“நீதி வேண்டும், நீதி வேண்டும்,” என்று ஓங்கி ஒலிக்கிற உரத்த குரல்களை அடிக்கடி எங்கும் கேட்கிறோம். மிகச் சமீப வாரங்களில் திருப்பூவனம் அஜித்குமார், அவிநாசி ரிதன்யா, பொன்னேரி லோகேஷ்வரி ஆகியோரின் குடும்பத்தவர்களும், உறவினர்களும் தத்தமது அன்புக் குழந்தைகளை, வாழ வேண்டிய வயதிலேயே வாரிக்கொடுத்துவிட்டு அளப்பரிய சோகத்தில் மூழ்கி நிற்கும்போதும், அவர்களது உதடுகள் உடைந்து, நனைந்த குரல்களில் “நீதி வேண்டும், நீதி வேண்டும்,” என்றே ஒலிப்பது கண்டு உருகுதல்லவா ஒவ்வொருவரது மனமும்? இதற்கு முன்பும் எத்தனையோ சோக நிகழ்வுகளின் ஊடே இதுபோன்றே ஒலித்த குரல்கள் தேங்கிக் கிடக்கின்றன நம் செவிகளில், தீராமல் தீர்க்கப்படாமல் நமது நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளைப் போல.
இந்திய அரசமைப்புச் சட்டம் 14வது பிரிவின் கீழ், சட்டத்தின் முன் சமத்துவம், சட்டங்களின் சமமான பாதுகாப்பு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குடிமக்கள் அனைவருக்கும் எந்தப் பாகுபாடுகளுமில்லாமல் சமநீதி, தடைகளற்ற, தாமதமற்ற நீதி வழங்க நமது அரசமைப்பு உறுதி பூண்டுள்ளது என்பது வெளிப்படை. மேலும், ‘விரைவான விசாரணை’ என்பது அரசமைப்புச் சட்டம், பிரிவு 21இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ‘வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையின் (Right to life and liberty)' ஒரு முக்கியமான பகுதியாகும். எனவே, வழக்குகளை முடிப்பதில் ஏற்படும் தாமதம், இந்த அடிப்படை உரிமைகளை மறுப்பதாக அமையும். இவ்வளவு ஏற்பாடுகள் இருக்கும்போது ஏன் ‘’நீதி வேண்டும், நீதி வேண்டும்” என்ற கூக்குரல்கள் தெருவெங்கும்? மருத்துவமனைகளின் பிணவறைகளின் முன்? காவல்நிலைய வாயில்களில்? நீதிமன்ற வளாகங்களின் முன்பும், எங்கும், இப்போதெல்லாம்?
குடிமக்களுக்கு, குறிப்பாக நமது நாட்டு நீதியமைப்புகளில், மேலும், சட்டம் - ஒழுங்கை அமல்படுத்துவதுடன், நீதி வழங்கலில் தொடர்புடைய காவல் துறையின் மீது, பிற அரசுத் துறைகளின் மீது உள்ள நம்பிக்கைகள் ‘தேய்புரிப்பழங்கயிராய்’ இற்று வருகின்றனவே, ஏன்?
இந்தியாவின் நீதித் துறை, உச்ச நீதிமன்றம், மாநிலங்களில் 25 உயர் நீதிமன்றங்கள் மற்றும் 18,735-க்கு மேற்பட்ட மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்கள் எனப் பரந்த பெருங்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆயினும் இது போதவில்லை.
நமது நீதியமைப்பில், தேசிய அளவில், ஒரு பத்து லட்சம் மக்கள் தொகைக்கு (கீழமை நீதிமன்றங்களில் 14 நீதிபதிகள்; உயர்நீதிமன்றங்களில் 1.9) மொத்தம் 15.9 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் (தமிழ்நாடு விகிதம் 14.4). 1987 ஆம் ஆண்டில் சட்ட ஆணையம் வகுத்த அளவுகோல் பத்து லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் என்ற பரிந்துரையாகும். உண்மையில், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களும் இந்த எண்ணிக்கையைப் பூர்த்தி செய்வதில் இன்று வரையிலும் வெகு தொலைவில்தான் உள்ளன.
ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டிருக்கும் சமீபத்திய புள்ளிவிவரங்கள் கவலை தருவதாக உள்ளன. நமது ஜனநாயகத்தின் ஒரு மூலக் கல்லாகக் கருதப்படும் நீதித் துறை, தற்போது 5 கோடிக்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகளின் சுமையால் சரிந்து வருகிறது. நவம்பர் 2024 நிலவரப்படி, இந்தியாவின் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் மட்டும் 4.53 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 3.43 கோடி குற்றவியல் வழக்குகளும், 1.10 கோடி சிவில் வழக்குகளும் ஆகும்.
