2025 ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே கடினமான நிலப்பரப்புகளையும் மலை முகடுகளிலும் கால்தடம் பதித்துள்ளது. விபத்துகள் என்ற சவாலை எதிர்கொண்டு பாதுகாப்பு மற்றும் நவீனமயமாக்கலுடன் சாதனை படைத்து வருகிறது.
இந்திய ரயில்வே 2025-ஆம் ஆண்டில் மிகக் கடினமான நிலப்பரப்புகளில் தன்னுடைய தண்டவாளங்களை அமைத்து இந்திய ரயில் பாதையை விரிவடையச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் பாம்பனில் நாட்டின் முதல் செங்குத்தாக தூக்கும் பாலம் முதல் செனாப் நதியின் மீது உலகின் மிக உயரமான ரயில் பாலம் போன்ற எண்ணற்ற திட்டங்களுடன், காஷ்மீருக்கு அனைத்து வானிலையிலும் இயக்கப்படும் வகையில் ரயில் இணைப்பை வழங்கியிருக்கிறது.
2025-ஆம் ஆண்டு பிரபி-சாய்ராங் பாதை தொடங்கப்பட்டதன் மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் மிசோரம் மாநிலத்துக்கு ரயில் இணைப்பு சென்றடைந்தது.
இதன் மூலம் வடகிழக்கு மாநிலத்துக்கு, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த ரயில் இணைப்பு என்ற கனவு நனவாகியிருக்கிறது. இந்த திட்டம், தேசிய ரயில் அமைப்பை, கடினமான புவியியல் மாநிலத்துடன் இணைக்க உதவியிருக்கிறது.
எப்போதும் இல்லாத வகையில், இந்த 2025 ஆம் ஆண்டில், ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரூ.25,000 கோடி மதிப்பிலான 42 ரயில் திட்டங்களைத் தொடங்கி, சில திட்டங்கள் நிறைவும் பெற்றுள்ளன.
மற்றொரு சாதனையாக, அதிக எண்ணிக்கையிலான சிறப்பு ரயில்களை இயக்கியது, 15 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் வந்தே பாரத் சேவை விரிவுபடுத்தப்பட்டது.
நாட்டில் தற்போது மொத்தம் 164 வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தனது ஆண்டு இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டின் ரயில் திட்டங்களில், 13 அம்ரித் பாரத் ரயில்களும் சேர்க்கப்பட்டுள்ளன, இதன் மூலம் அம்ரித் பாரத் ரயில் சேவைகளின் மொத்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே குளிர்சாதன வகுப்பு பயணிகளுக்கான முதல் வந்தே பாரத் படுக்கை வசதிகொண்ட ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்போவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில், பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் மக்களின் வசதிக்காக, 43,000 சிறப்பு ரயில்களை இயக்கியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் - நவம்பர் மாதங்களுக்கு இடையில் 900 கி.மீ.க்கும் அதிகமான புதிய ரயில் பாதைகள் உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே இருந்த பாதைகள் புதுப்பித்தல் நடந்து முடிந்துள்ளது. அகல ரயில் பாதை வலையமைப்பின் மின்மயமாக்கல் பணிகள் கிட்டத்தட்ட 99.2 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கைககள் காரணமாக கடநத் ஆண்டு 31 ஆக இருந்த ரயில் விபத்துகள் இந்த ஆண்டு 11 ஆகக் குறைந்துள்ளது
பாதுகாப்பை உறுதி செய்யவும் போக்குவரத்தை சீராக்கவும் பல்வேறு ரயில்வே மண்டலங்களால் 1,161 சாலை-மேம்பாலம், மேம்பாலங்களை இணைக்கும் சாலைகள் உருவாக்கப்பட்டன. நாடு முழுவதும் 1,337 ரயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்பட்டன.
டிசம்பர் மாதத்திற்குள், மேலும் 155 ரயில் நிலையங்கள் முழுமையாக மேம்படுத்தப்பட்டு, நவீன கூடங்கள், மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு அறைகள், நகரும் படிகட்டு, மின் தூக்கி போன்ற வசதிகளுடன் உருவாகவிருக்கின்றன.
ரோலிங் ஸ்டாக் பெட்டிகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, 4,224 க்கும் மேற்பட்ட எல்எச்பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும்.
இந்திய ரயில்வேயின் முக்கிய லட்சிய திட்டங்களில் ஒன்றான மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில்சேவைப் பணிகள் 55 சதவீதத்தை எட்டியிருக்கிறது.
பயணிகள் வசதிக்காக இந்திய ரயில்வே 2025-இல் ரயில் ஒன் (RailOne) செயலியை அறிமுகப்படுத்தியது. மேலும் ஒரு முன் முயற்சியாக ஆதார் அங்கீகாரம் பெற்ற முன்பதிவு முகவரிகள் கொண்டுவரப்பட்டன. எனவே, ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்கள் மட்டுமே ஐஆர்சிடிசியில், முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் பொது முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்திய ரயில்வே முன்பதிவுகளை மக்களுக்கானதாக மாற்றுவது, வழித்தடங்களை நீடிப்பது, ரயில்களை அறிவிப்பது என பல்வேறு சாதனைகளை 2025ஆம் ஆண்டில் செய்து முடித்திருந்தாலும், ரயில் பயணிகளுக்கு என்னமோ, இது போதாத காலம் என்றுதான் சொல்ல முடியும். சாதாரண மக்களால் பண்டிகைக் காலங்களில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலாமல் போவது, தத்கல் முன்பதிவுகள் தொடங்கியதுமே விற்றுத் தீர்வது, முன்பதிவு இருக்கைகளை, வெளிநபர்கள் ஆக்ரமிப்பது, முன்பதிவு செய்தவர்கள் இருக்கைகளில் அமரக்கூட முடியாமல் ரயில் பயணம் முழுவதும் அல்லல்படுவது போன்றவை இன்னமும் தீர்ந்தபாடில்லை.
முன்பதிவு பெட்டிகளில் ரயில் டிக்கெட் இல்லாதவர்கள் ஏறி பெட்டிகளை நிரப்புவதை இந்திய ரயில்வே இன்னமும் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு எட்டப்படும்வரை எத்தனை சிறப்பு ரயில்கள் அறிவித்தும் மக்களுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லைத்தானே?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.