எட்டு நாடுகளில் தற்போதும் எழுதப்படாத அரசமைப்புச் சட்டங்கள் (Unwritten Constitutions) இருக்கின்றன; ஆனால், உலகெங்கும் சட்டங்கள் (Laws / Statutes / Legislations) அனைத்துமே எழுதப்பட்டவைதான். சட்டங்கள், மக்களுக்காக, மக்களால் (மக்கள் பிரதிநிதிகளால்) அந்தந்த நாட்டின் உரிய சட்ட அமைப்புகளால் - நாடாளுமன்றம், சட்டமன்றம், தேசிய அசெம்ப்ளி, தேசிய காங்கிரஸ், செனட், கவுன்ஸில் போன்றவற்றால் இயற்றப்படுகின்றன.
சட்டங்களுக்கு வரையறுக்கப்பட்ட பகுதிகளில் நடைமுறை அதிகாரம் கிடைக்கிறது. அடிப்படையில், சட்டங்கள் யாவும் சொற்களைக் கொண்டே கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், அச்சொற்கள் வழக்கமாகச் சாதாரண மக்களுக்குத் தெரிந்ந பொருளில்தான் இருக்குமா என்பதற்கு உறுதியில்லை. இதனால், சாதாரண மக்களுக்குச் சட்டங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட இயலாமல் போகிறது.
சாதாரணமான சொற்கள்கூட, சட்டத்தில் பரந்த பல விஷயங்களைக் குறிப்பதாகின்றன. குறிப்பான எடுத்துக்காட்டாகச் ’சாதாரணமாக’ (Ordinarily) என்ற சொல் சட்ட ஆவணங்களில் பொதுவான, வழக்கமான அல்லது எதிர்பார்க்கப்படும் ஒன்றைக் குறிக்கிறது. இச்சொல் வழக்கத்திற்கு மாறான அல்லது விதிவிலக்கான செயல்கள், அபாயங்கள் அல்லது சூழ்நிலைகளைக் குறிக்காது.
எடுத்துக்காட்டுகள்
“சாதாரணமாக” என்பது, கிரிமினல் வழக்குச் சட்டம் 1973, பிரிவு 173(8) இல் “வழக்கமாக” என்று பொருள்படும்; அது “அசாதாரணமான” அல்லது “சிறப்புச் சூழல்களை”க் குறிக்காது எனப் பொருளுணர்த்தப்பட்டுள்ளது.
இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954 விதி 4(2) இல் “சாதாரணமாக” என்பது “பொதுவாக”, “இயல்பாக” எனும் பொருளில் அணுகப்பட வேண்டும் என்றும், கஸ்டம்ஸ் சட்டம் 1962 பிரிவு 14(1)இல், அச்சொல் “எப்போதும்” எனப் பொருள்படாது என்றும் பொருள் விளக்கம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாதாரணச் சொற்கள், வெவ்வேறு சட்டங்களில் வெவ்வேறு பொருளைக் குறித்தும் நிற்கின்றன.
எடுத்துக்காட்டாக: ‘விபத்து’ (accident) என்ற சாதாரணச் சொல், பிரிவு 3(1), தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் 1923;
பிரிவு 2(8), தொழிலாளர் மாநில காப்புறுதிச் சட்டம் 1948;
பிரிவு 82A(1), இரயில்வேஸ் சட்டம் 1850;
பிரிவு 95(2), மோட்டார் வாகனச் சட்டம் 1939;
பிரிவு 80, இந்திய தண்டனைச் சட்டம் 1860 ஆகியவற்றில் வேறுபட்ட கூறுகளைக் கொண்ட பொருளை உணர்த்துவதாக விளக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சாதாரணச் சொற்களும் சட்டத்தில் பயன்படுத்தப்படுகிற சூழல்களில் தெளிவற்றதாக. குழப்பம் தருவதாக இருப்பது போலத் தெரிகின்றன.
எடுத்துக்காட்டு: “ஒரு நபர்” (A Person) என்பது ரயில்வே சட்டம் 1890, பிரிவு 55(1) இன்படி, ‘ஒரு சரக்குப் பொதி / பண்டல் / கட்டு அனுப்பியவர் அல்லது பெறுபவர்’ (Consignor / Consignee) எனப் புரிந்துகொள்ளப்பட வேண்டும் (பார்க்க: ஏ.ஐ.ஆர். 1998 எஸ்.சி 1959).
