“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்” (குறள் – 742)
மார்கழியில் பிரம்ம முகூர்த்தவேளையில் எழுந்து குளிர்நீராடிவிட்டு பஜனையில் ஈடுபட்டுக் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் மக்களில் பலரும்கூட, இப்போதைய தட்பவெப்ப நிலையைக் கருதி, ‘வெந்நீரிலேயே குளிக்கலாம்' என்று மாறிவிட்டார்கள் எனலாம். காரணம், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளில் ஒன்றே!
காலப்போக்கில், அதிகாலையில் எழுந்து நீராடல் எனும் வழக்கம் ‘வெந்நீராடல்’ என்றும் மருவிவிடக் கூடும்! இந்தக் கூற்று உங்களுக்கு பொருத்தமாயின், மேற்கொண்டு பார்க்கவிருக்கும் கருத்துகளும் உங்களுக்கானதே!
கடந்த நான்காண்டுகளாக மோசமாகிவரும் பருவநிலை மாற்றத்தின் மோசமான தாக்கம் 2025 ஆம் ஆண்டிலும் நீடித்தது.
2025இல், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வெப்ப அலை, கன மழை, வெள்ளப்பெருக்கு, குளிர் அலை ஆகிய வானிலை நிகழ்வுகள் கணிக்க முடியாத அளவில் வெவ்வேறு காலகட்டங்களில் ஏற்பட்டு தீவிர பாதிப்பை ஏற்படுத்தின. பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட வானிலை மாற்றங்களால் நிகழ்ந்த உயிரிழப்புகள் கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பின் அதிகரித்து வருவதற்கு 2025இன் ஓராண்டு நிகழ்வுகள் சான்றாக அமைந்துவிட்டன.
2025 இல், ஹிமாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட தொடர் மேக வெடிப்பு நிகழ்வுகளும் அதன் விளைவாக ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் அதேபோல, பஞ்சாபில் கடந்த பத்தாண்டுகளில் காணாத கன மழை, பெருவெள்ளத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தத்தளித்ததும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
‘புயலுக்குப் பின்னே அமைதி’ என்னும் பழமொழியைத் திரித்து, ‘புயலுக்குப் பின்னே பெருமழை!’ என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு, இந்தாண்டில் கடைசியாகக் கடந்து சென்ற புயலால் ஏற்பட்ட பின்விளைவுகளின் தாக்கம் தமிழகம், அதிலும் குறிப்பாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் நன்கு உணரப்பட்டது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையமான ‘தி சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட் அண்ட் டௌன் டூ எர்த்’ தரவுகளின்படி, இந்தியாவில் 2025இல் (ஜனவரி - நவம்பர்) வானிலை மாற்றத்தின் தீவிரத் தாக்கம் 331 நாள்கள் உணரப்பட்டதாக வரையறுக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரியில் கொளுத்திய வெப்ப அலை தொடங்கி நவம்பரில் மிதக்கவிட்ட வெள்ளம் வரை அனைத்தையும் உள்ளடக்கி, இந்தியாவின் மொத்தமுள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் 331 நாள்கள் வானிலை மாற்றத்தின் தீவிர தாக்கம் உணரப்பட்டுள்ளதாம்.
2024 இல் 295 நாள்கள் வானிலை மாற்றத்தின் தீவிர தாக்கம் உணரப்பட்டிருந்து. 2024ஐவிட 2025-இல் தீவிரத்தன்மை அதிகரித்துள்ளதைத் தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இந்தியாவின் வட - மேற்குப் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகம். அப்பகுதிகளில் ஆண்டில் 311 நாள்கள் தீவிர வானிலை மாற்றம் உணரப்பட்டது.
2025இல்...
கடந்த 1901-ஆம் ஆண்டுக்குப் பின், வறண்ட வானிலை நிலவிய ஜனவரிகளில் ஐந்தாவதாக 2025இன் ஜனவரி மாதம் பதிவானது. கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத அளவாக, அதிக வெப்பமான பிப்ரவரியாக 2025இன் பிப்ரவரி பதிவானது.
முன்பனிக் காலம் என்று வரையறுக்கப்பட்டுள்ள ஜனவரி - பிப்ரவரியில், 51 நாள்கள் கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் 3 நாள்கள் வெப்ப அலை நிலவியது (கோடைகாலத்துக்கு முன்பாகவே வெப்ப அலை ஆரம்பம்).