உயர் நீதிமன்றங்கள் 58 லட்சத்திற்கும் அதிகமான தேக்க வழக்குகளுடன் போராடி வருகின்றன. உச்ச நீதிமன்ற வழக்கு நிலுவை ஐந்து ஆண்டுகளில் 35% அதிகரித்து, இப்போது தேக்க எண்ணிக்கை 80,000ஐத் தாண்டியுள்ளது. இவற்றினூடே கவலையைக் கூட்டும் குறிப்பான விஷயம் என்னவென்றால், தாமதங்களின் காலம்! 48 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் ஒரு பதிற்றாண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன; பல உயர் நீதிமன்ற வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே தீர்க்கப்படாமல் உள்ளன.
மேலும், நீதித்துறை தொடர்பான அனைத்துப் புள்ளிவிவரங்களையும் அணுகத் தருகிற, நேஷனல் ஜுடீஷியல் டேட்டா கிரிட் (NJDG) என்ற ஒன்றிய அரசின் வலைத்தளத்தின் மூலம், இவ்வாறு பலகாலம் காத்திருந்து ஒருவழியாகப் பெற்ற நீதிமன்ற ஆணைகளைச் செயலுறுத்த வேண்டி 1,25,2349 கோரிக்கைகளும் (execution petitions) நீதிமன்றங்களில் ஆண்டுக் கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன என்பதை அறியும்போது, தாமதம் என்பது ‘ஒரு விதிவிலக்காக இல்லாமல். ஒரு விதிமுறையாகவே ஆகிவிட்டதோ’ என்றும், சாதாரணக் குடிமக்கள் எளிதாக, விரைவாக நீதி பெறுவது என்பதே அரிதாகிவிடுமோ எனவும் அஞ்ச வேண்டியுள்ளது.
முன்னர் குறிப்பிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் நிலுவைக் கணக்குகள் வெறும் புள்ளிவிவரக் கவலைகளை மட்டுமல்ல; நமது நீதி வழங்கல் அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை மிகக் கனத்த நெருக்கடிக்குள்ளாகியிருப்பதன் அறிகுறிகளையும் காட்டுவதாகிறது. இத்தகைய நிலுவைகள் (தாமதங்கள்) சரியான நேரத்திற்குள் குடிமக்கள் நீதி பெற அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையைப் பறித்து வருகின்றன. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிதானே? அடிப்படையில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்குச் சட்டப்பூர்வ நிவாரணம் அல்லது சமமான நிவாரணம் கிடைத்தாலும், அது உரிய அல்லது சரியான தருணத்தில் வழங்கப்படாவிட்டால், அது எந்தத் தீர்வும் இல்லாததற்குச் சமம்தான். தாமதங்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கைக் கரைகளை அரித்தரித்து, விரக்தியின் ஓரங்களுக்குக் குடிமக்களைத் தள்ளி வருகிறது என்பது உணரப்பட்டுவரும் உண்மை.
இந்திய நீதித்துறையை, விடாது தொடர்ந்து பாதித்திருக்கும் ‘வழக்கு நிலுவை’ப் பிரச்னைகள், நாடு விடுதலையடையும் முன்பிருந்தே தொடரும் பழம் பிரச்னைதான். இந்த அழுத்தமான பிரச்னையைத் தீர்ப்பதற்கு உடனடிச் சீர்திருத்தங்கள் மிக அவசியம் எனத் தொடர்புடைய பலரும் பலகாலமாக அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தியாவில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள் தீர்வு பெறுவதில் தாமதம் குறித்தும் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளைக் கையாள்வதற்கான சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கவும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் 1924 ஆம் ஆண்டிலேயே ஒரு குழு (Civil Justice Committee 1924-1925) அமைக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டம் 1950 இல் அமலானதிலிருந்து, ஒவ்வொரு பதிற்றாண்டிலும் இந்திய சட்ட ஆணையம் (L.C.I) மற்றும் பிற நிபுணர் குழுக்களால் இதேபோன்ற அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
எல்.சி.ஐ.யின் 34 அறிக்கைகள் மிகப் பெரும்பாலும் நீதித்துறை சீர்திருத்தங்களை - குறிப்பாக வழக்கு நிலுவைகளைத் தீர்க்கும் வகைவகையான பரிந்துரைகளை வழங்கியுள்ளன. மேலும் இவ்விஷயத்தில், நீதிமன்ற நிலுவைக் கமிட்டி 1989-90, [Report of the Arrears Committee -“First Justice Malimath Committee”], கிரிமினல் நீதி பரிபாலன சீர்திருத்தங்கள் கமிட்டி, 2003 [Committee on Reforms of Criminal Justice System “Second Justice Malimath Committee” 2003] என்ற கமிட்டிகளின் அறிக்கைகளும் குறிப்பிட உரியன.