முன்குறிப்பிட்டுள்ளவாறுள்ள சூழல்களில், சட்டங்கள் மற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பல சிக்கல்கள் தோன்றுகின்றன. வகுக்கப்படுவது சட்டம்; வழங்கப்படுவது நீதி. வழங்கப்படும் நீதி, வகுக்கப்பட்டுள்ள சட்டத்தின் அடிப்படையில்தான் வழங்கப்பட உரியது. சட்டத்தை மீறி நீதி வழங்க முடியாது. நீதிமன்றங்கள், சட்டங்களைக் கூர்ந்து பகுத்தாய்வு செய்து, சரியான, உரிய, சட்டப்படியான நீதியை - குற்றவியல் சட்டங்களைப் பொருத்தவரை உரிய தண்டனையை, பரிகாரத்தை முறையாகக் குடிமக்களுக்கு வழங்கும் கடமைப் பொறுப்புள்ள அமைப்பாக உள்ளன. சட்டத்தை, சட்டம் சொல்லும் சொற்களை, அச்சொற்களின் பொருளை அல்லது கருத்தை அல்லது நோக்கத்தைக் கூர்ந்து, ஆய்ந்து, தேர்ந்து, தெளிந்து தெளிவான நீதியை நீதிமன்றங்கள் வழங்க வேண்டியுள்ளது. இது எளிதான வேலையல்ல.
சட்டங்கள், அவற்றின் செயல்பாட்டில் விளையும் சிக்கல்கள் நீதிமன்றங்களின் பரிசீலனைக்கு உள்ளாகும்போது, குறிப்பிட்ட சொற்கள் அந்தச் சட்டத்தில் என்ன பொருள் தருமாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து நீதிமன்றங்களால் பல விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. இம்முயற்சியில், சட்டத்தில் பயனாகியுள்ள குறிப்பிட்ட சொற்களின் ‘பொருள் கண்டறிய’, சட்டத்தின் உள்ளுறை உதவிகளுடன் பல வெளிப்புற உதவிகளும் நாடப்படும் அவசியங்கள் எழும்.
சட்டச் சொற்பொருள் விளக்கங்கள்: இந்திய வரலாற்றுப் பின்புலம்
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் இருந்தாலும், சுயாட்சிக்கான மக்கள் குரல் பெருகிய இந்திய தேசிய எழுச்சியின்போது முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மசோதா 1895, (ஸ்வராஜ் மசோதா என்றும் குறிப்பிடப்படுகிறது) முற்றிலும் சட்ட பாணியில் எழுதப்பட்ட,110 உட்பிரிவுகளைக் கொண்டிருந்த இந்த ஆவணத்தில், ‘’பொருள் அல்லது சூழலில் முரண்பாடான ஏதும் இல்லாவிட்டால்..." என்று தொடங்கி,
(அ) ‘’இந்திய நாடாளுமன்றம்’’ என்பது இந்திய தேசத்தின் அலுவல் மற்றும் அலுவல் சாரா பிரதிநிதிகளின் சட்டமன்றம் என்று பொருள்படும்.
(ஆ) "மாவட்டம்" என்ற சொல் ஒரு மாகாணத்தின் தலைநகரையும் உள்ளடக்கும்.
(இ) "சட்டங்கள்" என்ற சொல் சிவில், குற்றவியல், வருவாய், திருச்சபை அல்லது ராணுவச் சட்டங்களை உள்ளடக்கியது.
(ஈ) இந்திய குடிமக்கள்: (1) இந்தியாவில் பிறந்தவர்கள். (ii) ஒரு இந்தியத் தந்தைக்குப் பிறந்த குழந்தைகள், அயல்நாட்டில் பிறந்த இந்தியத் தாயின் இயற்கையான குழந்தைகள். (iii) இந்தியத் தந்தையின் பிள்ளைகள் சாம்ராஜ்யத்தில் குடியேற முடியாவிட்டாலும், சாம்ராஜ்யத்தின் சேவையில் அயல்நாட்டில் இருப்பவர்கள். (iv) குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள். இந்தியப் பேரரசு என்பது இந்தியக் குடிமக்கள் அனைவரின் தேசியக் கூட்டமைப்பாக இருத்தல் வேண்டும்’’ என்றும்;
மேலும், இந்தியாவின் ஆட்சிப் பகுதிகள், மாகாணங்கள், மாவட்டங்கள், தாலுகாக்கள், கிராமக் குழுக்கள். இந்தியாவின் மதங்கள் என்ற சொற்களுக்கெல்லாம் சொல் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிட உரியதாகும்.
