ட தாவர உடலங்களை உறவால் இணைக்கிறது உதிர்ந்த ஒற்றைச் சருகு. பிரபஞ்ச இயக்கத்தில் மானிடப் பிறப்பும் இத்தகையதுதான் என்னும் நுட்பத்தை உருவகமாக்கும் இந்தக் கவிதை வழியாக மனித சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பேதங்கள் செயற்கையானவை என்பதை உணர்ந்துகொள்ள இயலும். கடலும் மலையும் வனமும் வயலும் காற்று வெளியும் வானமும் கண்ணுக்குத் தெரியாத ஒரு ஒற்றைச் சரடில் கோர்க்கப்பட்டிருக்கிறது. அந்த ஒற்றைச் சரடின் உறவு இழையை மெல்லிய அடிக்கோடிட்டு நம் கண்களுக்கு காட்டுகிறது இந்தக் கவிதை..
உதிர்ந்து சருகாகி
துளிர்விடும் சிறு செடிக்கு
உணவாகிப் போன இலையொன்று
வெட்டுண்டு உயிர்நீத்த
விருட்சத்தின் உறவிழையொன்றை
வேருக்குள் கோர்க்கிறது.
சுமித்ராவின் முதல் தொகுப்பின் கவிதைகள் போலவே, இதிலும் பெரும்பாலான கவிதைகள் இசை லயத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதோடு, அவை தன்னியல்பாக நிகழ்ந்திருக்கின்றன. அருணகிரியின் சந்தத்தை வரமாகப் பெற்றது போல அந்தக் கவிதைகளுக்குள் ஒருவித ரிதம் வாசிப்பின் மௌனத்தைக் கடந்தும் இசைக்கிறது.
களித்து காடளந்த
தடத்தின் நினைவுகளனைத்தும்
கண்ணீராய் கரைந்து
கால்நனைத்து ஓடும்!
முதுமையின் துயர் குறித்துப் பேசும் மேற்கண்ட கவிதைக்குள், இளமைக் காலத்தின் இனிமையான தருணங்களை வயோதிகத்தின் தனிமையில் மீள்நினைவு கொள்வதை விரைவான கவிதை வரிகளின் சந்தத்தால் கோர்த்தளித்திருப்பது வழியாக வாழ்க்கையின் மகிழ்ச்சியான பருவங்கள் விரைந்து கடந்து சென்றுவிடுவதை நுட்பமாக உணர்த்துகிறது. படைப்பாக்கத்தின் தன்னெழுச்சியான போக்கில் இது திட்டமிடப்படாமல் கவிஞருக்குள் நிகழ்ந்திருக்கிறது. பெண் கவி ஆளுமைகள் உருவாக்கும் படைப்புகளிருந்து மட்டுமே பெண்ணின் உடல், மனம், அவர்களது காதலியல்பு மற்றும் காம விழைவு இவற்றின் உண்மைத் தன்மையை உணர்ந்துகொள்ளவியலும்.
பெண் பற்றி ஆண்படைப்பாளிகள் வெற்று வர்ணனைகளையும் பெண்ணின் உடல் வனப்பு குறித்த மேலோட்டமான அலங்கார விவரிப்புகளை மட்டுமே உருவாக்க முடிந்திருக்கிறது. ஆனால் பெண்களின் மிகவும் உள்ளார்ந்த மனவியல் நுட்பங்களை அவர்களால் தொட முடிந்ததில்லை. இணைவு விழைதலுக்கான ஏக்கத்தில் பெண்ணுக்குள் விகசித்துப் பெருகும் கட்டற்ற பேராவல் குறித்துப் பேசும் இந்தக் கவிதை வழியாக பெண் எய்தும் பெருவிழைவின் பிரமாண்டத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது.
காட்டாற்று வெள்ளம்போல்
கரைகள் உடைத்து
காடு கழனியென
அத்தனையும் அரித்துக்கொண்டு
வந்து சேர்வேன்
நீ என்னை மட்டும்
அள்ளிக்கொள்
கடலே!
இதில் கடல் என்னும் படிமம் ஆணை குறிப்பதல்ல. பெண்ணுக்குள் கட்டற்று பொங்கும் இணைவு விழைதலுக்கான பேராற்றல். தனக்குள் ஒரு பெருங்கடலை விரிக்கும் வல்லமை பெண்ணுக்கே வாய்த்திருக்கிறது. தவிப்பின் தடாகம் தகிப்பின் பெருங்கடலாக பேருருவம் கொள்கிறது. தன்னை மீட்டு தனக்குள் கிளர்ந்தெழச் செய்த பெருங்கடலிடம் தன்னை தழுவிக் கொள்ளச் சொல்லி கோரிக்கை வைக்கிறாள். திசைகளுக்குள் அடங்காத நீர்ப்பெருவெளியாக பெண் தன்னை விரிக்கும்பொழுது ஆண் அதில் தத்தளித்து மிதக்கும் சிறு ஓடம் மட்டுமாக ஆகிறான். கரைகள் தகர்த்து எல்லைகள் கடக்க தன் எண்ணற்ற கரங்களை விரிப்பவள் சக்தி. வட கிழக்குப் பருவமழை வரவிருப்பதை முன்னறிவிக்கும் ஒரு சிறு பறவையாகிய காச்சுலு பற்றியும் ஒரு கவிதை இடம் பெற்றிருக்கிறது. அடர் சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களின் சேர்க்கை இதன் வயிறு, மேல் வயிறு, இறக்கைகளை அணி செய்திருக்க, மருத நிலத்தின் புதர்களில் தத்தித் தத்தித் திரியும். காச்சுலு என்னும் அந்த அழகுப் பறவை, ஆசையூட்டல் வழியாக கூண்டுக்குள் அகப்படுத்தபட்டு அடிமையாக்கப்படும் பெண்ணின் உருவகமாகக் காட்டப்படுகிறது.