உச்ச நீதிமன்றம் 2018இல், ‘நீதித்துறை அமைப்பில் நிலுவை மற்றும் தாமதத்தைக் குறைப்பதற்கான தேசிய முன்முயற்சி’ மாநாடு ஒன்றை நடத்தியது(2018). நீதித்துறை அமைப்பில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் தாமதங்களுக்கான காரணங்களை விவாதிக்க நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்ட இம்மாநாட்டின் மூலமும் பரிந்துரைகள் பெறப்பட்டன. நீதி நிர்வாகத்தில் பயன்படக்கூடிய மற்றும் திறம்படப் பயன்படுத்த வாய்ப்புள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதும் அம்மாநாட்டின் மற்றொரு நோக்கமாக இருந்தது.
இத்தகைய பல கமிட்டிகள், முன்னெடுப்புகள், மாநாடுகள் மூலம் பெறப்பட்ட அறிக்கைகள், அவற்றின் பரிந்துரைகள் என்னவாயின எனத் தெரியவில்லை. ஆராய்ந்து அளிக்கப்பட்ட பரிந்துரைகள் செயல்வடிவம் பெற்று நிலவும் சிக்கல்களுக்கு முழுமையாகத் தீர்வுகள் எட்டப்படும்வரை ‘’நீதி வேண்டும், நீதி வேண்டும்” என்ற கையறுநிலைக் கோரிக்கைக் குரல்கள் ஒலித்துக்கொண்டுதானே இருக்கும், உரக்க, தெருவெங்கும், நாட்டில்?
நம் நாட்டில் வழக்குகளின் தேக்கநிலைக்கு மிகப் பல காரணங்கள் உள்ளன. அடிப்படையில், நீதிமன்றங்களில் தாக்கலாகும் வழக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், வழக்குகளை முடித்து வைக்கும் விகிதம் குறைவாக இருப்பதே ‘வழக்குத் தேக்கம்’ ஏற்பட முக்கியமான காரணம். தற்போதைய காலகட்டத்தில், நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில், குறிப்பாக மாவட்டங்களிலுள்ள கீழமை நீதிமன்றங்களில்தான் வழக்குகள் அதிகரித்துள்ளன. இந்த நிலை ஏற்பட்டிருப்பதற்கான பல காரணிகளில் ஒரு முக்கியமான காரணியைச் சமீபத்தில் ஒன்றிய அரசின் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மாநிலங்களவையில் வெளிச் சொல்லியுள்ளார். நம் நீதித்துறையில் நீண்ட காலமாகவே நீதிபதிகள் பற்றாக்குறை நிலவுகிறது என்கிறார். அதிலும் குறிப்பாகத் தற்போது, மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 5,245 காலியிடங்கள் உள்ளன என்று தெரிவித்திருக்கிறார்.
இந்திய நீதித்துறை அமைப்பை அணுகும் பெரும்பாலான மக்களும் வழக்குரைஞர்களும் நீதித்துறையுடன் தங்கள் முதல் அனுபவத்தை கீழமை விசாரணை நீதிமன்றங்களில்தான் பெறுகின்றனர். முதல் நிலையில் அங்குதான் மிகப் பலவகையான வழக்குகள், வேறுபட்ட நிவாரணங்களை வேண்டித் தாக்கல் செய்யப்படுகின்றன. எனவே, விசாரணை நீதிமன்ற நிலையில் நீதித்துறை அதிகாரிகள் பதவிகள் காலியாக இருந்தால், அது “அனைவருக்கும் நீதிக்கான அணுகல்" குறித்த நமது முயற்சிகளைச் சரித்துவிடுமல்லவா?