அடுத்து, ஏப்ரல் 1924 இல் 'தேசிய மாநாட்டால்' இந்தியர்களால் வடிவமைக்கப்பட்ட காமன்வெல்த் மசோதா இந்திய தேசிய இயக்கத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டது. இந்த மசோதா 10 அத்தியாயங்களுடன் 127 பிரிவுகளைக் கொண்டிருந்தது. இது ஒரு முழுமையான அரசியலமைப்பைப் போல விரிவாக வரைந்தளிக்கப்பட்ட ஆவணமாகும். இந்த மசோதா பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை என்றாலும், அதற்குப் பிறகு வந்த இந்திய அரசமைப்பு தொடர்பான பல ஆவணங்களில் இது மிகவும் செல்வாக்கு செலுத்தியது. இம்மசோதாவில் ‘’விளக்கங்கள்” என்ற தலைப்பிட்ட பிரிவு 8, "காமன்வெல்த்", "மாகாணங்கள்" "பாராளுமன்றம்" என்ற சொற்களை வரையறுத்துள்ளது.
பின்னர் வந்த, இந்திய அரசுச் சட்டம் 1935 பிரிவு 311. (1) “இந்தச் சட்டத்திலும், வேறு எந்தச் சட்டத்திலும், தறுவாயின் தேவை வேறானாலன்றி, பின்வரும் சொற்றொடர்கள் அவற்றுக்கு முறையே குறித்தளிக்கப்பட்ட பொருளைக் கொண்டுள்ளன” என்று தொடங்கி,
‘‘பிரிட்டிஷ் இந்தியா", "பர்மா", பிரிட்டிஷ் பர்மா", "பழங்குடிப் பகுதிகள்", "விவசாய வருமானம்’’, "கடன்", "தலைமை நீதிபதி", "தற்போதுள்ள இந்தியச் சட்டம்", "சரக்குகள்", “உத்தரவாதம்", "வழக்குரைஞர்", "மாகாணச் சட்டம்", "பொது அறிவிக்கை", "வரி", "வரி விதிப்பு" என்பன போன்ற பல சாதாரணச் சொற்களுக்கெல்லாம் சட்டப்படி என்ன பொருள் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டு வரையறுக்கப்பட்டுள்ளன. இதிலுள்ள பெரும்பாலான வரையறைகள் அரசமைப்புச்சட்டம் பிரிவு 366இல் இடமடைந்துள்ளன என்பது நினைவிற்கொள்ள உரியது.
இச்சட்டத்தில், எளிதான சொல் எனச் சாதாரணமாக நாம் கருதும் ஓய்வூதியம் (Pension) என்ற சொல்லுக்கான சட்ட விளக்கம் இதோ:
"ஓய்வூதியம்" என்பது, இந்தியா, பர்மா அல்லது ஏடனில் முடியரசின் பணியில் அல்லது முன்பு பணியாற்றி வருபவர்கள் தொடர்பானது, பங்களிப்பாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அத்தகைய நபர் எவருக்கும் அல்லது அவர் பொறுத்து எவ்வகையானதையும் செலுத்தத்தக்க ஓர் ஓய்வூதியம் என்று பொருள்படும். மேலும், அவ்வாறு செலுத்தத் தக்க, ஓய்வு பெற்றவர்களுக்கான ஊதியம், அவ்வாறு செலுத்தத்தக்க பணிக்கொடை மற்றும் வருமானத்தின் வாயிலாகச் செலுத்தத்தக்க தொகை அல்லது தொகைகள் ஆகியவற்றை உள்ளடக்கும் வருங்கால வைப்பு நிதியத்திற்கான சந்தாக்களின் வட்டியுடனோ அல்லது வட்டி இல்லாமலோ அல்லது அதனுடன் வேறு ஏதேனும் சேர்த்தல்களுடனோ எனப் பொருள்’ என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
(இதற்கே தலையைச் சுற்றுகிறதா? இந்த இரு சொற்கள் தொடர்பாகத் தனித்தனியே எண்ணற்ற வழக்குகளில் இச்சொற்களை, அவற்றுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 1935 ஆம் ஆண்டுச் சட்ட விளக்கங்களை நீதிமன்றங்கள் பரிசீலித்து அளித்துள்ள தீர்ப்புகளை, அவை தரும் விளக்கங்களை அணுக அதிகரிக்குமே தலைச்சுற்றல்!)