கண்ணி வைத்துப் பிடித்தென்ன
காதல் கொண்டு வளர்த்திடவா?
“புடிச்ச காட்டில
கொண்டு விடறேன்
ஆடு குருவி ஆடு” . . . . . . . . . . .
ஆடித்தான் தீர்த்ததந்த
அப்பாவி மழைக்குருவி
ஒரு கவிஞர் தன் திணைக்குரிய மரம், மலர், பறவை, நீர் நிலை, மலை இவற்றை கவிதையின் கருப்பொருளோடு இயைந்துகொள்ளும் விதத்தில் காட்சியாக்குவதின் மரபுத் தொடர்ச்சியாக இந்தக் கவிதை திகழ்கிறது.
உடலிலிருந்து உயிர் விடை பெற்றுச்செல்ல காத்திருக்கும் கடைசி தருணத்தில் உள்ளே நிகழ்ந்தபடியிருக்கும் மனவோட்டம் குறித்து அறிவியல் உலகத்தால் சிறிதும் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. ஆனால் இந்திய ஞான மரபு அதுபற்றி துல்லியமாக உணர்ந்திருக்கிறது. அந்தக் கடைசி வாய்ப்பிலும் மனம் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறது. நினைவு தெரிந்த நாள்களிலிருந்து ஒருவருக்குள் சேகரமான அத்தனை நிகழ்வுப் பதிவுகளும் இறுதிச் சுவாசிப்பு நோக்கிய அவரின் கடைசி பயணத்தில் அவருக்குள் தொடர்ச்சியான படங்களாக துரித வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும். துயரம், மகிழ்ச்சி, பகை, கோபம், காதல், காமம், நிறைவேறாத ஏக்கங்கள் இத்தகைய அழுத்தமான அனுபவங்கள் சற்று மெதுவான வேகத்தில், அந்த வாழ்க்கைக் காட்சிகள் மனதிற்குள் படங்களாக சலனித்துச் செல்லும். அந்த நிறைவேறாத ஏக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள அடுத்தொரு பிறப்பு நோக்கிப் பயணம் தொடர்கிறது. பகவத் கீதையின் சில கவித்துவமான ஸ்லோகங்கள் இதைத் தெளிவுபடுத்துகிறது.
"கிழிந்த ஆடைகளை எறிந்துவிட்டு ஒருவர் புதிய ஆடைகள் தரிப்பது போல, ஆன்மா நைந்த உடலை உதறிவிட்டு புது உடல் நோக்கிப் பயணிக்கிறது."
"மலரில் மேவும் காற்று அதன் நறுமணங்களை எடுத்துச்செல்வது போல ஆன்மா பழைய உடல் சார்ந்த அனுபவங்களைச் சுமந்துகொண்டு புது உடல் நோக்கிப் பயணம் செய்கிறது."
நெருப்பாலும் தின்றுசெரிக்க முடியாத
நினைவுகளைச் சுமந்திருக்கிறாள்
இழுத்துக்கிடக்கும் உயிரடங்க
மணல் கரைத்தூற்றி
மண்ணாசை தீர்ப்பது போல
உனைக் கரைத்து ஊற்றினாலும்
உன் மீதான ஆசை அற்றுப்போகாதென
மானுடப் பேருணர்வின் எல்லாத் தளங்களிலும், அதனதன் ஆழ்ந்த தத்துவங்களோடு இயக்கமடையும் சுமித்ராவின் கவிதைகள், பாசாங்குகளற்றவை. அவரது இதயத்தின் மெய்யான படைப்பு மையத்திலிருந்து தன்னியல்பில் பொங்கிப் பெருகுபவை. தமிழில் எழுதப்படும் பிற கவிதைகளின் சாயல்களற்று அவரே உணர்ந்தும் உற்றறிந்தும் பெற்ற, சுய வாழ்க்கையின் பிறிது கலப்பற்ற சாரத்திலிருந்து முகிழ்த்து விகசித்தவை. சங்க மரபு, நவீன இலக்கியம், நாட்டுப்புறப் படைப்பு இவற்றின் தவிர்க்கவியலாத அழகியல்களை தனக்குள் அகப்படுத்திக்கொண்டவை சுமித்ராவின் கவிதைகள்.
தவிப்பின் தடாகத்தில் மலர்ந்தவை (கவிதைத் தொகுப்பு) - சுமித்ரா சத்தியமூர்த்தி, பக்கங்கள்: 102, விலை: ரூ. 120 சந்தியா பதிப்பகம், புதிய எண்: 77, 53- வது தெரு, 9- வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600 083, தொலைபேசி: 82484 89181
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.