‘வழக்கு நிலுவை’ என்பது பாரம்பரிய நீதிமன்றங்களில் மட்டுமல்ல, அதற்கு அப்பால், புதிய சூழல்களுக்கு ஏற்பத் தளர்வான நடைமுறைகளோடு செயல்பட்டு விரைவாகத் தீர்வுகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆணையங்கள், டிரிப்யூனல்களுக்கும் நீண்டுள்ளன. தகவல் ஆணையங்கள், மனித உரிமை ஆணையங்கள், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT), டிரிப்யூனல்கள் போன்ற அமைப்புகளும் வழக்குத் தேக்கங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டுகளாகச் சுற்றுச்சூழல் தகராறுகளைத் தீர்ப்பதற்குப் பொறுப்பான NGT, கடந்த ஆண்டில் 278 வழக்குகளை மட்டுமே தீர்த்து வைத்திருக்கிறது; 3,900க்கு மேற்பட்ட வழக்குகள் இன்னும் ஆண்டு நிலுவையில் உள்ளன. நுகர்வோர் நீதிமன்றங்களில் 6.8 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன, இதனால் குறைபாடுள்ள பொருட்கள் அல்லது சேவைகளைப் பெற்ற குடிமக்கள் உரிய பரிகாரம் / இழப்பீட்டிற்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. காவல்துறையின் மிருகத்தனம், மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளும் தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்களும் தம் முன்னுள்ள வழக்குகளை விரைந்து தீர்க்க இயலாமை பாதிக்கப்பட்ட மக்களைப் பரவும் விரக்திக்குள்ளாக்குகிறது. சிறந்த நீதி நிர்வாகத்தின் அடிப்படை, எளிதில் அணுகும் தன்மை, மக்களுக்குச் செலவு குறைவு மற்றும் விரைவான நீதி ஆகியவையாகும். அவைகள் இல்லாமை வேறெங்கு கொண்டுசெல்லும் குடிமக்களை? விரக்திக்குத்தான்.
நீதித்துறை ஒரு நிறுவனம் என்ற முறையில் காலிப் பணியிடங்கள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு, அவை காலியாக இருக்கும்போது நிரப்பப்படுவதை உறுதி செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், 2025, ஏப்ரல் 1 ஆம் தேதி நிலவரப்படி, ஒப்பளிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 22,200 ஆக இருந்த நிலையில், நாட்டின் கீழமை நீதிமன்றங்கள் 16,900 நீதிபதிகளுடன் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்த 5,300 காலியிடங்கள் மொத்த அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 24% ஆகும். மக்கள்தொகை அதிகமுள்ள ஒருசில மாநிலங்களில், கீழமை நீதிமன்றங்களில் காலியிடங்கள் 35% வரைகூட உள்ளன. அலாகாபாத், பாட்னா, தில்லி மற்றும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றங்களின் கீழுள்ள நீதியமைப்புகளில் நீதித்துறை அலுவலர்கள் காலியிடங்கள் 30% க்கும் அதிகமாகவே உள்ளன. 2018-ல் சுமார் 5,300 பணியிடங்கள் காலியாக இருந்தது குறைந்ததாகவே தெரியவில்லை, ஏப்ரல் 2025இல் வெளிவந்துள்ள இந்திய நீதித்துறை அறிக்கை (India Justice Report 2025) தரும் தகவல்களின் மூலம்.
பல மாநிலங்களில் - பெரிய, சிறிய மாநில வேறுபாடுகள் இல்லாமல் - அந்தந்த மாநிலத்தின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 25% க்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன. (தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலியிட விகிதம் 25.3, உயர் நீதிமன்றத்தில் 13.3, நீதிபதியல்லாத பணியிடங்கள் காலியுள்ள விகிதம் 17.2) காவல்துறை, சிறைச்சாலைகள் மற்றும் நீதித்துறைக்கான செலவினங்களில் 5 ஆண்டு சராசரி வளர்ச்சி மற்றும் மொத்த மாநில பட்ஜெட் செலவினங்களின் அதிகரிப்புக்கு ஏற்ப அவை உள்ளனவா எனப் பார்த்தால் நீதித்துறைக்கான பட்ஜெட் பிற அதிகரிப்புகளுக்குப் பின்னால்தான் உள்ளது.