அரசமைப்புச் சட்டம் மற்றும் அதற்குப் பின்
நம் நாட்டைப் பொருத்தவரை, அரசமைப்புச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள முக்கியச் சொற்களுக்கு அல்லது அச்சட்டத்தில் சாதாரண அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் குறிப்பிட்ட பொருளில்தான் கருதப்பட வேண்டும் என்று சட்டம் வரைந்தவர்கள் தீர்மானித்த சொற்களுக்கு, சொற்றொடர்களுக்குச் சட்ட விளக்கம் வழங்கும் ஒரு பொது உள்ளுறை ஏற்பாடு அமைக்கப்பட்டுள்ளது.
அத்தகைய ஏற்பாடுகளில் ஒன்றாக, அரசமைப்புச் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் (Articles) ஏராளமான வரையறை உட்பிரிவுகள் (Definition Sub-clauses) உள்ளன. [எடுத்துக்காட்டுகளாக: அ.ச. பிரிவு 2 (அ), விளக்கம் I விளக்கம் II என இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
பகுதி III அடிப்படை உரிமைகள் பிரிவில், அ.ச.பிரிவு 13 (3)
“இந்த உறுப்பில் தறுவாய் (context) பிறவாறாக வேண்டுறுத்துகிறது என்றாலன்றி -
(அ) “சட்டம்” என்பது இந்திய ஆட்சிப்பரப்பில் சட்டத்தின் செல்லாற்றலை உடைய அவசரச் சட்டம் , ஆணை, துணைவிதி, ஒழுங்குமுறை விதி, அறிவிக்கை, மரபு வழக்கம் அல்லது வழக்காறு எதனையும் உள்ளடக்கும்” என விரிவாக வகுக்கப்பட்டுள்ளது.
உடனே, உட்பிரிவு (ஆ) “செல்லாற்றல் சட்டங்கள்” என்பது என்ன என விளக்கம் அளித்து நிற்கிறது.]
இதுபோல இன்னொரு எடுத்துக்காட்டாக,
சமயப் பேற்றுக்கான உரிமை வழங்கும் அ.ச. பிரிவு 25 (1),(2),(3)க்கு விளக்கம் I (சீக்கியர்கள் கிர்பான்கள் அணிவதும், ஏந்திச்செல்வதும் அனுமதிக்கப்படும் மத உரிமை), விளக்கம் II என இரண்டு உட்பிரிவுகள் பொருள் விளக்கம் அளிக்கின்றன.
இத்தகைய உட்பிரிவு விளக்கங்கள்போக, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 366 இல், மிக விஸ்தாரமாக - 1 முதல் 30 உட்பிரிவுகள் மூலம் - அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு பகுதிகளில் (Parts) பரவியுள்ள பற்பல சொற்கள், சொற்றொடர்களுக்குப் பொருள் விளக்கம் (Definitions) வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச்சட்டத்திலுள்ள பலவிளக்கங்கள் அப்படியே எடுத்து வழங்கப்பட்டுள்ளன. ‘வேளாண் வருமானம்,’, ‘ஆங்கிலோ-இந்தியர்’, ‘நிலவிவரும் சட்டம்’, ‘அரசர் போன்ற பல சாதாரணச் சொற்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 366ல் சொற்பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளன.
இவற்றுடன் கூடுதலாக, அ.ச. பிரிவு 367 இன்படி,
“தறுவாய் பிறவாறாக வேண்டுறுத்துகிறது என்றாலன்றி – 1897ஆம் ஆண்டு பொது வகைமுறைகள் சட்டம் (General Clauses Act,1897), அச்சட்டத்தின் பிரிவு 372-க்குட்பட்டு, இந்திய அரசமைப்பின் பொருள்கோளுக்கும் பொருந்துதல் வேண்டும்” என வகை செய்யப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டப் பொருள்களுக்கான விளக்கங்களை, முன்னரே நிலவியிருக்கும் ஒரு சாதாரணச் சட்டம் அளிக்கும் விளங்கங்களாலும் பொருந்திக்கொள்ளலாம் எனும் ஏற்பாடு குறிப்பிடத்தக்க, வித்தியாசமான ஏற்பாடாகும்.