மார்ச் - மே கோடை காலத்தில், இந்தியாவின் சில பகுதிகளில் கன மழையும், வெள்ளமும், நிலச்சரிவுகளும் தவிர்க்க இயலாத நிகழ்வுகளாக மாறியிருந்தன. 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெப்ப அலை பதிவாகியிருந்தது. அவற்றுள் குறிப்பிடும்படியான பருவநிலை மாற்றமாக, இமயமலைப் பகுதிகளான, ஹிமாசலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், லடாக்கிலும் இந்தாண்டில் வெப்ப அலை பதிவானது!
ஜூன் - செப்டம்பரில், 122 நாள்களை உள்ளடக்கிய பருவமழைக் காலத்தில், அனைத்து நாள்களிலும் கன மழையும், வெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. 17 நாள்கள் மேக வெடிப்பு நிகழ்வுகள் ஏற்பட்டன. கடந்த 2022க்குப் பின், இந்தக் காலகட்டத்தில் அதிக மேக வெடிப்பு நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இது அமைந்தது.
2025 இல் இந்தியாவில் ஏற்பட்ட பருவநிலை மாற்ற பாதிப்புகளில் 4,400க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன. 1.74 கோடி (17.4 மில்லியன்) ஹெக்டேர் விளைநிலங்கள் நாசமாகின. பருவமழைக் காலம் தொடங்கும் முன்பே ஏற்பட்ட பாதிப்புகளால் 990 உயிர்கள் பறிபோயுள்ளன. இந்த எண்ணிக்கை, கடந்த 2022 ஐ ஒப்பிடும்போது மும்மடங்கு அதிகரித்துள்ளது.
2025 இல் பருவநிலை மாற்றத்தால் விளைநிலங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது ஹிமாசலப் பிரதேசத்தில் (3.24 கோடி ஹெக்டேர்களுக்கும் மேல்). தமிழகத்தில் 29,000 ஹெக்டேர்களுக்கும் மேல் விளைநிலங்கள் பாதிப்பு!
மகாராஷ்டிரத்தில் 84 லட்சம் (8.4 மில்லியன்) ஹெக்டேர் விளைநிலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பு விகிதம், கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 9 மடங்கு அதிகரித்துள்ளது.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 13,000க்கும் மேற்பட்ட மனித உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 587 லட்சம் ஹெக்டேர்களுக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் நாசமாகின.
கடந்த ஐந்தாண்டுத் தரவுகளை ஒப்பிட்டு ஆராய்ந்தால், 2020 - 21களில் 1,989 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை, 2024 - 25களில் 2,979 ஆக அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாக பாதிப்பின் தாக்கம் தீவிரமடைவதை இதன் மூலம் அறிய முடிகிறது.
2025இல் உலகளவில் மிகத் தீவிரமாகப் பாதிப்பை ஏற்படுத்திய பருவநிலை பேரிடர்களாக வரையறுக்கப்பட்டுள்ள பட்டியலில் முதல் பத்து இடங்களில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கடந்த ஜூன் - செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் ஐந்தாமிடத்தில் உள்ளன. இந்த பாதிப்புகளால், இரு நாடுகளிலும் 1,860 உயிரிழப்புகள் ஏற்பட்டன. 560 கோடி (5.6 பில்லியன்) டாலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
‘2025’ வெறுமனே அதிக வெப்பமயமான, மாசுபாடான, குளிரான ஆண்டாக மட்டுமே இல்லாமல், அதிக உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்திய ஆண்டாகவும் விளங்குகிறது. இந்த ஆண்டில், காய்ச்சல், சுவாசப் பிரச்னைகள், வயிற்றுப் பிரச்னைகள், தூக்கமின்மை, மன அழுத்தம் அதிகரித்திருப்பதற்கு பருவநிலை மாற்றத்தின் தாக்கம் ஒரு முக்கிய காரணமாம்.
டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற பருவகாலத் தொற்று நோய்கள், குறிப்பிட்ட காலங்களில் பரவுவதை விடுத்து, 2025இல் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025இல், இந்தியாவில் இரவு நேர வெப்பநிலை தீவிரமாக அதிகரித்திருந்தது. அதன் தாக்கம், நீர் வறட்சி, சிறுநீரக பாதிப்பு, வெப்ப வாதம், மாரடைப்பு, வாதம், பேறுகால சிக்கல்கள் ஆகிய உடல் நலக் கோளாறுகளுக்காகச் சிகிச்சை பெறும் நோயளிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்தது. பருவநிலை மாற்றம் காரணமாகவே தமிழகத்தில் 50 சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய்களும், சிறுநீரக செயலிழப்பும் ஏற்பட்டதாக தரவுகளிலிருந்து அறிய முடிகிறது.
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்படும் பயிரிழப்புகளால் வேளாண் பெருமக்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாவதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பருவநிலை மாற்றத்தின் தாக்கம் உடல், மன நலத்தில் எந்தளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை இந்த ஓராண்டு நிகழ்வுகள் காட்டுகின்றன.
பெருங்கடல்களின் வெப்பம் பத்தாண்டுகளுக்கு 0.12 °C அளவில் உயருகிறது. இதன் விளைவாக அரபிக் கடலில் ஏற்படும் புயல்கள், கடந்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 40% தீவிரம் மிகுந்ததாக உருவெடுத்து அதிக பாதிப்புகளை விளைவிக்கின்றன.
2050களில் பெருங்கடல்களின் வெப்பம் 1.2 - 1.3 °C உயரும் என்பதால் தீவிர பாதிப்புகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாக உள்ளது. இதன் காரணமாக, பருவமழை 6 - 8% அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை நிலவும் காலமும் மேலும் 1 - 2 மாதங்கள் அதிகரிக்கலாம்.
உயரும் கடல் மட்டம் மற்றும் தொழிலாளா் உற்பத்தித் திறன் குறைவு ஆகியவற்றால் ஏற்படும் இழப்புகளால், குறைந்த வருமானம் கொண்ட பலவீனமான பொருளாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று ‘ஆசியா-பசிபிக் பருவநிலை’ அறிக்கையின் தொடக்க இதழில் விவரிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் வரும் 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 24.7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) இழக்கும் எனவும் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியம் 16.9 சதவீத இழப்பைச் சந்திக்கும் எனவும் ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) கணித்துள்ளது.
2050-க்குப் பிந்தைய காலகட்டத்தில், அதாவது இன்னும் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின், இன்றைய குழந்தைகள் இளந்தலைமுறையாகி சமூக சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கும். அப்போதைய சுற்றுச்சூழல் நிலவரம், இப்போதைய சூழலைவிட நலிவடைந்தே இருக்க வாய்ப்பு அதிகம் என்பதையே மேற்கண்ட கணிப்புகள் விவரிக்கின்றன.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் அதிகரிக்கும்போதிலும், அதற்கான தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தயார் நிலையில் இருப்பதன் மூலம் பாதிப்புகளைக் குறைக்கலாம்.
2025இல் நாம் கண்டு உணர்ந்த தீவிர வானிலை மாற்றங்களெல்லாம் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளே. வளி மண்டலத்தில் வெளியேற்றப்படும் கரியமில வாயு அளவைக் குறைப்பதே புவி வெப்பமடைதலைக் குறைக்க முதன்மை வழி என்பதை நன்கு அறிந்துள்ள பூலோகச்சமூகம், பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மிகத் தீவிரமாக மாறாமல் குறைக்கவாவது முடிந்தவரை அதற்கான வழிகளைப் பின்பற்றலாம்.
அந்த வகையில், நடைமுறையில் சாத்தியப்படும் செயல்முறைகளைப் பின்பற்றத் தொடங்கலாம். மரம் வளர்த்தல் கடினமாயின், வேறு பிற வழிகளில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க உதவலாமே. பொதுப் போக்குவரத்தை பெரும்பாலான நேரங்களில் அல்லது பகுதியளவாயின் பயன்படுத்தலாமே.
2025 இன் பருவநிலைச் சூழலானது இனி வரும் ஆண்டுகளில் இயல்புநிலையாக மாறிவிடும் என்ற எச்சரிக்கை மணியை உரக்க ஒலிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்க வேண்டியது, பிறக்கப்போகும் புத்தாண்டில் நமது தலையாய கடமை! எல்லாம் நமக்காகவும் நமக்குப் பிந்தைய தலைமுறைகளுக்காகவுமே!
பருவநிலை மாற்றத்தின் தாக்கம் 2026க்கும் நீள்கிறது...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.