25 மாநிலங்களின் வரிசையில், 22 மாநிலங்களில், 3 ஆண்டுகளுக்கும் மேலாகக் கீழமை நீதிமன்றங்களில், ஜனவரி 2025இல், நிலுவையில் உள்ள வழக்குகள் மாநில மொத்த நிலுவையில் 25% க்கும் அதிகமாக உள்ளன. 11 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், இதுபோன்ற வழக்குகள் 45% க்கும் அதிகமாக உள்ளன. பிகாரில் நாட்டிலேயே மிக அதிகமாக 71% வழக்குகள் நிலுவைப் பதிவிலுள்ளது ( தமிழ்நாடு கீழமை நீதிமன்றங்களில் மூன்றாண்டுகளுக்கு மேலுள்ள நிலுவை 35.1%)
உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கீழமை நீதிமன்றங்களைவிட மோசமாக உள்ளது. அனைத்து 25 உயர் நீதிமன்றங்களிலும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் பங்கு 51% ஆக உள்ளது. அலகாபாத் மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றங்கள் மோசமான நிலையிலுள்ளன. அங்கு 60% க்கும் மேற்பட்ட வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. இவற்றைவிட அதிர்ச்சி தரும் வகையில், தேசிய அளவில், இருபது ஆண்டுகளுக்கு மேல் தேக்கத்திலுள்ள வழக்குகள் 24.8% என்பதாகும். இவ்வகையில், அலாகாபாத் உயர் நீதிமன்றம் 40.1% என முதலிடமும், கொல்கத்தா உயர் நீதிமன்றம் 39.9% பெற்றுள்ளன. (தமிழ்நாடு, தேசிய அளவைவிடக் குறைவு: 22.5%)
பெரும்பாலான வழக்குகள் கீழ் நீதிமன்றங்களில் தொடங்கி அங்கேயே முடிவடைகின்றன. ஆயினும்கூட, இந்த நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 25,771 என்ற அளவிலேயே உள்ளது. 2016-17 மற்றும் 2025 க்கு இடையில் பத்தாண்டுகளில், கீழ் நீதிமன்ற நீதிபதிகளின் ஒட்டுமொத்த அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை வெறும் 3,224 மட்டுமே அதிகரித்துள்ளது. மக்கள்தொகை அதிகரிப்போடு வழக்குத் தொடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துத்தான் வருகிறது. தாக்கலாகும் வழக்குகளின் எண்ணிக்கையை எதிர்கொள்ளும் வகையில் நீதிமன்றப் பணியிடங்கள் அதிகரிப்பதாக காணோம். பணியில் (பெஞ்சில்) உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளின் உண்மையான எண்ணிக்கை தற்போது, 20,478 மட்டுமே, அதாவது சராசரியாக 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள்தான் சேவை செய்கிறார்கள். நாட்டில் கீழமை நீதிமன்றங்களின் கட்டமைப்பை, நீதிபதிகளின் எண்ணிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இப்புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. முறையான சீர்திருத்தங்கள் இல்லாமல் அதிகப்படியான வழக்குகளைச் சமாளிக்க முடியாது.
செயலற்ற தன்மையின் விலை மிகப் பெரியது. தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம், மேலும் நீதித் துறையின் தொடர்ச்சியான திறமையின்மை, பல தலைமுறைகளாக நீதியை அணுக முடியாததாக மாற்றி வருகிறது. இந்தியாவின் ஜனநாயகம் வலுவான, திறமையான நீதித்துறையைச் சார்ந்துள்ளது. நீதித்துறைச் சீர்திருத்தங்கள் இனியும் காத்திருக்க முடியாது. முதலில் நீதித்துறையில் அனைத்து நிலைகளிலும் காலியிடங்களை அவசரமாக நிரப்புதல், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் என்பதிலிருந்து உடனடியாகத் தொடங்கலாம், குடிமக்களுக்குத் தாமதமின்றி நீதி வழங்கப்படுவதற்கான முயற்சிகளை. இவ்விஷயத்தில் தீர்க்கமான நடவடிக்கைக்கான நேரம் இப்போது.
(குறிப்பு: நீதிமன்றங்களில் வழக்குத் தேக்கத்திற்கு மிகப் பல காரணங்கள் இருப்பினும், ஒன்றிய, மாநிலங்களின் அரசுகளால் நிர்வாக நடவடிக்கையால் - எளிதில் தீர்க்கப்பட வாய்ப்புள்ள குறிப்பிட்ட ஒரு சிக்கலை – காலியாகவுள்ள நீதிமன்ற பணியிடங்களை நிரப்புதல் – குறித்தே இக்கட்டுரை பேச வந்துள்ளது. மேலும் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 1924 முதல் எல்.சி.ஐ. உள்ளிட்ட எண்ணற்ற ஆணையங்கள், கமிட்டிகள், மாநாடுகள் மூலம் அறிவார்ந்து ஆராய்ந்து தொகைதொகையாகப் பரிந்துரைகள் ஏற்கெனவே பெறப்பட்டு உள்ளன. ஆகவே, அவை குறித்தும் மீண்டும் இக்கட்டுரையில் பேச முயற்சிக்கவில்லை.)
***
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.