அடுத்ததாக, நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் நாடாளுமன்றத்தாலும், மாநிலச் சட்டமன்றங்களாலும் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டத்திலும், அந்தந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்கள், சொற்றொடர்களுக்குப் பொருள் ‘விளக்கங்கள்’ (Definitions) வழங்கப்படுவது வழக்கமான நடைமுறையாகியுள்ளது. ஆகவே, அந்தந்தச் சட்டங்களிலும் தொடர்புடைய பிற சட்டங்களுக்கும் பொருந்துமாறு பொருள் விளக்கங்கள் – உள்ளுறையாக – இருப்பில் உள்ளன என்பது அறிந்துகொள்ள வேண்டியதாகும்.
இவற்றால், ஒரு சட்டத்திலுள்ள சொற்களுக்குப் பொருள் விளக்கம் பெற - வெளிப்புற உதவியான அகராதிகளுக்கோ, பிற வளமூலங்களுக்கோ செல்வதற்கு முன்பே - நமது அரசமைப்புச் சட்டவிளக்கம் (அ.ச.பிரிவு 366) மற்றும் குறிப்பிட்ட அந்தச் சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் விளக்கங்கள்’ மற்றும் பொதுவகைமுறைகள் சட்டம் 1897 ஆகியனதான் பொருளறிய, விளக்கம் பெற முதல் அகராதியாகப் பயன்படுத்த உரியன எனத் தெளிந்து மேற்செல்லாம்.
சட்டங்களில் ஏற்படுத்தப்படும் விளக்க உட்பிரிவு (Definition Clause) என்பது சட்டத்திலுள்ள சாதாரணச் சொற்களுக்கு, வழக்கத்திலுள்ள உரிய பொருளை மாற்றுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக,
கிப்ட் டாக்ஸ் கமிஷனர், சென்னை எதிர் என்.எஸ். கெட்டி செட்டியார் [1971 ஏ. ஐ.ஆர் 2410] வழக்கில், 16, செப்.1971ல் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி கே. எஸ். ஹெக்டே, ‘’ஒரு வார்த்தையின் பொருளை நீட்டிக்கும் ஒரு விளக்க உட்பிரிவானது, அதன் சாதாரண அர்த்தத்தை அகற்றாது. சட்டப் பொருள் விளக்க விதி என்பது, அந்தச் சொல் அதன் சாதாரண, வெகுஜன, இயல்பான அர்த்தத்தைப் பெறுவதைத் தடுப்பதற்காக அல்ல; மாறாக, சட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தையை உள்ளபடியே செயல்படுத்துவதற்கான ஏற்பாடாகும்’’ என்று கருத்துக் கூறியுள்ளார்.
சொல், வார்த்தை சாதாரணமானதாக இருக்கலாம். ஆனாலும், குறிப்பிடும் சட்டத்தில் (விளக்கத்தில்) என்ன பொருள் வழங்கப்பட்டுள்ளதோ அதுவே - அப்பொருள் அசாதாரணமாக இருந்தாலும் - அச்சொல்லுக்கு அந்தச் சட்டத்தில் நிர்ணயிக்கப்படும் பொருள் ஆகும்.
எடுத்துக்காட்டாக: ஆசிரியர் (Teacher), பணியாளர் (Employee) என்பது தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ள ஒரு சட்டத்தில் ‘ஆசிரியர்’, ‘பணியாளராக’க் கருதப்பட முடியாது. பணியாளருக்கான பணிப்பயன்கள் ஆசிரியருக்குக் கிடைக்காது. (பார்க்க: அகமதாபாத் பிரவேட் பிரைமரி டீச்சர்ஸ் அசோசியேசன் எதிர் நிர்வாக அதிகாரி மற்றும் சிலர். உச்ச நீதிமன்றம். தீர்ப்பு நாள்: 13 ஜனவரி 2004).
கன்வர் சிங் எதிர் தில்லி நிர்வாகம் வழக்கில், வழிதவறிய கால்நடைகளை அடித்துக் கொண்டிருந்த முனிசிபல் அதிகாரிகள், குறிப்பிட்டுள்ள இவ்வழக்கில் மேல்முறையீட்டாளர்களாக உள்ள கால்நடை உரிமையாளர்களால் தாக்கப்பட்டனர். இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 332 இன் கீழ் அவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டபோது, மேல்முறையீட்டாளர்கள், தங்களது சொத்தின் (கால்நடைகள்) மீது தங்களுக்குள்ள தனிப்பட்ட பாதுகாப்புக்கான உரிமையை முன்நிறுத்தி வாதிட்டனர். தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம், 1957, பிரிவு 418 இன் அர்த்தத்திற்குள், கால்நடைகள் கைவிடப்பட்டனவா (whether abandoned) என்ற கேள்வி எழுந்தது.
மேல்முறையீட்டாளர்கள் இந்த வார்த்தையின் அகராதி அர்த்தத்தை முன்வைத்து, அதாவது, ‘ஒரு விஷயத்தை முழுமையாக விட்டுவிடுவது என்றால்தான் அது உரிமையற்றதாகிவிடும்.’ தாங்கள் அவ்வாறு முழுமையாக விட்டுவிடவில்லை என வாதிட்டனர். ஆனால் ‘கைவிடப்பட்ட’ (abandoned) என்ற சொல்லின் அகராதி அர்த்தம் சட்டமன்றம் பயன்படுத்திய சரியான அர்த்தத்தில் இல்லை என்பதைக் கவனித்த உச்ச நீதிமன்றம், 'கைவிடப்பட்ட’ என்பது, இச்சட்டத்தின் தற்போதைய சூழலில் கவனிக்கப்படாமல் விடப்பட்டது அல்லது விடுவிக்கப்பட்டது’ என்று பொருள்படும் கூறியது. அகராதி அர்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொள்வது சட்ட நோக்கத்தின் முதன்மையை அழித்துவிடும்” எனத் தீர்ப்பு வழங்கியது.
சட்டத்தின் உள்ளுறையாக உள்ள விளக்கங்கள் கடந்து, சட்டத்தின் நோக்கங்களறிவதும் உரிய சட்டவிளக்கம் பெற / அளிக்கப்பட மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றாகும். இதுபோகச் சாதாரணச் சொற்களுக்குப் பொருள் விளக்கம் தரச் சட்டம் இயற்றப்பட்ட பின்புலம், வரலாறு, இதேபோன்ற சூழல்களில் முன்பு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்புகள் ஆகியவற்றையும் பரிசீலிக்கும் முறைகள் தோன்றியுள்ளன.
இதுகாறும் அறிந்தவற்றால், நமக்குப் புரிவது யாதெனில், சாதாரணச் சொற்கள் சட்டங்களில் பயன்பாடாகும்போது, நாம் அறியாத வேறுபல பொருள்கள் தருவதாக, பல கூறுகள் கொண்டதாக இருக்கின்றன. அத்தகைய சொற்களின் பொதிபொருட்களைக் கண்டறிய நீதிபதிகளும் வழக்குரைஞர்களும் சட்டத்துறை வல்லுநர்களும் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அம்முயற்சிகள் தொடர்பாக அவர்கள் பல அக, புற உதவிகளை நாட வேண்டிய சூழல்கள் இருக்கின்றன என்பதாகும்.
மிகப் பெரும்பாலான சொற்கள் ஒரு பொருள் குறிப்பதாக மட்டுமே இருப்பதில்லை. ஆதலால், சாதாரணச் சொற்களும் சட்டங்களில் பலவேறு அர்த்த வண்ணங்கள் பூண்டு, நீதிமன்றத் தீர்ப்புகளால் விளக்கப் புத்தாடைகள் பல அணிகின்றன. காலந்தோறும் சொற்களின் பொருள்களில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களால், சட்டச் சொற்களின் ‘மெய்ப்பொருள்’ காணும் முயற்சிகளும் அறிவும் தீராநதியாய்ப் பயணித்துக் கொண்டேயிருக்கும்.
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]
இதையும் படிக்க: தாமதமாகும் நீதியும் பெருகும் நீதிக்கான கூக்குரல்களும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.